Published:Updated:

60 வருட பாரம்பர்யம்... ஜொலிக்கும் திருச்சி கல்யாணி கவரிங்..!

கல்யாணி கவரிங்
பிரீமியம் ஸ்டோரி
கல்யாணி கவரிங்

நேட்டிவ் பிராண்ட் -5

60 வருட பாரம்பர்யம்... ஜொலிக்கும் திருச்சி கல்யாணி கவரிங்..!

நேட்டிவ் பிராண்ட் -5

Published:Updated:
கல்யாணி கவரிங்
பிரீமியம் ஸ்டோரி
கல்யாணி கவரிங்

தங்கத்தில் ஆபரணங்கள் செய்து அணிய வேண்டுமென்பது, இன்றைக்கும் ஏழை, நடுத்தர மக்கள் பலரின் கனவாகவே இருக்கிறது. இதற்கான ஒரு மாற்றாக கவரிங் நகைகள் இருந்து வருகின்றன. தங்கத்தினுடைய விலையேற்றம், அதற்கு மாற்றான ஒரு பொருள் வேண்டுமென 60 ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கதரிசனமாகக் கணித்து ‘கவரிங் நகை’ தொழிலைக் கையிலெடுத்த நிறுவனம்தான் ‘கல்யாணி கவரிங்.’ 60 ஆண்டுகளைக் கடந்தும் மக்கள் மனதில் ஜொலித்துக்கொண்டிருக்கிறது.

1960-ம் ஆண்டு திருச்சி ஜாபர்ஷா தெருவில் பத்துக்கு பத்து அளவில் ஒரு சிறிய கடையாக ஆரம்பிக்கப்பட்டது கல்யாணி கவரிங். அன்றைய தேதியில் கவரிங் நகைகள் மீது மக்களுக்குப் பெரிதாக ஆர்வமில்லை. இருந்தாலும், தொலைநோக்குப் பார்வையோடு கல்யாணி கவரிங்கை ஆரம்பித்திருக்கிறார் அதன் நிறுவனரான டி.பி.கோபாலகிருஷ்ணன். அவருக்குப் பிறகு திருமூர்த்தி, சுப்பிரமணியன், உமாநாத், ராம் என அவரின் மகன்கள் நான்கு பேரும் தூணாய் நின்று உழைப்பையும் வியர்வை யையும் கொட்டி ‘கல்யாணி கவரிங்கை’ இன்றைக்கு இந்த அளவுக்கு வளர்த்தெடுத்திருக்கின்றனர். கவரிங் நகைகள் என்றாலே ‘கல்யாணி கவரிங்’ என பெயர் சொல்லும் அளவுக்கு தமிழகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது, இந்த நிறுவனத்தின் கிளைகள். இன்றைய தேதியில் 25 சொந்தமான கடைகளும், 35 ஃப்ரான்சைஸ் கடைகளும் என கவரிங் நகை விற்பனையில் பட்டையைக் கிளப்பி வருகிறது கல்யாணி கவரிங்.

60 வருட பாரம்பர்யம்... ஜொலிக்கும் திருச்சி கல்யாணி கவரிங்..!

மூன்றாவது தலைமுறையாக பொறுப்பில் உள்ள கல்யாணி கவரிங் கடையின் நிறுவனர் கோபாலகிருஷ்ணனின் பேரனும், நிர்வாக இயக்குநருமான மணிகண்டனிடம் பேசினோம். “இந்த கவரிங் நகை பிசினஸுக்கு வருவதற்கு முன்பே என்னுடைய தாத்தா, 100 ஆபரணக் கலைஞர்களை வைத்து, தங்க நகைகளைச் செய்து கொடுத்து வந்தார்கள். அதில் கிடைத்த அனுபவத்தை வைத்தே 1960-ல் கல்யாணி கவரிங்கை தொடங்கினார்கள். கவரிங் என்பது நம்முடைய பாரம்பர்ய தொழிலாகவே இருந்து வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள கோயில் கோபுரங்களில் உள்ள கலசங்களில் தங்க முலாம் பூசப்பட்டதே, கவரிங் தொழில்நுட்பம்தான். அதேபோல, ஆரம்பக்கால சினிமாக்கள், நாடகங்களில் நடிகர்கள் அணிந்த நகைகள் அனைத்துமே கவரிங் முறையில் செய்யப் பட்டவையே. அந்த வகையில், இன்றைக்கும் தங்கத்துக்கு மாற்றான ஒரு பொருளாக இந்த கவரிங் நகைகள் இருக் கின்றன. 1960-ல் கல்யாணி கவரிங் ஆரம்பிக்கப் பட்டாலும், 80-களுக்குப் பிறகுதான் கவரிங் நகைகள் மீது மக்களின் பார்வை பெரிதாகப் பட்டது.

குறிப்பாக, கல்யாணி கவரிங் வளர்ச்சியில் விளம்பரத்துக்கு பெரிய பங்கு இருக்கிறது. நியூஸ் பேப்பர்களிலும், ரேடியோவிலும் விளம்பரம் கொடுத்த பிறகுதான் எங்களுடைய கடையைத் தேடி கூட்டம் கூட்டமாக மக்கள் வரத் தொடங் கினார்கள். 25 வருஷம் தொடர்ந்து விளம்பரம் கொடுத்ததால் ‘ஆல் இந்தியா ரேடியோவில்’ எங்களுடைய நிறுவனத்துக்கு அவார்டு கூட கொடுத்தார்கள். எங்களிடம் வாங்கிய பழைய கவரிங் நகைகளைக் கொடுத்தால் குறிப்பிட்ட டிஸ்கவுன்ட், கவரிங் நகைகளுக்கு 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை கேரன்டி போன்ற எங்களுடைய அறிவிப்புகள் மக்களை பெரிதாக ஈர்த்தன. கவரிங் நகை குறித்து மக்களிடையே இருந்த ஒரு தாழ்வு மனப்பான்மையை நீக்கினோம். கவரிங் நகை அணிவதை கௌரவக் குறைச்சலாக நினைத்தவர்களுக்கு மத்தியில், இன்றைக்கும் பணம் படைத்த வசதியானவர்கள் பலரும்கூட, உடைகளுக்கு ஏற்றவாறு பிடித்த டிசைன்களில் கவரிங் நகைகளை எங்களிடம் வாங்கி அணி கின்றனர். தங்க நகைகளைவிட கவரிங் நகைகள் விலை மிகக் குறைவு என்பதைவிட, பொது இடங்களில் திருட்டு போன்ற சம்பவங்கள் குறித்து பயம் இல்லாமல் அணிந்து செல்லலாம். தங்கத்துல ஒரு நகை செட் செய்ய 10 லட்சம் செலவாகிறது என்றால், அதே டிசைனில் கவரிங் நகை செட்டை இருபதா யிரத்தில் செய்துவிடலாம்.

ஶ்ரீராம்,  உமாநாத்,     சுப்பிரமணியன்,  திருமூர்த்தி
ஶ்ரீராம், உமாநாத், சுப்பிரமணியன், திருமூர்த்தி

பெரும்பாலும் கவரிங் நகைகளில் நிக்கலைத்தான் மூலப்பொருளாகப் பயன் படுத்துவார்கள். நிக்கல் சீக்கிரமே கறுத்துவிடுவதோடு, உடலுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். ஆனால், கல்யாணி கவரிங்கில் நிக்கலை துளியும் பயன் படுத்தாமல், பித்தளை மற்றும் செம்பை மட்டும்தான் பயன் படுத்துகிறோம். தோடு, வளையல், செயின், நெக்லஸ், ஆரம், கொலுசு, மெட்டி, மோதிரம், நெத்திச்சுட்டி எனத் தங்கத்தில் எதையெல்லாம் செய்ய முடியுமோ, அவை அனைத்தை யும் நாங்கள் விற்பனை செய்து வருகிறோம்.

பெண்கள் அணியும் நகைகள் மட்டுமல்லாமல், கோயிலுக்கு வேண்டிய அலங்கார நகைகளையும் செய்து கொடுத்து வருகிறோம். 1993-ம் வருடம், திருச்சி ஜாபர்ஷா தெருவில் இருந்த எங்களது கடையில் இருந்த கவரிங் நகைகள் அனைத்தையும், கொள்ளையர் கள் கொள்ளையடித்து போலீஸில் மாட்டிக்கொண்டார் கள். ‘தங்க நகை என நினைத்து திருடியதாக’ திருடர்கள் சொல்ல, ‘கல்யாணி கவரிங் நகையைப் பார்த்து, தங்க நகைன்னு திருடனே ஏமாந்துட் டான்’ என மக்கள் மத்தியில் எங்களுடைய கடைக்கு மேலும் பிரபலம் உண்டானது.

60 வருட பாரம்பர்யம்... ஜொலிக்கும் திருச்சி கல்யாணி கவரிங்..!

எங்க தாத்தாவுக்குப் பிறகு, அடுத்த தலைமுறையின் உழைப்பு ரொம்ப முக்கிய மானது. அப்பா திருமூர்த்திதான் கல்யாணி கவரிங் கடைகளின் முழுமையான நிர்வாகத்தை கவனிக்கிறார். சித்தப்பா சுப்பிரமணியன் மதுரையில் உள்ள மூன்று கல்யாணி கவரிங் கடைகளையும் கவனித்துக் கொள்கிறார். இன்னொரு சித்தப்பா உமாநாத் மொத்த கல்யாணி கவரிங் விற்பனைப் பிரிவையும் நிர்வகிக்கிறார். கடைசி சித்தப்பா ராம் தர நிர்ணய பிரிவைக் கையாள்கிறார். கல்யாணி கவரிங் நிர்வாகம் மற்றும் வணிகத்தை மூன்றாம் தலைமுறையாக எம்.பி.ஏ பட்டதாரிகளான நானும், இரண்டாவது சித்தப்பா உமாநாத்தின் மகன் கணேஷ் பிரசாத்தும் கையில் எடுத்திருக் கிறோம்.

60 வருட பாரம்பர்யம்... ஜொலிக்கும் திருச்சி கல்யாணி கவரிங்..!

எலைட் வாடிக்கையாளர் களுக்காக ‘மால்யா ஃபேஷன் ஜுவல்லரீஸ்’ என்ற பெயரில், உயர்தர ஃபேஷன் நகைகளை விற்பனை செய்து வருகிறோம். முதற்கட்டமாக சென்னை, திருச்சி, விஜயவாடா ஆகிய 3 இடங்களில் இந்த கிளைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. இங்கு தமிழகத்தின் ஆபரண டிசைன்கள் மட்டுமல்லாது, இந்தியாவில் பல்வேறு மாநிலங் களைச் சேர்ந்த பாரம்பர்ய டிசைன் நகைகள், கொரியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் டிசைனர் நகைகளும் கிடைக்கும். தமிழகம் மட்டு மல்ல, உலகம் முழுவதும் எங்களு டைய நகைகளைக் கொண்டு சேர்க்க வேண்டுமென்பதே எங்களுடைய ஆசை.

எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் தரத்தை நிலையாகக் கடைப்பிடிக்காவிட்டால் வெற்றி பெற முடியாது. அந்த வகையில், எங்களுடைய நகைகளில் குவாலிட்டியில் எந்த குறைவும் வந்துவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறோம். 60 ஆண்டுகளாக நாங்கள் மார்க்கெட்டில் இந்தத் தொழிலில் பிரபலமாக இருக்கிறோம் என்றால் ‘கல்யாணி கவரிங்ல நகை வாங்குனா கறுத்துப் போகாது’ன்னு எங்கள் மீது மக்கள் வைத்த நம்பிக்கையும் ஆதரவும்தான் எங்களுடைய வளர்ச்சிக்கு முக்கியமான காரணம். தங்க நகை தயாரிப்புத் தொழிலில் ஈடுபடுகின்ற தொழிலாளர்களை வைத்துதான், எங்களுடைய கவரிங் நகைகளைச் செய்து வருகிறோம். அதனால்தான், தங்க நகைகளைப் போன்றே எங்களுடைய கவரிங் நகைகளின் ஃபினிஷிங் இருக்கின்றன.

எல்லா தொழில்களைப் போலவும் இதிலும் இன்றைக்கு நிறைய போட்டிகள் உருவாகி இருக்கின்றன. அதைவிட இந்தத் தொழில் வளர்ந்திருக்கிறது என்பதும், இதனால் பல லட்சம் பேருக்கு வேலை கிடைத்து வருகிறது என்பது சந்தோஷமான விஷயம்தான்” என்றார்.

கல்யாணி கவரிங் தலைமுறை தாண்டியும் ஜொலிக்கட்டும்!