Published:Updated:

50 ஆண்டுகள், 3 தலைமுறைகள்... மக்கள் மனதைக் கொள்ளைகொண்ட கோவை அன்னபூர்ணா!

கோவை அன்னபூர்ணா
பிரீமியம் ஸ்டோரி
கோவை அன்னபூர்ணா

நேட்டிவ் பிராண்ட் - 4

50 ஆண்டுகள், 3 தலைமுறைகள்... மக்கள் மனதைக் கொள்ளைகொண்ட கோவை அன்னபூர்ணா!

நேட்டிவ் பிராண்ட் - 4

Published:Updated:
கோவை அன்னபூர்ணா
பிரீமியம் ஸ்டோரி
கோவை அன்னபூர்ணா

தொழில் துறைகள் நிறைந்த கோவையில் உணவுத் துறையில் மூன்று தலைமுறைகளாகக் கோலோச்சி வரும் இந்த உணவகம், சாதாரண மக்கள் தொடங்கி வி.வி.ஐ.பி-க்கள் வரை அன்னபூர்ணா தரும் உணவை விரும்பாதவர்கள் மிகவும் குறைவு. ஒரு கேன்டீனில் தொடங்கிய அன்ன பூர்ணாவின் பயணம், இன்றைக்கு 18 கிளைகள் 2,000 ஊழியர்கள் என்று லட்சக்கணக்கான மக்களின் பசியாற்றிக்கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சி குறித்து அன்னபூர்ணா ஹோட்டல் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஜெகன் தாமோதரசாமியுடன் பேசினோம்.

“என் தாத்தா தாமோதரசாமிதான் அன்ன பூர்ணாவை நிறுவினார். இந்த நிறுவனம், தாமோதரசாமி, ரங்கசாமி, ராமசாமி, லட்சுமணன் ஆகிய நான்கு சகோதரர்களுக்கு சொந்தமானது. அவர்கள்தாம் முதல் தலைமுறை. அப்போதிருந்து, இப்போது வரை எங்கள் குடும்பத் தொழிலாகத்தான் இதை நடத்தி வருகிறோம்.

50 ஆண்டுகள், 3 தலைமுறைகள்... மக்கள் மனதைக் கொள்ளைகொண்ட கோவை அன்னபூர்ணா!

என் தாத்தா தாமோதரசாமிக்கு சிறிய வயதில் இருந்தே தொழிலதிபராக வேண்டும் என்று ஆசை. மில் தொழிலாளியாக இருக்கும்போது தொழிற்சங்கம், சுதந்திரப் போராட்டம் என்று சுறுசுறுப்பாக இருப்பார். அவர் செய்த பல தொழில் முயற்சிகள் தோல்வியைத் தந்தது. ஒருகட்டத்தில் அவருக்கு கடன் கொடுக்கவே யாரும் முன்வரவில்லை.

ஒரு சிறிய அறைதான் வீடு. அதில்தான் எல்லோரும் இருந்தனர். தாத்தாவுக்குத் திருமணமானது. மில் வேலைக்குச் சென்றும் குடும்பத்தை நடத்த முடியவில்லை. ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோடு பகுதியில் ஒரு பெட்டிக்கடை அமைத்தனர். அங்கேயே தங்கி கடைசி இரண்டு சகோதரர்கள் கடையைப் பார்த்துக்கொண்டனர்.

தாத்தா எப்போதும் புதுமையாக ஏதாவது செய்துகொண்டிருப்பார். பெட்டிக்கடை நன்றாகச் சென்றுகொண்டிருந்தது. பெட்டிக் கடைக்கு அருகே ஒரு சினிமா தியேட்டர் இருந்தது. பால் வில்சன் என்கிற ஆங்கிலோ இந்தியன்தான் உரிமையாளர். அவர் அலுமினிய டின்னில் வரும் குறிப்பிட்ட ஒரு பிராண்ட் சிகரெட்தான் பிடிப்பார். இப்போது போல, அந்தக் காலத்தில் அந்த சிகரெட் எளிதில் கிடைக்காது. இந்த சிகரெட் எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவுடன்தான் தியேட்டரில் உள்ள கேன்டீனை வில்சன் வாடகைக்கு விட்டிருந்தார். 1960-ம் ஆண்டு, ஒருநாள் அவர் கேன்டீனில் வந்து சிகரெட் கேட்டிருக்கிறார். அங்கு சிகரெட் இல்லை. பெட்டிக்கடைக்கு ஆள் அனுப்பியிருக்கிறார். அங்கு அந்த பிராண்ட் சிகரெட் இருந்தது. ‘வில்சன், இந்த சிகரெட்தான் குடிப்பார். என்றாவது, ஒருநாள் அவர் கேட்க வாய்ப்புள்ளது. அப்போது அது இல்லை எனச் சொல்லக் கூடாது’ என்று வாங்கி வைத்திருக்கிறார் தாத்தா. உடனே, ‘கடை உரிமையாளரை வரச் சொல்லுங்க’ என வில்சன் அழைத்தார்.

50 ஆண்டுகள், 3 தலைமுறைகள்... மக்கள் மனதைக் கொள்ளைகொண்ட கோவை அன்னபூர்ணா!

அப்போது பெட்டிக் கடையில் பெரும்பாலும் பீடிதான் இருக்கும். ‘எதற்காக இந்த சிகரெட்டை வைத்திருந்தீர்கள்?’ என வில்சன் கேட்டதற்கு, தாத்தா பதில் சொன்னவிதம் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. ‘‘உங்களுக்குக் காலை 6 மணி வரை நேரம் தருகிறேன். அதற்குள் கேன்டீனை எடுத்து நடத்த வேண்டும்’ என்று முந்தைய நாள் மாலை கூறிவிட்டார்.

அதற்கு முன்பு கேன்டீனை நடத்திய அனுபவம் எங்கள் குடும்பத்தில் யாருக்கும் கிடையாது. அவர் சொன்னபடியே 6 மணிக்கு கேன்டீனை எடுத்து நடத்தத் தொடங்கினோம். சிறிது காலத்தில் சென்ட்ரல் தியேட்டர் கேன்டீன் எடுத்தோம். அங்கு தியேட்டருக்கு வெளியேதான் கேன்டீன் இருக்கும். அதனால் படத்துக்கு வருபவர்கள்தான் கேன்டீனுக்கு செல்ல முடியும் என்றில்லை. யார் வேண்டுமானாலும் செல்ல லாம். அந்த கேன்டீனில்தான் எங்களுடைய ஃபில்டர் காபி மற்றும் மொறுமொறுப்பான கீரை வடை நன்கு பரிச்சயமானது. அது தாத்தாவுடைய அம்மாவின் கைப்பக்குவம்.

1968-ம் ஆண்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஒரு மெஸ் தொடங்கினோம். அதற்கு அன்னபூர்ணா என்று பெயர் வைத்தோம். பெரிய வசதி இல்லாவிடினும் நாங்கள் தரமான பொருளைக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். எந்தக் கலப்படமும் செய்யவில்லை. அதுதான் எங்கள் அஸ்திவாரம்.

முதல் தலைமுறையைச் சேர்ந்த ராமசாமி இப்போதும் ஆக்டிவ்வாக இருக்கிறார். அவர் தொடங்கி இப்போது நாங்கள் வரை மூன்று தலைமுறையும் தொழிலில் இருக்கிறோம். இன்றைக்கும் தரத்தில் சமரசம் என்பது எங்களால் யோசிக்கவே முடியாது.

பல ஹோட்டல்களில் சீஸனுக்குத் தகுந்ததுபோல, உணவுப் பட்டியலை மாற்று வார்கள். சந்தையில் காய்கறி எந்த விலைக்கு விற்றாலும், எங்கள் உணவுப் பட்டியல் மாறாது. கோவைக்கு உணவு சம்பந்தப்பட்ட எந்த விற்பனை யாளர் வந்தாலும், முதலில் எங்களிடம்தான் வருவார்கள். ஒவ்வொரு பொருளின் தரம் குறித்து நாங்கள் நன்கு ஆராய் வோம். அதனால் எங்கள் போட்டியாளர்கள்கூட, ஒரு பொருளை வாங்கலாமா, வேண்டாமா என்று எங்களிடம் கேட்பார்கள்.

எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து கோவைக்கு எந்த வி.ஐ.பி வந்தாலும் அன்னபூர்ணாவில் சாப்பிடாமல் இருக்க மாட்டார் கள். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய், அப்துல் கலாம், எம்.ஜி.ஆர், கருணாநிதி, எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் பலமுறை சாப்பிட்டுள்ளனர். ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட் வரும்போது, ரெகுல ராக இங்கு வண்டியில் வந்து எடுத்துச் செல்வார்கள். ஜெயலலிதாவுக்குப் பக்கோடா பிடிக்கும். எடப்பாடி பழனி சாமிக்கு எங்கள் ஆனியன் ரோஸ்ட், பூரி மிகவும் பிடிக்கும்.

அம்பானி சகோதரர்கள் ஒருமுறை ஊட்டி வந்திருந்த போது எங்கள் ஹோட்டலில் சாப்பிட்டார்கள். சிவகுமார், சூர்யா, கார்த்திக் எப்போது வந்தாலும் பக்கோடா, பில்டர் காபி சாப்பிடுவார்கள். காஜல் அகர்வால், தமன்னா, சூரி என்று பல சினிமா நட்சத்திரங்களுக்கும் அன்னபூர்ணா ஸ்பெஷல்.

என்னைப் போலவே, எங்கள் ஊழியர் ஒருவரும், ‘அன்ன பூர்ணாதான் எனக்கு கோயில்’ என தன் குழந்தைக்கு முதல் உணவை இங்குதான் தந்தார். சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஹோமியோபதி மருத்துவர் எங்களின் ரெகுலர் கஸ்டமர். ஒருமுறை உடல்நிலை மிகவும் மோசமாக இருந்த ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்க சென்றிருக்கிறார். அவர் பிழைப்பதற்கு வாய்ப்பு குறைவு என்பதால், கடைசி ஆசை குறித்து கேட்டுள்ளனர். அவர் அன்னபூர்ணா சாம்பார் வேண்டும் எனச் சொல்லியுள் ளார். ‘தன் கடைசி மூச்சில்கூட உங்கள் உணவுதான் வேண்டும்’ என ஒருவர் சொல்கிறார். இதுதான் உங்களுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய அங்கீகாரம்’ என அந்த மருத்துவர் நெகிழ்ச்சியாகக் கூறினார். இதைவிட எங்களுக்கு வேறு என்ன வேண்டும்?

50 ஆண்டுகள், 3 தலைமுறைகள்... மக்கள் மனதைக் கொள்ளைகொண்ட கோவை அன்னபூர்ணா!

நாங்கள் படைக்கும் உணவில் ஏதாவது குறை இருந்தாலும் என் நம்பருக்கு அழைத்து, ‘ஜெகன், இது சரியில்லை. மாற்றுங்கள்’ என உரிமையோடு சொல்வார்கள். வாடிக்கை யாளர்களுக்கு வயிறு மட்டுமல்லாமல், மனதும் நிறைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஒரு உணவுப் பொருள் சரியில்லை என வாடிக்கையாளர்கள் யாராவது கூறினால், மறுபேச்சு இல்லாமல் அதை உடனடியாக மாற்றிக் கொடுத்துவிடுவோம். புகார்களை சரி செய்வதற் காகவே, தனி ஊழியர்களை நியமித்துள்ளோம். உணவின் தரத்துக்கும் சுவைக்கும் எந்தப் பொருள் தேவையோ அதைத் தொடர்ந்து செய்து வருகிறோம்.

அன்னபூர்ணா காபி எப்போதும் ஸ்பெஷல். ஈரோடு மாவட்டம் சித்தோடு ஆவினில் இருந்துதான் நாங்கள் தினமும் பால் எடுக்கிறோம். கோவையிலேயே பால் கிடைக்கும். இருந்தாலும் எங்களுக்கு வேண்டும் என்கிற தரத்தில் அவர்கள் தருகிறார்கள். தாத்தாவின் அம்மா கைப் பக்குவத்தை அப்படியே பிடித்து விரிவாக்கியது அவரின் சகோதரர் ரங்கசாமிதான். நெஸ்கபே இந்தியா வந்தபோது, இங்கு எந்த மாதிரி செயல்பட வேண்டும் என்ற வழி காட்டுதலை அவரை அழைத்துதான் கேட்டனர். மேங்கோ மில்க் ஷேக்கைப் பொறுத்துவரை, நாங்கள் சுத்தமான அல்போன்ஸா மட்டுமே பயன்படுத்துவோம். அது சற்று விலை அதிகம்தான். தவிர, சீஸன் நேரத்தில் வாங்கி வைக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் மெனக் கெடுவோம். அதுதான் சுவையில் வித்தியாசப்படுத்துகிறது.

இப்போது 18 கிளைகளும் 2,000 ஊழியர்களும் உள்ளனர். அடுத்து மூன்று கிளைகள் திறக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அன்னபூர்ணா கிளைகள் முழுக்க கோவைக் குள்தான் உள்ளன. கொரோனாதான் எங்களுக்கு மிகவும் கடினமான காலகட்டம். இப்போதுவரை அதில் இருந்து முழுவதுமாக மீளவில்லை. ஆனாலும், தரமான உணவுக்கான எங்கள் அர்ப்பணிப்பு என்றும் மாறாது. இது அன்னபூர்ணாா மட்டுமல்ல, கோவை மண்ணின் பண்பாடு” என்றார்.

சத்தியமான வார்த்தைதான் அது!