Published:Updated:

தந்தை டீக்கடைக்காரர், மகன் சாஃப்ட்வேர் கம்பெனி உரிமையாளர்!

செந்தில்குமார்
பிரீமியம் ஸ்டோரி
செந்தில்குமார்

தொழில்

தந்தை டீக்கடைக்காரர், மகன் சாஃப்ட்வேர் கம்பெனி உரிமையாளர்!

தொழில்

Published:Updated:
செந்தில்குமார்
பிரீமியம் ஸ்டோரி
செந்தில்குமார்

சாஃப்ட்வேர் உருவாக்குவதில் உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். மும்பையைச் சேர்ந்த செந்தில்குமார் சாஃப்ட்வேர் துறையில் தனக்கான இடத்தைப் பிடித்து அதில் சாதித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் அவர் தொடங்கிய சாவிக் டெக்னாலஜிஸ் என்ற சாஃப்ட்வேர் நிறுவனம் தொழில்களை நிர்வகிக்கப் பயன்படும் எஸ்.ஏ.பி எனப்படும் சாஃப்ட்வேர் தொழில்நுட்பத்தை இந்தியா உட்பட உலகம் முழுக்க உள்ள தொழில் நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறார்.

50 வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் செந்தில்குமார் தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள ராயகிரி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். மும்பையில் அவரது அலுவலகத்தில் நாம் அவரை சந்தித்தோம். தன்னுடைய பிசினஸ் பயணத்தை விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

செந்தில்குமார்
செந்தில்குமார்

‘‘1995-ம் ஆண்டு மெக்கானிக்கல் படிப்பை திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் முடித்த பிறகு, சரியான வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்தது. எனவே, வேலை தேடி மும்பைக்கு வந்தேன். மெக்கானிக்கல் துறையில் சில ஆண்டுகள் பணியாற்றினேன்.

அதன்பிறகு 1999-ம் ஆண்டு புதிதாக சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு 2016-வது ஆண்டு வரை பல முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றி வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்றேன். 2016-ம் ஆண்டு நான் பணியாற்றிய கம்பெனியின் நிர்வாகம் திடீரென மாறியது. இதனால் நானும் என் நண்பர்களும் வேறு வாய்ப்பைத் தேட வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டோம். எனவே, நானும் சில நண்பர்களும் சேர்ந்து புதிதாக சாஃப்ட்வேர் கம்பெனி ஒன்றைத் தொடங்க முடிவு செய்தோம்.

அந்த நேரத்தில் என்னிடம் கம்பெனி தொடங்க எந்த நிதியும் இல்லை. உடனே என் நண்பர்கள் மற்றும் கல்லூரியில் சேர்ந்து படித்தவர்களின் உதவியை நாடினேன். எங்களின் முயற்சிக்கு உடனே ஒத்துழைப்பு கிடைத்தது. எங்களை நம்பி எங்களுடைய கம்பெனிக்கு நிதியுதவி செய்தவர்களையும் கம்பெனியில் பங்குதாரர்களாகச் சேர்த்தோம்.

ஆனால், எனது பங்குக்கு கம்பெனியில் முதலீடு செய்ய என்னிடம் பணம் இல்லை. உடனே என் மனைவியிடம் இது குறித்து தெரிவித்தேன். அவரிடம் இருந்த நகைகளை கழற்றிக் கொடுத்து கம்பெனியை ஆரம்பிக்க சொன்னார். நண்பர்களிடம் திரட்டிய நிதி மற்றும் என் மனைவியின் நகை மூலம் கிடைத்தது என மொத்தம் ரூ.45 லட்சத்துடன் 2016-ம் ஆண்டு சாவிக் டெக்னாலஜிஸ் என்ற கம்பெனியை வெறும் எட்டு ஊழியர்களுடன் தொடங்கினோம்.

பெரும்பாலான தொழில் நிறுவனங்களுக்கு அதிகமாக தேவைப்படுவது எது என்பதை ஆராய்ந்து அதற்கு தக்கபடி சாப் (SAP - System Applications & Products) எனப்படும் சாஃப்ட்வேர் பிரிவில் கவனம் செலுத்தினோம். கம்பெனி தொடங்கிய முதல் ஆண்டிலேயே நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக அளவு எங்களுக்கு வர்த்தகம் இருந்தது.

