Published:Updated:

`சுற்றுலா செல்ல கடன் வாங்கும் இளைஞர்கள்!' - வேகமாக வளரும் டிஜிட்டல் லோன்

Representational Image
Representational Image

கடைசி நேரத்தில் சுற்றுலாவுக்குத் திட்டமிடுவதால், பணத்தேவைக்காகக் கடன் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

ஆன்லைன் கடன் வழங்கும் தளமான இந்தியா லெண்ட்ஸ் அறிக்கையின்படி, இன்றைய இளைய தலைமுறையினர், சுற்றுலாவிற்காக மட்டும் சுமார் 30,000 முதல் 2.5 லட்சம் ரூபாய் வரை தனிநபர் கடன்களைப் பெறுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. பயணத்திற்காகக் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கையில் 85 சதவிகிதம் பேர் இளைஞர்கள் என்கிறது இந்த அறிக்கை.

இன்றைய இளைஞர்களின் நுகர்வுப் பழக்கம் நிலையற்றதாக இருக்கிறது.

சேமிப்பதைவிட, செலவு செய்யும் மனப்பான்மையே இவர்களுக்கு அதிகம். கடும் பணிச்சுமையிலிருந்து விடுப்பு எடுத்துக்கொள்ள சுற்றுலாவிற்காக அதிக செலவு செய்கின்றனர். கடைசி நேரத்தில் சுற்றுலாவுக்குத் திட்டமிடுவதால், பணத்தேவைக்காகக் கடன் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் என்கிறது இந்த ஆய்வு.

கடன் சுமையைக் குறைக்காவிட்டால்..?

``வேலையில் சேர்ந்து சில காலங்களே ஆகியிருக்கும் சூழலில், இளைஞர்களுக்கு சிபில் ஸ்கோர் இருக்காது. அதனால் வங்கிகளை அணுகுவதைவிட டிஜிட்டல் கடன் நிறுவனங்களிலிருந்து கடன்களை அதிக அளவில் பெறுகின்றனர். வங்கிகளிடமிருந்து கடனைப் பெறுவதற்கான செயல்முறை நீண்டதாகவும் கடினமானதாகவும் இருப்பதால், வங்கிகளைப் பெரும்பாலும் இவர்கள் விரும்புவதில்லை. ஆன்லைன் நிறுவனங்கள், தடையற்ற சேவை மற்றும் எளிய வழிமுறைகளுடன் கடன் வழங்குவது இவர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது. இதனால் டிஜிட்டல் கடன் நிறுவனங்கள் மூலம் கடன் பெறுபவர்களின் எண்ணிக்கை வேகமாக வளர்ந்துவருகிறது" என்கிறார், இந்தியா லெண்ட்ஸ் நிறுவனத் தலைமை அதிகாரி கௌரவ் சோப்ரா.

அடுத்த கட்டுரைக்கு