Published:Updated:

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை கட்டாயம்... தவறும் நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5,000 அபராதம்!

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், இனி ரூபே மற்றும் யூபிஐ மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொண்டால் எம்.டி.ஆர் (Merchant Discount Rate (MDR)) கட்டணம் வசூலிக்கப்படாது.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை அதிகரிப்பதற்கு, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் பழக்கம் மக்களிடையே அதிகரித்திருக்கிறது. யூபிஐ வசதியைப் பயன்படுத்தி போன்பே, கூகுள் பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம், பலரும் பணப்பரிமாற்றம் மேற்கொண்டு வருகின்றனர்.

2019-ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் யூபிஐ வசதியைப் பயன்படுத்தி 1.31 பில்லியன் பணப்பறிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது அதற்கு முந்தைய நவம்பர் மாத பணப்பறிமாற்ற எண்ணிக்கையைவிட 7% அதிகமாகும்.

மக்களின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், இனி ரூபே மற்றும் யூபிஐ மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொண்டால், ரூ.50 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் வர்த்தக நிறுவனங்களுக்கான எம்.டி.ஆர் (Merchant Discount Rate (MDR)) கட்டணம் ரத்து என, டெல்லியில் நடைபெற்ற பொதுத்துறை வங்கிகளின் முதன்மை நிர்வாக அதிகாரிகளின் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை

இந்த அறிவிப்பின்படி ரூபே, பீம் யூபிஐ, கூகுள் பே, ஆதார்பே, என்.இ.எஃப்.டி, ஆர்.டி.ஜி.எஸ் மூலம் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் வியாபாரிகளிடம் இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த எம்.டி.ஆர் கட்டணம் இனி வசூலிக்கப்பட மாட்டாது.

50 கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டு வருவாய் ஈட்டும் தொழில் நிறுவனங்கள் குறைந்த தொகைக்கான டிஜிட்டல் பரிவர்த்தனை சேவைகளைத் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும்.

அப்படி வழங்கும் தொழில் நிறுவனங்களிடம் இருந்தும், வாடிக்கையாளர்களிடம் இருந்தும் எம்.டி.ஆர் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.

Vikatan

இந்தப் புதிய உ‌த்தரவு புத்தாண்டு முதல் அமலுக்கு வந்திருக்கிறது. மத்திய அரசின் அறிவிப்பின்படி ரூ.50 கோடி அல்லது அதற்கு மேல் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் பண பரிவர்த்தனை வசதியை கட்டாயம் அளிக்க வேண்டும். அளிக்கத் தவறினால் நாளொன்றுக்கு 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.