Published:Updated:

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 6-ம் இடம் - சரிவுகளைச் சமாளித்து எழுச்சிகண்ட முகேஷ் அம்பானி!

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

தற்போது மீண்டும் அதே இரண்டு மாத காலத்தில் உலகப் பணக்காரர்கள் வரிசையில் 17-வது இடத்தில் இருந்து தற்போது 6-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.

கொரோனா வைரஸால் இந்த உலகம் சந்தித்திருக்கும் பாதிப்புகள் கொஞ்சமல்ல. மக்கள் வாழ்வாதாரம் தொடங்கி, உலகப் பொருளாதாரம் வரை கொரோனா நோய்த் தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் ஒட்டுமொத்த உலகையும் உலுக்கி வருகிறது. அதன் காரணமாக உலக பொருளாதாரம் கடந்த சில மாத காலங்களாக அதலபாதாளத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஜனவரி மாதம் வரை உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் 50 இடங்களில் இந்தியாவைச் சேர்ந்த பல தொழிலதிபர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். ஆனால், கொரோனாவின் வருகைக்குப் பிறகு உலகின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் சில இந்தியர்கள் மட்டுமே நிகர மதிப்பு அடிப்படையில் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கின்றனர்.

ரிலையன்ஸ் - முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் - முகேஷ் அம்பானி

பொதுவாகவே உலக பணக்காரர்கள் பட்டியல் பெரும் புள்ளிகளின் நிதி நிலைமையைப் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும். இந்த டாப்-100 பட்டியலில் தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ளத் துடிக்கும் கோடீஸ்வரர்கள் ஏராளம். அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் உலகப் பொருளாதாரம் வரலாறு காணாத பின்னடைவை சந்தித்திருந்த நேரம் அது, அந்தச் சமயத்தில் பிரபல பொருளாதார அமைப்பான ஹருன் குளோபல் ரிச் லிஸ்ட் 'உலகின் டாப் 100' பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு இருந்தது. அதில் முகேஷ் அம்பானியைத் தவிர்த்து பெரும் பின்னடைவின் காரணமாக மற்ற இந்தியர்களின் பெயர் இடம் பெறவில்லை.

`ஜியோ ஈர்த்த ரூ.1,17,588.45 கோடி முதலீடு; கடனில்லை!’ -  மகிழ்ச்சியில் முகேஷ் அம்பானி

ஏப்ரல் மாதத்துக்கு முன்பு வரை உலக பணக்காரர்கள் பட்டியலில் 9-வது இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி, அப்போது 17-வது இடத்துக்கு தள்ளப்பட்டிருந்தார். அந்த நேரத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் இரண்டு மாதத்தில் மட்டும் 28% சரிவைக் கண்டிருந்தது. அதன் மதிப்பு 48,000 கோடி அமெரிக்க டாலராகும்.

இந்தியாவில் தீவிர முழு ஊரடங்கு அமலில் இருந்த நேரம் என்பதால், முகேஷ் அம்பானியின் பல தொழிற்துறை நிறுவனங்கள் முடங்கி அவரின் நிகர லாபமும் மதிப்பும் சரிவுக்காண காரணாமாக இருந்தன. ஆனால், தற்போது மீண்டும் அதே இரண்டு மாத காலத்தில் உலக பணக்காரர்கள் வரிசையில் 17-வது இடத்தில் இருந்து தற்போது 6-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். முகேஷ் அம்பானி இந்த டாப்-10 போட்டியில் எலான் மஸ்க், கூகுள் நிறுவனர் லாரி பேஜ் முதலியோரை வீழ்த்தி 6-வது இடத்தை எட்டிப் பிடித்திருக்கிறார். முகேஷ் அம்பானியின் தற்போதைய நிகர மதிப்பு 72.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக 65 பில்லியன் டாலர்களுடன் போட்டியில் நுழைந்த முகேஷ் அம்பானி, கடந்த வாரம் உலகின் முன்னணி பணக்காரர்களுள் ஒருவரான வாரன் பஃப்பெட்டை முந்திய நிலையில் தற்போது மீண்டும் பலரை பின்னுக்குத் தள்ளி 6-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.

உலகின் டாப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் அமேசானின் ஜெப் பெசொஸ், இரண்டாம் இடத்தில் பில் கேட்ஸ் , மூன்றாம் இடத்தில் பெர்னார்ட் அர்னால்ட், நான்காம் இடத்தில் மார்க் ஜுக்கர்பெர்க், ஐந்தாம் இடத்தில் ஸ்டீவ் பால்மர் மற்றும் ஆறாம் இடத்தில் முகேஷ் அம்பானி உள்ளனர். அம்பானியின் சொத்து மதிப்பு உயர்ந்துகொண்டே வருவதால் விரைவில் அவர் டாப்- 5 இடத்துக்கு முன்னேறுவார் என்று பொருளாதார நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு