Published:Updated:

கொரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடி; மும்பையில் மூடப்பட்ட பிரபல 5 நட்சத்திர ஹோட்டல்!

Hyatt Regency Mumbai
Hyatt Regency Mumbai ( Photo: Hyatt Website )

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு தற்காலிகமாக மூடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது மும்பை ஹயாத் ரீஜென்சி ஹோட்டல் நிர்வாகம்.

கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனாவால் இந்தியாவில் கோடிக்கணக்கானோர் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர். சிலர் சம்பளக் குறைப்புக்கு ஆளாகியுள்ளனர். பல தொழில்நிறுவனங்கள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக சுற்றுலாத்துறை மற்றும் அதை சார்ந்திருக்கும் நிறுவனங்களின் நிலை இன்னும் மோசம். அப்படி பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு தற்காலிகமாக மூடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது மும்பை ஹயாத் ரீஜென்சி ஹோட்டல் நிர்வாகம். மும்பை விமான நிலையம் அருகே இயங்கும் பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலான ஹயாத், விமான சேவை பாதிப்பால் கடும் நெருக்கடியை சந்தித்திருக்கிறது.

Hyatt Regency Mumbai
Hyatt Regency Mumbai
Photo: Hyatt Website

இதனால் இந்த ஹோட்டலுக்கு வாடிக்கையாளர்கள் வருவது மிகவும் குறைந்துவிட்டது. போதிய வருவாய் இல்லாத காரணத்தால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே நிர்வாகம் சிரமப்பட்டது. இந்த ஹோட்டலின் தாய் நிறுவனமான ஏசியன் ஹோட்டல்ஸ் (வெஸ்ட்) நிறுவனம் கொரோனா காலத்தில் ஹோட்டலை நடத்த பணம் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. சில மாதங்களாக சம்பளம் இல்லாமல் வேலை பார்த்த ஊழியர்கள் சம்பளம் கேட்க ஆரம்பித்திருக்கின்றனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் நிலைமை சரியாகும் வரை ஹோட்டலைத் தற்காலிகமாக மூடுவது என்று முடிவு செய்யப்பட்டு ஹோட்டல் புக்கிங் நிறுத்தப்பட்டுவிட்டது. ஹோட்டலில் பணி புரியும் ஊழியர்களிடம் திங்கள் கிழமையே இது குறித்து முறைப்படி தெரிவிக்கப்பட்டுவிட்டது

மறு அறிவிப்பு வரும் வரையில் ஹோட்டல் மூடப்பட்டிருக்கும் என்று இந்தியாவிற்கான ஏசியன் ஹோட்டல்ஸ் (வெஸ்ட்) துணைத் தலைவர் சஞ்சி சர்மா தெரிவித்திருக்கிறார்.

மேலும், ``ஏசியன் ஹோட்டல்ஸ் நிர்வாகத்திடமிருந்து ஹயாத் ரீஜென்சி ஹோட்டலை நடத்த போதிய நிதி வரவில்லை. எனவே, தற்காலிகமாக ஹோட்டல் செயல்பாட்டை நிறுத்திவைக்க முடிவு செய்திருக்கிறோம். பிரச்னைக்கு தீர்வு காண ஹோட்டல் உரிமையாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்'' எனத் தெரிவித்திருக்கிறார்.

Hyatt Regency Mumbai
Hyatt Regency Mumbai
Photo: Hyatt Website
``கொரோனா ஏற்படுத்திய இழப்பைத் தாங்க முடியவில்லை!" - 70 ஆண்டு பாரம்பர்ய நிறுவனம் `விட்கோ' மூடல்

மகாராஷ்டிரா அரசு கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்த ஆரம்பித்த நாளில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஹோட்டலில் பணியாற்றி வந்த நூற்றுக்கணக்கான ஊழியர்களின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. விரைவில் தளர்வுகள் விரிவாக்கப்பட்டு மீண்டும் விமானப் பயணங்கள் தொடங்கினாலும்கூட உடனடியாக மீண்டும் ஹோட்டல் மீண்டெழுவது சவாலான விஷயமே. எனவே தவிப்பில் இருக்கிறார்கள் ஹோட்டல் ஊழியர்கள்.

அடுத்த கட்டுரைக்கு