Published:Updated:

சாதனையாளர்களுக்கு மகுடம்..! நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் -2021

பிசினஸ் ஸ்டார் விருது பெற்றவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
பிசினஸ் ஸ்டார் விருது பெற்றவர்கள்

பிசினஸ் ஸ்டார் விருதுகள் -2021

சாதனையாளர்களுக்கு மகுடம்..! நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் -2021

பிசினஸ் ஸ்டார் விருதுகள் -2021

Published:Updated:
பிசினஸ் ஸ்டார் விருது பெற்றவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
பிசினஸ் ஸ்டார் விருது பெற்றவர்கள்

ஒ ரு பிசினஸில் சாதிப்பது என்பது சாதாரண காரியமல்ல. உழைப்பு, திறமை, புதுமை என அனைத்திலும் மற்றவர்களைவிட ஒருபடி மேலே இருக்க வேண்டும். தொடர் தோல்விகள் வந்தாலும் துவண்டு விடாமல் பாடம் கற்று மீண்டெழும் சாதுரியம் இருக்க வேண்டும்.

சாதனையாளர்களுக்கு மகுடம்..! நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் -2021

இப்படி, பல அம்சங்களிலும் சிறப்பாகச் செயல்படுபவர்களே சாதனை யாளர்களாக மிளிர்கிறார்கள். அத்தகைய சாதனையாளர்களுக்கு மகுடம் சூட்டும் விதமாகக் கடந்த ஐந்து ஆண்டுகளாக ‘நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ்-2021’ நிகழ்ச்சி பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

பிசினஸ் ஸ்டார் விருது பெற்றவர்கள்
பிசினஸ் ஸ்டார் விருது பெற்றவர்கள்

கடந்த ஆண்டு கொரோனா ஏற்படுத்திய தடைகளைக் கடந்து ஆன்லைனில் விருது வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது நாணயம் விகடன்.இப்போது கொரோனா அச்சுறுத்தல் சற்றுக் குறைந்திருக்கும் நிலையில், 5-வது `நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள்’ நிகழ்ச்சி கடந்த வாரம் சென்னையில் கோலாகலமாக நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக மத்திய அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர்.வி.அனந்த நாகேஸ்வரன் மற்றும் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பங்கேற்க, தமிழகத்தின் முன்னணி தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றுத் தொடக்க உரையாற்றிய விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், ‘‘நாணயம் விகடன் தொடங்கப்பட்டு 16 வருடங்கள் ஆகிறது. சேமிப்பு, முதலீடு, நிதி நிர்வாகம், தொழில் நிர்வாகம் என நிதி சார்ந்த பல்வேறு விஷயங்களைத் தமிழக மக்களுக்கு எடுத்துச் சொல்வதை ஒரு பணியாக மட்டுமல்ல, அதை எங்கள் பேறு என்றே கருதுகிறோம்.

சாதனையாளர்களுக்கு மகுடம்..! நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் -2021

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ் ஆரம்பித்தபோது எங்கள் மனதிலிருந்த எண்ணம் ஒன்றே ஒன்றுதான். பிசினஸில் மிகப் பெரிய சாதனை செய்து நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தொழில்முனை வோரை ஊக்கப்படுத்த வேண்டும், வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என்பதுதான்.

தொழில் வளர்ச்சிக்கும் புதிய தொழில் முனைவுக்கும் அல்லும் பகலும் உழைக்கும் தொழில்முனைவோருக்கு உற்சாக டானிக்கைக் கொடுக்கும் விதமாகவே இந்த நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸை நாங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறோம். உங்கள் பணியில் அணில் பங்காக எங்கள் பணியையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த நிகழ்ச்சி நடக்கக் காரணமாக இருந்த எல்லா ஸ்பான்சர்களுக்கும் நன்றி” என்று சொல்ல அரங்கம் கைத்தட்டல்களால் நிறைந்தது.

இதை அடுத்து பேசிய சிறப்பு விருந்தினர் மத்திய அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர் வி.அனந்த நாகேஸ்வரன், தற்போதைய பொருளாதாரச் சூழல் குறித்து விரிவான விளக்கம் அளித்தார். டாக்டர் வி.அனந்த நாகேஸ்வரனுடன் விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் உரையாடினார். இந்தியப் பொருளாதாரம், உலகப் பொருளாதாரம் பற்றியெல்லாம் அவர் கேட்ட கேள்விகளுக்கு நிதானமாகப் பதிலளித்தார் டாக்டர் வி.அனந்த நாகேஸ்வரன். ‘`ஒரு தனிநபர் நல்ல வருமானம் பார்க்க அரசுக் கடன் பத்திரம், மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட் என எதில் முதலீடு செய்யலாம்?’’ என்று விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் கேட்க, அதற்கு இப்படி பதில் சொன்னார் டாக்டர் வி.அனந்த நாகேஸ்வரன்.

வி.அனந்த நாகேஸ்வரன்,  பா.சீனிவாசன்
வி.அனந்த நாகேஸ்வரன், பா.சீனிவாசன்

``பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத் தைப் பெற விரும்புகிறவர்கள் சிறு சேமிப்புத் திட்டங்களைப் பரிசீலிக்கலாம். அதற்கடுத்து முக்கியமானவை, அரசுப் பத்திரங்கள்(Government Security Bonds). தற்போது, தனிநபர்களும் இந்தப் பத்திரங்களில் முதலீடு செய்ய அரசு அனுமதித்து உள்ளது. பலருக்கும் இதில் முதலீடு செய்யத் தயக்கம் இருக்கிறதுதான். ஆனால், இது மிகப் பாதுகாப்பான முதலீடு என்பதை மறந்துவிடக் கூடாது. இன்றைக்கு நீங்கள் அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்தால், 6.7 - 6.8% வரை வருமானம் கிடைக்கும். இது வங்கிச் சேமிப்புக் கணக்கு மூலம் கிடைக்கும் வருமானத்தைவிட அதிகம்தான்.

இது தவிர, ஒரு முதலீட்டு ஆலோசகராக நான் எப்போதும் அளிக்கும் ஆலோசனை, இப்போதைக்கு இருப்பது போன்ற அசாதாரணமான சூழ்நிலையில் ஓரளவு பணத்தை கரன்சியாகவே வைத்திருப்பது. அது, எந்த விதமான வருமானத்தையும் அளிக்காவிட்டாலும்கூட, உங்கள் பாதுகாப் புக்கு இது மிக முக்கியமான ஒன்று என்பேன்.

ரியல் எஸ்டேட்டைப் பொறுத்தவரை, நாட்டில் அதிக அளவில் வேலைவாய்ப்பை அளிக்கும் ஒரு துறை. விரைவில் அது மீண்டுவிடும் என்று நம்புகிறேன்’’ என்றார் டாக்டர் வி.அனந்த நாகேஸ்வரன்.

இதையடுத்து விருது வழங்கும் வைபவம் தொடங்கியது. எட்டுப் பிரிவுகளில் நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் நிறைவாகப் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ``இந்த நிகழ்ச்சி பர்சனலாக எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. ஏனெனில், இங்கே விருது பெற்றவர்களில் பலர் ஏற்கெனவே எனக்குப் பழக்கமானவர்கள். நான் அவர்களைப் பற்றித் தனிப்பட்ட முறையில் தெரிந்து வைத்திருப்பதைத் தாண்டி, அவர்கள் ஒவ்வொருவருக்கும் பின்னால் என்ன கதை உள்ளது, அவர்கள் எப்படி சாதித்தார்கள், சமூகத்துக்கு அவர்களின் பங்களிப்பு என்ன என்பதை எல்லாம் இங்கே பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

தகுதியானவர்களுக்கு தகுதியான விருதுகளை வழங்குவது தனிக் கலை. அதை நாணயம் விகடன் இங்கே சிறப்பாகச் செய்திருக்கிறது. விருதுகளின் பிரிவுகளே என்னை ஆச்சர்யப்படுத்தின” என்று நெகிழ்ந்தார்.

இனி, இந்த நிகழ்ச்சியில் விருது பெற்றவர்கள் பற்றிப் பார்ப்போம்.

கோபால் ஶ்ரீநிவாசன்
கோபால் ஶ்ரீநிவாசன்

‘பிசினஸ் மென்ட்டார்’ விருது

தன்னலம் கருதாமல் புதிய தலைமுறை தொழில்முனைவோர் களுக்கு வழிகாட்டி வரும் ‘டி.வி.எஸ் கேப்பிடல் ஃபண்ட்ஸ்’ நிறுவனத்தின் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டர் கோபால் ஶ்ரீநிவாசனுக்கு ‘பிசினஸ் மென்ட்டார்’ விருது. தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்த விருதை வழங்கிக் கௌரவித்தார்.

சாதனையாளர்களுக்கு மகுடம்..! நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் -2021

விருதைப் பெற்றபின் பேசிய கோபால் ஶ்ரீநிவாசன், ``இந்தியா பிசினஸ் மென்ட்டார்களுக்கான இடமாக இருக்கிறது. ஏனென்றால், இங்கே நிறைய இளைஞர்கள் திறமையுடன் இருக்கின்றனர். அவர்களுக்கு வழி காட்டுதல்கள் தேவைப்படுகிறது. அந்தப் பணியைச் செய்பவர்களில் நானும் ஒருவராக இருப்பது பெருமை அளிக்கிறது.

நாங்க செய்த தவறுகளை அவர்கள் செய்யக் கூடாது என்பது எங்கள் வழிகாட்டுதலில் முக்கிய அம்சமாக இருக்கிறது. இளைஞர்களுக்குக் கற்றுத் தருவதன் மூலமாக நாங்களும் தொடர்ந்து கற்றுக்கொள்கிறோம். அந்தப் பணிக்காக இந்த விருது கிடைப்பதை மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்றார்.

எஸ்.ஜி.அனில்குமார்
எஸ்.ஜி.அனில்குமார்

‘ஸ்டார்ட்அப் சாம்பியன்’ விருது

விவசாயத் தொழில்முனைவோர்களுக்கு நிதி ஆதாரம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கிவரும் ‘சமுன்னதி’ நிறுவனத்தின் எக்ஸிகியூட்டிவ் சி.இ.ஓ-வான எஸ்.ஜி.அனில்குமாருக்கு, ‘ஸ்டார்ட்அப் சாம்பியன்’ விருது வழங்கப்பட்டது. இந்த விருதை எல்.ஐ.சி நிறுவனத்தின் தென் மண்டல மேலாளர் கே.கதிரேசன் சார்பாக பிராந்திய மேலாளர் பி.ஶ்ரீதர் வழங்கினார்.

சாதனையாளர்களுக்கு மகுடம்..! நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் -2021

இந்த விருதைப் பெற்றுக்கொண்ட பின்பு பேசிய எஸ்.ஜி.அனில்குமார், “இதுவரை ஏதோவொரு அர்த்தமுள்ள பணியை சமுன்னதி செய்திருக்கிறது என்கிற மனநிறைவை நாணயம் விகடனின் இந்த விருது தந்திருக்கிறது. விவசாயத்திலும், விவசாயப் பொருள்களை சந்தைப்படுத்துவதிலும் விவசாயிகளுக்கு உள்ள சிக்கலைக் களைவதிலும் நாங்கள் இன்னும் கூடுதலாகக் கவனம் செலுத்துவோம்” என்றார்.

மக்களுக்கு தொடர்ந்து சேவை புரிந்து வருவதை மனநிறைவுடன் எடுத்துச் சொன்னார் எல்.ஐ.சி-யின் ஶ்ரீதர்.

கே.சீனிவாசன்
கே.சீனிவாசன்

‘செல்ஃப்மேட் ஆன்ட்ரப்ரனர்’ விருது

ஆபரண நகை உற்பத்தியில் உலக அளவில் ‘டாப் 10’ நிறுவனங்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் ‘எமரால்டு ஜுவல் இண்டஸ்ட்ரி’யின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் கே.சீனிவாசனுக்கு, ‘செல்ஃப்மேட் ஆன்ட்ரப்ரனர்’ விருது வழங்கப்பட்டது. ‘பொன் பியூர் கெமிக்கல்ஸ்’ நிறுவனத் தலைவர் பொன்னுசாமி இந்த விருதை வழங்கினார்.

சாதனையாளர்களுக்கு மகுடம்..! நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் -2021

விருதைப் பெற்றுக்கொண்ட பின்பு பேசிய கே.சீனிவாசன், ‘‘இது தனி மனிதனுடைய வெற்றி கிடையாது. இதற்குப் பின்னால் பல ஆயிரக்கணக் கானோர் இருக்காங்க. கிட்டத்தட்ட 6,000 ஊழியர்கள் 200 டீலர்கள், என் குடும்பத்தினர் என நிறைய பேர் இருக்காங்க. இந்த விருதை அவர்கள் அத்தனை பேருக்கும் சமர்ப்பிக்கிறேன். தைரியம், அர்ப்பணிப்பு, தொடர் போரட்டம் இவை மூன்றும் இருந்தால், பிசினஸில் நிச்சயம் வெற்றி கிடைக்கும்” என்றார்.

முரளி மகாதேவன்
முரளி மகாதேவன்

‘பிசினஸ் இன்னோவேஷன்’ விருது

தங்களின் தயாரிப்புகளில் தொடர்ந்து புதுமைகளைப் படைத்து அசத்திவரும் ‘ஶ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முரளி மகாதேவனுக்கு, ‘பிசினஸ் இன்னோவேஷன்’ விருது வழங்கப்பட்டது. ‘மேட்ரிமோனி.காம்’ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ-வான முருகவேல் ஜானகிராமன், ஜி.ஆர்.டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ஜி.ஆர்.அனந்த பத்மநாபன் இணைந்து இந்த விருதை வழங்கினர்.

சாதனையாளர்களுக்கு மகுடம்..! நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் -2021

விருதைப் பெற்றுக்கொண்ட பின்பு பேசிய முரளி மகாதேவன், “1948-ல் 300 சதுர அடியில் என் அப்பா ஆரம்பித்த நிறுவனம், இன்று இவ்வளவு பெரிசா வளரக் காரணம் என் அப்பாவின் கடின உழைப்புதான். இன்னோவேஷனை அவரிடமிருந்துதான் கற்றேன். எனக்குப் பின்னால ஆயிரக்கணக்கானவங்க வேலை பார்க்குறாங்க. அவங்க உழைப்பு தான் இதற்குக் காரணம். என் தாய், தந்தையருக்கும், என் டீமுக்கும், எல்லா வற்றுக்கும் மேலாக எங்களை வாழ வைக்கிற வாடிக்கையாளர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்” என்றார்.

எம்.சி.ராபின் - எம்.சி. ரிக்ஸன்
எம்.சி.ராபின் - எம்.சி. ரிக்ஸன்

‘பிசினஸ் ஃபீனிக்ஸ்’ விருது

தோல்வியால் துவளாமல், தொடர் முயற்சியாலும் உழைப்பாலும் வெற்றிநடை போட்டுவரும் ஈரோட்டைச் சேர்ந்த எம்.சி.ஆர் நிறுவனத்தின் எம்.சி.ராபின் - எம்.சி. ரிக்ஸன் சகோதரர்களுக்கு ‘பிசினஸ் ஃபீனிக்ஸ் விருது’ வழங்கப்பட்டது. ‘கவின்கேர்’ குழுமத்தின் தலைவர் சி.கே.ரங்கநாதன் விருதை வழங்கி உற்சாகப்படுத்தினார்.

சாதனையாளர்களுக்கு மகுடம்..! நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் -2021

இந்த விருதைப் பெற்றுக் கொண்ட பின்பு பேசிய எம்.சி.ராபின், `’இந்த விருது எங்கள் இருவருக்கானது மட்டுமல்ல, எங்களை வளர்த்து உற்சாகப்படுத்திய எங்கள் அப்பா அம்மாவுக்கும், எங்கள் வாடிக்கை யாளர்களுக்கும், ஆயிரக்கணக்கான நெசவாளர் குடும்பங்களுக்கும் எங்கள் தோளோடு தோள் சேரும் தொழிலாளர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறோம். இதற்குக் காரண மான இறைவனுக்கும் விகடன் குழுமத்துக்கும் நன்றி” என்றனர் நெகிழ்வாக.

ஈரோட்டில் வேறு வேறு தொழில் செய்யும் தொழில்முனைவோர்கள் ஒன்றுகூடி தொழில் தொடர்பாகத் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் ‘பவுன்சிங் போர்டு’ (Bouncing Board) மூலம் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிகிறது என்று சொன்னார் அவர்.

மகன்களுடன் டி.ஆர்.சிவராம்
மகன்களுடன் டி.ஆர்.சிவராம்

‘சோஷியல் கான்சியஸ்னஸ் பிசினஸ்’ விருது

சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படும் ‘கிளாசிக் போலோ’ நிறுவனத்துக்கு ‘சோஷியல் கான்சியஸ்னஸ் பிசினஸ்’ விருது வழங்கப்பட்டது. ‘பிரின்ஸ் ஜுவல்லரி’ நிறுவனத் தலைவர் பிரின்ஸ் ஜோஸ் மற்றும் ‘பூம் கார்ஸ்’ நிறுவனத் தலைவர் ஹாஜி அலி ஆகியோர், விருதை வழங்க, ‘கிளாசிக் போலோ’ நிறுவன நிர்வாக இயக்குநர் டி.ஆர்.சிவராம் பெற்றுக்கொண்டார்.

சாதனையாளர்களுக்கு மகுடம்..! நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் -2021

இதைத் தொடர்ந்து பேசிய சிவராம், “திருப்பூரில் அனைத்துத் தொழிலாளர்களின் குழந்தைகளும் படிக்க 8 ஏக்கரில் இடுவம் பாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளியைக் கட்டினோம். அதன் தொடக்க விழாவுக்கு வந்திருந்தார் அப்போதைய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அண்ணன். அவர் அமர்ந்திருக்கும் இந்த அவையில் நாங்கள் விருது பெறுவது கூடுதல் மகிழ்ச்சி’’ என்றார்.

சத்யகம் ஆர்யா குழுவினருடன்
சத்யகம் ஆர்யா குழுவினருடன்

‘பிசினஸ் மென்ட்டார் (இன்ஸ்டிடியூஷன்)’ விருது

நம் நாட்டை, உலகின் மிகச்சிறந்த தொழில் கேந்திரமாக மாற்றும் பணியைச் சிறப்பாகச் செய்துவரும் சி.ஐ.ஐ (கன்ஃபெட ரேஷன் ஆஃப் இண்டியன் இண்டஸ்ட்ரி-தமிழ்நாடு) அமைப்புக்கு, ‘பிசினஸ் மென்ட்டார் (இன்ஸ்டிடியூஷன்)’ விருது வழங்கப்பட்டது. கார்போரண்டம் யுனிவர்சல் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் எம்.எம்.முருகப்பனிடமிருந்து, சி.ஐ.ஐ தலைவர் சத்யகம் ஆர்யா உள்ளிட்ட குழுவினர் விருதைப் பெற்றுக்கொண்டனர்.

சாதனையாளர்களுக்கு மகுடம்..! நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் -2021

விருதைப் பெற்றுக்கொண்ட பின்பு பேசிய சி.ஐ.ஐ குழுவினர், ``அரசுக்கும் தொழில்களுக்கும் பாலமாக இருப்பதுதான் எங்களது பிரதான பணி. ‘பிசினஸ் மென்ட்டார் (இன்ஸ்டிடியூஷன்) அவார்டு என்ற தலைப்பு மிகப் பொருத்தமாக இருந்தது. சி.ஐ.ஐ குறு சிறு தொழில்களின் வளர்ச்சிக்காக நிறைய முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது’’ என்றனர்.

டாக்டர் பிரதாப் சி ரெட்டி
டாக்டர் பிரதாப் சி ரெட்டி

`வாழ்நாள் சாதனையாளர்’ விருது

1983-ல் 150 படுக்கைகளுடன் தொடங்கிய ‘அப்போலோ’ மருத்துவமனையை உலகம் வியக்கும் ஆலமரமாக உயர்த்தி இருக்கிறார் ‘அப்போலோ’ குழுமத் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி. அவருக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதை டாக்டர் வி.அனந்த நாகேஸ்வரன் வழங்க, அதைத் தன் தந்தை சார்பாகப் பெற்றுக்கொண்டார், அந்தக் குழுமத்தின் நிர்வாகத் துணைத் தலைவர் ப்ரீதா ரெட்டி.

சாதனையாளர்களுக்கு மகுடம்..! நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் -2021

இந்த விருதைப் பெற்ற அவர், ``எங்கள் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் தான், இந்த விருது கிடைக்க காரணமானவர்கள். அவர்கள் சார்பாகவே நான் இந்த விருதைப் பெற்றுக் கொள்கிறேன். ‘‘இந்த விருது பற்றி என்ன சொல்வது?’’ என என் தந்தையிடம் கேட்டேன். ‘‘நோயாளிகள் திரும்பத் திரும்ப எங்கள் மருத்துவமனைக்கு வருவது எங்கள் நோக்கமல்ல, அவர்கள் முழுமையாகக் குணமாகி ஆரோக்கியமாக இருப்பதுதான் எங்கள் நோக்கம்’’ என்றார். நீங்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்’’ என்றார்.

சாதனையாளர்களுக்கு மகுடம்..! நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் -2021