மும்பையில் தொடங்கப்பட்ட எங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற இடங்களிலும் கிளைகளைத் தொடங்கினோம். இன்று இந்தியாவில் எவரெஸ்ட் மசாலா, தாமஸ்குக், ராம் டிரான்ஸ்போர்ட் என 350-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன் இந்தியா மட்டுமன்றி, அமெரிக்கா மற்றும் அரபு நாட்டிலும் கால்பதித்திருக்கிறோம்.

‘‘நாங்கள் நுகர்வோர் பொருள்களை வாடிக்கையாளர் களுக்கு வழங்கும் நிறுவனங்களுக்கு எந்த மாதிரியான சாஃப்ட்வேர் தேவை என்பதை அறிந்து, அதற்குத் தக்கபடி சாஃப்ட்வேர்களை சப்ளை செய்து பராமரித்து வருகிறோம். உற்பத்தியாக இருந்தாலும், விநியோகமாக இருந்தாலும் சரி, அதற்குத் தக்கபடி எஸ்.ஏ.பி சாஃப்ட்வேர்களை வழங்கு கிறோம். எங்கள் நிறுவனத்துக்கு வரும் வருவாயில் 80% சர்வதேச நிறுவனங்களிடமிருந்தும், 20% உள்ளூர் நிறுவனங் களிடம் இருந்தும் வருகிறது. வெறும் 45 லட்சம் ரூபாயில் தொடங்கப்பட்ட எங்கள் நிறுவனம், தற்போது ஆண்டுக்கு ரூ.25 கோடி வரை வருவாய் ஈட்டி வருகிறது. ஆண்டுதோறும் 22% வளர்ச்சி கண்டு வருகிறோம்.

என் தந்தை டீக்கடை நடத்தி அதில் வரும் வருமானத்தில் தான் என்னைக் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தார். எனவே, என் பெற்றோரின் மறைவுக்குப் பின்னர், ராயகிரியில் உள்ள என் சொந்த வீட்டை அலுவலகமாக மாற்றி, சுற்றியுள்ள கிராமப் பட்டதாரிகளுக்கு சாஃப்ட்வேர் பயிற்சியை அளித்து வருகிறோம். அத்துடன் விருப்பப்படு பவர்கள் அங்கேயே பணிபுரிந்து வருகின்றனர். ரோபாடிக், ஆட்டோமேஷன், ஐ.ஓ.டி, டேஸ்போர்ட் ரிபோர்ட்ஸ் என டிஜிட்டல் உலகின் முன்னணித் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொண்டு அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள புராஜெக்ட்டு களில் பணிபுரிந்து வருகிறார்கள்.

2027-ம் ஆண்டில் 5,000 ஊழியர்களுடன் 200 மில்லியன் டாலர் வருமான இலக்கை நோக்கிச் சென்றுகொண்டிருக் கிறோம். தற்போது கொரோனா தொற்றிலிருந்து உலகம் மீண்டு விட்டதால், சாஃப்ட்வேர் துறை புத்துயிர் பெற ஆரம்பித்திருக் கிறது. எனவே, நாங்கள் இன்னும் வளர நிறைய வாய்ப்பிருக்கிறது.

கடந்த ஆறு ஆண்டுகளில் சாஃப்ட்வேர் துறையில் சிறந்த பங்களிப்புக்காக எங்களின் நிறுவனம் பத்துக்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்து உள்ளது. எஸ்.ஏ.பி, மைக்ரோ சாஃப்ட், அமேசான், அசூர், கூகுள், மெண்டிக்ஸ் எனப் பல சர்வதேச நிறுவங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். கொரோனா முடக்கத்தின்போது மூடப்பட்ட கிளைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தவிர, அமெரிக்காவில் மேலும் சில கிளைகளைத் திறக்கத் திட்டமிட்டிருக்கிறோம்’’ என உற்சாகமாகப் பேசி முடித்தார் செந்தில்குமார்.

தன் கலாசார வேர்களை மறக்காமல் இருக்கும் இவர், இன்னும் பெரிய வெற்றிகளை அடைவார் என்று எதிர் பார்ப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism