Published:Updated:

நாணயம் புக் ஷெல்ஃப் : கவனச்சிதறல்... தவிர்க்கும் வழிகள்!

நாணயம்  புக் ஷெல்ஃப்
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் புக் ஷெல்ஃப்

வாழ்க்கையை மாற்றும் வரப்பிரசாதம்!

நாணயம் புக் ஷெல்ஃப் : கவனச்சிதறல்... தவிர்க்கும் வழிகள்!

வாழ்க்கையை மாற்றும் வரப்பிரசாதம்!

Published:Updated:
நாணயம்  புக் ஷெல்ஃப்
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் புக் ஷெல்ஃப்
வாழ்க்கையில் பல சாதனைகளை நிகழ்த்த ‘கவனம்’தான் முக்கியக் காரணமாகத் திகழ்கிறது.

‘உங்கள் கவனத்தை முழுமையாக உங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியுமா..?’ என்ற கேள்வியை எழுப்பி, ‘கவனச் சிதறலைத் தவிர்ப்பது எப்படி..?’ என்பதை எழுத்தாளர் நிர் இயால் (Nir Eyal), எழுத்தாளர் ஜூலி லீ-யுடன் (Julie Li) இணைந்து எழுதிய, `இண்டிஸ்ட்ராக்டபிள்’ (Indistractable) புத்தகம் நமக்குக் கற்றுத்தருகிறது.

நாணயம்  புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

உங்கள் சூப்பர் பவர் எது?

‘உங்கள் சூப்பர் பவர் எது?’ என்ற கேள்வியைத் தலைப்பாகக் கொண்டு ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகத்தின் முதல் அத்தியாயம். நம்மைப்போலவே சோஷியல் மீடியா, டி.வி., லேப்டாப் ஆகியவற்றோடு இருந்த இந்தப் புத்தகத்தின் ஆசிரியரை கவனச்சிதறலைக் குறித்து யோசிக்க வைத்தது எது தெரியுமா... “என் குழந்தையுடன் அமர்ந்து ஆக்டிவிட்டி தொடர்பான பாடப் புத்தகத்தின் பகுதி ஒன்றைப் பூர்த்தி செய்தபோதுதான்” என்று அவரே சொல்கிறார். அந்த ஆக்டிவிட்டி புத்தகத்தில், ‘உங்கள் சூப்பர் பவர் எது?’ என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அவருடைய மகள் கணநேரமும் தாமதமில்லாமல் பதில் சொல்ல, இவரால் பதில் சொல்லவே முடியவில்லை. நிறைய யோசிக்க வேண்டியிருந்தது.

புத்தக ஆசிரியரின் நண்பர் ஒருவர், அவருடைய குழந்தையிடம் இந்தக் கேள்வியைக் கேட்டாராம். ‘எனக்கு மற்ற உயிரினங்களிடம் பேசும் திறன் இருந்தால் அதுதான் என்னுடைய சூப்பர்பவராக இருக்கும்’ என்று சொன்னதாம் அந்தக் குழந்தை. ‘ஏன் இப்படியொரு பதிலை சொல்கிறாய்’ என்று கேட்டதற்கு, ‘இந்த பவர் இருந்தால் நீங்களும் அம்மாவும் என்னைக் கண்டுகொள்ளாமல் உங்களுடைய கம்ப்யூட்டர்/ஸ்மார்ட்போனில் பிஸியாக இருக்கும்போதெல்லாம் நான் அவற்றோடு பேசிக்கொண்டிருக்கலாமே...’ என்றதாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நோ ஸ்மார்ட்போன்!

இது போன்ற நிகழ்வுகளைச் சரிசெய்யலாம் என்று எண்ணி நியூஸ் பேப்பரை வீட்டில் போடச் சொன்னாராம் ஆசிரியர். ஸ்மார்ட் போனை விட்டுவிட்டு, சாதாரண போனுக்கு மாறினாராம். பெரிய பிரயோஜனம் ஒன்றும் இல்லை. கொஞ்ச நாளில் படிக்காத பேப்பர்கள் ஒரு குவியலாக உருவாகின; ஜி.பி.எஸ் இல்லாமல் ஒரு விலாசத்தைக் கண்டுபிடிக்கத் தெருத் தெருவாக அலைய வேண்டியிருந்தது; மீட்டிங்குகளைச் சரியாகக் குறித்து வைக்க முடியவில்லை... எனப் பல பிரச்னைகள் உருவாகின.‌

நாணயம்  புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

‘‘இதிலிருந்து நான் கண்டறிந்தது என்னவென்றால், டெக்னாலஜி இருந்தாலும், இல்லையென்றாலும் கவனச்சிதறலுக்கு ஆளாவது மனித இயல்பு என்பதைத்தான். ஆன்லைன் என்பது ஒருவகை கவனச்சிதறலுக்கு வழிவகை செய்வது. அது இல்லாவிட்டால் இன்னொரு வகைச் சிதறல் வரும். கவனச்சிதறலைத் தவிர்ப்பது எப்படி என்பதில்தான் கவனம் செலுத்த வேண்டும் என்பதை நான் உணர்ந்தேன்’’ என்கிறார் நிர் இயால்.

கவனச்சிதறலுக்கு ஐந்து பிரிவுகள்!

இந்தப் புத்தகத்தை ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார் இதன் ஆசிரியர். முதல் பகுதியில், எந்தெந்தவிதமான உளவியல் அசெளகர்யங்களால் நாம் கவனச்சிதறலுக்கு ஆளாகிறோம் என்பதைத் தெளிவுபடுத்தி யிருக்கிறார். கவனச்சிதறல் என்பது நிகழ்கால வலிகளிலிருந்து தப்பிக்க நினைக்கும் ஓர் ஆரோக்கியமற்ற வழி. அந்த வலிகளைச் சரிவரப் புரிந்துகொண்டால் தப்பிக்கும் எண்ணத்தை கணிசமான அளவு குறைத்துவிடலாம்.

இரண்டாவது பிரிவில், நமக்கு முக்கியமானது என்று நாம் நினைக்கும் விஷயங்களுக்கு எப்படி நேரம் ஒதுக்கக் கற்றுக்கொள்வது என்பதை விளக்குகிறது இந்த நூல்.

வெறுமனே `கவனச்சிதறல்... கவனச்சிதறல்’ என்று கதறாமல் எது நம் கவனச்சிதறல் உருவாகக் காரணமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது எப்படி என்பதையும் விளக்குகிறது இந்த அத்தியாயம். இதன் மூலம் உங்களுடைய நேரத்தை எப்படி உபயோகிப்பது என்பதைத் திட்டமிடத் தெரிந்துகொள்வீர்கள்.

மூன்றாவது பிரிவில், நாம் நாமாகவே செய்துகொள்ளும் கவனச்சிதறலையும் தாண்டி, வெளியிலிருந்து வரும் கவனச்சிதறலுக்கான தூண்டுதல்களை எப்படி அறிந்துகொண்டு செயல்படுவது என்பதை விளக்கமாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

``டெக்னாலஜி நிறுவனங்கள் `டிங்...’ என நம் ஸ்மார்ட்போனில் ஒலிகளை எழுப்பி, நம்முடைய கவனச்சிதறலை தூண்டவே தொடர்ந்து முயல்கின்றன. வந்த இ-மெயிலைப் பார்ப்பதில் தவறே இல்லை. வராத இ-மெயிலுக்காக ஸ்வைப் செய்வதில்தான் கவனச்சிதறல் ஆரம்பிக்கிறது. வெறும் டெக்னாலஜி நிறுவனங்கள் மட்டுமல்ல. கிச்சன் கேபினட்டில் இருக்கும் குக்கீஸில் (சாப்பிடும் குக்கீஸ்) இருந்து, நாம் அவசரமாக முடிக்க வேண்டிய வேலையில் இருக்கும்போது தொணதொணவெனப் பேச்சுக் கொடுக்கும் பக்கத்து சீட்டுக்காரர் வரை எல்லாமே வெளியிலிருந்துவரும் கவனச்சிதறலுக்கான தூண்டுதல்களே...’’ என்கிறது இந்தப் புத்தகம்.

Indistractable
Indistractable

நான்காவது பிரிவில், கவனம் சிதறாத நபராகத் திகழ்வது எப்படி என்பது குறித்து விளக்கப்பட்டிருக்கிறது. ``ஒரு செயலைச் செய்ய வேண்டும் என நாம் திட்டமிடும்பட்சத்தில் நாம் அதற்கான அர்ப்பணிப்பு ஒப்பந்தத்தை (Precommitment Pact) நம்முடைய மனதினுள் போட்டுக்கொள்ள வேண்டும்’’ என்கிற இந்த நூல், இதற்காக ஒரு பழங்கதை ஒன்றையும் சொல்லி விளக்குகிறது.

கடற்கொள்ளையர்கள் சிலர் ஒரு தீவில் இருந்துகொண்டு மனம் லயிக்கும் இசையுடன் கூடிய பாடல் ஒன்றைப் பாடுவார்களாம். கப்பலைச் செலுத்துபவர்கள் அந்த இசையில் மயங்கி அந்தத் தீவை நோக்கிச் செல்ல எத்தனிக்கும்போது, கப்பலை மடக்கிக் கொள்ளையடித்து விடுவார்களாம். இதை நன்கு அறிந்த தலைமை மாலுமி ஒருவர் அந்த இடத்துக்கு அவர்களுடைய கப்பல் வருவதற்கு முன்னால் பணியாளர்களைக் காதில் மெழுகை வைத்து அடைத்துக்கொள்ளச் சொல்வாராம். அப்படி வைத்துக்கொண்டு இவரைக் கப்பலின் கொடிமரத்தில் கட்டிப் போட்டுவிடவும் சொல்வாராம். ஏனென்றால், மனதைக் கிறங்கவைக்கும் பாட்டு என்பதால், இவர் கப்பலை அந்தத் திசையில் செலுத்தச் சொல்லாமலும் (அவர் சொன்னாலும் கேட்காது – காதில் மெழுகு உள்ளது), இவர் கப்பலிலிருந்து குதித்து, தீவை நோக்கி நீந்திச் சென்றுவிடாமல் இருக்கவும்தான் இத்தகைய ஏற்பாடு. ``இது போன்ற முன்னேற்பாடுகள் முக்கியம்’’ என அறிவுறுத்துகிறது இந்த நூல்.

புத்தகத்தின் ஐந்தாவது பிரிவில், இதுவரை பார்த்த கருத்துகளையெல்லாம் நடைமுறைப் படுத்தியபோது நடந்த நிஜக்கதைகளைச் சொல்லி விளக்குகிறார் நூலாசிரியர் நிர் இயால்.

ஆறாவது பிரிவில், குழந்தைகளை கவனச்சிதறலுக்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்வது எப்படி என்பதை விளக்கும் இந்த நூல், சரியான நேரத் திட்டமிடுதல் இன்மைதான் குழந்தைகளை டிஜிட்டல் கவனச்சிதறலுக்கு ஆளாக்குகிறது என்கிறது. வாழ்வில் எந்த அளவுக்குச் சிறப்பாகச் செயலாற்றுகிறீர்கள்/திட்டமிட்டபடி நடக்கிறீர்கள், எந்த அளவுக்கு குடும்பத்துடன் நேரம் செலவழிக்கிறீர்கள், எந்த அளவுக்கு சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்பதெல்லாம் எந்த அளவுக்கு நீங்கள் கவனச்சிதறல் இல்லாமல் இருக்கிறீர்கள் என்பதை வைத்தே அமையும் விஷயமாக இருக்கிறது. எனவே, கவனச்சிதறலைத் தவிர்ப்பது எப்படி என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வது மிக மிக அவசியம்’’ என்று சொல்லி முடிகிறது இந்த நூல்.

கவனச்சிதறலைத் தவிர்ப்பதன் அவசியத்தை யும், தவிர்க்கும் வழிமுறை களையும் விளக்கமாகச் சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒரு முறை படித்து, பலன் பெறலாம்.

- நாணயம் விகடன் டீம்