Published:Updated:

சிறுதொழில் நிறுவனங்களை வந்தனை செய்வோம்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

சிறுதொழில் நிறுவனங்களை வந்தனை செய்வோம்!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

ஜூன் 27-ம் தேதி அன்று உலகெங்கிலும் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான நாளாக அனுசரிக்கப்படுகிறது. தனக்கு ஒரு தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்வதுடன், பல நூறு பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் இந்த சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோர்கள் உள்ளபடி பெருமையுடன் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால், இந்தத் துறை சார்ந்தவர்கள் அனுபவித்து வரும் பிரச்னைகள் ஒன்றிரண்டல்ல. கொரோனா நோய்த்தொற்று தோன்றும் முன்பு வரை கஷ்டப்பட்டு உழைத்து கரையேறிவிடலாம் என்கிற நம்பிக்கையில் இருந்தார்கள். ஆனால், அடுத்தடுத்து வந்த இரு ஊரடங்கு காரணமாக அவர்களின் தொழில் நசிந்திருக்கிறது. இனி மூன்றாவது அலை என்று ஒன்று வரும்பட்சத்தில், ஊரடங்கு என்கிற பெயரில் எல்லாத் தொழிற்சாலைகளையும் இயங்கவிடாமல் செய்வதைவிட, பாதிப்பு உள்ள பகுதிகளில் இயங்கும் தொழிற்சாலைகளை மட்டும் மூடிவிட்டு, மற்ற பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து இயங்க அனுமதிப்பதே அரசாங்கம் அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

இந்த வகையான தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்து தந்த பொருள்களுக்கான பணம் உடனடியாகக் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பல சிறுதொழில் நிறுவனங்கள் பொருள்களை உற்பத்தி செய்து தந்துவிட்டு, மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டியிருப்பதால், தொழிலைத் தொடர்ந்து செய்ய முடியாமல் தவிக்கின்றன. குறைந்தபட்சம் அரசு நிறுவனங்களாவது சிறுதொழில் நிறுவனங்களிடமிருந்து வாங்கிய பொருள்களுக்கு ஓரிரு வாரத்தில் பணம் கொடுப்பது அவசியம்.

மத்திய அரசாங்கம் முத்ரா கடன் உட்பட பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்தாலும், ‘கடன் கிடைக்கவில்லை’ என சிறுதொழில் நிறுவனங்களை நடத்துபவர்கள் புலம்புவது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அனைத்து சிறுதொழில் நிறுவனங்களுக்கும் கடன் தந்து, அதைச் சரியாக வசூலித்து, மீண்டும் கடன் தர வேண்டும் என்பதில் மத்திய அரசாங்கம் உறுதியாக இருந்தால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு நிரந்ததரத் தீர்வு கிடைக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் பொருள்களை மட்டுமே வாங்க வேண்டும் என்று நினைக்காமல், சிறுதொழில் நிறுவனங்கள் தயாரிக்கும் தரமான பொருள்களை வாங்கி, ஆதரிக்க வேண்டும் என்கிற எண்ணம் மக்களுக்கும் வர வேண்டும். அப்போதுதான் சிறுதொழில் நிறுவனங்கள் அரசையோ, பெரிய நிறுவனங்களையோ எதிர்பார்க்காமல் இருக்க முடியும்.

சில லட்சம் பேருக்கு வேலை தரும் பெரிய நிறுவனங்களுக்கு உதவி செய்தால் மட்டும் போதும் என்கிற அணுகுமுறையை ஒழித்துக்கட்டிவிட்டு, பல லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு வழிசெய்துகொடுக்கும் சிறுதொழில் நிறுவனங்களை இந்த நாளில் நன்றியுடன் நினைவுகூர்ந்து, பெருமைப்படுத்துவோம்!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism