Published:Updated:

“உங்களிடம் நல்ல ஐடியா இருக்கா..? வழிகாட்ட நான் ரெடி..!” அனுபவம் பகிரும் மென்டார் செந்தில்குமார்

M E N T O R I N G

பிரீமியம் ஸ்டோரி

விளக்கு என்னதான் சுடர் விட்டு எரிந்தாலும், அவ்வப் போது தூண்டுகோலால் தூண்டி விட்டால்தான் பளிச்சென்று பிரகாசமாக எரியும். அதுமாதிரி, தொழில் ஆரம்பிப்பதற் கான ஐடியா இருந்தாலும், வெற்றி பெற மென்டார் எனப்படும் தொழில் வழிகாட்டியின் வழிகாட்டுதல் கட்டாயம் வேண்டும். அப்படிப்பட்ட ஒரு தொழில் வழிகாட்டிதான் சிதம்பரத்தைச் சேர்ந்த செந்தில்குமார்.

‘‘நம் நாடு முன்னேறணும்னா அது தொழில்முனைவோர்களால மட்டுமே முடியும்கிற நம்பிக்கை உள்ளவன் நான். அதுக்குத் தொழில் முனைவோர் ஆகணும்கிற எண்ணத் தோடவும் அதுக்கான ஐடியாவோடவும் இருக்கிறவங்களுக்கு வழிகாட்டணும்னு என்னோட கரியரை விட்டுட்டு, இந்தத் துறைக்கு வந்தேன்’’ என்று பேச ஆரம்பித்த செந்தில்குமார், தன் கடந்த காலத்தைப் பற்றிச் சுருக்கமாகச் சொன்னார்.

“கல்லூரியில கெமிஸ்ட்ரி முடிச்ச பிறகு டயர் தயாரிக்கும் நிறுவனத்துல வேலைக்குச் சேர்ந்தேன். நாலு வருஷம் அங்க வேலை பார்க்கிறப்ப ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்ல படிச்சிட்டு வந்த சீனியர் அதிகாரிகள்கூட வேலை பார்த்து, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருள்களை எப்படி விற்கணும்னு கத்துக்கிட்டேன். ஒருகட்டத்துல அங்கே எனக்கு தனிப்பட்ட வளர்ச்சி இல்லாததால, வேலையை விட்டுட்டு மார்க்கெட்டிங் துறைக்கு வந்தேன். 13 வருஷம் சக்சஸ்ஃபுல்லா இந்தத் துறையில இயங்கினேன். ‘நேஷனல் ஹெட்’ அப்படிங்கிற பதவி உயர்வு வர்ற நேரத்துல, என்னோட ஆழ்மனசுல இருந்த ஆசை வெளியே வர ஆரம்பிச்சது.

‘100 கோடி சம்பாதிச்சிவனுக்கு 200 கோடி சம்பாதிக்க வழி காட்டியிருக்கே... ஆனா, ஒரு தொழில்முனைவோரையும் நீ உருவாக்கலையே’ன்னு என் மனசுக் குள்ள தோண ஆரம்பிச்சிடுச்சு. வேலையை ராஜினாமா பண்ணிட்டு ஹெச்.ஆர் மேனேஜ்மென்ட் படிச்சேன். மணிபால் மருத்துவமனை, சங்கரா ஐ கேர், போத்தீஸ்னு மிகப் பெரிய நிறுவனங்கள்ல மனிதவள மேம்பாட்டாளரா வேலை பார்த்தேன். எக்கச்சக்க தொழில் தொடர்புகள் கிடைச்சுது. இந்தத் தொடர்புகளை மூலதனமா வெச்சு புதுசா தொழில் ஆரம்பிக்கணும்னு நினைக்கிறவங்களுக்கு ஆலோசனை கொடுக்க ஆரம்பிச்சேன். இது தொடர்பான என்னோட வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ், முகநூல் பதிவு களைப் பார்த்துட்டு பலரும் என்னைத் தொடர்புகொள்ள ஆரம்பிச்சாங்க. கூடவே, அனந்தபூர்ல இருக்கிற மத்திய அரசின் ‘நிதி ஆயோக்’கின் அட்டல் இன்குபேஷன் மையத்தோட மென்டார் குழுவுல ஒருத்தரா இருக்க வாய்ப்புக் கிடைச்சது. இந்த மையத்தோட நோக்கம், இந்தியாவில் நிறைய தொழில்முனைவோர்களை ஏற்படுத்தணும்கிறதுதான்’’ என்ற செந்தில்குமார், தான் மென்டாரிங் செய்பவர்களை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறார் என்பதை விளக்குகிறார்.

