Published:Updated:

நாகப்பட்டினத்திலிருந்து மனதை மயக்கும் முல்லங்கி காபி! காவிரி மண்ணில் காபி விற்பனை...

விஜய் கணேஷ்
பிரீமியம் ஸ்டோரி
விஜய் கணேஷ்

B U S I N E S S

நாகப்பட்டினத்திலிருந்து மனதை மயக்கும் முல்லங்கி காபி! காவிரி மண்ணில் காபி விற்பனை...

B U S I N E S S

Published:Updated:
விஜய் கணேஷ்
பிரீமியம் ஸ்டோரி
விஜய் கணேஷ்

துறைமுக நகரமான நாகப்பட்டினத்தில் பெரிய கடை வீதியில் மூன்றாம் தலைமுறையாக வெற்றி நடைபோட்டு வருகிறது ‘முல்லங்கி காபி.’ காவிரிப் பிராந்தியம் முழுக்கவுமே காபி பிரியர்கள் அதிகம் என்பதால், கடந்த 70 ஆண்டுகளாக அவர்களுக்கு விருந்து படைத்துவரும் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் கணேஷை சந்தித்தோம்.

“1945-ம் ஆண்டு எங்கள் தாத்தா அனந்தநாராயணன் அப்போது காபி தொழிலில் பிரபலமாக இருந்த ஒரு நிறுவனத்திடம் ஏஜென்சி கேட்டார். அவர்கள் தர மறுக்கவே, அவரே காபி தயாரிக்கும் நிறுவனத்தை ஆரம்பித்தார்.

விறகு அடுப்பில் காபிக் கொட்டையை வறுத்தெடுக்கும் காலம் அது. தீயின் வெப்பத்துக்கு ஏற்ப காபியின் சுவையும் மாறுபடும். எனவே, ஒரே மாதிரியான, தரமான காபியை மக்களுக்குத் தர வேண்டும் என்பதற்காக 1954-ல் ஜெர்மனியில் இருந்து காபிக் கொட்டைகளை வறுத்துக் கொடுக்கும் இயந்திரத்தைக் கப்பல் மூலமாக இறக்குமதி செய்தார். அன்றிலிருந்து இன்றுவரை அந்த இயந்திரம் பழுதில்லாமல் இயங்கி வருகிறது. அதனாலயே எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு, வாடிக்கை யாளர்கள் பாராட்டும்படி இருக்கிறது’’ என்றார்.

விஜய் கணேஷ்
விஜய் கணேஷ்

1978-ல் தாத்தாவின் மறைவுக்குப் பிறகு விஜய் கணேஷின் தந்தை சுப்பிரமணியன் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்தினார். 2014-ல் அவரும் மறைந்துவிட, இப்போது விஜய் கணேஷும் அவரின் மனைவி தனலட்சுமியும் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

‘‘இந்தியாவில் நல்ல குவாலிட்டி யான காபி கொட்டைகள் கர்நாடகா வில்தான் கிடைக்கும். காபிக் கொட்டையில் சுமார் 25, 26 ரகங்கள் உண்டு. அதில் நாங்கள் ஏழு வகையான ரகங்களை மட்டும் பயன்படுத்துகிறோம். ஒரு கிலோ காபிக் கொட்டை ரூ.320 விலை கொடுத்து வாங்குகிறோம். அதிலிருந்து 800 கிராம் காபி பவுடர்தான் கிடைக்கும். அதை ரூ.380 முதல் 480 வரை விற்பனை செய்கிறோம். காபி மற்றும் சிக்ரி பவுடர் கலந்த காபி பவுடர் ஒரு கிலோ ரூ.370 முதல் ரூ.375 விற்பனை செய்கிறோம்.

மாதம் ஒன்றுக்கு சுமார் 2,000 கிலோ காபி விற்பனையாகும். திருமணக் காலங்களில் விற்பனை கொஞ்சம் கூடுதலாக இருக்கும். எங்களுக்கு நிரந்தரமான வாடிக்கையாளர்கள் சுமார் 2,000 பேர் இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் மூன்று மாவட்டத்துக்கும் வேன் மூலம் கடைகள்தோறும் கொண்டுபோய் விற்பனை செய்கிறோம். கூரியர் மூலம் வெளியூர்களுக்கும் அனுப்பு கிறார்கள்” என்றார்.

“காபிக் கொட்டைகள் நியாயமான விலைக்குத் தருகிறோம். அவர்கள் காபி பவுடராக அரைத்துக் கேட்டாலும் அதையும் தருகிறோம். அதை அவர்களின் பிராண்ட் பெயரில் விற்பனை செய்துகொள்ள லாம்’’ என்று சொல்லும் விஜய் கணேஷ், புதுமையான ஒரு முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்.

‘‘இன்றைய அவசர உலகில் ஃபில்டர் காபி சாப்பிட ஆசைப் பட்டாலும், அதைத் தயாரிக்கப் பலரும் சிரமப்படுகிறார்கள். நெடுஞ்சாலை நெடுவிலும் ஃபில்டர் காபி கடைகள் நிறைய உள்ளன. அதில் மக்கள் கூட்டமும் நிரம்பி வழிகிறது. அந்தக் குறையைப் போக்குவதற்காக ஃபில்டர் காபி தயாரித்து, அதை இயற்கை முறையில் பேக்கிங் செய்து, ஒரு வாரத்துக்கு பயன்படுத்துவது போல் ஆய்வை மேற்கொண்டு வருகிறோம். எங்கள் முயற்சி ஜெயித்து, விரைவில் ரெடிமேடு பில்டர் காபி மக்களுக்கு கிடைக்கும் என்று நம்புகிறோம்” என்று முடித்தார்.

முயற்சி திருவினையாக்கும்..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism