நடப்பு
Published:Updated:

சிறுதொழில் முனைவோர்களின் வளர்ச்சிக்கு வழிகாட்டும் பூர்ணதா நிறுவனம்..!

கெளஷல் சிங், சுரேஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
கெளஷல் சிங், சுரேஷ்

எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் கவனிக்க... - MSME

சிறுதொழில் நிறுவனங்கள் தொடர்ந்து சிறு நிறுவனங் களாக இல்லாமல், பெரிய நிறுவனங்களாக வளர்வதற் கான வழிகாட்டுதலைத் தந்துவருகிறது மதுரையில் உள்ள பூர்ணதா நிறுவனம் (https://poornatha.com/). இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர்களான சுரேஷையும் கெளஷல் சிங்கையும் சமீபத்தில் சந்தித்தோம். பூர்ணதா பற்றி அவர்கள் விளக்கமாகப் பேசினார்கள்.

கெளஷல் சிங், சுரேஷ்
கெளஷல் சிங், சுரேஷ்

நம்மிடம் முதலில் பேசிய சுரேஷ் ‘‘தொழில்முனைதல் குறித்த கல்வியை சிறுதொழில் நிறுவனங்களுக்குக் கற்றுத் தர வேண்டும் என்பதற்காகவே பூர்ணதாவைத் தொடங்கினோம். சிறுதொழில் நிறுவனங்களை நடத்து பவர்கள் தினசரிப் பிரச்னைகளைச் சமாளிக்க ஓடிக்கொண்டே இருப்பார்கள். மூலப்பொருள்களை வாங்குவது, உற்பத்தி, விற்பனை, விற்ற பொருள்களுக்கான பணத்தை வசூலிப்பது என அத்தனை பிரச்னை களையும் அவர்கள்தாம் சமாளித்தாக வேண்டும். இந்த நிலையில், அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிச் செல்வது எப்படி என்பது குறித்த தெளிவான திட்டத்தை அவர்களால் தீட்ட முடிவதில்லை. இன்னும் சிலர், ‘பிசினஸ் நன்றாகத்தானே போகிறது. இதில் புதிதாகக் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது?’ என்று கேட்கிறார்கள்.

இப்படிப்பட்டவர்களிடம் பிசினஸ் தொடர்பான ஒவ்வொரு விஷயத்தையும் எடுத்துச் சொல்லி, இந்த விஷயத்தை இப்படிச் செய்தால், உங்கள் பிசினஸ் இன்னும் நன்கு வளர்ச்சி காணும் என்று சொல்லும் போது, ‘‘அட, ஆமா. இந்த விஷயம் எனக்கு இதுவரை தெரியாமப் போச்சே’’ என்று ஆச்சர்யப்பட்டு, நம் வழிகாட்டுதலைப் பெறத் தயாரா கிறார்கள்’’ என்றார் சுரேஷ்.

அடுத்து பேச ஆரம்பித்தார் கெளஷல். ‘‘சில தொழில்முனை வோர்கள், தொழில் நன்றாக நடப்பதால், விரிவாக்கம் செய்ய முடிவெடுத்து, அதற்கான முதலீட்டை எப்படித் திரட்டுவது என்றுகூட முடிவு செய்திருப்பார்கள். ஆனால், இதற்குத் தேவையான மனிதவளம் பற்றியோ, விற்பனைக்கான வாய்ப்புகள் பற்றியோ சரியான முடிவுகள் இல்லாமல் இருப்பார்கள். இன்னும் சில தொழில்முனை வோர்கள் நிறைய விற்பனை செய்திருப்பார்கள். ஆனால், விற்ற பொருளுக்கான பணம் திரும்ப வராமல் இருப்பது ஏன் என்று தெரியாமல் தவிப்பார்கள். இது மாதிரியான பிரச்னைகளுக்கு எப்படித் தீர்வு காண வேண்டும் என்று நாங்கள் சொல்லித் தருகிறோம்’’ என்றார் கெளஷல்.

பூர்ணதா நடத்திய வழிகாட்டுதல் வகுப்பில் கலந்துகொண்ட தினேஷ், ‘‘என்னிடம் பொருள்களை வாங்கிய வர்களிடமிருந்து, பணத்தை வசூலிக்க புதிய முறையைக் கையாள்கிறேன். வாங்கிய பொருளுக்கான பணத்தை சரியாகத் தருகிறவர்கள் அனைவரின் பெயரும் பச்சை நிறத்தில் இருக்கும். இவர்களை அவ்வப்போது போன் செய்து பாராட்டுவேன். சற்றுக் காலதாமதமாகப் பணம் தருபவர்கள் அனைவரின் பெயரும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இவர்களுக்கு வாரம் ஒரு முறையாவது போன் செய்து, பணம் தர வேண்டும் என்பதை ஞாபகப்படுத்துவேன். பல நாள் கழித்தே பணம் தருபவர்களின் பெயர்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். இவர்களைத் தினமும் போன் செய்து, பணம் கேட்பேன். இந்த டெக்னிக்கை பூர்ணதா வகுப்பில் கலந்துகொண்ட பிறகுதான் தெரிந்துகொண்டேன்’’ என்றார்.

இந்தியன் வங்கியில் சிறுதொழில் கடன் பெற்றவர்களுக்கு மட்டுமே இதுவரை இந்த வழிகாட்டுதல் வகுப்புகள் நடந்தன. தற்போது இந்த வழிகாட்டுதலை சிறுதொழில் நிறுவ னங்களை நடத்தும் அனைவருக்கும் தருகிறது. ஆன்லைன்மூலம் நடக்கும் இந்த வகுப்பில் கலந்துகொள்ள கட்டணம் செலுத்த வேண்டும். சிறு தொழில்முனைவோர்கள் இந்த வழிகாட்டுதலைப் பெறலாமே!