Published:Updated:

12 கார்கள்... ‘பளிச்’ வருமானம்... ஸ்மார்ட் ஐடியா..!

வெங்கடேஷ்வரன்
பிரீமியம் ஸ்டோரி
News
வெங்கடேஷ்வரன்

அசத்தும் கரூர் இளைஞர்!

வசதியான வீட்டில் பிறந்து, எல்லா செளகர்யங்களையும் அனுபவித்து, மீண்டும் ஏழ்மை நிலையை அடைந்து, அதிலிருந்து ஃபீனிக்ஸ் பறவையாக வாழ்க்கையில் எழுந்து மீண்டுவருபவர்கள் மிகச் சிலர்தான். வெங்கடேஷ்வரன் அப்படிப்பட்ட சிலரில் ஒருவர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தனது தந்தையின் தொழில் நொடித்துப்போனதால், பத்தாம் வகுப்புடன் படிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு, கிடைத்த வேலைகளைச் செய்து, இப்போது கால் டாக்ஸி நிறுவனம் ஒன்றை நடத்தும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் வெங்கடேஷ்வரன்.

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலைப் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான வெங்கடேஷ்வரன். கரூர் சுங்ககேட் பகுதியில் இவரது `தோழா டாக்ஸி’ அலுவலகம் இருக்கிறது. தனது இரண்டு கார்களுடன் மற்றவர்களின் பத்து கார்களையும் சேர்த்து, இந்தத் தொழிலை வெற்றிகரமாக நடத்திவருகிறார் வெங்கடேஷன். அவரது வெற்றிக்கதை இங்கே...

12 கார்கள்... ‘பளிச்’ வருமானம்... ஸ்மார்ட் ஐடியா..!

“என் அப்பா பேரு செந்தில்குமார். சொந்த ஊர் கரூர் என்றாலும், எங்கப்பா கோயபுத்தூர்லதான் தொழில் செஞ்சார். அப்பாவுக்குத் தொழில்ல கடுமையான நஷ்டம். அதனால என்னாலயும் என் அக்காவாலயும் படிப்பைத் தொடர முடியலை.

அப்பா கோயபுத்தூர்லயே இருந்தார். நாங்க கரூருக்கு வந்துட்டோம். வாடகை வீட்டுல வசிக்க ஆரம்பிச்சோம். அரசுப் பள்ளியிலகூட படிக்க முடியாத சூழல். அதனால வேலைக்குப் போக நினைச்சேன். எனக்கு 16 வயசுங்கிறதால யாரும் எனக்கு வேலை தரலை. அதனால, ஒரு வருஷம் சும்மா இருந்தேன். பிறகு, தொழில்பேட்டையிலுள்ள ஒரு வெல்டிங் ராடு தயாரிக்கும் கம்பெனியில, தினமும் 160 ரூபாய் கூலிக்கு வேலைக்குச் சேர்ந்தேன். ஒரு வருஷம் வேலை பார்த்தேன்.

12 கார்கள்... ‘பளிச்’ வருமானம்... ஸ்மார்ட் ஐடியா..!

பிறகு, இருசக்கர வாகனம் விற்கும் டீலர் ஏஜென்ஸியில 5,000 ரூபாய் சம்பளத்துக்கு மார்க்கெட்டிங் வேலைக்குச் சேர்ந்தேன். என் கடுமையான உழைப்பால அங்கேயே சர்வீஸ் மேனேஜர், சேல்ஸ் இன்சார்ஜ், ஒட்டுமொத்த ஏஜென்ஸியின் இன்சார்ஜ்னு அடுத்தடுத்த பதவிக்குப் போனேன். என் அக்காவை கெமிக்கல் இன்ஜினீயரிங் படிக்கவெச்சு, கல்யாணமும் செஞ்சு குடுத்தோம்.

ஆனா, நான் வேலை பார்த்த டூவீலர் கம்பெனியை மூடிட்டதால மறுபடியும் வேலையில்லாம தவிச்சேன். வேறு என்ன செய்யலாம்னு யோசிச்சப்போ கார் ஓட்டக் கத்துக்கலாம்னு முடிவெடுத்து, கத்துக்கிட்டேன். ஆக்டிங் டிரைவரா 100 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கும் வேலைக்குப் போனேன்.

வெங்கடேஷ்வரன்
வெங்கடேஷ்வரன்

அப்போதான், ‘நாம ஒரு கார் வாங்கி ஓட்டினா என்ன?’னு தோணிச்சு. வீட்டுல சொன்னேன். அவங்க, `வேண்டாம்’னுட்டாங்க. அதனால நான் வீட்டுல சொல்லாம, கார் வாங்கும் வேலையில இறங்கினேன். எல்லா அரசு, தனியார் வங்கிகள்லயும் கடன் கேட்டேன். யாரும் தரலை.

என் நிலைமையை என் அக்காகிட்ட சொன்னேன். அவர், எங்க மாமாகிட்ட சொல்ல, செகண்ட் ஹாண்ட் மாருதி ரிட்ஸ் காரை ரூ.3.90 லட்சத்துக்கு வாங்க, கையில இருந்த 10,000 ரூபாயை அட்வான்ஸாகக் கொடுத்தேன். என்னோட அக்கா கணவரான இளஞ்சூரியன், அவரோட நண்பர் குகன்கிட்ட வட்டியில்லாம ரூ.4 லட்சம் வாங்கிக் கொடுத்தார். அதைவெச்சு, காரை எடுத்துட்டேன். இதற்கிடையில, நான் லோனுக்கு முயன்ற ஒரு தனியார் வங்கியில் ரூ.2.60 லட்சம் கடன் கிடைச்சுது. அந்தப் பணத்தை எடுத்து, ஏற்கெனவே வாங்கின கடனை அடைச்சேன்.

கஷ்டப்பட்டு வேலை பார்த்தேன். இரவு 1:00 மணிக்கு சவாரி கிடைச்சாலும், அசராம எழுந்து போவேன். இதனால, எனக்கு ரெகுலரா சவாரி கிடைக்க ஆரம்பிச்சுது. எல்லாக் கடனையும் கொஞ்சம் கொஞ்சமா அடைச்சதுபோக, மாதம் ரூ.16,000 வரை கையில நின்னுச்சு.

வெங்கடேஷ்வரன்
வெங்கடேஷ்வரன்

உடனே, கடந்த 2018, ஜூலை மாசம் இன்னொரு கார் வாங்க முடிவு பண்ணினேன். ஆனா, வீட்டுல கடுமையா எதிர்த்தாங்க. அக்காவும் பயந்தாங்க. ஆனா, மாமா ஆதரவா இருந்தாரு. இந்த முறை புது கார் வாங்க ரூ.6.5 லட்சம் தேவைப்பட்டுது. அப்பவும் பேங்க்ல கடன் கிடைக்காததால, தனியார் நிறுவனத்தை அணுகினப்போ, ரூ.4.60 லட்சம் கொடுத்தாங்க. மீதம் 2 லட்ச ரூபாயை அங்கே இங்கேன்னு புரட்டி, காரை டெலிவரி எடுத்தேன். அந்த காரை இரண்டு மாசம் வரைக்கும் நானே ஓட்டினேன். அதன் பிறகுதான், ‘கால் டாக்ஸி சர்வீஸ் ஆரம்பிக்கணும்’கிற எண்ணம் வந்துச்சு.

2018-ம் வருட இறுதியில், ‘தோழா கால் டாக்ஸி’ என்ற பெயரில் ஆரம்பிச்சேன். பொதுவாக ஒரு நம்பர் கொடுத்து, கரூருக்குள் 5 கிலோமீட்டர் வரை பயணிக்க ஏசி காருக்கு ரூ.100 கட்டணம்னு அறிவிச்சேன். சுவரொட்டிகள், தினசரி பத்திரிகைகள்னு டாக்ஸி விளம்பர நோட்டீஸ்களைவெச்சு அனுப்புறது, லோக்கல் சேனலில் விளம்பரம் பண்ணுறதுனு விளம்பரம் செஞ்சேன். நல்ல ரீச். சவாரிகளும் நிறைய வர ஆரம்பிச்சுது.

இந்த நிலைமையிலதான் என்னோட மற்றொரு காருக்கு டிரைவராக இருந்த தமிழ்ச்செல்வன், `தோழா டாக்ஸியில் சேர்ந்து கார் ஓட்டலாமா?’னு கேட்டார். உடனே சம்மதிச்சேன். `மாதா மாதம் கிடைக்கும் வருமானத்தில் பத்து சதவிகிதத்தை எனக்கு தந்துவிட வேண்டும்’ என்று நான் சொல்ல, அவர் `ஓகே’ என்றார்.

நிறைய சவாரி கிடைக்க ஆரம்பிச்சுது. இதைப் பார்த்து, பாலாஜிங்கிறவர் வந்தார். இப்படியே ஆறு சின்ன கார்கள், ஆறு பெரிய கார்கள்னு இப்போ தோழா டாக்ஸியில 12 கார்கள் ஓடுது. மத்தவங்க கார்களுக்கு மாதம் ரூ.40,000 வரை கிடைக்க ஆரம்பிச்சுது. எனக்கு எல்லாச் செலவுகள், லோன் தவணை போக, கையில் ரூ.30,000 வரை லாபமா நிக்க ஆரம்பிச்சுது.

கடந்த வருஷம் ஆயுத பூஜை அன்னிக்கு, கரூர் சுங்ககேட் பகுதியில தனியா ஆபீஸ் போட்டேன். ‘கர்ப்பிணிகளை மருத்துவமனைக்குக் கொண்டு போறதுக்கும், வீடுகளுக்கு குழந்தையோடு அழைச்சுட்டு வரவும் இலவசம்; கட்டணம் எதுவும் கிடையாது’ன்னு அறிவிச்சோம். அதற்கு நல்ல ரெஸ்பான்ஸ்.

இது ஸ்டார்ட்அப் கம்பெனி மாதிரின்னாலும், மேனுவலாகத்தான் கஸ்டமர்களை பிக்கப் பண்ணிக்கிட்டு இருந்தோம். அதனால, `தோழா டாக்ஸி’க்குனு பிரத்யேக ஆப்-ஐ வடிவமைச்சோம். அதைச் செயல்படுத்த நினைக்கையில கொரோனா வந்துடுச்சு. இப்போ எங்க தொழில் கொஞ்சம் டல்தான். ஆனா, கார்களில் சீட்களுக்கு இடையில் பிளாஸ்டிக் மறைப்பு, எல்லா சீட்களிலும் கிருமிநாசினி பாட்டில், மாஸ்க்னு ஏற்பாடு செஞ்சிருக்கோம். அதனால, பயணிகள் எங்கள் டாக்ஸியில இப்போ நம்பிக்கையோடு பயணம் செய்யறாங்க.

கொரோனா முடிஞ்சதும், இந்த டாக்ஸி ஸ்டார்ட்அப் கம்பெனியை தமிழ்நாடு முழுக்க விரிவுபடுத்தப் போறேன்.

பழைய ஆட்டோக்களை வாங்கி, அவற்றை எலெக்ட்ரிக் ஆட்டோக்களாக மாற்றி ஓட்டும் ஐடியாவும் இருக்கு. இப்போதைக்கு `கிலோமீட்டருக்கு இவ்வளவு’னு பணம் வாங்குகிறோம். மொபைல் ஆப் பயன்பாட்டுக்கு வந்துட்டா, இன்னும் சிறப்பா செயல்பட முடியும்.

இன்னும் அஞ்சு வருஷத்துல தமிழகம் முழுக்கத் தெரியும் கம்பெனிகள்ல என்னோட `தோழா கால் டாக்ஸி’ இருக்கும்’’ என்று குரலில் நம்பிக்கை மிளிரப் பேசுகிறார் வெங்கடேஷ்வரன்.

பிசினஸ் என்பது வெறும் கனவு கண்டு, திட்டமிடுவதுடன் நின்றுவிடுவதில்லை. அதற்கு மிகப்பெரிய உழைப்பு தேவைப்படுகிறது. நூறு பேரில் நாம் மட்டும் மக்கள் கண்களில் தனித்துத் தென்பட, புதுமையான பல ஸ்மார்ட் ஐடியாக்களை நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கிறது. இவற்றையெல்லாம் நம்மால் தரமாகச் செய்து, வாடிக்கையாளர்களுக்கு முழு திருப்தியை அளிக்க முடியுமெனில், பிசினஸில் யாராலும் ஜெயிக்க முடியும். வெற்றிக்கான இந்தக் குணங்களெல்லாம் வெங்கடேஷ்வரனிடம் நிறையவே இருப்பதால், அவருக்கும் இனிவரும் காலத்தில் பெரிய அளவில் வெற்றி அடைவதற்கு வாய்ப்புகள் உண்டு!