Published:Updated:

Nanayam Business Star Awards: விகடன் கௌரவித்த 8 சாதனையாளர்கள்!

விருது பெற்றுக்கொள்ளும் ப்ரீத்தா ரெட்டி
Live Update
விருது பெற்றுக்கொள்ளும் ப்ரீத்தா ரெட்டி

5-வது நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. அதன் லைவ் அப்டேட்ஸ் இங்கே...

18 Mar 2022 8 PM

பிசினஸ் மென்டார் அவார்டு

கோபால் ஶ்ரீநிவாசன், சேர்மன் & மேனேஜிங் டைரக்டர், டி.வி.எஸ் கேபிட்டல் ஃபண்ட்ஸ்
அமைச்சர் தங்கம் தென்னரசுவிடமிருந்து விருது பெற்றுக்கொள்ளும் கோபால் ஶ்ரீநிவாசன்
அமைச்சர் தங்கம் தென்னரசுவிடமிருந்து விருது பெற்றுக்கொள்ளும் கோபால் ஶ்ரீநிவாசன்

திறமைக்கு சரியான வாய்ப்பும் வழிகாட்டலும் கிடைத்துவிட்டால் அது நிகழ்த்தும் மேஜிக்கே வேற லெவல் வெற்றியாக இருக்கும். அப்படியான வெற்றியைத் தேடித் தருகிற தகுதி ஒரு சிலருக்கு மட்டுமே இருக்கும். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் கோபால் ஶ்ரீநிவாசன்.

சென்னை லயோலா கல்லூரியில் பி.காம் பட்டம் முடித்து, அமெரிக்க மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றவர். டி.வி.எஸ் கேபிட்டல் ஃபண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் மேலாண் இயக்குநராகவும் இருக்கும் இவர், இந்தியாவில் உள்ள தொழில்முனைவோர்களுக்கு முதலீட்டு உதவியும் தொழில் சார்ந்த வழிகாட்டுதல்களும் வழங்கிவருகிறார். நம் நாட்டில் உள்ள பல தொழில்முனைவோர்கள் எல்லைகளைக் கடந்து உலகத் தரத்துக்கு உயர வேண்டும் என்பது இவரது பெருங்கனவு. வளர்ச்சிக்கான சாத்தியங்களும், நுகர்வோர் சந்தை சார்ந்ததாகவும் உள்ள தொழில்களை அடையாளம் கண்டு அவற்றில் முதலீடுகளை செய்து அவர்களை வழிநடத்தும் பொறுப்பை டி.வி.எஸ் கேபிட்டல் ஃபண்ட்ஸ் நிறுவனம் மூலம் சிறப்பாக செய்துவருகிறார் கோபால் ஶ்ரீநிவாசன்.

இந்திய இளைஞர்கள் தொழில் தொடங்க முன்வர வேண்டும் என்கிற அறைகூவலை எப்போதும் உரக்க எழுப்பி வருபவர் கோபால் ஶ்ரீநிவாசன். புதிய தொழில்நுட்பம், புதிய அணுகுமுறை என புத்தம் புதிதாக யோசித்து தொடங்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் தனிக் கவனம் செலுத்துகிறார். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தொழில் முதலீடு வழங்கும் சென்னை ஏஞ்சல்ஸ் மூலம் இளம் தொழில்முனைவோர்களுக்கு தொடர்ந்து வழிகாட்டியும், தேவைப்பட்டால் முதலீடும் செய்து வருகிறார்.

டி.வி.எஸ் எலெக்ட்ரானிஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனரும் தலைவரான இவர், டி.வி.எஸ் அண்ட் சன்ஸ், டி.வி.எஸ் ஹோல்டிங் நிறுவனங்கள் என பல குழும நிறுவனங்களில் இயக்குநராக இருந்துவருகிறார். 2007-08 நிதி ஆண்டில் சி.ஐ.ஐ தமிழ்நாடு மாநில கவுன்சிலின் தலைவராக இருந்தார். 2010-11-ல் பிரைவேட் ஈக்விட்டி மற்றும் வென்ச்சர் கேபிட்டலுக்கான சி.ஐ.ஐ அமைப்பின் தேசியக் குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார்.

தன்னலம் கருதாமல் புதிய தலைமுறை தொழில்முனைவோர்களுக்கு வழிகாட்டி வரும் டி.வி.எஸ் கேப்பிட்டல் ஃபண்ட்ஸ் நிறுவனத்தின் சேர்மன் & மேனேஜிங் டைரக்டர் கோபால் ஶ்ரீநிவாசனுக்கு பிசினஸ் மென்டார் அவார்ட் விருதினை வழங்கி கெளரவிப்பதில் பெருமை கொள்கிறது நாணயம் விகடன்.

18 Mar 2022 8 PM
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிசினஸ் இன்னோவேஷன் அவார்டு

ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி, மேனேஜிங் ரைக்டர், ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்.
விருதை பெற்றுக்கொண்ட ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி
விருதை பெற்றுக்கொண்ட ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி

இன்று இனிப்புகள் என்றாலோ எல்லோரும் மனதில் முதலில் வந்து நிற்கக்கூடிய பிராண்டாக மாறியிருக்கிறது ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ். இனிப்புதானே என்று சாதாரணமாக கடந்துவிடக் கூடியவர்களுக்கு மத்தியில் தொடர்ந்து பல புதிய கண்டுபிடிப்புகளையும், முயற்சிகளையும் செய்து இனிப்பு எனில், அது ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்தான் என்ற அடையாளமாகவே மாற்றியிருக்கிறார் ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் முரளி.

பொதுவாக, தந்தைக்குப் பிறகு மகன்கள் தொழில்களைச் செய்யும்போது பல மாற்றங்கள் செய்வார்கள். சில நேரங்களில் தொழிலையே மாற்றிவிடுவதும்கூட நடக்கும். ஆனால், தனது தந்தை மகாதேவன் வகுத்துவைத்த பாதையில், அர்ப்பணிப்புடன் ஒவ்வொரு இனிப்பையும், உணவையும் உருவாக்கி மக்களுக்கு வழங்குவதில் இன்றளவும் அவரது மகன் முரளி வெற்றி கண்டுவருகிறார்.

இனிப்புகளின் சுவையைக் கூட்டுவதில் பல புதுமைகளைப் படைத்ததுடன், அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதத்திலும் புதுமைகளைச் செய்து வருகிறார் முரளி. குறிப்பாக, மக்களின் தேவைக்கேற்ப பேக்கிங் செய்வதில் யாரும் நிகழ்த்தாத ஆச்சர்யங்களை நிகழ்த்திருக்கிறார்.

எங்கெல்லாம் சந்தோஷம் இருக்கிறதோ, அங்கெல்லாம் ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இருக்க வேண்டும் என்பதை தாரக மந்திரமாக கொண்டு செயல்படும் முரளி, ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் இனிப்புகளை அனைத்துத் தரப்பு மக்களையும் பல புதுப்புது வழிகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்.

தனக்கு அடுத்து முரளி, முரளிக்கு அடுத்து அவரது மகள்கள் இருவரும் என இனிப்பு உலகில் பல புதுமைகளை படைத்து வருகின்றனர். இனிப்பு வகையில் இதற்கு மேலும் என்ன புதுமையாக செய்ய முடியும் என்று நினைக்கும்போதுகூட புதிதாய் ஒரு புதுமையை உருவாக்கிறார்கள்.

தொடர்ந்து மக்களின் விருப்பத்துக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு அடுத்தடுத்து புதுமை படைப்பதன் மூலம் எல்லா தரப்பு மக்களையும் தன் பக்கம் இழுக்கும் சக்தியுடன் ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வளர்ந்துகொண்டே இருக்கிறது. இனிப்பு உலகின் புதுமைப்பித்தனாக விளங்கும் ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முரளி மகாதேவனுக்கு பிசினஸ் இன்னோவேஷன் அவார்டினை வழங்கி கவுரப்பதில் பெருமை கொள்கிறது நாணயம் விகடன்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
18 Mar 2022 8 PM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சோஷியல் கான்சியஸ்னஸ் பிசினஸ் அவார்ட்

ஆர்.கோபாலகிருஷ்ணன், சேர்மன், கிளாசிக் போலோ நிறுவனம்.
விருதைப் பெற்றுக்கொள்ளும் கிளாசிக் போலோ குடும்பத்தினர்
விருதைப் பெற்றுக்கொள்ளும் கிளாசிக் போலோ குடும்பத்தினர்

கிளாசிக் போலோ நிறுவனத்தின் தலைவராக இருக்கும் கோபாலகிருஷ்ணனின் தந்தை ஒரு விவசாயி. காட்டன் பிசினஸ் செய்வதற்காக கிராமத்தில் இருந்து திருப்பூருக்கு வந்தார். அவருக்கு மூன்று மகன். காட்டன் பிசினஸ் சிறப்பாக நடந்துவந்த வேளையில், அவர் திடீரென்று காலமாகிவிட, மூத்த மகன் கோபாலகிருஷ்ணன் அந்தத் தொழிலை ஏற்று நடத்த ஆரம்பித்தார். காலப்போக்கில் பிற சகோதரர்கள் படித்து முடித்துவிட்டு, மூத்த அண்ணனுடன் தொழில் செய்ய இணைந்தனர்.

தரமான பின்னலாடைகளைத் தயார் செய்து, அதை உலகெங்கும் ஏற்றுமதி செய்யத் தொடங்க, மிகப் பெரிய வெற்றி கிடைத்தது. இன்றைக்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கிளாசிக் போலோ நிறுவனம் தயாரிக்கும் ஆடைகள் விற்காத ஊரே இல்லை.

அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி இந்த நிறுவனம் வேகமாக வளர்ந்துவரும் வேளையில், தங்களை வளர்த்தெடுத்த திருப்பூர் நகரத்திற்கும் மக்களுக்கும் உதவ நினைத்தனர் கோபாலகிருஷ்ணன் - சிவராம் சகோதரர்கள்.

திருப்பூர் என்பது இயற்கையிலேயே வரண்ட பூமி. மரங்களின் எண்ணிக்கை குறைவு. இந்த நிலையில்தான் திருப்பூர் முழுக்க புதிதாக மரங்களை நட்டு வளர்க்கும் பணியில் இறங்கினார்கள் கோபாலகிருஷ்ணன் - சிவராம் சகோதரர்கள். இவர்கள் தொடர்ந்து காட்டிய அக்கறை காரணமாக, இன்றைக்கு திருப்பூர் முழுக்க 12 லட்சம் மரங்களில் செழிப்புடன் வளர்ந்துள்ளன. ‘வனத்துக்குள் திருப்பூர்’ என்கிற இவர்களது கனவு இன்று உண்மையாகி இருக்கிறது.

அது மட்டுமல்ல, திருப்பூரைச் சுற்றியுள்ள பல்வேறு குளங்களைத் தூர் வாரி, ஆழப்படுத்தி, இன்னும் அதிகமான மழை நீர் அங்கு தேங்கி நிற்கும்படி செய்திருக்கிறார்கள். சீர்கெட்டுப் போயிருந்த ஆண்டிபாளையம் கண்மாயை சீர்திருத்தியதன் காரணமாக இன்றைக்கு திருப்பூர் நகரத்தின் நிலத்தடி நீர்மட்டம் குறிப்பிடத்தகுந்த அளவு உயர்ந்திருக்கிறது.

திருப்பூரில் அனைத்து தொழிலாளர்களின் குழந்தைகளும் படிக்க 8 ஏக்கரில் இடுவம்பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளியைக் கட்டியிருக்கிறார்கள். இன்றைக்கு அந்தப் பள்ளி திருப்பூரின் பெயர் சொல்லும் பள்ளியாக வளர்ந்திருக்கிறது.

தங்களுடைய தொழில் நிறுவனத்தை வளர்த்தெடுப்பதில் காட்டும் அதே அக்கறையை தங்களைச் சுற்றி இருக்கும் மக்களும் நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டும் என்பதிலும் காட்டும் கிளாசிக் போலோ நிறுவனத்திற்கு சோஷியல் கான்சியஸ்னஸ் பிசினஸ் அவார்டு வழங்கி கெளரவிப்பதில் பெருமை கொள்கிறது நாணயம் விகடன்.

18 Mar 2022 8 PM

செல்ஃப் மேட் ஆன்ட்ரபிரினர் அவார்டு

கே.ஶ்ரீநிவாசன், சேர்மன் & மேனேஜிங் டைரக்டர், எமரால்ட் ஜுவல் இன்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட்
விருதைப் பெற்றுக்கொள்ளும் கே.ஶ்ரீநிவாசன்
விருதைப் பெற்றுக்கொள்ளும் கே.ஶ்ரீநிவாசன்

கோவையில் சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் ஶ்ரீநிவாசன். ஆனால், ஏழையாகவே பிறந்து ஏழையாகவே இருந்துவிடக் கூடாது என்ற வைராக்கிய மனத்துடன் படித்தார். இன்ஜினியர் ஆகவேண்டும் என்பது அவர் கனவு. ஆனால், பி.எஸ்.இ கணிதம் படித்துவிட்டு, தங்க நகை செய்யும் வேலையில் சேர்ந்தார்.

இதை அவருடைய குடும்பத்தினர் ஒப்புக்கொள்ளவே இல்லை. ஆனால், தன் முடிவில் தீர்க்கமாக இருந்தவர் ஶ்ரீநிவாசன். முன்னேற வேண்டும் என அவர் மனதில் கொழுந்துவிட்டு எரிந்த வெறி, அவருக்கு மிகப் பெரிய வாய்ப்பைத் தேடித் தந்தது. அகமதாபாத்தில் நகைக் கடை வைத்திருந்த ஒருவர், ஶ்ரீநிவாசனுக்கு முதல் ஆர்டரைக் கொடுக்க, அதை சிறப்பாக செய்து தந்தார். அவர் அம்மா தந்த 10,000 ரூபாய்தான் அந்த ஆர்டருக்கான முதலீடு.

தங்கத்தில் முக்கியமான விஷயங்கள் மூன்று... பியூரிட்டி, டிசைன், ஃபினிஷிங்... இந்த மூன்றிலும் 200% கவனம் செலுத்தினார் ஶ்ரீநிவாசன். கண்ணும் கருத்துமாக அவர் செய்த நகைகள் மற்றவர்களுக்குப் பிடித்துப் போக, அடுத்தடுத்து பல ஆர்டர்கள் வந்து குவியத் தொடங்கின. இன்றைக்கு நகை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் உலகளவில் டாப் 10 நிறுவனங்களின் பட்டியலில் இருக்கிறது `ஜுவல் ஒன்.'

நகை உற்பத்தியில் புகழ்பெற்று விளங்குவதுடன், `ஜுவல் ஒன்’ என்ற ரீடெய்ல் நகைக்கடைகளையும் திறந்தார் ஶ்ரீநிவாசன். தமிழ்நாடு, ஆந்திராவில் 15 இடங்களில் `ஜுவல் ஒன்’ நகைக்கடைகள் உள்ளன. அத்துடன், மக்களுக்கு நகைகள் பற்றியும், தொழில்நுட்பங்கள் பற்றியும் தெரியப்படுத்த ஜுவல்லரி எக்ஸ்பிரியன்ஸ் சென்டர் ஒன்றும் அமைத்தார்.

முயற்சிக்கும் கற்றலுக்கும் வானமே எல்லை என்பதை எப்போதும் மறக்காதவர் ஶ்ரீநிவாசன். தங்க உலகின் தவிர்க்க முடியாத ஆளுமையான எமரால்ட் ஜுவல் இன்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சேர்மன் & மேனேஜிங் டைரக்டர், கே.ஶ்ரீனிவாசனுக்கு பிசினஸ் ஸ்டார் செல்ப் மேட் ஆன்ட்ரபிரினர் அவார்டு விருது வழங்கி கவுரவிப்பதில் பெருமை கொள்கிறது நாணயம் விகடன்.

18 Mar 2022 8 PM

பீனிக்ஸ் அவார்ட்

எம்.சி.ராபின் மற்றும் எம்.சி.ரிக்சன், சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டர், எம்சிஆர் டெக்ஸ்டைல்.
விருதைப் பெற்றுக்கொள்ளும் எம்.சி.ராபின் மற்றும் எம்.சி.ரிக்சன்
விருதைப் பெற்றுக்கொள்ளும் எம்.சி.ராபின் மற்றும் எம்.சி.ரிக்சன்

எம்.சி.ஆர் சகோதரர்களின் தந்தையான எம்.எ.சாக்கோ மிகப் பெரிய மிராசுதாரர் குடும்பத்தில் பிறந்தவர். திருமணம் முடிந்த கையோடு பவர்லூம் தொடங்க ஈரோட்டுக்கு வந்தார். அனுபவம் இல்லாத தொழில் என்பதால், அதில் நஷ்டம் ஏற்பட்டது. கைவசம் இருந்த சொத்துக்களை ஒவ்வொன்றாக விற்றும் பயனில்லை. வேறு வழியில்லாமல் அதை நிறுத்திவிட்டு, 1973-ல் கார்மென்ட்ஸ் கடை தொடங்கினார். இரண்டு ஆண்டுகளில் அது முடிவுக்கு வர, அடுத்து ஹோட்டல் தொழில், மரக் கம்பெனி, மரத்தூள் வியாபாரம் என அவர் ஆரம்பித்த தொழில்கள் எல்லாவற்றிலும் பெரும் நஷ்டம்.

தந்தையின் தோல்வியால் வறுமையில் தவிக்க ஆரம்பித்தது எம்.சி.ஆர் சகோதர்களின் குடும்பம். ஒரே ஒரு அறை கொண்ட வீட்டில் வசிக்க வேண்டிய நிலை. ஆனாலும், எப்பாடுபட்டாவது தந்தையின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்கிற வெறியோடு வளர்ந்தனர் எம்.சி.ஆர் சகோதரர்கள்.

1997-ல் 210 சதுர அடியில் எம்.சி.ஆர் நிறுவனத்தைத் தொடங்கிய எம்.சி.ஆர் சகோதரர்கள், ஈரோட்டிலிருந்து மிகப் பெரிய நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவை மட்டுமே மனதில் ஏந்தி, தூக்கம் மறந்து உழைக்கத் தொடங்கினர். போட்டியாளர்களைவிட அதிக தரம், குறைந்த விலை என மிகப் பெரிய வித்தியாசத்தைக் காண்பித்தனர். எம்.சி.ஆர் சகோதரர்களின் வித்தியாசமான முயற்சிகள் அனைத்தும் எம்.சி.ஆர் நிறுவனத்தின் வளர்ச்சியை வேகப்படுத்தின.

ஜனவரி 6-ஆம் தேதி சர்வதேச வேட்டி தினம். இந்த தினத்தில் வேட்டியின் பெருமைகளை எடுத்துச் சொல்ல இந்த நிறுவனம் தவறுவதில்லை. தென் இந்திய மக்களின் பாரம்பர்யத்துக்கு ஏற்றவாறு வேட்டி ரகங்களை உற்பத்தி செய்யும் இந்த நிறுவனம், ரோஜா, முல்லை, சந்தனம் போன்ற மனம் வீசக்கூடிய வேட்டிகளையும் உருவாக்கி, புதுமை படைத்திருக்கிறது.

இன்றைக்கு 200-க்கும் மேற்பட்ட வேட்டி ரகங்களுடன், நாற்பதுக்கும் மேற்பட்ட வகைகளில் சட்டைகள் மற்றும் அனைத்து விதமான ஜவுளிகளை 3,000-த்துக்கும் மேற்பட்ட சில்லறை ஜவுளி நிறுவனங்களுக்கு அளித்து, தென் இந்தியாவில் மிகப் பெரிய ஜவுளி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்திருக்கிறது.

தோல்வியைக் கண்டு மிரண்டுபோய் நிற்காமல், தொடர் முயற்சியாலும் உழைப்பினாலும் வெற்றிநடை போட்டு வரும் எம்.சி.ஆர் நிறுவனத்தின் ராபின், ரிக்சன் சகோதரர்களுக்கு பிசினஸ் ஸ்டார் - பீனிக்ஸ் அவார்டினை வழங்கி கவுரப்பதில் பெருமை கொள்கிறது நாணயம் விகடன்.

18 Mar 2022 8 PM

பிசினஸ் மென்டார் அவார்ட் (இன்ஸ்டிடியூஷன்)

கன்ஃபெடரேஷன் ஆஃப் இண்டியன் இன்டஸ்ட்ரி (தமிழ்நாடு)
விருதுடன் கன்ஃபெடரேஷன் ஆஃப் இண்டியன் இன்டஸ்ட்ரி குழு
விருதுடன் கன்ஃபெடரேஷன் ஆஃப் இண்டியன் இன்டஸ்ட்ரி குழு

வெற்றிக்குக் காரணமாக எப்போதுமே சொல்லப்படுகிற ஒரு வாசகம் `ஊர் கூடி தேர் இழுத்தல்’. ஒற்றுமையாக ஒரு விஷயத்தைச் செய்தால் அது நிச்சயம் வெற்றி தரும். இந்த உண்மைக்கு மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது சி.ஐ.ஐ என சுருக்கமாக அழைக்கப்படும் கன்ஃபெடரேஷன் ஆஃப் இண்டியன் இன்டஸ்ட்ரி என்னும் மாபெரும் அமைப்பு.

நம் நாட்டில் இணக்கமான தொழில் சூழல் நிலவுவதால்தான் உள்நாட்டிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் முதலீடுகள் தொடர்ச்சியாக நம் நாட்டுக்கு வந்துகொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட தொழில் சூழலை உருவாக்கியதில் சி.ஐ.ஐ.யின் பங்கு மகத்தானது.

நம் நாட்டில் உள்ள அனைத்து வகையான தனியார் தொழில் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து, அந்த நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்னைகளை அரசுக்கு எடுத்து சொல்லி, தீர்வுகளைத் தேடித் தந்ததுடன், தொழில் துறைக்கேற்ற கொள்கை முடிவுகளைப் பரிந்துரைப்பது வரை என சி.ஐ.ஐ இன்றும் சிறப்பாக பணியாற்றி வருகிறது.

1895-ல் தொடங்கப்பட்ட சி.ஐ.ஐ அமைப்பு, கிட்டத்தட்ட 127 வருடங்கள் இந்தியத் தொழில் துறையைச் செதுக்கியுள்ளது. இதன் தலைமை அலுவலகம் டெல்லியில் இருந்தாலும், வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய இந்தியா என ஐந்து மண்டலங்களாக செயல்பட்டு, கிட்டத்தட்ட 65 இடங்களில் அலுவலகங்கள் வைத்துள்ளது. இந்தியாவில் 10 சிறப்பு மையங்களும், அமெரிக்கா, இங்கிலாந்து, அரபு நாடுகள், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் 8 மையங்களும் வைத்துள்ளது. இதன்மூலம் 133 நாடுகளில் உள்ள பல்லாயிரம் தொழில் நிறுவனங்களுக்கு சேவை புரிந்து வருகிறது.

மேலும், தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக கருத்தரங்குகள், தொழில் விழாக்கள் நடத்துவது, சர்வதேச முதலீட்டாளர்களை நம் நாட்டில் முதலீடு செய்ய அழைப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை தொடர்ச்சியாக செய்துவருகிறது.

நம் நாட்டை உலகின் மிகச் சிறந்த தொழில் கேந்திரமாக மாற்றும் பணியை மிகச் சிறப்பாக செய்துவரும் கன்ஃபெடரேஷன் ஆஃப் இண்டியன் இன்டஸ்ட்ரிக்கு பிசினஸ் மென்டார் அவார்ட் (இன்ஸ்ட்டிடியூஷன்) விருதினை வழங்கி கெளரவிப்பதில் பெருமை கொள்கிறது நாணயம் விகடன்!

18 Mar 2022 7 PM

ஸ்டார்ட் அப் சாம்பியன் அவார்ட்

எஸ்.ஜி.அனில்குமார், சி.இ.ஒ., சமுன்னதி
விருதைப் பெற்றுக்கொள்ளும் எஸ்.ஜி.அனில்குமார்
விருதைப் பெற்றுக்கொள்ளும் எஸ்.ஜி.அனில்குமார்

இன்றைய நிலையில், விவசாயிகளுக்கு இருக்கும் பெரிய பிரச்னை, உற்பத்தி செய்த பொருளை சந்தைப்படுத்துவதும், அதற்கு சரியான விலை கிடைக்காமல் இருப்பதும்தான். இதை சரிசெய்யும் நோக்கில் `சமுன்னதி’ நிறுவனம் வேளாண் பொருள்களின் விநியோக சங்கிலியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு விவசாயிகளின் நம்பிக்கைக்குரிய நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

இதன் நிறுவனர் எஸ்.ஜி.அனில்குமார் கர்நாடகாவில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துக்கொண்டிருந்த அனில்குமார், சூழ்நிலை காரணமாக கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு, வங்கி ஊழியர் பணிக்கான தேர்வுக்கு தயாரானார். 1991-ல் கனரா வங்கியில் கிளார்க்காக தனது வாழ்க்கையை ஆரம்பித்தார்.

2004-ல் மணிலாவில் எம்.பி.ஏ படித்துவந்தபோது, வங்காளதேசத்தில் புகழ்பெற்று விளங்கும் கிராமீன் வங்கியின் நிறுவனர் முஹமத் யூனுஸ் பற்றி கேள்விப்பட்டபோது, அவருக்குள் பெரும் உந்துதல் ஏற்பட்டது.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் பணிபுரிந்தபோது, ஐ.எஃப்.எம்.ஆர் டிரஸ்ட் மூலம் தஞ்சையில் சாதாரண மக்களுக்கு சிறிய அளவில் கடன் தரும் திட்டத்தில் பணியாற்றினார். இந்தத் திட்டத்தை நடத்தியதன்மூலம் கிராம மக்களுக்கும், விவசாயத் தொழில்முனைவோர்களுக்கும் என்ன தேவை என்பதை அனில்குமாரால் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. அதன் விளைவாக பிறந்ததுதான் `சமுன்னதி’. விவசாயத் தொழில்முனைவோர்களுக்கு நிதி ஆதாரத்தைத் தருவதுடன், அவர்களின் தயாரிப்புகளை சந்தைக்கேற்ப மேம்படுத்த அறிவுரை வழங்குவது, அவற்றுக்கான சந்தை வாய்ப்புகளை உருவாக்குவது வரை அனைத்து சேவைகளையும் வழங்குவதே சமுன்னதியின் நோக்கம்.

சென்னையில் மட்டுமல்ல, 22 மாநிலங்களில் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது சமுன்னதி. 100-க்கும் மேலான வேளாண் பொருள்களுக்கும் தங்களின் சேவையை விரிவுபடுத்தியுள்ளது. 1,500 வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, 60 லட்சம் சிறு குறு விவசாயிகள், 2,400 தனியார் வேளாண் சார் நிறுவனங்கள் சமுன்னதியின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டுக்கு அருகே 60 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயமும் செய்து வருகிறார்.

7,750 கோடி அளவுக்குக் கடன் தந்துள்ளது இந்த நிறுவனம். 2027-க்குள் நான்கில் ஒரு விவசாயக் குடும்பம் சமுன்னதியின் சேவையின் மூலம் பயனடைய இலக்கு வைத்து ஓயாமல் உழைத்துவரும் சமுன்னதி நிறுவனத்தின் சி.இ.ஒ எஸ்.ஜி.அனில்குமாருக்கு பிசினஸ் ஸ்டார் ஸ்டார்ட் அப் சேம்பியன் விருது வழங்கி கவுரப்பதில் பெருமை கொள்கிறது நாணயம் விகடன்.

18 Mar 2022 7 PM

சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. முதல் விருதாக லைஃப்டைம் அச்சீவ்மென்ட் அவார்ட் வழங்கப்பட்டது. அப்போலோ குழுமத்தின் தலைவர் பிரதாப் சி.ரெட்டி சார்பாக, அவரின் மகள் ப்ரீத்தா ரெட்டி விருதைப் பெற்றுக்கொண்டார்.

லைஃப்டைம் அச்சீவ்மென்ட் அவார்ட்

டாக்டர் பிரதாப் சி. ரெட்டி, சேர்மன், அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ்.
விருது பெற்றுக்கொள்ளும் ப்ரீத்தா ரெட்டி
விருது பெற்றுக்கொள்ளும் ப்ரீத்தா ரெட்டி

அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் நிறுவனத்தின் தலைவரான டாக்டர் பிரதாப் சி. ரெட்டி அமெரிக்காவில் கிடைத்த பிரகாசமான வாய்ப்புகளையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, இந்தியாவில் சொந்தமாக மருத்துவமனை தொடங்கக் காரணம், உயிருக்குயிராக நேசித்த தன் சொந்தங்கள் மற்றும் நண்பர்களின் மரணங்கள்தான்.

தன் தந்தைக்கு மூளையில் ரத்தக்கசிவு நோய் ஏற்பட்டபோது பிரதாப் ரெட்டியால் காப்பாற்ற முடியவில்லை. தன் அம்மாவுக்கு இருந்த கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கும் இங்கு சரியான சிகிச்சை தர முடியவில்லை. தன் நெருங்கிய நண்பர் தரமான சிகிச்சை இல்லாத காரணத்தால் மாரடைப்பில் இறந்துபோனதைப் பார்த்து மனம் உடைந்துபோனார். அப்போது அவர் அடைந்த வேதனைதான், இந்தியாவின் உலகத் தரமான மருத்துவமனை அமையக் காரணமாக அமைந்தது.

1983-ல் 150 படுக்கை வசதிகளுடன் சென்னையில் உதயமானது `அப்போலோ’ ஹாஸ்பிட்டல்ஸ். சர்வதேசத் தரத்திலான மருத்துவம் நம் நாட்டவர்களால் செய்யமுடிந்த செலவில் அப்போலோவில் கிடைத்ததால், மெள்ள மெள்ள வளர ஆரம்பித்தது. மருத்துவத் துறையில் வரும் புதிய முறைகள் அனைத்தையும் உடனுக்குடன் நம் நாட்டுக்குக் கொண்டுவருவதில் டாக்டர் ரெட்டி காட்டிய சளைப்பில்லாத அக்கறை உலக வரைபடத்தில் அப்போலோவை அம்புக்குறி காட்டி பிரபலப்படுத்தியது.

அப்போலோ மருத்துவமனை இன்று உலகம் வியக்கும் ஆலமரமாக உயர்ந்து நிற்கிறது. உலகம் முழுக்க 71 மருத்துவமனைகள், 3,400 மருந்தகங்கள், 150 பரிசோதனை மையங்கள், 15 மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் என பரந்து விரிந்திருக்கிறது அப்போலோ.

இப்படிப்பட்ட பெரும் மருத்துவ சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பிரதாப் ரெட்டி 1933-ல் ஆந்திர மாநிலம், சித்தூரில் பிறந்தார். சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பு படித்தபின், அமெரிக்காவில் இதயநோய் தொடர்பாக மிகச் சிறந்த மருத்துவர் ஆனவர், அங்கேயே செட்டில் ஆகிவிட நினைக்காமல், இந்தியாவில் மருத்துவத் துறை அதிநவீனமாவதற்கு முக்கியமான காரணமாக இருந்தார்.

இந்திய மருத்துவத் துறையில் இவர் ஆற்றிய மகத்தான சேவையைப் பாராட்டி இவருக்கு பத்மபூஷண், பத்மவிபூஷண் விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்திய மருத்துவத் துறை உலகளவில் போற்றிப் புகழும் அளவுக்கு உயர்த்திய டாக்டர் சி.பிரதாப் ரெட்டிக்கு பிசினஸ் ஸ்டார் லைப் டைம் அச்சீவ்மென்ட் அவார்டு விருது வழங்கி கவுரவிப்பதில் பெருமை கொள்கிறது நாணயம் விகடன்.

18 Mar 2022 7 PM

நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் தற்போது உரையாற்றி வருகிறார் மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர் அனந்த நாகேஸ்வரன்.

எப்போது நம் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சியடையும்? - டாக்டர் அனந்த நாகேஸ்வரன் பதில்

- ``இந்தியாவின் பொருளாதாரம் வளர வேண்டுமென்றால் நம் மக்களின் சென்ட்டிமென்ட் மாறவேண்டும். கொரோனா உள்ளிட்ட பிரச்னைகளை மறந்து நம் மக்கள் மீண்டும் பழையபடி செலவழிக்கத் தொடங்கவேண்டும். அது நடந்துவிட்டால் நம் பொருளாதாரம் மீண்டுவிடும் என நம்புகிறேன்.

- வங்கிகள் தற்போது கடன்களை வழங்கத் தயாராக இருந்தாலும், மக்கள் இன்னமும் அவற்றை வாங்கும் சூழ்நிலைக்கு வரவில்லை. முதலீட்டாளர்களும் புதிய முதலீடுகளை செய்ய தயங்குகின்றனர் இந்த அச்சம் நியாயமானதுதான். நம் முன் இருக்கும் அசாதாரணமான சூழ்நிலைதான் இந்த தயக்கத்திற்கு காரணம். அடுத்த 6 மாதங்களில் இது சரியாகும் என நம்புகிறேன்.

- இதுபோன்ற நேரங்களில் நாட்டின் பொருளாதார சீராக இருக்க, அரசு தொடர்ந்து மூலதனச் செலவினங்களை (Capital Expenditure) அதிகரிக்கவேண்டும். அதை அரசு தொடர்ந்து செய்துவருகிறது.

- கூடவே, மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. கொரோனாவின் அடுத்த அலை, வேறு பெரிய சிக்கல்கள் எதுவும் வரவில்லையெனில், இந்திய பொருளாதாரம் அடுத்துவரும் ஆண்டுகளில் சீரான வளர்ச்சி காண்பதற்கான எல்லா வாய்ப்பும் இருக்கிறது. அது சரியாக நடந்தால், 2030-க்குள் உலகின் டாப் 3 சக்திவாய்ந்த பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருக்கும்."

18 Mar 2022 5 PM

நாணயம் விகடனின் பிசினஸ் ஸ்டார் விருதுகள் 2021

சரித்திரம் படைத்த பிசினஸ் சாதனையாளர்களுக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக கடந்த 2017-ம் ஆண்டு முதல் `நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள்' வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 5-வது நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் மொத்தம் 8 பிரிவுகளில், முக்கியமான தொழிலதிபர்கள் கௌரவிக்கப்படவிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு தலைமை சிறப்பு விருந்தினராக மத்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் டாக்டர் வி.அனந்த நாகேஸ்வரன் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியை நேரலையில் காண கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism