Published:Updated:

“மாத்தி யோசித்தால் மகத்தான வெற்றி நிச்சயம்..!” - சென்னையைக் கலக்கும் ராஜஸ்தான்காரர்

நவீன் பண்டாரி
பிரீமியம் ஸ்டோரி
News
நவீன் பண்டாரி

‘‘சில மணிநேரம் வேலை செய்தாலும் முழு அர்ப்பணிப்புடன் விரைவாக வேலையை முடிக்கச் சொல்வேன்!’’

“வீட்டைவிட அலுவலகத்தில்தான் அதிக நேரம் செலவிடுகிறேன். நான் மட்டுமன்றி, என் ஊழியர்களும் மகிழ்ச்சியான மனநிலையுடன் வேலை செய்வதற்கான கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறேன்.

என் நிறுவனங்களில் இளைஞர்கள்தாம் அதிகளவில் பணியாற்றுகின்றனர். அவர்கள் விருப்பப்பட்ட உடையில், விருப்பப்பட்ட நேரத்துக்கு அலுவலகம் வந்து சுதந்திரமாக வேலை செய்யவே ஊக்கப்படுத்துகிறேன். சில மணிநேரம் வேலை செய்தாலும் முழு அர்ப்பணிப்புடன் விரைவாக வேலையை முடிக்கவே வலியுறுத்துவேன். எந்த மாற்றமும் நம்மிடமிருந்து தொடங்குவதுதானே சரி. அதனால் டி-ஷர்ட், ஷாட்ஸ் ஆடைகளை அணிந்துகொண்டு அலுவலகத்தில் பணியாற்றுவேன்..!”

பேச்சிலும் செயலிலும் வித்தியாசமான அணுகுமுறையுடன் நம் கவனத்தை ஈர்க்கிறார் நவீன் பண்டாரி. சென்னையிலுள்ள ‘குலப்ஸ் ’(Gulabs) நிறுவன உரிமையாளரான நவீன், படிப்பில் நாட்டமின்றி பிசினஸில் களமிறங்கியவர். மூன்று நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்திவருபவரைச் சந்தித்தோம்.

“மாத்தி யோசித்தால் மகத்தான வெற்றி நிச்சயம்..!” - சென்னையைக் கலக்கும் ராஜஸ்தான்காரர்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

படிப்பைவிட பிசினஸில் ஆர்வம்

“என் பூர்வீகம் ராஜஸ்தான். பல தலைமுறைகளாகவே சென்னையில்தான் வசிக்கிறோம். பிசினஸ் குடும்பம். இளமைக் காலத்திலிருந்தே எனக்குப் படிப்பில் அதிக நாட்டமில்லை. பிசினஸ் மற்றும் தொழில்நுட்பத்தில்தான் ஆர்வம். எனவே, காலேஜ் படிப்பைக்கூட சரியாக முடிக்கவில்லை. சில ஆண்டுகள் அப்பாவின் எலெக்ட்ரானிக்ஸ் தொழிலில் அனுபவங்கள் கற்றேன். பிறகு, செல்போன் தொழில்நுட்பத்துக்கான ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினேன். செல் போனில் படம் பார்க்கவும், பாடல் கேட்பதற்கு மான தனி செயலியை நடத்தினேன். ‘Techzone’ என்ற பெயரில் இந்தியாவில் நான்கு நகரங்களில் 350 ஊழியர்களுடன் சிறப்பாக இயங்கியது. இந்த நிறுவனத்தை, திரைப்படங்களை வெளியிடும் ‘ஈராஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனத்துக்கு 2017-ல் விற்றுவிட்டேன்.

‘மியூசிக் 247’

‘மியூசிக் 247’ என்ற நிறுவனத்தை 2013-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறேன். இந்த நிறுவனத்தின் மூலம் தமிழ், மலையாளத் திரைப்படப் பாடல்களின் ஒளிபரப்பு உரிமத்தைப் பெற்று யூடியூப், கானா, ஆப்பிள் மியூசிக் போன்ற மற்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்கிறேன். இதே முறையில், ‘ஹமாரா மியூசிக்’ என்ற தனி நிறுவனத்தின் மூலம் வங்காளம், ஒடிசா திரைப்படப் பாடல்களின் உரிமத்தைப் பெற்று பிற நிறுவனங்களுக்கு விற்பனை செய்கிறேன். இந்த இரண்டு நிறுவனங்களும் சிறப்பாகச் செயல்படுகின்றன” என்று இடைவெளிவிடும் நவீன் பண்டாரி, உணவுப்பொருள் தயாரிப்புத் தொழில் குறித்துப் பேசினார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ரசாயனம் கலக்காத சர்பத்..!

“என் சித்தி சமையலில் கைதேர்ந்தவர். சென்னை சூளைமேட்டில் வீட்டில் இருந்தபடியே பல்வேறு உணவுகளை விற்பனை செய்துவந்தார். சுற்றுவட்டாரத்திலுள்ள பலரும் மணிக்கணக்கில் காத்திருந்து அவரிடம் உணவுகள் பெற்றுச் செல்வார்கள். அதைப் பார்த்தபோதுதான், அவரது திறமையைப் பயன்படுத்திக்கொண்டு தனி நிறுவனம் தொடங்கும் எண்ணம் உருவானது.

நவீன் பண்டாரி
நவீன் பண்டாரி

2015-ல் ‘குலப்ஸ்’ என்ற புதிய நிறுவனத்தை நம்பிக்கையுடன் தொடங்கினேன். ஆரம்பத்தில் விற்பனை மெதுவாகவே நடந்தாலும், ஆண்டுதோறும் இருபதுக்கும் மேற்பட்ட உணவுத் திருவிழாக்களில் கலந்துகொண்டு அரங்கு அமைத்தேன். பலருக்கும் சாம்பிள் புராடெக்டுகளைக் கொடுத்தேன். இவை எல்லாம் தொழில் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின.

மார்க்கெட்டில் பலவகையான சர்பத் விற்கப்படுகிறது. ஆனால், ஓர் உணவுப்பொருளின் சுவையை மட்டுமே கிடைக்கச் செய்யும் வகையில் அவை எசன்ஸாகத் தயாரிக்கப் படுகிறது. அதற்கு மாறாக, நேச்சுரலான முறையில் ரசாயனங்கள் ஏதுமின்றி கான்சன்ட்ரேட் வடிவில் சர்பத் தயாரிக்கிறோம். அதைத் தண்ணீர், சோடா, பால் போன்றவற்றில் கலந்து பருகலாம். இது தவிர, காக்ஹ்ரா மசாலாப் பொருள்கள், ஊறுகாய் உள்ளிட்ட உணவுப் பொருள்களைப் பல்வேறு ஃப்ளேவர்களில் தயாரிக்கிறோம்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் ‘குலப்ஸ்’ நிறுவனம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியது. விநியோகஸ்தர்கள் மூலம் அண்டை மாநிலங்களுக்கும் அதிகளவில் விற்பனை செய்கிறோம். தவிர, ஆன்லைன் விற்பனையை நாங்களே மேற்கொள்கிறோம். உணவுப்பொருள் என்பதால், தரமாகவும் ஆரோக்கியமான முறையிலும் தயாரித்தால்தான் மக்கள் நம் பொருளைத் தொடர்ந்து வாங்குவார்கள். மக்களின் அந்த நம்பிக்கையைத் தொடர்ந்து தக்க வைத்து தொழிலைப் படிப்படியாக விரிவுபடுத்துகிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எந்தப் பொருளை விற்பனை செய்தாலும் பேக்கிங் வசீகரமாக இருப்பது அவசியம். அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன், கண்ணாடி பாட்டில்களில்தான் பெரும்பாலும் எங்கள் உணவுப் பொருள்களை விற்பனை செய்கிறோம். இன்னும் பல்வேறு புதிய தயாரிப்புகளை அறிமுகப் படுத்தவுள்ளோம்” என்று மகிழ்ச்சியுடன் கூறுபவர் ஏற்றுமதி யிலும் களமிறங்கவிருக்கிறார்.

நவீன் பண்டாரி
நவீன் பண்டாரி

பல்வேறு உணவகங்கள் மற்றும் டிபார்ட் மென்டல் ஸ்டோர்களில் இவரது தயாரிப்புகள் அதிகளவில் விற்பனையாகின்றன. மேலும், ஆந்திரா, கேரளா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் உட்பட பல மாநிலங்களுக்கும் விற்பனை நடக்கிறது. மூன்று நிறுவனங்களின் மூலம் 100 பேருக்கு வேலைவாய்ப்பு தருகிறார். ஆண்டுக்குப் பல கோடி ரூபாய் டேர்ன்ஓவர் செய்பவர், 3டி பிரின்ட்டிங் இயந்திரத்தைத் தயாரிக்கப் புது நிறுவனம் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தவறுகளிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள்!

“தொழிலில் நம் முடிவுகள் சிலநேரம் தவறுதலாகவோ, சரியாகப் பலன் கொடுக்காமலோ இருக்கலாம். அப்படியான அனுபவங்களும் எனக்குப் பலமுறை கிடைத்திருக்கிறது. அதற்காக ஒருபோதும் வருத்தப்படாமல் உடனே பிரச்னையைச் சரிசெய்வதற்கே முக்கியத்துவம் கொடுப்பேன். அதனால், பெரிய சறுக்கல்கள் ஏற்படாமல் நிதானமாகப் பயணிக்க முடிகிறது.

தொடக்கத்தில் மக்கள் வசிப்பிடத்தில் உற்பத்திக் கூடத்தைத் தொடங்கியது பல்வேறு வகையிலும் தவறான முடிவாகத் தோன்றியது. பிறகு, சென்னை மாதவரத்தில் உற்பத்திக்கூடத்தை மாற்றியதும் அந்தச் சிக்கல்கள் சரியானது. இப்படி அனுபவப் பாடங்களை இன்றளவும் கற்று, தவறுகளைச் சரிசெய்தேன்.

புதிய தொழிலை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுவரும்வரை குழந்தைக்கு இணையான முக்கியத்துவம் கொடுப்பேன். பிறகு, அந்தத் தொழில் சீரான வேகத்தில் இயங்க ஆரம்பித்ததும் புதிய தொழிலில் கவனம் செலுத்துவேன். ஏற்ற இறக்கங்கள் கலந்த பயணம் என்பதால், பிசினஸில் ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யமாகவும் சவாலாகவும் இருக்கிறது. வெற்றி தோல்வியை ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கப் பழகிவிட்டால் பிசினஸ் பயணம் சிறப்பாகவே அமையும்.

முதலாளி இல்லாவிட்டாலும் ஒரு நிறுவனத்தில் வேலைகள் சரியாக நடக்க வேண்டும். அந்த வகையில் தகுதியான பணியாளர்கள் இருப்பதால், பல்வேறு தொழில்களில் என்னால் சரியாகக் கவனம் செலுத்த முடிகிறது. புதிய முயற்சிகளில் தொடர்ந்து கவனம் செலுத்துவேன்” என்று உற்சாகமாகப் பேசி முடித்தார் நவீன் பண்டாரி,

ஒரு தொழிலைத் தொடங்கி, வெற்றிகரமாக நடத்தி, விற்கும் கலையைக் கற்ற ‘சீரியல்’ தொழில்முனைவோரான இந்த நவீன் பண்டாரி வித்தியாசமானவர்தான்!