Published:Updated:

பிசினஸில் ஜெயிக்க வைக்கும் நான்கு மந்திரங்கள்! - மேனகா கார்ட்ஸின் வெற்றி ரகசியங்கள்!

எதையும் நம்பாமல் நம்மை நம்பி ஒரு தொழிலை ஆரம்பித்தால், அதில் நிச்சயம் ஜெயிக்க முடியும் என்பது என் எண்ணம்!

பிரீமியம் ஸ்டோரி
பிசினஸைத் தொடங்கும் ஒவ்வொருவருக்கும் அதில் ஜெயிக்க வேண்டும் என்பதுதான் மிகப்பெரிய கனவாக இருக்கும். ஆனால், பிசினஸ் என்பது தினமும் சந்திக்கும் ஒரு போராட்டம்தான். போராட்டத்துக்கான தீர்வுகளை எவ்வளவு சீக்கிரமாகக் கண்டறிந்து முன்னோக்கி செல்கிறோமோ, அந்தளவுக்கு அந்த பிசினஸில் நிச்சயமாக வெற்றி பெறலாம்.

தீர்வுகளைக் கண்டறியாதபோதுதான் நமக்கு பிசினஸில் தொய்வு ஏற்படுகிறது. இந்தப் `போராட்டத்தை எப்படி எதிர்கொள்வது?’ என்ற கேள்விக்கு வழிகாட்ட நாணயம் விகடன், ‘போராடினால் நாம் வெல்லலாம்! - பிசினஸில் ஜெயிக்க டிப்ஸ்’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் மேனகா கார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் எஸ்.சங்கரலிங்கம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது...

நான்கு மந்திரங்கள்!

‘‘இன்றைக்கு, பிசினஸில் பல போராட்டங்களைக் கடந்துதான் பலரும் நிலைத்து நிற்கின்றனர். அந்தப் போராட்டங்களில் ஜெயிக்க உண்மை, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு என்ற நான்கு மந்திரங்களையும் கடைப்பிடிக்க வேண்டும். நிச்சயமாக இவற்றைக் கடைப்பிடிக்க முடியும்.

எஸ்.சங்கரலிங்கம்
எஸ்.சங்கரலிங்கம்

புதிதாக ஒரு தொழில் தொடங்கும்போது முதலில் நமக்குத் தெரிந்த தொழிலைத் தேர்ந்தெடுத்து செய்யலாம் அல்லது நமக்கு பேஷனாக இருக்கும் விஷயங்களைச் செய்யலாம். நான் எனக்குத் தெரிந்த தொழிலைத்தான் செய்தேன். மிகவும் மோசமான நிலையில் பிரின்டிங் துறை இருந்தபோதுதான் புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் தொழிலைத் தொடங்கினேன். எதையும் நம்பாமல் நம்மை நம்பி ஒரு தொழிலை ஆரம்பித்தால், அதில் நிச்சயம் ஜெயிக்க முடியும் என்பது என்னுடைய எண்ணம்.

கடன் கொடுக்காமல் தொழில் பண்ண முடியுமா?

என்னுடைய தொழிலில் நான் கடன் கொடுப்பதில்லை. இன்றைய நிலையில் பல நிறுவனங்களிலும் பொருளாதார நெருக்கடிகள் நிலவி வருகின்றன. பொருளாதாரப் பிரச்னைகள் இருந்தால் எந்தத் தொழிலையும் முழுமையாகக் கவனிக்க முடியாது. ஆர்டர் வருகிறதோ இல்லையோ நம்முடைய வேலைகளை நாம் சரியாகச் செய்து முடிக்க வேண்டும். அப்படிச் செய்தால், ஆர்டர் நம்மைத் தேடிவரும். கடன் கொடுக்காமல் பிசினஸ் பண்ண முடியுமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். நீங்கள் செய்யும் தொழிலை முழுமையாக நேசித்து கடினமாக உழைத்தால் நிச்சயம் பண்ண முடியும்.

எஸ்.சங்கரலிங்கம்
எஸ்.சங்கரலிங்கம்

மனசாட்சிக்கு பயம் தேவை!

நம்மைத் தேடி வரும் கஸ்டமர்களுக்கு என்ன கமிட்மென்ட் கொடுக்குறோமோ, அதை அப்படியே செய்து கொடுக்க வேண்டும். அவர்கள் சொல்லும் அனைத்தையும் காது கொடுத்துக் கேட்க வேண்டும். சரியான நேரத்தில் டெலிவரி செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு நம்மீது நம்பிக்கை ஏற்படும். கஸ்டமர்களிடம் நாம் நேர்மையாக இருக்க வேண்டும். நான் நேர்மையாக இருக்கிறேனா இல்லையா என்பது வேறு யாருக்கும் தெரியாது. எனக்குத்தான் தெரியும். நம்மை நம்பி வரும் கஸ்டமர்களுக்கு சரியாக வேலை செய்து கொடுக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தேன். நான் இந்த அளவுக்கு வளர அதுவும் ஒரு முக்கியமான காரணம்.

பிசினஸில் போராடினால் ஜெயிக்கலாம் என்பதைவிட, போராடினால் வளர்ந்து கொண்டே இருக்கலாம் என்பது சரியாக இருக்கும். இப்பவும் நாங்கள் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். மனசாட்சிக்கு பயந்துதான் தொழில் செய்யணும்.

பிசினஸில் போராடினால் ஜெயிக்கலாம் என்பதைவிட, போராடினால் வளர்ந்துகொண்டே இருக்கலாம் என்பதுதான் சரியாக இருக்கும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஸ்மார்ட் வொர்க்கா, ஹார்டு வொர்க்கா?

இன்றைக்கு ஸ்மார்ட் வொர்க் செய்தால் ஜெயிக்கலாம் எனப் பலரும் கூறுகின்றனர். அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. கடினமாக உழைப்பதில் ஸ்மார்ட்டாக இருக்க வேண்டும். இல்லையென்றால், நிலைத்து நிற்க முடியாது. உழைப்பதற்கு எல்லையே இல்லை. முழுமையாக அதைப்பற்றியே சிந்தித்தால் படிப்படியாக வளரலாம். பெரிய நிறுவனங்களைப் பார்த்து அதே மாதிரியான நிறுவனங்களை ஆரம்பிக்க வேண்டும் என நினைக்கக் கூடாது. நம்முடைய சக்திக்கு ஏற்ற தொழில்களை நாம் தொடங்க வேண்டும். பெரிதாக நினைப்பதில் தவறில்லை. ஆனால், முடிந்ததைத் தொடர்ந்து செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் பெரிய வளர்ச்சியை அடையலாம். அதற்கு மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். எல்லா விஷயங்களிலும் பெர்ஃபெக்ட்டாக இருக்க வேண்டும்” என்றவர், பிசினஸ் தொடர்பான நாணயம் விகடன் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில்களை அளித்தார்.

எனக்கு போட்டியாளர்கள் இல்லை..!

தொழில் போட்டியாளர்களை எதிர் கொள்வது எப்படி என்று ஒரு வாசகர் கேட்டார். ‘‘உண்மை, நேர்மை, ஒழுக்கம் ஆகிவற்றைக் கடைப்பிடித்து கடினமாக உழைப்பவர்களுக்குப் போட்டி யாளர்கள் கிடையாது. எனக்குப் போட்டியாளர்கள் இல்லை. கஸ்டமர்கள் தரும் விலைக்கு தகுதியான பொருள்களை நாம் அவர்களுக்குத் தர வேண்டும். சொன்ன தினத்தில் சொன்ன நேரத்தில் அவர்கள் குறிப்பிட்ட தரத்தில் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இப்படியெல்லாம் இருந்தால் தொழிலுக்குப் போட்டி யாளர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதனால்தான் எனக்குப் போட்டியாளர்கள் இல்லை என்கிறேன்.’’

தரம் நிரந்தரம்

தரத்தை எப்படித் தொடர்ந்து மெயின்டெயின் செய்கிறீர்கள் என்று இன்னொரு வாசகர் கேட்டார். ‘‘எனக்குத் தேவையான பொருள்களை வாங்கும் இடத்தில் நான் பேரம் பேசுவது இல்லை. சொன்ன விலையைத் தந்துவிடுவேன். ஆனால், நான் நினைக்கிற குவாலிட்டியில் பொருள் இருக்க வேண்டும். மாறக்கூடாது. அப்படி இருந்தால் எனக்கும் சேல்ஸ் ஆகும். அவர்களுக்கும் சேல்ஸ் ஆகும். 90% சப்ளையர்கள் எனக்கு நிரந்தரமானவர்கள். அவர்களுக்கு என்னுடைய குணம், நான் எதிர்பார்ப்பது என எல்லாம் தெரியும். எனவே, குவாலிட்டியில் எந்தவித சமரசமும் செய்வதில்லை. அது அப்படியே தொடர்கிறது.’’

தொடர்ச்சியான புதுமைகள்

‘‘உங்களது துறையில் நீங்கள் செய்யும் புதுமைகள் என்ன’’ என்ற கேள்விக்கு, ‘‘இங்க், டிசைன்ஸ், கலர், வெரைட்டி என எல்லாவற்றிலும் தனித்துவம் காட்டுகிறோம். எந்த போர்டில் எந்த கலரில் எந்த டிசைனில் எந்த சைசில் எந்த ஃபான்டில் கார்டை பண்ண வேண்டும் என்பது முதற்கொண்டு ஃபிக்ஸ் செய்து வைத்துள்ளோம். அதுதான் கார்டுகளுக்கான அழகைக் கொடுக்கும். சிலையைச் செதுக்குவது மாதிரி கார்டை செய்கிறோம். ஒரு கார்டு டிசைன் ஆகி முழுமையாக வருவதற்கு 20 படிநிலைகள் உள்ளன. ஒவ்வொரு நிலையிலும் நாங்கள் மிகுந்த கவனத்தைச் செலுத்துகிறோம்.’’

‘‘பிசினஸில் பிரச்னை வரும்போது எப்படிச் சமாளிப்பீர்கள்’’ என்று வாசகர் கேட்ட கேள்விக்கு, ‘‘பிரச்னைகளுக்கான முடிவைக் காண்பது நம் கையில்தான் இருக்கிறது. பிசினஸ் எப்படியாவது நடந்துகொண்டுதான் இருக்கும். பிசினஸ் இல்லாமல் இருக்கவே இருக்காது. குறையலாம் அல்லது கூடலாம். எந்த அளவுக்கு பிசினஸில் நாம் கவனம் செலுத்துகிறோமோ, அந்த அளவுக்கு பிசினஸும் நம்முடன் இருக்கும். கவனம் செலுத்ததாவிட்டால், சிக்கல்கள் வரும், அப்போதுதான் போராட வேண்டும். போராடினால்தான் ஜெயிக்க முடியும்’’ என்றவர், நெல்லிக்காய் ஜூஸை ஆம்லா-100 என்ற பெயரில் மார்க்கெட்டிங் செய்யத் தொடங்கியிருக்கிறார். மீன் உணவை மட்டும் பரிமாறுவதற்காக நெல்லையில் ஒரு ஹோட்டலையும் விரைவில் திறக்கவிருக்கிறார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு