கடின உழைப்பும் திறமையும்தான் நம் முன்னேற்றத்துக்கு உதவும். `உழைப்பு, திறமையெல்லாம் என்னிடம் நிறையவே இருக்கின்றன. ஆனால், அதிர்ஷ்டம்தான் இல்லை.
அது மட்டும் இருந்திருந்தால், இன்று எங்கேயோ இருப்பேன்’ என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. சிலருக்கு மட்டுமே வாய்க்கும் அதிர்ஷ்டம் நமக்கு ஏன் வாய்ப்பதில்லை. அதிர்ஷ்டத்தை நம் வாழ்க்கையில் உருவாக்கிக்கொள்ள முடியுமா, `முடியும்’ என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்கிறது நாம் இந்த வாரம் பார்க்கவிருக்கும் ‘மேக் யுவர் ஓன் லக்’ என்ற புத்தகம்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கடுமையாக உழைத்தால் வெற்றி கிடைக்குமா?
இந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியர்களில் ஒருவரான பாப் மிக்லானி (Bob Miglani) தன் ஒன்பதாவது வயதில் 75 டாலருடன் அமெரிக்காவுக்குச் சென்றவர். புல்வெளியைச் சீர்செய்தல், நியூஸ் பேப்பர் போடுதல் போன்ற வேலைகளைச் செய்ய ஆரம்பித்து, ஃபைசர் இங்க் (Pfizer Inc) நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்து விற்பனைத்துறையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றவர். இந்தப் புத்தகத்தின் இன்னோர் ஆசிரியரான ரேஹன் கான் (Rehan Yar Khan) ஒரு வென்ச்சர் கேப்பிட்டலிஸ்ட். ஓலா கேப்ஸ், துருவா, பார்ம்ஈசி, கன்ட்ரிடிலைட், கோமெக்கானிக் உள்ளிட்ட பல நிறுவனங்கள் அவர் முதலீடு செய்த நிறுவனங்கள்.
‘‘ `கடுமையாக உழையுங்கள், உங்களுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள், சரியான இடத்தில், சரியான நேரத்தில், சரியான விஷயத்தைச் செய்யுங்கள்’ என்பது போன்ற எங்களுக்குச் சொல்லப்பட்ட பொதுவான அறிவுரைகளெல்லாம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்காதவை என்பதை நாங்கள் நன்றாக உணர்ந்திருந்தோம். வெற்றிக்கான இந்த நடைமுறைகள் பழசாகிவிட்டன. இன்றைக்கு நிலவும் சூழ்நிலை (தொழில் போட்டி, கரியர், ஸ்டார்ட்அப் உலகம்) எல்லா விதங்களிலும் மாறுபட்டதாக உள்ளது. அதற்கேற்ற நூதனமான பாதையையே தேர்வு செய்ய வேண்டியிருக்கிறது’’ என்கிறார்கள்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅதிர்ஷ்டம் என்பது..!
பெரும்பாலானவர்கள் தாங்கள் வெற்றி பெறாததற்கான காரணமாகச் சொல்வது, பிறந்த குடும்பம் (பொருளாதார/கல்விச் சூழல்), உடலமைப்பு, திறமைக்கேற்ற சரியான துறையில் இல்லாதிருத்தல், திறமைக்கேற்ற சரியான வேலை மற்றும் சம்பளத்துக்கான வாய்ப்புகளை வழங்கும் நிறுவனத்தில் பணியில் இல்லாதிருத்தல் போன்றவைதான். `இதற்கெல்லாம் பிறவியிலேயே அதிர்ஷ்டம் வேண்டும்’ என்பதுதான் முக்கியமான கவலையாக இருக்கிறது. ஆனால், ஆசிரியர்கள் சொல்வது இந்த எண்ணத்தை அடியுடன் துடைத்தெடுப்பது போலிருக்கிறது.

‘‘எங்கள் இருவரின் வாழ்க்கை அனுபவத்தைப் பார்த்தால், அபரிமிதமான வெற்றியைப் பெற நீங்கள் பிறவி அதிர்ஷ்டக்காரராக இருக்க வேண்டியதில்லை என்பது புரியும். ‘அதிர்ஷ்டம் என்பது எதிர்பாராத விதமாக நடப்பது’ என்ற எண்ணத்தை முதலில் மாற்றிக்கொள்ளுங்கள். அதிர்ஷ்டம் என்பது திட்டமிட்டுப் பெறக்கூடிய ஒன்று என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதிர்ஷ்டத்தை அடையத் தயாராகுங்கள். அதற்கான வேலைகளைச் செய்யுங்கள்.
ஒரு சிறப்பான பிசினஸ் பிளானை உருவாக்க, பிறவி அதிர்ஷ்டம் என்பது (குடும்பம், கல்லூரி, வேலை) தேவையேயில்லை. பெரிய மனிதர்கள் தொடர்பும் வேண்டியதில்லை. வழக்கத்துக்கு மாறான வாய்ப்புகளைத் தேர்வு செய்ததன் மூலமே வெற்றி என்பது எங்களுக்குச் சாத்தியம் ஆனது. அதற்காக நாங்கள் அசாதாரணமான பாதையைத் தேர்ந்தெடுத்ததாக நினைக்காதீர்கள். மற்றவர்கள் பயணிக்காத வித்தியாசமான பாதையில் பயணித்தோம். அதுதான் எங்களை நோக்கி அதிர்ஷ்டத்தை வரவழைத்தது’’ என்று சொல்லும் ஆசிரியர்கள், அவர்கள் செய்த ஏழு விஷயங்களைப் பட்டியலிட்டு விளக்கியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வெற்றியைத் தேடித்தரும் ஆர்வம்..!
``வெற்றி அடைவதற்கான சாத்தியம், பாதைகளிலும் தேர்வுகளிலும் (Path and Choices) இருக்கிறதே தவிர, சூத்திரங்களில் இல்லை’’ என்கின்றனர் ஆசிரியர்கள். ``எந்த விஷயத்திலும் ஆர்வமாக இருங்கள். ஆர்வம் என்பது கற்றுக்கொள்ளத் தூண்டுகிறது. ஆழ்ந்தநிலை கற்றல் அறிவைத் தருகிறது. அறிவு, புரிந்துகொள்ளலைத் தருகிறது. புரிந்துகொள்ளல் புள்ளிகளை இணைக்க (Connecting the Dots) உதவுகிறது. புள்ளிகளை இணைத்துப் பார்ப்பது, உங்களை அதிர்ஷ்டத்தை நோக்கி வேகமாக முன்னேற வைக்கிறது. மிகவும் வெற்றிகரமாக அமையக்கூடிய வாய்ப்புகள் எல்லாமே எல்லோர் கையிலும் கிடைக்கும் அளவுக்குக் கொட்டிக் கிடப்பதில்லை. அவற்றைத் தேடி அலைந்தே கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. அந்தத் தேடலுக்கு மிக மிகத் தேவையானது ஆர்வம்’’ என்கின்றனர் ஆசிரியர்கள்.

உதவி செய்யுங்கள்..!
“மற்றவர்களுக்குத் தேவைப்படும்போது சரியான நேரத்தில், சரியான விஷயத்தில் உதவி செய்வது உங்கள் மதிப்பை உயர்த்தும். உதவி என்றால், அது பண உதவி என்பது மட்டுமல்ல.விஷய தானமாகவும் இருக்கலாம். இந்த உதவியைச் செய்ய எப்போதும் விழிப்புடன் இருக்கும் குணாதிசயம் உங்களிடம் இருக்க வேண்டும். பிரச்னை என்ன, அதன் வீரியம் என்ன என்ற இரண்டையும் முழுமையாகப் புரிந்துகொண்டால், அவற்றுக்கான தீர்வுகளைத் தருவது சுலபம்” என்கின்றனர் இந்நூலின் ஆசிரியர்கள்.
என் வழி தனி வழி..!
“மரம் இன்னொரு மரத்தின் நிழலில் சிறப்பாக வளர்வதில்லை. அதேபோல்தான் மற்றொருவரின் வெற்றியைப் பின்பற்றினால் நமக்குப் பெரிய வெற்றி ஏதும் கிடைப்பதில்லை. பொதுவாக, யாரும் பயணிக்காத பாதையில் பயணித்தலே நம்மை அதிர்ஷ்டத்தின் அருகில் கொண்டு செல்லும். ஆனால், இயல்பாகவே நம் கவனம் அனைத்தும் பெரிய அளவில் செயல்பட்டு வெற்றியைக் கண்டுவரும் பாதைகளின் மீதே சுலபத்தில் பதியும். ஒரு விஷயத்தைச் சிறப்பாகச் செய்வதைவிட வித்தியாசமாகச் செய்ய முயல்வதே அதிர்ஷ்டத்தை நோக்கிய நம் பயணத்தை வேகமெடுக்க வைக்கும்” என்கின்றனர் ஆசிரியர்கள்.
திறமையை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்...!
“ `பணம், அறிவு, துணிவு, பலம், நேரம், சக்தி, அனுபவம், திறன்... இவை இல்லை அல்லது போதுமான அளவுக்கு இல்லை’ என்ற எண்ணத்தை விட்டுவிட்டு இவற்றை அதிகரிக்கும் முயற்சியில் இறங்குங்கள். இது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். அபரிமிதமான வெற்றிக்கான பாதை மலர்கள் தூவப்பட்டதாக இருக்காது. கரடுமுரடாகத்தான் இருக்கும். அதில் பயணித்தால் மட்டுமே அதிர்ஷ்டத்தை நாம் சந்திக்க முடியும்” என்கின்றனர் ஆசிரியர்கள்.

செளகர்யமான எல்லைகளைத் தாண்டுங்கள்!
“வெற்றி என்பது நேர்கோட்டில் அமைந் திருக்காது. குழப்பமான, வரிசைக்கிரமத்தில் கட்டமைக்கப்படாத மற்றும் கணிக்க முடியாத விஷயம் அது. கணிக்க முடியாததாக இருப்பதால், செளகர்யமான எல்லைகளைத் தாண்டி நீங்கள் செயல்பட வேண்டும். பிசினஸ், வாழ்க்கை, வேலை, ஸ்ட்ராட்டஜி என்று எல்லாவற்றிலும் பரிசோதனை முயற்சிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும். ஒரு திட்டம் தோல்வி அடைந்த பிறகு மற்றொன்றை ஆரம்பிக்காமல் இயன்றவரை ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட திட்டங்களில் முயலுங்கள்’’ என்கின்றனர் ஆசிரியர்கள்.
இன்னும் திறமையாகச் செயல்பட்டு வெற்றிகாணத் துடிப்பவர்கள் இந்தப் புத்தகத்தைப் படிப்பது அவசியம்.
- நாணயம் விகடன் டீம்