Published:Updated:

மினி தொடர் - 3 - மூலதன ஒதுக்கீட்டை விவேகமாகச் செய்யும் உத்திகள்!

பணம்
பிரீமியம் ஸ்டோரி
பணம்

விரிவான விளக்கம்

மினி தொடர் - 3 - மூலதன ஒதுக்கீட்டை விவேகமாகச் செய்யும் உத்திகள்!

விரிவான விளக்கம்

Published:Updated:
பணம்
பிரீமியம் ஸ்டோரி
பணம்
சில நிறுவனங்கள் எக்கச்சக்கமான ஃப்ரீ கேஷ் ஃப்ளோவை (மூலதனம் திரட்டுவதற்கு ஆகும் செலவைவிட மிக அதிகமான அளவு லாபத்தை அந்த மூலதனத்தின் மூலம் பெறுவது) உருவாக்கும். `இப்படி உருவாகும் பணத்தை நிறுவனத்தை நடத்தும் நிர்வாகிகள் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டால், நீங்கள் என்ன சொல்வீர்கள்?

`இந்தப் பணத்தை அந்த நிறுவனம் ஏற்கெனவே செய்துவரும் [போட்டி நிறுவனங்கள் மத்தியில், அதிக அளவில் ஒப்பீட்டு அனுகூலம்கொண்ட தொழிலில் (Competitive Advantage)] தொழிலிலேயே மறுமுதலீடு செய்ய வேண்டும்’ என்றுதானே சொல்வீர்கள். `இந்த வகையில் முதலீட்டை அதிகரிப்பதுதான் இன்னும் அதிகமான கேஷ் ஃப்ளோவை உருவாக்கும்’ என்பீர்கள் இல்லையா?

மினி தொடர் - 3 - மூலதன ஒதுக்கீட்டை விவேகமாகச் செய்யும் உத்திகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், மிகப்பெரிய அளவிலான ‘காம்படேட்டிவ் அட்வான்டேஜை’க்கொண்டிருக்கும் நிறுவனம் உருவாக்கும் ஃப்ரீ கேஷ் ஃப்ளோ அந்த நிறுவனத்தின் விரிவாக்கத்துக்குத் தேவைப்படும் முதலீட்டைவிட மிக மிக அதிகமானதாக இருக்கும். அதாவது, பணம் இருக்கிறது என்பதற்காகச் சந்தையின் தேவையைவிட அதிகமாக உற்பத்தி வசதிகளை ஏற்படுத்துவது தவறான முடிவாகிவிட வாய்ப்பு உண்டு. அப்படி அதிகப்படியான உற்பத்தி வசதியை உருவாக்கினால், அது ஆர்.ஓ.சி.இ-யைக் (Return on Capital Employed) குறைத்துவிடும். இதைத் தவிர்க்க நினைக்கும் நிர்வாகிகளுக்கு இரண்டு வழிகள் உள்ளன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதலாவது, வேறு தொழில்களில் முதலீடுகளைச் செய்வது (Diversification - Usually Inorganic): அந்த நிறுவனம் ஏற்கெனவே செய்துவரும் தொழில்களைத் தாண்டி, புதிய தொழில்களில் (வேறு புதிய தயாரிப்புகள் - சிலசமயம் நாடுவிட்டு நாடு, கண்டம்விட்டு கண்டம் போய்க்கூட) ஈடுபட ஆரம்பிப்பது. இரண்டாவது, ஃப்ரீ கேஷ் ஃப்ளோவைப் பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு டிவிடெண்ட் ஆகவோ, பங்குகளைத் திரும்ப வாங்குவதன் (Share Buyback) மூலமாகவோ திருப்பித் தருவது.

பணம்
பணம்

ஃப்ரீ கேஷ் ஃப்ளோ ஆர்.ஓ.சி.இ-யை அதிகரிக்கும்படி முதலீடு செய்ய முடியாத நிலையில், கையிலிருக்கும் பணத்தை இப்படி ஸ்பெஷல் டிவிடெண்ட் வாயிலாகவும் அல்லது பங்குகளைத் திரும்ப வாங்குவதன் மூலமாகவும் முதலீட்டாளர்களுக்குத் திருப்பித் தருவதே சரியான முடிவாக இருக்கும்.

இவையெல்லாம் நேரடியான தீர்வுகளாகத் தெரிந்தாலும், தொடர்ந்து அதிக ஆர்.ஓ.சி.இ-யை அதிகமாக ஈட்டிவரும் நிறுவனங்கள் பலவும் தங்கள் முதலீட்டைத் தொடர்ந்து விவேகமாகச் செய்ய முடியாமல் தடுமாறவே செய்கின்றன. ஒரு சில உதாரணங்களின் மூலம் இதைப் பார்ப்போம்.

இணைப்பு & கையகப்படுத்துதல் (Merger & Acquitition) மற்றும் வெளிநாட்டில் செய்யப்பட்ட விரிவாக்கங்கள் போன்றவை பங்குதாரர்களுக்குச் சொத்து மதிப்பைக் கூட்டும் அளவில் பலன் தரவில்லை என்பது முக்கியமான விஷயம்.

பணம்
பணம்

நடுத்தர வர்க்கக் குடும்பங்களுடைய நுகர்வு என்பது கடந்த 30, 40 வருடங்களில் கணிசமான அளவு உயர்ந்துள்ளது. இதனால் கடந்த 20 ஆண்டுகளில் நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் நுகரும் பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களால் கணிசமான அளவு முதலீட்டைத் திரட்ட (ஃப்ரீ கேஷ் ஃப்ளோ) முடிந்தது. இந்த இடத்தில் முதலீடு என்பது, ஒரு நிறுவனம் ஈட்டும் லாபத்தில் சந்தையின் தேவைக்கேற்ப உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான விரிவாக்கங்களைச் செய்வதற்கு உண்டான செலவுகளைச் செய்த பின்னரும் கணிசமான தொகை கையில் மீதமிருக்கும் நிலையைக் குறிப்பிடுகிறது.

இது போன்று மீதமிருக்கும் தொகையைக் கொண்டிருந்த நிறுவனங்கள் பலவும், 1995-2005 என்ற பத்து ஆண்டு காலகட்டத்தில் பல்வேறு இந்திய நிறுவனங்களை இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் மூலம் கையிலிருந்த பணத்தை முதலீடு செய்து வாங்கின. இது போன்ற பல இணைப்பு & கையகப்படுத்துதல் செய்யப்பட்ட நிறுவனங்களின் முதலீட்டுக்கு (பங்கு + கடன்) ஈடாக கிடைத்த தொகை (RoCE) அவற்றின் முதலீடு திரட்டுவதற்கு ஆகும் செலவைவிடக் (Cost of Capital) கணிசமாக அதிகமாகவே இருந்தது என்பது அதிர்ச்சி தரும் உண்மை.

1990-களில் யூனிலீவர் நிறுவனம் டாடா ஆயில் மில்ஸ் கம்பெனி, குவாலிட்டி, புரூக்பாண்ட், கிசான், லக்மே போன்ற நிறுவனங்களை வாங்கியதே இதற்குச் சிறந்த உதாரணம். 2005-ம் ஆண்டு டாபர் நிறுவனம் பல்சாராவையும், 2006-ம் ஆண்டு மாரிக்கோ நிறுவனம் நிஹார் நிறுவனத்தையும், பிடிலைட் நிறுவனம் 1999-ம் ஆண்டு ரானிபால் நிறுவனத்தையும், 2000-ம் ஆண்டு எம்-சீல், டாக்டர் ஃபிக்ஸ் இட் நிறுவனத்தையும், 2002-ம் ஆண்டு ஸ்டீல் கிரிப் மற்றும் 2005-ம் ஆண்டில் ரோஃப் நிறுவனத்தையும் வாங்கியது. இந்தவிதக் கையகப்படுத்துதல் ஏற்கெனவே அதிக ஆர்.ஓ.சி.இ-யைக் கொண்டிருக்கும் இந்த நிறுவனங்கள் தொடர்ந்து அதே போன்ற அதிக லாபத்தைச் சம்பாதிக்க உதவின.

மினி தொடர் - 3 - மூலதன ஒதுக்கீட்டை விவேகமாகச் செய்யும் உத்திகள்!

இது ஒருபுறமிருக்க, 2005-ம் ஆண்டுவாக்கில் அதிக ஆர்.ஓ.சி.இ-யைக்கொண்ட பல இந்திய நிறுவனங்கள் தாங்கள் ஈட்டிய உபரியான லாபத்தைக்கொண்டு வெளிநாட்டு நிறுவனங்களை வாங்க முற்பட்டன. உதாரணமாக, கோத்ரேஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆப்பிரிக்கா, இந்தோனேஷியா, லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளிலும், பிடிலைட் நிறுவனம் பிரேசில், அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளிலும், மாரிக்கோ நிறுவனம் மத்திய கிழக்கு, பங்களாதேஷ், தென் ஆப்பிரிக்காவிலும், டாபர் நிறுவனம் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, துருக்கி, எகிப்திலும், ஹேவெல்ஸ் ஜெர்மனியிலும் (சில்வானியா), டாடா ஸ்டீல் ஐரோப்பிலும், ஏசியன் பெயின்ட்ஸ் சிங்கப்பூரிலும் (பெர்ஜர் இன்டர்நேஷனல்), பார்தி ஏர்டெல் ஆப்பிரிக்காவிலும் முதலீடுகள் மூலம் விரிவாக்கங்களைச் செய்தன.

இந்த அயல்நாட்டு விரிவாக்க முதலீடுகளின் ஆர்.ஓ.சி.இ-யை ஆராய்ந்து பார்த்தால், (ஒருங்கிணைந்த நிறுவனத்தின் ஆர்.ஓ.சி.இ மற்றும் இந்தியாவில் செயல்படும் நிறுவனத்தின் ஆர்.ஓ.சி.இ) இந்த வகை விரிவாக்கங்கள் எந்தவிதமான பலனைத் தந்தது என்பது தெரியவரும். இந்தக் கணக்கீடுகளைச் செய்து பார்க்க முயலும்போது பின்வரும் முக்கிய விஷயங்கள் தெரியவருகின்றன...

இந்தியாவில் தனிச்செயல்பாட்டு (Standalone) முடிவுகளை ஆராய்ந்தால், இங்கிருந்து வரும் பணம் (Operating Cash Flows) அயல்நாட்டு நிறுவனத்தைக் கையகப்படுத்தப் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளலாம் (பார்க்க அட்டவணை).

மினி தொடர் - 3 - மூலதன ஒதுக்கீட்டை விவேகமாகச் செய்யும் உத்திகள்!

இந்த நிறுவனங்களின் இந்திய அளவிலான (தனிச்செயல்பாடு-Standalone) லாப ஈட்டுதல்கள் அவற்றுடைய முதலீட்டைத் திரட்டுதலுக்கு ஆகும் செலவைவிட மிக அதிகமாக (பல நிறுவனங்களில் 50% மேலாக இருப்பதை சார்ட்டில் பார்க்கலாம்) இருக்கின்றன. இது, இந்த நிறுவனங்கள் தங்களுடைய போட்டி நிறுவனங்களிடமிருந்து வெகுதொலைவுக்கு எப்படி முன்னேறியிருக்கின்றன என்பதையே காட்டுகிறது.

இந்த நிறுவனங்களின் சர்வதேசச் செயல்பாட்டை (இந்தியச் செயல்பாடு தவிர்த்து) அளவீடு செய்தால், அது ஆர்.ஓ.சி.இ-க்கு சராசரிக்கும் குறைவான அளவிலேயே இருக்கிறது. பல சமயம், இந்தச் செயல்பாடுகளின் ஆர்.ஓ.சி.இ., அவற்றின் முதலீட்டைத் திரட்டுவதற்கான செலவைவிடக் (Cost of Capital) குறைவாகவே இருக்கிறது (பார்க்க, மேலே உள்ள சார்ட்). உலக அளவில் இந்த நிறுவனங்கள் கால்பதித்த தொழிலில் அங்கேயிருக்கும் போட்டியாளர்களைவிட சிறப்பாகச் செயல்படவில்லை என்பதையே காட்டுகிறது.

இந்தக் கணக்கீடுகள் வெளிச்சம் போட்டுக் காட்டுவது எதை என்று பார்ப்போம். இணைப்பு & கையகப்படுத்துதல் மூலமான செயற்கை விரிவாக்கங்கள், அபரிமிதமான அளவில் உபரியாக உருவாகும் ஃப்ரீ கேஷ் ஃப்ளோவை உபயோகிக்கச் சரியான வழியல்ல என்பதையே காட்டுகின்றன. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஈடுபடும் புதிய தொழில்கள், கால்பதித்திருக்கும் புரியாத சந்தை (நாடு) மற்றும் மக்களின் பழக்கவழக்கங்கள்/விருப்பங்கள் போன்றவை இந்தியாவில் அந்த நிறுவனம் செயல்படும் (கட்டமைப்பு) விதத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட முறையில் செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலையில் இருந்திருக்கலாம். முக்கிய நிர்வாகிகள் ஏற்கெனவே இருக்கும் தங்களுடைய பிஸியான வேலைகளுக்கு இடையில் இந்தப் புதிய தொழிலுக்குத் தேவைப்படும் நேரத்தை ஒதுக்க முடியாத காரணத்தால் இந்தத் தொழில்/விரிவாக்கம் நல்ல லாபத்தைத் தராமல் இருந்திருக்கலாம்.

பணம்
பணம்

எந்தக் காரணமாக இருந்தாலும் தொடர்ந்து அதிக லாபம் ஈட்டும் ஒரு நிறுவனமாக (Consistent Compounder) இருக்க வேண்டுமெனில், ஆர்.ஓ.சி.இ-யை மட்டும் நன்கு பெறும் நிலையில் இருந்தால் மட்டும் போதாது. அப்படி ஈட்டும் பணத்தை (ஃப்ரீ கேஷ் ஃப்ளோ) விவேகமாக, அதிக லாபம் தரும் வகையில் முதலீடு செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.

ஒரு நிறுவனம் தனது முதலீட்டை எப்படிச் செய்கிறது என்ற கேள்விக்கான பதிலை ஓர் உதாரணத்துடன் அடுத்த வாரம் பார்ப்போம்.

(முதலிடுவோம்)