செந்தில்குமார்
செந்தில்குமார்

‘‘ஒருவரைத் தொழில்முனைவோரா ஆக்கினா, அவர் வளர்றது மட்டு மல்லாம நாலு பேருக்கு வேலை கொடுக்கிற அளவுக்கு வளர்வார்’ அப்படிங்கிற நம்பிக்கையைக் கொடுக்குறவரைத்தான் நான் மென்டாரிங் செய்ய ஒப்புக்குவேன். அடுத்தது, நம்பகத்தன்மைமிக்கவரா இருக்கணும். அப்பத்தான் நான் அவங்களுக்குத் தொடர்பு ஏற்படுத்தி தர்ற கஸ்டமர்ஸ்க்கும் சப்ளையர்ஸுக்கும் நேர்மையானவரா இருப்பாங்க. மூணாவதா, மென்டாரிங்கை நான் இலவசமா மட்டுமே செய்றேன். பணம் வாங்கிட்டு செஞ்சா, ‘நான்தான் பணம் கொடுத்திட்டேனே... எல்லாம் நீங்களே செஞ்சு கொடுங்க’ன்னு கேட்பாங்களே தவிர, நாலு கடை ஏறியிறங்கி, உற்பத்திச் செய்யற பொருளுக்கு மார்க்கெட்டிங் எப்படியிருக்கு, பேக்கிங் எப்படிச் செய்யணும்னு தேட மாட்டாங்க’’ என்றவர், தான் மென்ட்டரிங் செய்த சிலரைப் பற்றிப் பகிர ஆரம்பித்தார்.

‘‘பெங்களூர்ல இருக்கிற நளினி, விவசாயிகளிடம் பூச்சிக்கொல்லி தெளிக்காத காய்கறிகள், பழங்களை வாங்கி, அடுக்குமாடிக் குடியிருப்பில் விற்பனை செஞ்சுகிட்டிருக்கார். அதே ஊர்ல இருக்கிற சத்யாவும் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை நேரடியா வாங்கி விற்கிறார்.

விசாகப்பட்டினத்துல இருக்கிற உஷா, பூச்சிக்கொல்லி மருந்தடிக்காத காய்கறிகள், கீரைகளை வாங்கி விற்கிறார். மாசம் 3,000-த்துல இருந்து 10,000 ரூபாய் வரைக்கும் சப்ஸ்கிரிப்ஷன் மாடல் இவர்கிட்ட இருக்கு. மயிலாடுதுறையைச் சேர்ந்த பிரேமா தியாகராஜன் ஆர்கானிக் காய்கறிகளை துபாய்க்கு ஏற்றுமதி செய்றாங்க. ஓசூரைச் சேர்ந்த வித்யாலட்சுமி, மாடித்தோட்டத்துக்கான செடி, கொடி, கீரைகள் வளர்க்கும் நர்சரி கார்டன் வெச்சிருக்காங்க.

ஆர்கானிக் காய்கறிகள் பயிரிடுற விவசாயிகளையும், அதை வாங்கி விக்குறவங்களையும் ஒன்றிணைச்சு தர்றேன். இவங்க ஏற்றுமதி செய்யத் தேவையான பயிற்சி, அதற்கான மானியம் பெறுவதற்கான வழிகளைச் சொல்றது என்னோட ரோல்.

பெங்களூருவைச் சேர்ந்த வினோத்குமார், மலைவாழ் மக்கள்கிட்ட இருந்து பொருள் களை வாங்கி தேவையானவர் களுக்கு விற்பனை செஞ்சுக்கிட்டிருக்கார். ஈரோடு சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில லண்டானாங் கிற புல் நிறைய வளருது. இந்தப் புல்லுல பல விதமான கைவினைப் பொருள் செய்றதுக்கு அரசு நிதியுதவியோட பயிற்சியும் மார்க்கெட்டிங் தொடர்பும் ஏற்படுத்திக் கொடுத்தேன். பெங்களூருவுல இருக்கிற நரேந்திரா என்பவர், லண்டானா புல்லில் கட்டில், சேர்னு செஞ்சு விற்பனை செஞ்சுக்கிட்டிருக்கார். இவருக்கு மானியம் வாங்க வழிகாட்டினேன்.

கோவையைச் சேர்ந்த அனிதா வெட்டிவேரில் தலையணை, கைப்பை, கைவினைப் பொருள்கள் தயாரிக்கிறாங்க. சிலர் பலாக்கொட்டையை மாவாக்கி, அதுல இருந்து அப்பளம், சிப்ஸ் தயாரிக்கிறாங்க. இவங்களுக்கு வாங்குபவர்களை அறிமுகப்படுத்துறேன்.

உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்தத் தெரியணும். மக்களை கவர்ற வகையில பேக்கிங் செய்யத் தெரியணும். ஒரு தொழிலை எப்படி செஞ்சு, எப்படி சந்தைப்படுத்துறதுங்கிற பிசினஸ் இன்குபேட்டர்ஸ்ல சொல்லித் தருவாங்க. இவற்றுக் கெல்லாம் டீடெய்ல் புராஜெக்ட் ரிப்போர்ட் ரெடி பண்ணணும். நீங்க செய்யப்போற தொழிலுக்கு மத்திய, மாநில அரசுகள்கிட்ட இருந்து என்னென்ன சலுகைகள் வாங்க முடியும்னு சொல்லித் தருவேன்’’ என்று பேசி முடிக்கிறார் மென்டார் செந்தில்குமார்.

உங்ககிட்ட நல்ல பிசினஸ் ஐடியா இருக்கா? அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறத் தொடங்குங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு