Published:Updated:

நாணயம் புக் ஷெல்ஃப் : வெற்றிக்கு உதவும் நம்பிக்கையுடன் பேசும் கலை! - கற்றுக்கொள்ளும் சூட்சுமங்கள்!

நாணயம்  புக் ஷெல்ஃப்
பிரீமியம் ஸ்டோரி
News
நாணயம் புக் ஷெல்ஃப்

டெக்னாலஜி எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டே போனாலும், குரலின் முக்கியத்துவம் மட்டும் எள்ளளவும் குறையவில்லை.

குரல்... நம் எண்ணங்களையும், சிந்தனைகளையும், தேவைகளையும் தெளிவாக எடுத்துச் சொல்ல உதவும் கருவி. இதைப் பற்றி நாம் என்றைக்காவது அக்கறை எடுத்துக்கொண்டிருக்கிறோமா? ஒரு பாடகன் அல்லது பாடகியாக இருந்தால்தான் குரலில் அக்கறை செலுத்த வேண்டும் என்பதில்லை.

நீங்கள் வெற்றிகரமான மனிதராகத் திகழ வேண்டுமெனில், குரல் என்பது எந்த அளவுக்கு முக்கியம் என்பதை எடுத்துச் சொல்கிறது நாம் இந்த வாரம் பார்க்கவிருக்கும் ‘ஃபைண்ட் யுவர் வாய்ஸ்’ என்ற புத்தகம். கரோலின் கோய்டர் (Caroline Goyder) என்ற பெண் எழுத்தாளர் எழுதிய இந்தப் புத்தகம், அதோடு, எந்தச் சூழ்நிலையிலும் நம்பிக்கையுடன்கூடிய குரலுடன் பேசுவது எப்படி என்பதை விளக்கமாகச் சொல்கிறது.

நாணயம்  புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

என்னாச்சு என் குரலுக்கு..?

‘‘குரலின் முக்கியத்துவத்தை நாம் பல சமயங்களில் உணர்வதே இல்லை. குரல் நடுங்கும் வேளையில், நாக்கு தழுதழுக்க நாம் பேசும்போது மட்டுமே ‘நம் குரலுக்கு என்னாச்சு...’ என்ற எண்ணம் நமக்கு வருகிறது. இது போன்ற சிறப்புச் சூழ்நிலைகளில் மட்டுமே நம் குரலைக் கவனிக்காமல், சாதாரணமாக அவ்வப்போது உங்கள் குரலின்மீது கவனம் வைக்கச் சற்று நேரம் ஒதுக்குங்கள், கூர்ந்து கவனியுங்கள். அப்படிக் கவனிப்பதன் மூலம் உங்கள் குரலின் மீது உங்களுக்கு நல்லதொரு கட்டுப்பாடு (Control) கிடைக்கும். உங்களுக்கு உங்கள் குரல்மீது கிடைக்கும் அந்தக் கட்டுப்பாடு உங்களுக்கு அபரிமிதமான நம்பிக்கையைக் கொடுக்கும்’’ என்கிறார் ஆசிரியை.

மென்று விழுங்காமல் பேசுவது எப்படி?

லைட்டிங் வெளிச்சம் நம்மீது விழும்போது அமைதியாக, சலனமில்லாமல் பேசுவது எப்படி... பேசியே ஆக வேண்டும் என்ற நிலையில், அதனால் ஏற்படும் பரபரப்பைச் சட்டை செய்யாமல் இருப்பது எப்படி... பேச ஆரம்பித்த பிறகு அமைதியாகவும்/முழுக் கட்டுப்பாட்டுடனும் இருப்பது எப்படி... பேச்சைக் கேட்பவர்களின் சுவாரஸ்யத்தைத் தக்கவைத்துக்கொள்கிற மாதிரி பேசுவது எப்படி... எதிரே இருக்கும் கூட்டம் நம்மை மிரட்டி பயமுறுத்திவிடாமல் பார்த்துக் கொள்வது எப்படி... குழப்பியடிக்காமல், வார்த்தைகளை மென்று முழுங்காமல், ‘ம்ம், ம்ம்...’, `வந்து, வந்து...’ என்று இழுக்காமல், தெளிவாகப் பேசுவது எப்படி... பேசும் வேளையில் கை நடுங்காமல் பார்த்துக்கொள்வது எப்படி... ஒரு கூட்டத்தில் நிறைய பேர் பேசும்போது, நாம் சொல்ல வந்ததை `நச்’சென்று சொல்வது எப்படி... போன்ற கேள்விகளே குரல் குறித்து அதிகமாக அனைவராலும் கேட்கப்படும் கேள்விகள். இவற்றுக்கு விடை சொல்வதுடன் எப்படிக் குரலை வளமிக்கதாக்கிக் கொள்வது என்பதை விளக்குகிறது இந்தப் புத்தகம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பேச்சுதான் உயிர்மூச்சு!

‘‘மனிதர்களுக்குப் பேச்சுதான் உயிர்மூச்சு. பேசாமல் மனிதனால் இருக்கவே முடியாது. ஆனால், எல்லோரும் பேசி ஜெயித்துவிடுவதில்லை. நீங்கள் உங்கள் குரலில் பேசும் வேளையில், உலகம் உங்கள் முன்னால் பவ்யமாக அமர்ந்து கேட்க வேண்டுமென்றால், நீங்கள் பலமாகவும் தெளிவாகவும் பேச வேண்டும். எந்த அளவுக்கு நம்பிக்கை உங்கள் குரலில் தெறிக்கிறதோ, அந்த அளவுக்கு நீங்கள் வெற்றி பெற முடியும்.

நாணயம்  புக் ஷெல்ஃப் : வெற்றிக்கு உதவும் நம்பிக்கையுடன் பேசும் கலை! - கற்றுக்கொள்ளும் சூட்சுமங்கள்!

மாற்றம் கொண்டு வரும் குரல்!

டெக்னாலஜி எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டே போனாலும், குரலின் முக்கியத்துவம் மட்டும் எள்ளளவும் குறையவில்லை. இன்றைக்கும் மனிதனின் குரல் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கிறது. ஒரு பொருளாதாரத்தில் எதுவுமே தானாக மாறிவிடுவதில்லை. மாற்றம் வர மனம் மாற வேண்டும். நடத்தை என்பது கட்டாயப் படுத்துதலின் மூலம் மாற்றப்பட்டுவிடலாம். ஆனால், மனம் மாற வேண்டுமெனில், மனிதர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள் மிக மிக முக்கியம். எனவே, குரல் என்பதன் மகத்துவம் இன்னும் நீண்ட காலத்துக்கு மாறவே மாறாத ஒன்றாகவே இருக்கும்’’ என்கிறார் இந்நூலின் ஆசிரியை.

பயிற்சி முக்கியம்..!

‘‘உங்கள் குரலில் வெளிப்படும் பல்வேறு வெரைட்டிகளான பச்சாதாபம், பரிதாபம், உணர்ச்சி, நுணுக்கம் போன்றவைதான் உங்களுடைய செல்வாக்கை நிர்ணயிக்க உதவுவதாக இருக்கின்றன என்பதை மறந்துவிடாதீர்கள். இதில் பிரச்னையே உங்களுக்குள் ஒளிந்துகிடக்கும் நம்பிக்கையை வெளிக் கொணர்வதுதான். அதுவும், ஓர் அழுத்தம் நிறைந்த சூழலில் நம்பிக்கையை வெளிக் கொணர்ந்து குரலில் காண்பிப்பது கொஞ்சம் சிரமமான வித்தைதான்.

Find Your Voice
Find Your Voice

என்றாலும், `இயல்பாகவே (பிறவி) தன்னம்பிக்கை நிறைந்த பேச்சாளர்’ என்ற ஒரு பிரிவினரே கிடையாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்படிப் பட்ட பேச்சாளர்களும் அழுத்தம் அதிகமாக இருக்கும் நேரத்திலும்கூட அமைதியாகவும், சலனமின்றி யும், நம்பிக்கையுடனும் பேசுவது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டவர்கள்தான். நாம் பேசும்போது பார்வையாளர்கள் நம்மை உற்றுப் பார்த்தாலும் பயம் கொள்ளத் தேவையில்லை; ‘பார்வையாளர்களை என் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன் பார்த்தாயா...’ என்று மார்தட்டிக்கொள்ளவும் தேவையில்லை. எனவே, இயற்கையாக நமக்கு எதிராக இருக்கும் அனைத்தையும் நமக்கு நன்மை பயக்கும் வண்ணம் மாற்றியமைத்திடும் திறனை, பயிற்சியின் மூலமே நாம் பெற்றிட வேண்டும்’’ என்று நமக்குப் புதிய உண்மைகளைச் சொல்கிறார் ஆசிரியை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நல்ல பேச்சாளருக்கான நான்கு படிநிலைகள்!

‘‘ `நல்ல பேச்சாளர், நன்கு செவிமடுத்து கேட்பவராக இருப்பார்’ என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். நன்கு செவிமடுத்து கேட்கும் நபராக மாறுவதற்கு முதலில் நமக்குத் தெரிந்தவற்றையெல்லாம் கொட்டிவிட்டு பின்னர் கேட்டல், எது நம்மை வியக்க வைக்கிறதோ அதைக் கூர்ந்து கேட்டல், சொல்பவரின் நிலைமையில் நாம் இருந்து கேட்டல் மற்றும் நமக்குத் தெரிந்தவற்றைச் சொல்லும்போதே மற்றவர்கள் கூறுவதையும் கேட்டு, கிரகித்துக்கொள்ளும் திறனுடன் இருத்தல் என்ற நான்கு படிநிலைகள் இருக்கின்றன’’ என்று சொல்லும் ஆசிரியை இந்தப் படிநிலைகளை எப்படிக் கடப்பது என்பதையும் விளக்கமாகச் சொல்லியுள்ளார்.

நாணயம்  புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

‘‘நீங்கள் பேசுவதைப் பிறர் கவனிக்க வேண்டுமென்றால், நீங்கள் முழுமையாக அதில் கமிட் ஆக வேண்டும். ரொம்பவும் பட்டும் படாமல் பேசினால் ஒருவரும் உங்கள் பேச்சைக் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள். உதாரணமாக, சாலையில் நீங்கள் வண்டியை ஓட்டுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். `லேன் மாறலாமா, வேண்டாமா...’, `ஓவர்டேக் செய்யலாமா, வேண்டாமா...’ என்று நீங்கள் தயங்கித் தயங்கி வண்டியை ஓட்டினால் முன்னேறவே முடியாது. டாப் கியர் போட்டு, லேன் மாற்றி, வேகமெடுத்து, ஹார்ன் அடித்து, ஓவர்டேக் செய்ய முற்பட்டால் மட்டுமே உங்களுக்கு வழி கிடைக்கும். இல்லையா... அதுவேதான் பேச்சிலும்.

‘‘பெரும் பேச்சாளர்களெல்லாம் பேசுவதற்கான தன்னம்பிக்கையுடன், ஏற்கெனவே தயாரித்துவைத்த விஷயங்களைச் சுருக்கமாக, நிதானமிழக்காமல், அவர்களுடைய போக்கிலேயே சொல்லத் தெரிந்து வைத்திருப்பவர்கள்தான். இவையனைத்தும் கைகூடி வந்துவிட்டால் பேச்சு என்பது உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான விஷயமாக இருக்கும்’’ என்று சொல்கிறார் ஆசிரியை.

பேச்சின் ரகசியங்களைச் சொல்லும் இந்தப் புத்தகம் பணியாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் என அனைவருக்கும் பயனுள்ளது!

- நாணயம் விகடன் டீம்