தொழில்முனைவோர்களை கெளரவிக்கும் பிசினஸ் ஸ்டார்ஸ் அவார்டு! ஆன்லைனில் ஓர் அசத்தல் விருது நிகழ்ச்சி

A W A R D S
தமிழகத்திலிருந்து உருவான தொழில்முனைவோர்கள், உலகளவில் உள்ள பிசினஸ்மேன்களுக்குக் கொஞ்சம்கூட சளைத்தவர்கள் அல்லர். தமிழகத்தில் தொழில் தொடங்கி நடத்தும் தொழில்முனை வோர்களில் சிறப்பாகச் செயல்படு பவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு பிசினஸ் ஸ்டார்ஸ் அவார்டுகளை ஆண்டுதோறும் தந்து சிறப்பித்து வருகிறது நாணயம் விகடன். கடந்த 2020-ம் ஆண்டுக்கான பிசினஸ் ஸ்டார்ஸ் அவார்டு வழங்கும் நிகழ்ச்சி கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக ஆன்லைனிலேயே நடந்தது. ஆன்லைனில் விருதுகளை வழங்குவது, விகடன் வரலாற்றிலேயே இது முதல்முறை ஆகும். ஒன்பது கேட்டகிரியில் தரப்பட்ட இந்த விருதுகள் பற்றிய விவரங்கள் இதோ...

லைஃப்டைம் அச்சீவ்மென்ட் அவார்டு
டி.டி.கே குரூப் ஆஃப் கம்பெனீஸ் தலைவர் டி.டி.ஜெகந்நாதனுக்கு லைஃப் டைம் அச்சீவ்மென்ட் அவார்டு வழங்கப்பட்டது. டி.டி.கே நிறுவனம் 1970-களில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தது. அப்போது அந்த நிறுவனத்தின் தலைமைப்பொறுப்பில் இருந்த டி.டி.கிருஷ்ணமூர்த்தியின் மூத்த மகன் நரசிம்மனால் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. நரசிம்மனின் மகனான ஜெகந்நாதன் அமெரிக்காவில் இருந்து, இந்தியாவுக்குத் திரும்பி, டி.டி.கே நிறுவனத்தை ஏற்று நடத்த ஆரம்பித்தார். கடுமையான எதிர்ப்புகளைப் பொறுமையாகச் சமாளித்து, தொழிலாளர்களின் ஆதரவைப் பெற்றார். நஷ்டத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து, நிறுவனத்தை லாபப் பாதைக்குக் கொண்டுவந்தார்.

அடியோடு சாயவிருந்த ஒரு நிறுவனத்தை ஆலமரமாக 3,000 கோடி ரூபாய்க்குமேல் டேர்ன் ஓவர் கொண்டதொரு நிறுவனமாக வளர்த் தெடுத்ததற்காக டி.டி.கே குரூப் நிறுவனத்தின் சேர்மன் டி.டி.ஜெகந்நாதனுக்கு லைஃப் டைம் அச்சீவ்மென்ட் அவார்டு தந்து சிறப்பித்தது நாணயம் விகடன்.
டி.டி.ஜெகந்நாதனுக்கு இந்த விருதினை அளித்தார் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் ஆர்.கோபால கிருஷ்ணன். இந்த விருதினை தனது நீண்டகால நண்பர் டி.டி.ஜெகந்நாதனுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்ட அவர், டி.டி.ஜெகந்நாதனின் தாத்தா டி.டி.கிருஷ்ணாமாச்சாரி பற்றி ஒரு அறிய தகவலைச் சொன்னார். ‘‘நம் நாடு சுதந்திரம் பெற்றபின் சட்ட வரையறை செய்யும் குழுவில் இருந்தார் டி.டி.கிருஷ்ணமாச்சாரி. அவர், விவசாயத் துறையானது மாநிலங்களின்கீழ் இருக்க வேண்டும் என்றார். இதை பல விவசாயிகள் அப்போது ஏற்றுக் கொள்ளவில்லை. விவசாயம் போன்ற சிக்கலான தன்மை கொண்ட துறைகளில் மத்திய அரசாங்கம் முடிவு செய்யத் தொடங்கினால், பல குழப்பங்கள் ஏற்படும் என்றார் டி.டி.கே. டெல்லியில் இப்போது பல போராட்டங்கள் நடந்துவரும் வேளையில் டி.டி.கே-யின் தீர்க்கதரிசனத்தை நாம் கவனிக்கத் தவறக்கூடாது’’ என்றார் கோபாலாகிருஷ்ணன். விருதினைப் பெற்ற டி.டி.ஜெகந்நாதன், ‘‘என் வாழ்க்கையில் நான் எதையும் திட்டமிட்டுச் செய்யவில்லை. வாழ்க்கையை அதன்போக்கிலேயே சந்தித்தேன்’’ என்றார்.

செல்ஃப் மேட் ஆன்ட்ரப்ரனார் அவார்டு
ஆச்சி குரூப் ஆஃப் கம்பெனீஸ் நிறுவனத்தின் சேர்மன் & எம்.டியான எ.டி.பத்மசிங் ஐசக்கிற்கு செல்ஃப்மேட் ஆன்ட்ரப்ரனார் அவார்டு வழங்கினார் தமிழகத் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்.

1955-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறிய ஊரான நாசரேத்தில் பிறந்த பத்மசிங், தனது 12-வது வயதிலேயே தந்தையை இழந்தார். பள்ளிப்பருவத்திலேயே பிசினஸில் ஈடுபட்டதன் விளைவு, விற்பனையின் அடிப்படை அவருக்கு அத்துப்படியானது. கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் கோத்ரேஜ் நிறுவனத்தில் விற்பனையாளராக சேர்ந்து, பல பதவி உயர்வுகளைப் பெற்றார். என்றாலும் எம்.பி.ஏ படிக்கவில்லை என்பதால், அந்த நிறுவனத்தில் ஓரளவுக்குமேல் வளர முடியவில்லை. 1995-ம் ஆண்டில் சொந்தமாகத் தொழில் தொடங்க முடிவெடுத்து, ரூ.80,000 முதலீட்டில் ஆச்சி மசாலா நிறுவனத்தைத் தொடங்கினார். அவரது குழம்பு மிளகாய்த் தூள் பெரும் வெற்றி அடைய, சிக்கன் மசாலா, மட்டன் மசாலா என புதிது புதிதாக பல புராடக்டுகளை உருவாக்கி, தமிழகத்தின் அனைத்து மக்களையும் சென்றடைந்தார் பத்மசிங். இன்றைக்கு இந்தியா முழுக்க 14 லட்சம் கடைகளுக்குச் சென்று சேர்கிற மாதிரியான பிரமாண்டமான நெட்வொர்க் உருவாகி, ஆண்டுக்கு ரூ.1,200 கோடி டேர்ன் ஓவர் கொண்ட ஒரு பெரும் நிறுவனத்தை உருவாக்கியிருக்கிறார் பத்மசிங் ஐசக்.
செல்ஃப்மேட் ஆன்ட்ரப்ரனார் அவார்டை பத்மசிங் ஐசக்கிற்கு அளித்த தமிழகத் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், பெண்கள் உள்பட பலருக்கும் ஆச்சி மசாலா நிறுவனம் வேலைவாய்ப்பு அளித்து வருவதைப் பாராட்டினார். இந்த விருதினைப் பெற்றுக்கொண்ட பத்மசிங் ஐசக், ‘‘எம்.பி.ஏ படிக்கவில்லை என்றாலும் தன்னால் பிசினஸில் ஜெயிக்க முடியும் என்ற வெறியோடு செயல்பட்டதால் வெற்றி காண முடிந்தது’’ என்றார். ஆனந்த விகடனின் குழுமத்திலிருந்து விருதினைப் பெறவேண்டும் என்கிற தனது நீண்ட நாள் ஏக்கம் இந்த விருதினைப் பெற்றதன்மூலம் தீர்ந்ததாகக் குறிப்பிட்டார் அவர்.
பிசினஸ் மென்ட்டார் அவார்டு
இந்த விருது காக்னிசன்ட் நிறுவனத்தின் கோ-ஃபவுண்டரான லட்சுமி நாராயணனுக்கு வழங்கப்பட்டது. புதுக்கோட்டையில் பிறந்த லட்சுமி நாராயணன், வளர்ந்ததும் படித்ததும் பெங்களூரில்தான். படித்து முடித்து 1974-ல் டி.சி.எஸ் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தவர், அடுத்த 20 ஆண்டுகள் அங்கு வேலை செய்து பதவி உயர்வு பெற்றார். 1994-ல் லட்சுமியின் நண்பர்கள் காக்னிசன்ட் நிறுவனத்தைத் தொடங்க, அதில் இருபதாவது நபராகச் சேர்ந்தார். 2003-ம் ஆண்டு காக்னிசன்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக பதவியேற்றார். இவரது தலைமையில் காக்னிசன்ட் நிறுவனம் ஆண்டுதோறும் 20% அளவுக்கு வளர்ச்சி கண்டு, ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களின் பட்டியலில் இணைந்தது. 2013-ல் நாஸ்காம் அமைப்பின் தலைவராக இருந்து, இந்தியாவில் ஐ.டி நிறுவனங்களின் வளர்ச்சிக்குப் பல வகையிலும் பாடுபட்டார். தான் மட்டும் உயர்ந்த நிலையை அடைந்தால் போதாது, தன்னுடன் இருக்கும் அனைவரும் முன்னேற்றம் காண வேண்டும் என இன்றைக்கும் இளம் தொழில்முனைவோர்கள் அனைவருக்கும் வழிகாட்டுகிறார். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பலவற்றிலும் முதலீடு செய்து, அவர்களுக்கு வழிகாட்டிவரும் லட்சுமி நாராயணனுக்கு பிசினஸ் மென்ட்டார் அவார்டு விருதினை வழங்கினார் இந்துஜா நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆர்.சேஷசாயி.

‘‘நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்னை களுக்கான தீர்வுகள், அடிப்படையில் மிக எளிமையானவைதான். நாம் உண்மையாக, நேர்மையாக, யாருக்கும் பாதிப்பு வராத வகையில் தொழில் செய்கிறோமா என்று பார்த்தாலே போதும், நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்குச் சரியான தீர்வைக் கண்டுவிடலாம்’’ என்ற சேஷசாயி, தனது இலக்கிய அனுபவங்கள் பற்றி எடுத்துச் சொன்னார். ‘‘இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, விப்ரோ பிரேம்ஜி, ஹெச்.சி.எல் சிவ்நாடார் போன்றவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையை நன்கு வளர்த்ததன் விளைவாகவே தன்னால் காக்னிசன்ட் நிறுவனத்தை நன்கு முன்னேற்றிக் கொண்டு செல்ல முடிந்தது’’ என்றார் லட்சுமி நாராயணன்.
பிசினஸ் மென்ட்டார் அவார்டு (இன்ஸ்ட்டிடியூஷன்)
சொந்தமாகத் தொழில் தொடங்குவது ரிஸ்க்கான விஷயம் என்றுதான் நம் மக்கள் நினைக் கின்றனர். காரணம், பிசினஸில் பிரச்னை என்று வரும்போது, அதிலிருந்து மீண்டுவருவதற்கான வழிகளைச் சொல்பவர்கள் குறைவுதான். இதற்கொரு தீர்வாக 2004-ம் ஆண்டு யெஸ் என்று அழைக்கப்படும் ‘யெங் ஆன்ட்ரப்ரனார்ஸ் ஸ்கூல்’ என்கிற அமைப்பைத் தொடங்கினார்கள் மதுரையில் உள்ள வைகை குரூப் நிறுவனத்தின் தலைவர் நீதிமோகனும் மதுரை சேம்பர் ஆஃப் காமர்ஸ் நிறுவனத்தின் தலைவருமான ரத்னவேலுவும்.
ஆரம்பக் காலத்தில் மதுரையில் இருக்கும் புதிய பிசினஸ்மேன்களுக்கு தொழில் சூட்சுமங்களைக் கற்றுக்கொடுக்க, பிற்பாடு பிற மாவட்டங்களில் உள்ள தொழில்முனைவோர் களுக்கும் அது தெரியவர, இன்று சிவகாசி, கரூர், சேலம், திருச்சி, கோவை, சென்னை என தமிழகம் முழுக்க 20 சாப்டர்களாக வளர்ந்திருக் கிறது ‘யெஸ்’. இந்த மாற்றத்தை உருவாக்கிய யெங் ஆன்ட்ரப்ரனார்ஸ் ஸ்கூல் அமைப்புக்கு பிசினஸ் மென்ட்டார் இன்ஸ்ட்டிடியூஷன் அவார்டு வழங்கினார் டாடா கன்சல்டன்ஸி சர்வீஸின் முன்னாள் சி.இ.ஓ ஆர்.ராமதுரை.

‘‘தொழில் செய்வதற்கான சூழல் இப்போது மாறிவந்தாலும் இன்னும் நிறைய மாற வேண்டும். சிங்கப்பூரில் ஒரு புதிய தொழில் தொடங்க மூன்று நாள்களில் அனுமதி கிடைக்கும் போது, நம் நாட்டில் மட்டும் ஏன் மூன்று மாதம் ஆகிறது’’ என்று கேள்வி எழுப்பினார் ராமதுரை. தென் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெரிய அளவில் இல்லாமல் இருப்பது ஏன் என இண்டஸ்ட்ரியல் எக்கானமிஸ்ட் பத்திரிகை ஆசிரியர் கேட்ட கேள்விக்கு விளக்கமான பதிலைத் தந்தார் நீதிமோகன்.
பீனிக்ஸ் ஆன்ட்ரப்ரனார் அவார்டு
பிசினஸில் தோல்வி அடைந்து, மூடப்படும் நிலையில் இருந்த ஒரு நிறுவனத்தைத் தலைமையேற்று, தவறுகளை எல்லாம் சரிசெய்து, இன்றைக்கு லாபகரமாகச் செயல்படும் நிறுவனமாக மாற்றிக் காட்டியவர் மதுரையில் உள்ள ஹைடெக் அராய் பிரைவேட் லிமிடெட் மேனேஜிங் டைக்டரான பி.டி.பங்கேரா. மங்களூருவைச் சேர்ந்த இவர், இன்ஜினீயரிங் படித்து முடித்தபின், இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்தார். பிற்பாடு, மதுரையில் ஃபென்னர் (Fenner) நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். ஃபென்னர் நிறுவனம் வேறொரு நிறுவனத்துக்கு விற்கப்பட, அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தவரை அணுகினார் லட்சுமி நாராயணன். 1985-ம் ஆண்டு அவர் தொடங்கிய ஹைடெக் ஆன்சிலரி யூனிட் நிறுவனம், ஆண்டுக்கு ரூ.45 லட்சம் நஷ்டம் அடைந்து மூடப்படும் நிலையில் இருந்தது. அந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று, நிர்வாகத்தில் பல மாற்றங்களைச் செய்தார் பங்கேரா. இதனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே அந்த நிறுவனம் வேகமான வளர்ச்சி கண்டு, நஷ்டத்திலிருந்து லாபத்துக்கு வந்தது. இன்றைக்கு அந்த நிறுவனம் ரூ.650 கோடி டேர்ன் ஓவர் செய்கிறது. மூடப்படும் நிலையில் இருந்த ஒரு நிறுவனத்தை மீண்டும் உயிர்த்தெழச் செய்து, அதை வெற்றிகரமாக நடத்திவரும் பி.டி.பங்கேராவுக்கு பீனிக்ஸ் ஆன்ட்ரப்ரனார் அவார்டை வழங்கினார் கோவையில் உள்ள சக்தி சுகர்ஸ் நிறுவனத்தின் சேர்மன் மற்றும் எம்.டி மாணிக்கம் மகாலிங்கம்.

இந்த விருதினை அளித்த அவர், இன்றைய இளைஞர்களுக்கு நிறைய தொழில் வாய்ப்புகள் இருப்பதாகச் சொன்னார். இந்த விருதை தனது நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவருக்கும் சமர்பிப்பதாகச் சொன்னார் பி.டி.பங்கேரா.
சோஷியல் கான்ஸியஸ்னஸ் அவார்டு
மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கினைக் குறைந்த விலையில் தரமாக உருவாக்கி வருகிறார் முருகானந்தம். குறைந்த விலையில், தரமான சானிட்டரி நாப்கின்களை உருவாக்க அவர் சந்தித்த சவால்கள் கொஞ்சநஞ்சமல்ல. அவருடைய சமூக அக்கறையைப் பாராட்டி, அவருக்கு பத்மஶ்ரீ உள்பட பல விருதுகள் கிடைத்துள்ளன. தற்போது முருகானந்தம் உருவாக்கிவரும் சானிட்டரி நாப்கின்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன.

