Published:Updated:

அம்மாவும் இல்லை; அக்காவும் இல்லை!

கரோலின், ஈவ்லின்
பிரீமியம் ஸ்டோரி
கரோலின், ஈவ்லின்

டேங்கர் லாரிகளில் தினமும் பல லட்சம் லிட்டர் கழிவுநீரை இந்தக் கால்வாய்களில் கொட்டுகிறார்கள்.

அம்மாவும் இல்லை; அக்காவும் இல்லை!

டேங்கர் லாரிகளில் தினமும் பல லட்சம் லிட்டர் கழிவுநீரை இந்தக் கால்வாய்களில் கொட்டுகிறார்கள்.

Published:Updated:
கரோலின், ஈவ்லின்
பிரீமியம் ஸ்டோரி
கரோலின், ஈவ்லின்
சென்னை, வானகரத்திலிருந்து உள்நுழையும் சாலையில் சற்றுத் தொலைவிலிருக்கிறது ராஜன்குப்பம். மெல்லிய பதற்றமும் அச்சமும் சூழ்ந்திருக்கிறது அந்தப்பகுதியை. அங்குள்ள ஒதுக்குப்புறமான ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில்தான் கரோலின் பிரிசில்லாவின் குடும்பம் வசித்தது. குடும்பமென்றால், இருபதும் பதினான்கும் வயதுடைய இரு மகள்கள், 87 வயது அப்பா. அவ்வளவுதான். உறவுகளென்று சொல்ல பெரிதாக யாருமில்லை. 2014-ல் கணவர் இறந்துவிட, அத்துயரில் மீண்டு தனியொரு மனுஷியாக நின்று தன் மக்களைப் படிக்கவைத்து கவலை தெரியாமல் வளர்த்தெடுத்தார் கரோலின். அந்த மனுஷி இப்போது இல்லை.
அம்மாவும் இல்லை; அக்காவும் இல்லை!

கடந்த 6-ம் தேதி, கடும் மழையால் சென்னை வெள்ளத்தில் மிதந்த நேரம். கரோலினும் மூத்த மகள் ஈவ்லினும் பொருள்கள் வாங்குவதற்காக, மதுரவாயல்-நொளம்பூர் சர்வீஸ் சாலை வழியாக டூவீலரில் சென்றுள்ளார்கள். திரும்பி வரும்போது, மழைநீர் வடிகால் கால்வாயில் விழுந்து உயிரற்ற உடலாகத் தூக்கி வரப்பட்டிருக்கிறார்கள்.

அம்மாவும் இல்லை; அக்காவும் இல்லை!

கரோலினின் அப்பா பர்னேஷும் இளைய மகள் இவாஞ்சலினும் உறைந்து போயிருக்கிறார்கள்.

“கரோலின் கடலூரைச் சேர்ந்தவங்க. 2014-ல அவங்க கணவர் இறந்தபிறகு இங்கே குடிவந்தாங்க. சங்கர நேத்ராலயா மெடிக்கல் இன்ஸ்டிட்யூட்ல பேராசிரியையா இருந்தாங்க. கணவர் இறந்த சூழலைக் கடந்துவர ரொம்பவே சிரமப்பட்டாங்க. மூத்த பொண்ணு பி.இ ஆர்க்கிடெக்சர் படிச்சுக்கிட்டிருந்தாங்க. இவாஞ்சலின் ஒன்பதாம் வகுப்பு. கரோலினும் ஈவ்லினும் ரொம்ப நல்லாப் பாடுவாங்க. அவங்க எங்கே இருந்தாலும் பாட்டும் இசையும் இருக்கும். மகள்களைப் பத்தி கரோலினுக்கு நிறைய கனவுகள் இருந்துச்சு. அவங்க இல்லேங்கிறதை நம்பவே முடியலே” என்கிறார் இப்போது அவர்களுக்கு ஆதரவாக இருக்கிற பக்கத்து வீட்டுக்காரர் நிக்ஸன் ராஜ்.

அம்மாவும் இல்லை; அக்காவும் இல்லை!

பர்னேஷும் இவாஞ்சலினும் பேசும் நிலையில் இல்லை. அழும் நிலையிலும் இல்லை. அந்த அளவுக்கு மிகப்பெரும் அழுத்தம் படிந்திருக்கிறது இருவரிடத்திலும்.

“டூவீலர் கால்வாய் மேல ஏறி நிக்குது. ரெண்டு பேரும் கால்வாய்க்குள்ள மிதக்குறாங்க. ரொம்பக் கொடூரம் சார்... கரோலின் அப்பாவால அழக்கூட முடியலே... யாருமே இல்லேங்கி்ற வெறுமை... அப்பாவை இழந்து, அம்மா, அக்காவையும் இழந்து... இவாஞ்சலினை நினைச்சா பெரும் துயரமா இருக்கு...” - கலங்குகிறார் நிக்ஸன். கடலூரில் கணவரின் கல்லறைக்கு அருகிலேயே கரோலினையும் மகளையும் அடக்கம் செய்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள்.

கரோலின்
கரோலின்

மழை பெய்து சாலையில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், வாகனம் சறுக்கி இருவரும் உள்ளே விழுந்து இறந்துவிட்டதாகச் சொல்கிறது காவல்துறை. தாம்பரம்-புழல் தேசிய நெடுஞ்சாலையில், பல இடங்களில் இரு புறமும் 3 அடி அகலம் 12 அடி ஆழத்துக்கு மழைநீர் வடிகால் கால்வாய்களை அமைத்துள்ளது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்.

மேற்கு முகப்பேரில் தொடங்கி மதுரவாயல் வரை, சுமார் 3 கிலோ மீட்டர் நீண்டு கூவம் நதியில் கலக்கிறது, விபத்து நடந்த மழைநீர் வடிகால் கால்வாய். இந்த வட்டாரத்தில் பல நூறு அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளன. தீப்பெட்டிகளைப் போல அடுக்குமாடிக் குடியிருப்புகள் அமைக்க அனுமதி கொடுத்த அரசு, கழிவுநீர் வெளியேற கட்டமைப்பை உருவாக்கித் தரவில்லை. இந்தக் குடியிருப்புகளில் உருவாகும் கழிவுநீர் எல்லாவற்றையும் லாரியில் ஏற்றி வந்து இந்தக் கால்வாயில்தான் கொட்டுகிறார்கள். சாலையின் மட்டத்திலேயே கால்வாய் இருப்பதால் மழை பெய்தால் சாலை எது, கால்வாய் எது என்று தெரியாது.

ஈவ்லின்
ஈவ்லின்

நிறைய விபத்துகள் இதே இடத்தில் நடந்துள்ளன. காயங்களோடு முடிந்துவிடுவதால் அவை பதிவாவதில்லை. இந்த விபத்து நடந்த மறுநாளே, காரொன்று கால்வாயில் சிக்கியது. நல்லவேளையாக அதில் பயணித்தவர், காயங்களோடு தப்பினார். இத்தனைக்குப் பிறகும் கண்மூடித் தூங்குகின்றன மத்திய, மாநில அரசுகள். இந்தக் கால்வாயைப் பராமரிக்க வேண்டியது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பணி. மழைநீர் வடிகாலில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வேண்டியது மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் பணி. எதுவும் சரியாக நடக்காததன் விளைவு, ஒரு தாயும் மகளும் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள்.

இந்தக் கால்வாயை முறைப்படுத்தச் சொல்லி அறப்போர் இயக்கம் 2017 ஏப்ரலிலேயே தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு மனு அளித்துள்ளது. அடுத்த மாதமே, ‘இது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரித்து வருவதாகவும், விரைவில் சரி செய்யப்படும்’ என்றும் பதிலளித்திருக்கிறார்கள். மூன்றாண்டுகள் கடந்தும் எதுவும் நடக்கவில்லை.

“டேங்கர் லாரிகளில் தினமும் பல லட்சம் லிட்டர் கழிவுநீரை இந்தக் கால்வாய்களில் கொட்டுகிறார்கள். ஆனால் ‘நாங்கள் ஆய்வு செய்தபோது கழிவுநீர் கொட்டப்படவில்லை’ என்று பதில் தந்துவிட்டு மனுவை குளோஸ் செய்துவிடுகிறார்கள். அரசுகள் தங்கள் கடமையைச் செய்திருந்தால், இரண்டு அப்பாவிப் பெண்களின் மரணம் தடுக்கப்பட்டிருக்கலாம். அலட்சியம்தான் அவர்களைக் கொன்றிருக்கிறது” என்கிறார், இந்தக் கால்வாயை மூடச்்சொல்லித் தொடர்ந்து மனுக்கள் அனுப்பிவந்த அறப்போர் இயக்கத்தின் தன்னார்வலர் பாலாஜி னிவாசன்.

கரோலின், ஈவ்லின் மரணம் குறித்து விளக்கம் கேட்டிருக்கிறது மனித உரிமை ஆணையம். தமிழக முதல்வர் வழக்கம்போல தலைக்கு 2 லட்ச ரூபாய் இழப்பீடு அறிவித்திருக்கிறார். ஆனால் இன்றுவரை, வாவென வாய்பிளந்து நிற்கிற அந்த மரணக் கால்வாய் அப்படியேதான் இருக்கிறது. கழிவுநீர் ததும்பித்தான் நிற்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism