Published:Updated:

நாணயம் புக் ஷெல்ஃப்: பதவி உயர்வு கிடைக்காததற்கு என்ன காரணம்?

நாணயம்  புக் ஷெல்ஃப்
பிரீமியம் ஸ்டோரி
News
நாணயம் புக் ஷெல்ஃப்

அலுவலக ரகசியங்களை அற்புதமாக விளக்கும் புத்தகம்

புதிதாகப் பணிக்குச் சேர்ந்த இடத்தில், பணிக்குச் சேர்ந்த குறுகியகாலத்திலேயே நிறுவனத்தின் கலாசாரத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டு அங்கே செய்ய வேண்டியது எது, செய்யக் கூடாதது எது என்பதை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அது குறித்து விளக்கமாகச் சொல்கிறது இந்த வாரம் நாம் பார்க்கவிருக்கும் பீட்டர் யாவிட்ஸ் (Peter Yawitz) எழுதிய ‘ஃப்ளிப் ஃப்ளாப்ஸ் & மைக்ரோவேவ்டு ஃபிஷ்’ என்ற புத்தகம்.

முதல் நாள் அனுபவம்..!

“அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்ள முடியாது. ஆனால், அவற்றையெல்லாம் புரிந்துகொள்ளவும் மற்றும் அந்த நிறுவனத்தில் வேலை என்பது எப்படி இருக்கும் என்பதை விளக்குவதற்கும் சரியான ஆள் வேண்டும். சாதாரணமாக அனைவரும் அலுவலகத்தில் செய்யும் விஷயங்களைக்கூட நாம் செய்ய முயலும்போது கஷ்டமாகவே இருக்கும். அனைத்து விஷயங்களையுமே புதிய இடம் நமக்கு நன்றாகப் பிடிபடும் வரை செய்வதற்கு பயமாகவே இருக்கும்.

நாணயம்  புக் ஷெல்ஃப்: பதவி உயர்வு கிடைக்காததற்கு
என்ன காரணம்?

எதிர்பார்ப்புகள் நேர்க்கோட்டில் அமைந்துவிட்டால்..!

புதிய அலுவலகம் என்பது நம் அனைவருக்குமே கொஞ்சம் புரிந்துகொள்ளக் கடினமான விஷயமாகவே இருக்கும். ஏனென்றால், ஏற்கெனவே அங்கே பணிபுரியும் நபர்கள் லட்சிய வேட்கையுடனோ அல்லது நிதானமாகவோ, தைரியசாலியாகவோ அல்லது கூச்ச சுபாவம் உடையவர்களாகவோ, ரிஸ்க் எடுக்கும் குணம் நிறைந்தவராகவோ அல்லது மிக ஜாக்கிரதை உணர்வோடு இருப்பவராகவோ அல்லது மேலே சொல்லப்பட்ட இரண்டு எல்லைகளுக்கும் நடுவில் இருப்பவராகவோ இருப்பார்கள்.

இதில் என்ன ஒரு செளகர்யம் என்றால், எந்த மாதிரியான குணாதிசயங்களைக் கொண்டிருப்பவராக இருந்தாலும், அவர்கள் அனைவரும் வாழ்வில் வெற்றி பெற விரும்புபவர்களாகவே இருப்பார்கள். இதுதான் இவர்கள் அனைவருக்கும் நடுவே இருக்கும் ஒரு பொதுவான குணாதிசயமாக இருக்கும். இதில் வெற்றி என்று இவர்கள் நினைப்பதும், பணிபுரியும் அந்த நிறுவனம் (அதன் தலைவர்) நினைப்பதும் ஒரே நேர்கோட்டில் அமைந்துவிட்டதென்றால், அங்கே பணிபுரிதல் என்பது சுகமான அனுபவமாக இருக்கும்.

மூன்று வகையான பேச்சு வகைகள்..!

சரி, பல்வேறுவிதமான மனநிலைகொண்ட பணியாளர்களை வகைப்படுத்திவிட்டோம். இந்தப் பணியாளர்களின் அன்றாடச் செயல்பாடுகள் அதிலும் குறிப்பாக, தகவல் பரிமாற்றங்கள் என்பவை நிறுவனத்தினுள் எப்படியிருக்கும் என்று வகைப்படுத்திப் பார்ப்போம்.

‘இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள்’ என்று இயக்கும் வகையிலான பேச்சுகொண்டவர்கள், செயலற்றதன்மை கொண்ட பேச்சுகொண்டவர்கள், செயலற்ற அதே சமயம், ஆக்ரோஷமாகச் செயல்படும் அதிகாரப் பேச்சுகொண்டவர்கள் என மூன்றுவிதமாக மனிதர்களின் பேச்சு வகைகளைப் பிரிக்கலாம்.

நாணயம்  புக் ஷெல்ஃப்: பதவி உயர்வு கிடைக்காததற்கு
என்ன காரணம்?

இவற்றில் முதல் வகையான பேச்சு கொண்டவர்கள் எதையும் நேரடியாகச் சொல்லும் குணம்கொண்டவர்கள். ‘சுற்றி வளைக்காமல் பேசுங்கள். இதனால் கம்பெனிக்கு என்ன லாபம்?’ என்பது போன்ற நேரடியான வார்த்தைகள் மட்டுமே இவர்கள் வாயிலிருந்துவரும். இரண்டாவது வகையானவர்கள் செயலற்றதன்மை கொண்ட பேச்சைக்கொண்டவர்கள், ‘உங்களுக்கு பிரச்னை இல்லையென்றால், இது பற்றிக் கருத்துக் கூறுங்கள்’, ‘எனக்கு இதில் எது சரியென்று தெரியவில்லை’, ‘நான் சொல்வது தப்பாகக்கூட இருக்கலாம’ போன்ற வார்த்தைகளைப் பேசுவார்கள்.

மூன்றாவது வகை மனிதர்கள், ‘இதை நீங்கள் உங்கள் ஸ்டேட்மென்ட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள். நான் ரொம்ப அதிகமாக எதிர்பார்ப்பேன். அதற்கு ஏற்றாற்போல் வேலை செய்யுங்கள்’ என்பது போன்ற வார்த்தைகளைப் பேசுபவர்களாக இருப்பார்கள்.

இந்த மூன்று வகையான மனிதர்களும், நிறுவனங்களின் சட்டதிட்டங்களுமே நிறுவனத்தின் கலாசாரத்தை நிர்ணயிக்கிறார்கள். நிறுவனங்கள் அவற்றின் காரண காரியத்தைத் தெள்ளத் தெளிவாகச் சொல்லும்போதிலும் இது போன்ற பல நபர்களின் கலவையான வேலைச் சூழலே நிறுவனத்தின் கலாசாரத்தை நிர்ணயிக்கிறது. இதைச் சுலபமாகப் புரிந்துகொள்ள முதலில் நிறுவனத்தின் காரண காரியம் என்ன என்பதை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதை நீங்கள் புரிந்துகொண்டால், அதை நிறைவேற்றுவது மாதிரி நீங்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை உணர்ந்து நடக்க முடியும்.

மேலும், உங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் நிறுவனத்தின் காரண காரியத்துடன் எந்த அளவுக்கு ஒத்துப்போகிறது என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.

நாணயம்  புக் ஷெல்ஃப்: பதவி உயர்வு கிடைக்காததற்கு
என்ன காரணம்?

ஆரம்பகாலத்தில் செய்யக் கூடாதது என்ன?

ஆரம்பகாலத்தில் நீங்கள் ஒருவருக்கு வணக்கம் சொல்வதில் ஆரம்பித்து, உங்கள் நடை, உடை, பாவனை என அனைத்துமே உங்களைக் குறித்த மதிப்பீடுகளைச் செய்ய வைப்பவையாக இருக்கும்.

மீட்டிங்குக்கு லேட்டாகப் போவது, மீட்டிங்கின்போது போனைப் பார்த்தல் என்பதில் ஆரம்பித்து, `போரடிக்கிறது’ என்பதை முகத்தில் காட்டுதல், கண்ணைச் சுழற்றுதல் போன்றவை எதிர்பாராத விளைவுகளைத் தரும் விஷயங்கள்” எனப் பட்டியலிட்டுச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

‘‘பேச்சை விடுங்கள். நீங்கள் நிற்கும் நிலை, இடுப்பில் கைவைத்து நிற்பது, கையைக் கட்டிக்கொண்டு நிற்பது, விழுந்து விழுந்து சிரிப்பது, பாக்கெட்டில் கையைவிட்டு சாவி, சில்லறை போன்றவற்றின் ஒலியை எழுப்புவது எனப் பல பேச்சல்லாத விஷயங்களும் உங்களை ஆரம்பகாலத்தில் மதிப்பீடு செய்ய உதவும்’’ என்று சொல்லும் ஆசிரியர், இந்த மாதிரியான செயல்களை எப்படியெல்லாம் கணக்கில் கொள்வார்கள் என்றும் விளக்கமாகச் சொல்லியிருக்கிறார்.

நாணயம்  புக் ஷெல்ஃப்: பதவி உயர்வு கிடைக்காததற்கு
என்ன காரணம்?

நிறுவனத்தின் கலாசாரத்தைப் புரிந்துகொண்ட பின்னர் வியாபாரரீதியாக பொதுவாக புதிய நபர்களிடம் பேச ஆரம்பிப்பது எப்படி, எப்போது பேச வேண்டும், எதைப் பேச வேண்டும், எதற்கு மெயில் அனுப்ப வேண்டும், எதற்கு டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்ப வேண்டும் மீட்டிங் நடத்துவது எப்படி, டீமுடன் உரையாடுவது எப்படி, சாப்பாட்டு அறையில் எதைப் பேசலாம், எதைப் பேசக் கூடாது, பர்சனல் டிஜிட்டல் வாழ்க்கையையும், அலுவலகரீதியான டிஜிட்டல் வாழ்க்கையையும் பிரித்து நிர்வகிப்பது எப்படி, அலுவலக வேலைக்காக ஆரம்பநாள்களில் பயணம் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன, நிர்வாகிகளை நிர்வகிப்பது எப்படி, உடன் பணிபுரிபவரோ, வாடிக்கையாளரோ எப்போதும் சண்டையிடும் ஒரு குறை மட்டுமே கூறும் / சண்டைக்கார நபரைச் சமாளிப்பது எப்படி, கஷ்டமான பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக நடத்துவது எப்படி போன்ற பணிக்குச் செல்லும் பலரும் ஆரம்பகாலத்தில் அறிய வேண்டிய அம்சங்களைத் தெளிவுபடுத்தியிருக்கிறார் ஆசிரியர்.

நிறுவனத்தின் கலாசாரம் தெரியாமல் தத்தளிக்கக்கூடிய விஷயங்கள் அனைத்துக்கும் சரியான ஆலோசனைகளைச் சொல்லும் இந்தப் புத்தகத்தை, புதிதாகப் பணிக்குச் செல்பவர்கள் அனைவரும் படித்துப் பயன் பெறலாம்.