சோஷியல் கான்ஸியஸ்னஸ் அவார்டை முருகானந்தத்துக்கு வழங்கினார் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முரளி. ‘‘பிசினஸ் என்றுவரும்போது உங்களால் முடியும் என்று செய்யுங்கள். ஆனால் உங்களால் மட்டும்தான் முடியும் என்று செய்யாதீர்கள்’’ என்றார். ‘‘காப்பி அடிக்காமல் சுயமாக யோசித்தாலே போதும், தொழிலில் ஜெயிக்கலாம் என்றார் முருகானந்தம்.
பிசினஸ் இன்னோவேஷன் அவார்டு
எந்தத் தொழிலாக இருந்தாலும் அதில் ஏதாவது ஒரு புதுமையைச் செய்பவர்கள் மட்டுமே தனித்துவமாகச் செயல்பட்டு, வெற்றி பெறுகிறார்கள். அப்படி புதுமையாகச் செயல்பட்டு, மிகப்பெரிய வெற்றி கண்டவர்தான் தைரோகேர் நிறுவனத்தின் டாக்டர் ஏ.வேலுமணி. கோவையில் பிறந்த வேலுமணி மும்பையில் ஒரு ஆய்வகத்தைத் தொடங்கி, அதில் பல புதுமைகளைக் கொண்டுவரக் காரணம், கோவை அன்னப்பூர்ணா உணவகம். ஒரே கிச்சன், பல இடங்களில் பரிமாறல் என்ற அடிப்படையில் வெற்றிகரமாகச் செயல்பட்டுவந்த அன்னப்பூர்ணா உணவக மாடலை, தனது ஆய்வகத்தில் செயல்படுத்த முடிவெடுத்தார் வேலுமணி. இந்தியா முழுக்க சோதனைக்கான சாம்பிள்களைச் சேகரித்து, அதை மும்பையில் இருக்கும் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட ஆய்வுக்கூடத்தில் சோதித்து அறிந்து, அந்த ரிசல்ட்டுகளை உடனுக்குடன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருப்பவர்களுக்குத் தருவதன் மூலம் தரமான சேவையைக் குறைந்த நேரத்தில் தைரோகேர் நிறுவனத்தால் தரமுடிந்தது. இன்று பல ஆயிரம் பேர் வேலை பார்க்கும் நிறுவனமாக மாறி, பஹரைன், நேபாளம், பங்களாதேஷ் எனப் பல நாடுகளுக்கும் பரவியிருக்கிறது தைரோகேர்.

பிசினஸ் இன்னோவேஷன் அவார்டை டாக்டர் ஏ.வேலுமணிக்கு வழங்கினார் இதயம் குரூப் ஆஃப் கம்பெனீஸ் நிறுவனத்தின் சேர்மன் வி.ஆர்.முத்து. ‘‘பிசினஸில் முயற்சி செய்துகொண்டே இருந்தால்தான் வெற்றி கிடைக்கும். ஒருசில முயற்சி தோல்வி அடைந்தால், பெரிய பாதிப்பு எதுவும் வந்துவிடாது’’ என்றார். விருதை ஏற்றுக்கொண்ட வேலுமணி, ‘‘எதிர்பார்ப்புதான் ஏமாற்றத்தைக் கொடுக்கும். நம் வாழ்க்கையில் தோல்விகள் இல்லாமல் இருப்பது சரியல்ல’’ என்று பஞ்ச் லைன் சொன்னார்.
ரைசிங் ஸ்டார் ஆன்ட்ரப்ரனார் அவார்டு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இன்ஜினீயரிங் படித்தமுடித்த ஸ்ரீராம் சுப்ரமண்யாவுக்கு சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்க வேண்டும் என்கிற கனவு. அந்தக் கனவு நிறைவேற அவருக்குப் பக்கபலமாக துணை நின்றார் ஸ்ரீராமின் மனைவியும் இன்டெக்ராவின் இணை நிறுவனருமான அனுராதா. 1994-ல்தான் இந்தியாவில் இன்டெக்ரா நிறுவனத்தைத் தொடங்கி, பதிப்புத் துறை மற்றும் எலெக்ட்ரானிக் பதிப்புத் துறையில் புதிய வாய்ப்புகளைத் தேடிக் கண்டறிந்தனர். இதன் விளைவு, இன்று ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்ச் உள்பட பல மொழிகளில் புத்தகங்களை மிகச் சரியாக வடிவமைத்துத் தருகின்றனர் அனுராதா - ஸ்ரீராம் சுப்ரமண்யா தம்பதி. ஐந்து ஊழியர்களுடன் ஆரம்பித்த இந்த நிறுவனம், 25 ஆண்டுகளில் 2000 பேர் வேலை செய்யும் நிறுவனமாக மாறியிருக்கிறது. பெண் ஊழியர்கள் பாதுகாப்புடன் வேலை மிகச்சிறந்த இடம் என்கிற விருதை தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக இந்த நிறுவனம் பெறக் காரணம், இன்டெக்ராவின் இணை நிறுவனர் அனுராதாதான்.

வளர்ந்துவரும் தொழிலதிபர் களான அனுராதா - ஸ்ரீராம் சுப்ரமண்யாவுக்கு ரைசிங் ஸ்டார் ஆன்ட்ரப்ரனார் அவார்டை வழங்கினார் ராம்கோ குரூப் ஆஃப் கம்பெனீஸ் நிறுவனத்தின் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா. கணவன் - மனைவி என இருவரும் இணைந்து நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்துவதைப் பாராட்டினார் வெங்கட்ராம ராஜா. ‘‘தரத்தை மட்டுமே தாரகமந்திரமாகக் கொண்டு, உலகின் தலைசிறந்த நிறுவனமாக ஆக்க உழைத்து வருகிறோம்’’ என்றனர் அனுராதா - ஸ்ரீராம் சுப்ரமண்யா தம்பதி.
ஸ்டார்ட்அப் சாம்பியன் அவார்டு
சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான சார்ஜ்பீ (Chargebee) நிறுவனத்துக்கு ஸ்டார்ட் அப் விருது வழங்கப்பட்டது. 2011-ல், க்ரிஷ் சுப்பிரமணியம், ராஜாராமன், சரவணன், தியாகு ஆகிய நான்கு நண்பர்கள் எளிமையாகத் தொடங்கினார்கள். 2013-ல் சார்ஜ்பீ-க்கு முதல் வாடிக்கையாளர் நிறுவனம் கிடைத்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சார்ஜ்பீ-க்குப் பல வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். இந்த நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளரும் என்று கணித்த பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் சார்ஜ்பீ நிறுவனத்தில் முதலீடு செய்யத் தொடங்கின. 2014-ல் வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான ஆக்செல் (Accel), 2015-ல் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனமான டைகர் குளோபல் (Tiger Global), 2017-ல் இன்சைட் பார்ட்னர்ஸ் (Insight Partners) என முதலீடு செய்ய ஆரம்பித்தனர். இதுவரை இந்த நிறுவனத்தில் 105 மில்லியன் டாலர் அதாவது, ரூ.700 கோடிக்குமேல் முதலீடு ஆகி யிருக்கிறது. இந்த நிறுவனத்தின் இன்றைய மதிப்பு சுமார் 3,000 கோடி ரூபாய்க்குமேல்!

சார்ஜ்பீ நிறுவனத்துக்கு ஸ்டார்ட்அப் சாம்பியன் அவார்டு விருது வழங்கிய டி.வி.எஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் ஃபவுண்டர், சேர்மன் மற்றும் எம்.டி கோபால் ஸ்ரீநிவாசன், ‘‘ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர்கள்தான் இந்தியாவின் அடுத்த சுதந்திரப் போராட்ட வீரர்கள்’’ என்று பாராட்டினார். ‘‘எங்களுக்குப் பிடித்த மாதிரி சின்னதாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி நடத்த நினைத்தோம். இவ்வளவு பெரிய நிறுவனமாக வளரும் என்று நினைக்கவில்லை’’ என்றார் க்ரிஷ் சுப்பிரமணியன்.
ஆக, நாணயம் பிசினஸ் ஸ்டார்ஸ் அவார்டு நிகழ்ச்சி இப்போது முழுக்க முழுக்க ஆன்லைனிலேயே நடந்துமுடிந்திருக்கிறது. அடுத்த ஆண்டு இந்த விழா நேரில் நடக்கும் என்று எதிர்பார்ப்போம்!

நாள்: பிப்ரவரி 12, 2021 காலை 10 மணி முதல் நாணயம் விகடன் யூடியூப் சேனலில் காணத் தவறாதீர்கள்!

பிட்ஸ்
முழுக்க முழுக்க 3D தொழில் நுட்பத்தின் அடிப்படையில் விண் வெளிக்குச் ராக்கெட் இன்ஜினைத் தயாரித்து சாதனை புரிந்திருக்கிறது சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான அக்னிகுல்!