Published:Updated:

வடக்கிலிருந்து வந்த சந்திரகலா... தஞ்சை மக்களின் நெஞ்சம் கவர்ந்த பாம்பே ஸ்வீட்ஸ்..!

சுப்ரமணிய சர்மா
பிரீமியம் ஸ்டோரி
சுப்ரமணிய சர்மா

நேட்டிவ் பிராண்ட் - 6

வடக்கிலிருந்து வந்த சந்திரகலா... தஞ்சை மக்களின் நெஞ்சம் கவர்ந்த பாம்பே ஸ்வீட்ஸ்..!

நேட்டிவ் பிராண்ட் - 6

Published:Updated:
சுப்ரமணிய சர்மா
பிரீமியம் ஸ்டோரி
சுப்ரமணிய சர்மா

தஞ்சாவூர் என்றால் தலையாட்டி பொம்மை என்பது வெளியூர்க்காரர்களுக்கு ஞாபகத்துக்கு வரும். ஆனால், தஞ்சையின் குறிப்பிட்டு சொல்லக்கூடிய அடையாளங் களுல் ஒன்று, பாம்பே ஸ்வீட்ஸ் என்பது அந்த ஊர்க்காரர்களுக்கே தெரியும். 75 ஆண்டுகளுக்கு முன்பு மிகச் சிறிய அளவில் தொடங்கப்பட்ட பாம்பே ஸ்வீட்ஸ் கடை சந்திரகலா, முந்திரி பேடா, பாதாம் கீர் என பல புதிய வகை இனிப்புகளைத் தஞ்சை மக்களுக்கு அறிமுகம் செய்து, இன்றும் தரம் குறையாமல் தந்து வருவதால், 14 கிளைகளைக் கொண்ட பெரும் நிறுவனமாக மாறியிருக்கிறது.

ஒற்றையாளாகத் தொடங்கப்பட்ட கடை இன்றைக்கு 300 பேர் வேலை செய்யக்கூடிய ஆலமரமாக வளர்ந்துள்ளது. பாம்பே ஸ்வீட்ஸ் உரிமையாளர் சுப்ரமணிய சர்மாவிடம் பேசினோம்.

சுப்ரமணிய சர்மா
சுப்ரமணிய சர்மா

‘‘உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா அருகே உள்ள ஆத்ரஸ் என்ற சிறிய ஊர்தான் எங்களோட பூர்வீக கிராமம். ஆத்ரஸ் என்றால் கைமணம் என்று அர்த்தம். என் அப்பா குருதயாள் சர்மா 1935-ம் ஆண்டு சொந்த ஊரிலிருந்து சென்னை மண்ணடிக்கு வந்து அங்கிருந்த ஹோட்டல் ஒன்றில் தினக் கூலியாக வேலைக்கு சேர்ந்தார். கிட்டதட்ட 10 ஆண்டுகள் வேலை செய்து கொஞ்சம் பணத்தை சேமித்து எடுத்துக்கொண்டு, சொந்தமாக கடை திறக்க 1947-ம் ஆண்டு தஞ்சாவூருக்கு வந்தார்.

கையிலிருந்த பணத்தை வைத்து ஒற்றையாளாக ரயிலடியில் சிறிய அளவில் பாம்பே ஸ்வீட்ஸ் என்ற பெயரில் ஸ்வீட் கடை ஆரம்பித் தார். தரத்துக்கும் சுவைக்கும் பெரும் முக்கியத்துவம் கொடுத்து மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஸ்வீட்களைத் தயாரித்து வியாபாரம் செய்ததால், சில ஆண்டுகளிலேயே தஞ்சை மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்த பாம்பே ஸ்வீட்ஸ் மெள்ள வளர ஆரம்பித்தது.

உத்தரப்பிரதேசத்தில் ஹோலிப் பண்டிக்கைகாகச் செய்யப்படும் பலகாரம் சந்திரகலா அங்கு ரொம்பவே பிரபலம். அங்கே அதை ‘குஜியா’ என்பார்கள். அதில் லேசாக மாற்றம் செய்து சந்திரகலா என பெயர் வைத்து, புதிய ஸ்வீட்டைத் தஞ்சை மக்களுக்கு அறிமுகம் செய்தார். தரமான பசும்பாலைப் பெரிய சட்டியில் வைத்து நன்கு காய்ச்சி சுண்டி பால்கோவாக மாற்ற வேண்டும்.அதில் தேவையான அளவு முந்திரி, ஏலக்காய், குங்குமப்பூ ஆகியவற்றைச் சேர்த்து நன்கு பிசைந்து மசாலாவாக மாற்ற வேண்டும். மைதா மாவைப் பிசைந்து கொஞ்சம் மாவை எடுத்து அப்பளம் வடிவில் மெல்லிதாக தேய்த்துக்கொள்ள வேண்டும்.

அதில் ஏற்கெனவே தயார் செய்த மசாலாவை வைத்து மடித்து ஓரத்தைப் பூ வடிவில் பின்னிவிடு வோம். அதை நெய்யில் வேக வைத்து சர்க்கரை பாகில் ஊற வைப்போம். பின்னர் சர்க்கரை பாகு வடிஞ்ச பிறகு டிரேயில் வைத்து விற்பனைக்கு எடுத்துச் செல்வோம்.

சுத்தமான பால், நெய் கொண்டு அப்பா செய்த சந்திரகலா பின்னர் எங்களோட அடையாளங்களில் ஒன்றாக மாறியது. இதே போல், ட்ரை குளோப் ஜாம், முந்திரி பேடா, முந்திரி கேக், அஜ்மீர் பர்பி, கேசர் லாடு, பாதாம் கீர் என வட மாநில ஸ்வீட் வகைகளை அறிமுகம் செய்து வைத்தோம். இப்ப ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்வீட் வகைகள் எங்க கடையில் உள்ளன.

வடக்கிலிருந்து  வந்த  சந்திரகலா... தஞ்சை  மக்களின்  நெஞ்சம் கவர்ந்த பாம்பே  ஸ்வீட்ஸ்..!

லாபத்தைப் பெரிதாகக் கருதாமல் மக்கள் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ச்சியாக அப்பா செயல்பட்டார்.வியாபாரம் கம்மியா இருந்தாலும் தரம் முக்கியம். அதோட நிரந்தர லாபம் கிடைக்க வேண்டும். அது தான் நாம செய்யுற தொழிலுக்கு அழகு என்பதை எங்களுக்கு விதையாக்கினார்.

புதுப்புது பலகாரங்கள், சுடச் சுட செய்து விற்பனை செய்ததால் எங்க கடைக்கான மக்களின் ஆதரவு பெருகியது. எங்க கடை சுவை பற்றிக் கேள்விப்பட்ட மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தினர், முன்னாள் தி.மு.க அமைச்சர் உபயதுல்லா மூலமாக ஒரு நாளில் ஒரு டன் ஸ்வீட் ஆர்டர் செய்து தர முடியுமானு கேட்டனர். மொத்தமே 20 பேர்தான் வேலை செய்து வந்தோம். எப்படி ஒரு நாள்ல ஒரு டன் தயார் செய்ய முடியும் என எல்லோருக்கும் மலைப்பாக இருந்தது. ஆனா, அப்பா எந்த யோசனையும் செய்யாமல் ஆர்டரைப் பெற்றுக் கொண்டு ஸ்வீட்ஸ்களைத் தயார் செய்து குறித்த நேரத்தில் டெலிவரியும் செய்தார். அர்ப்பணிப்பு மிக்க அந்த உழைப்புதான் பாம்பே ஸ்வீட்ஸ் வளர்வதற்குக் காரணமாக அமைந்தது. அடுப்படியில வேலை செய்யும்போதே என் உயிர் போயிடணும் என அப்பா சொல்லிக்கொண்டே இருப்பார். அந்தளவுக்குத் தொழிலை உயிராக நேசித்தார்.

அப்பாவுக்குப் பிறகு நான் கவனிக்கத் தொடங்கினேன்.தரம் குறையவே கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தேன். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, முதல்வராக இருந்தபோது ஒரு முறை தீபாவளிக்கு இரண்டு நாள் முன்னாடி 40 டன் ஸ்வீட் ஆர்டர் கொடுத்தார்.

தீபாவளி வியாபாரம் பெரிதாக இருக்கும். அதே நேரத்தில் ஜெயலலிதாம்மா கொடுத்த ஆர்டரையும் செய்து கொடுக்கணும். இரண்டு நாளில் செய்ய முடியுமா என்ற பெரும் கேள்வி, எங்க எல்லாத்துக்கும் ஏற்பட்டது. ஆனா, தரமும் சுவையும் கொஞ்சமும் குறையாம அந்த ஆர்டரை வெற்றிகரமா முடிச்சுக் கொடுத்தோம். எல்லோருக்கும் தீபாவளி பரிசா எங்க கடை ஸ்வீட்டை அவங்க மகிழ்ச்சியாகக் கொடுத்தாங்க. ஸ்வீட் ரொம்ப நல்லா இருக்குணு, அதிகாரிகள் மூலமா என்னைப் பாராட்டி சால்வைப் போத்தி வாழ்த்தினாங்க. அத எங்களால மறக்கவே முடியாது.

வடக்கிலிருந்து  வந்த  சந்திரகலா... தஞ்சை  மக்களின்  நெஞ்சம் கவர்ந்த பாம்பே  ஸ்வீட்ஸ்..!

பாதாம் கீரைத் தஞ்சாவூருக்கு நாங்கதான் அறிமுகம் செஞ் சோம். மறைந்த ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது தஞ்சாவூர் வந்தார். அப்ப அவரைக் கட்சிக்காரங்க எங்க கடைக்கு அழைத்து வந்து பாதாம் கீர் குடிக்க வச்சாங்க.ரசித்து, ருசித்த ராஜீவ்காந்தி ரொம்ப நல்லா இருக்குணு பாராட்டிய கையோட சால்வை யைப் போத்தி வாழ்த்தினார். இப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்துக்கும் நம்ம கடை ஸ்வீட் ரொம்ப பிடிக்கும்னு கூறி கட்சியின் முக்கியஸ்தர்கள் வாங்கிட்டுப் போறது ரொம்பவே சந்தோஷமாக இருக்கு.

நடிகர் சிவாஜி கணேசன் சூரக்கோட்டைக்கு வந்திருந்தப்ப எங்க கடை ஸ்வீட் கேட்டதுடன் எங்களையும் பார்க்க வரச் சொல்லியிருந்தார். நான் ஸ்வீட் எடுத்துக்கொண்டு போயிருந் தேன். அதை வாங்கிச் சாப்பிட்டவர் ‘கையில என்னய்யா மாயம் வைச்சிருக்கீங்க’னு கட்டிப்பிடிச்சுக் கொண்டார். கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களுக்கு எங்க கடை ஸ்வீட்டைத் தொடர்ச்சியாக அனுப்பி வர்றோம்.

வாடிக்கையாளர்களை நாங்க குடும்ப உறவாகத்தான் பார்க்கிறோம். சுபநிகழ்ச்சிகளுக்கு பலர் சென்டிமென்டாக கருதி எங்க கடை ஸ்வீட்டை வாங்கிட்டுப் போவாங்க. அவங்க எங்களுக்குக் கொடுத்திருக்கிற இடம் ரொம்ப பெரியது. தலைமுறை தலைமுறையாக எங்க கடைக்கு வாடிக்கையாளர்கள் வருவதை எங்களுக்குக் கிடைச்ச பாக்கியமாகக் கருதுகிறோம்.

தமிழர்கள் அதிகம் வாழக்கூடிய வெளிநாடுகளான அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, துபாய், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா எனப் பல நாடுகளுக்கு கூரியர் மூலம் ஆர்டரின் பேரில் எங்க கடை ஸ்வீட் செல்கிறது.வெளிநாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்காகவும் ஆர்டர் தருகிறார்கள். நாங்க தயார் செய்து அனுப்பி வைக்கிறோம்.

அப்பா ஆரம்பிச்ச கடை இன்றைக்கு பெரிய ஆலமரமாகி ஒரு நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. சுமார் 300 பேருக்கு வேலைவாய்ப்பை அளித்து வருகிறோம். இதுவரைக்கும் கடைக்காக சின்னதாகக்கூட எந்த விளம்பரமும் செய்தது கிடையாது’’ என்று பெருமை பொங்க பேசி முடித்தார் சுப்பிரமணிய சர்மா.

இனி தஞ்சாவூருக்குப் போனால், பாம்பே ஸ்வீட்ஸ் கடையின் இனிப்பை சுவைக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்தானே..?