Published:Updated:

பால், தயிர், நெய், பால்கோவா... பட்டையைக் கிளப்பும் பால் பண்ணைத் தொழில்!

பசுபதி
பிரீமியம் ஸ்டோரி
News
பசுபதி

தொழில் பழகுவோம் வாங்க! - 4

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினருக்குமான உணவுத்தேவையில் பால் மற்றும் அதன் மதிப்புக்கூட்டுப் பொருள்கள் அத்தியாவசியமான பங்கு வகிக்கின்றன. உலகிலேயே பால் உற்பத்தி அதிகம் நடக்கும் இந்தியாவில்தான், பால் பொருள்களின் பயன்பாடும் அதிகம் இருக்கிறது. மினி டெய்ரி பிளான்ட் தொழிலில் வெற்றி தரும் சூட்சுமங்கள் குறித்து இந்த வாரம் வழிகாட்டுகிறார், திருச்சியைச் சேர்ந்த தொழில் ஆலோசகரான ராமசாமி தேசாய்.

பால், தயிர், நெய், பால்கோவா... 
பட்டையைக் கிளப்பும் பால் பண்ணைத் தொழில்!

பால் பொருள்களுக்கான தேவை!

‘‘முன்பு கிராமங்களில் பெரும்பாலான வீடுகளிலும் குறைந்தபட்சம் ஓரிரு மாடுகளாவது இருக்கும். இப்போது அந்த நிலை வெகுவாக மாறியிருக்கிறது. இதனால், பால் உற்பத்திக்கான தேவை அதிகரித்து வருவதால், சிறிதும் பெரிதுமாகப் பல்வேறு பால் பண்ணைகள் மற்றும் பால் விற்பனை நிறுவனங்கள் பெருகிவருகின்றன.

நம் நாட்டில் பாலைப் பதப்படுத்தி பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யும் புராசஸிங் சென்டர்கள் குறைவாகவே இருப்பதால், பதப்படுத்தப்பட்ட பாலுக்கான தேவை அதிகம் உள்ளது. கேரளாவில் பணப்பயிர் தொழில் களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதால், அங்கு பால் உற்பத்தி மிகக் குறைவாகவே நடைபெறுகிறது. இதனால், தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்துதான் கேரளாவுக்குப் பால் சப்ளை அதிகம் நடக்கிறது. பாலிலிருந்து மதிப்புக் கூட்டல் மூலம் தயாராகும் தயிர், மோர், வெண்ணெய், நெய், பனீர், பாலாடைக் கட்டி (சீஸ்), பால்கோவா, ஐஸ்க்ரீம், யோகர்ட் (இனிப்புத் தயிர்) உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருள்களுக்கும் சந்தை வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

ராமசாமி தேசாய்
ராமசாமி தேசாய்

எந்த இடம் சரியானது?

கறவை மாடு மற்றும் எருமை வளர்ப்பை மேற்கொள்ளும் பால் உற்பத்தியாளர்கள் அதிகமுள்ள பகுதிக்கு அருகில் தொழிற் சாலையை அமைக்க வேண்டும். பால் உற்பத்தி யாளர்கள் நேரடியாக நம்மிடம் கொண்டுவந்தும் பாலை விநியோகம் செய்யலாம். அல்லது அவர்கள் இடத்துக்குச் சென்று நாமும் பாலைக் கொள்முதல் செய்யலாம். இதேபோல, பதப்படுத்திய பாலை விற்பனை செய்ய ஏதுவான இடத்திலும் தொழிற்சாலை இருக்க வேண்டும்.

தொழிற்சாலையை அமைத்த பிறகு ‘FSSAI’ சான்றிதழ் வாங்க வேண்டும். கொள்முதல் செய்யப்படும் பாலில் கொழுப்புச்சத்து சராசரியாக 3% மற்றும் இதர சத்துகள் (SNF- Solid non Fat) அளவானது 8.5% - 9% இருப்பதை உறுதி செய்து, ஒரே தரத்தில் பாலை விற்பனை செய்ய வேண்டும். கறந்த பாலானது சில மணி நேரத்தில் கெட்டு விடும் என்பதால், அவை கெட்டுப்போகக் காரணமான நுண்ணுயிரிகளை அழிக்க குறிப்பிட்ட வெப்பநிலையில் பாலை குளிர்வித்து, சூடுபடுத்தி, (Storing, Homogenization, Pasteurization, Refrigeration...) பதப்படுத்த வேண்டும். இதன்மூலம் பாலைக் கூடுதலாகப் பல மணி நேரத்துக்கு வைத்திருந்து பயன்படுத்த முடியும். இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் இயந்திரங்களின் உதவியுடன் நடைபெறுவதால், தடையில்லா மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

விற்பனை வாய்ப்பு...

தினம்தோறும் காலை, மாலை எனப் பாலைக் கொள்முதல் செய்து, அதைப் பதப்படுத்தி, மாலை மற்றும் மறுநாள் காலையில் வாடிக்கையாளர்களிடம் விநியோகித்துவிட வேண்டும். தேவைக்கேற்ப 200 மி.லிட்டர் முதல் 1 லிட்டர் வரை விற்பனை செய்யலாம்.

சுற்றுவட்டாரத்திலுள்ள மக்களுக்குப் பாலை நேரடியாக விற்பனை செய்யலாம். மேலும், பூத் விற்பனை நிலையங்கள், விநியோகஸ்தர்கள், டீக்கடை, மளிகைக்கடைகளிலும் நிரந்தரத் தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். பால் பாக் கெட்டின் நிறம், நம் நிறுவனத்தின் பெயர், லோகோ, முக்கியமான தகவல்களை பாக்கெட்டில் குறிப்பிடும் விஷயங்களில் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் வடிவமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தலாம்.

பால் மட்டுமன்றி பாலிலிருந்து பிரித்தெடுக்கப்படும் கொழுப்புச் சத்தையும் சரியான முறையில் பதப்படுத்தி, அந்த ஃப்ரெஷ் க்ரீமை மட்டும் தனியாக விற்பனை செய்தும் கூடுதல் வருமானம் ஈட்டலாம். அந்த க்ரீமிலிருந்து வெண்ணெய், நெய், ஐஸ்க்ரீம் உள்ளிட்ட மதிப்புக் கூட்டல் பொருள்களையும் தயாரிக்கலாம்.தற்போது, நாட்டு மாட்டுப் பாலுக்கு வரவேற்பு அதிகரித்து வருவதால், அந்தப் பாலை மட்டும் தனியாகக் கொள்முதல் செய்து, உரிய தரத்துடன் அந்தப் பாலை யும் பதப்படுத்தி விற்பனை செய்யலாம்.

பால், தயிர், நெய், பால்கோவா... 
பட்டையைக் கிளப்பும் பால் பண்ணைத் தொழில்!

முதலீடு, கொள்முதல், விற்பனை...

தினமும் 500 – 1,000 லிட்டர் அளவிலான பாலைக் கொள்முதல் செய்யும் மினி டெய்ரி பிளான்ட் அமைக்க ஏறக்குறைய ரூ.14 லட்சம் தேவை. ஒரு லிட்டருக்கு சுமார் ரூ.30 அல்லது கொஞ்சம் கூடுதல், குறைவாகத் தந்து பாலைக் கொள்முதல் செய்யலாம். அரசின் கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை ஆராய்ச்சி மையங்களிலும் டெய்ரி பிளான்ட் அமைக்கும் ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகளைப் பெறலாம்.

நாம் விநியோக்கும் பால், விற்பனையாகாமல் திரும்ப வருவதைத் தவிர்ப்பது அவசியம். எதிர்பாராமல் வந்தால், அதைக் கொண்டு பால்கோவா தயார் செய்து விற்பதன்மூலம் இழப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம். பால் விற்பனை முடிந்ததும் அன்றாடம் அல்லது அதிகபட்சமாக வாரம் தோறும் நமக்கு வர வேண்டிய பணத்தைப் பெற்றுவிட வேண்டும். அதேபோலவே, பால் உற்பத்தி யாளர்களுக்கும் தாமதமின்றி பணம் தந்துவிட வேண்டும்.

கடனுதவி...

பி.எம்.இ.ஜி.பி திட்டத்தில் கிராமத்தினருக்கு 35% மற்றும் நகரத்தினருக்கு 25% மானியம் கிடைக்கும். முதலீட்டில் 5% தொகை நம் தரப்பில் செலவிட வேண்டும். மீதித்தொகையை வங்கிக் கடனாகப் பெறலாம்.

வரவு மற்றும் செலவு (மாதத்துக்கு)...

பதப்படுத்தப்பட்ட பால் தற்போது ஒரு லிட்டர் ரூ.48 - 50 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் பாலைக் குறைந்தபட்சம் 38 ரூபாய்க்கு விற்பனை செய்யும்பட்சத்தில், 500 லிட்டர் பாலுக்கு 19,000 ரூபாயும், ஒரு கிலோ ஃப்ரெஷ் க்ரீம் 250 ரூபாய் வீதம் தினமும் 20 கிலோ விற்பனையில் 5,000 ரூபாயும் கிடைக்கும். பால் மற்றும் க்ரீம் விற்பனையில் தினமும் 24,000 ரூபாய் கிடைக்கும். இந்த வகையில் ஒரு மாதத்துக்குப் பால் மற்றும் க்ரீம் விற்பனை மூலமாக 7,20,000 ரூபாய் கிடைக்கும்.மாதாந்தர வருமானம் (7,20,000) - மாதாந்தர செலவினம் (5,92,000) = ரூ.1,28,000 லாபமாகக் கிடைக்கும்!’’

(தொழில் பழகுவோம்)

பசுபதி
பசுபதி

15 மாடுகள்... 1,500 லிட்டர்... போதுமான வருமானம்!

கோயம்புத்தூர் மாவட்டம் மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த பசுபதி, பொறியியல் படிப்பை முடித்த இளம் தொழில்முனைவோர். ‘Faarmist Dairy’ என்ற நிறுவனத்தின் பெயரில் பால் மதிப்புக்கூட்டல் பொருள்கள் விற்பனையில் அசத்தி வருபவருடன் பேசினோம்.

“நாங்கள் மாட்டுப்பண்ணை வைத்திருக்கிறோம். கூட்டுறவுச் சங்கத்தில் நேரடியாகப் பால் விற்பனை செய்துவந்தார் என் அப்பா. அங்கு எங்களுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்காததால், சில ஆண்டுகளுக்கு முன்பு தனி யூனிட் ஆரம்பித்தோம்். தொழில் நிறுவனங்கள், விடுதிகள், ஹோட்டல்களின் ரெகுலர் தேவைக்கும் வெளி நிகழ்ச்சிகளுக்கும் தயிர், நெய், பனீர் விற்பனை செய்கிறோம். தவிர, பால் ஏ.டி.எம் இயந்திரங்கள் மூலமாகவும் பதப்படுத்தப்பட்ட பாலை விற்பனை செய்கிறோம். எங்களுடைய 15 மாடுகள் மூலமாகக் கிடைக்கும் பால் தவிர, சுற்றுவட்டார பால் உற்பத்தியாளர்களிடமிருந்தும் மொத்தமாக 1,500 லிட்டர் பாலைத் தினமும் சேகரிக்கிறோம். இதில் எங்கள் தேவைக்குப் போக, வெளி நிறுவனங்களுக்கும் விற்பனை செய் கிறோம். மதிப்புக்கூட்டல் உத்தியால், தற்போது கட்டுப்படியாகும் வருமானம் கிடைக்கிறது. எங்களுடைய தயாரிப்புகளுக்குத் தனித்துவம் இருப்பதை உறுதி செய்து, வாடிக்கையாளர் வட்டாரத்தை உயர்த்தி வருகிறோம்” என்று மகிழ்ச்சியுடன் முடித்தார்.