Published:Updated:

புதிய மாற்றத்துக்குத் தயாரான டி.வி.எஸ் நிறுவனத்தின் வாரிசுகள்!

டி.வி.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
டி.வி.எஸ்

மாற்றம்

புதிய மாற்றத்துக்குத் தயாரான டி.வி.எஸ் நிறுவனத்தின் வாரிசுகள்!

மாற்றம்

Published:Updated:
டி.வி.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
டி.வி.எஸ்

தி.இ.நரசிம்மன்

தமிழகத்தைச் சேர்ந்த 110 ஆண்டுக் கால பாரம்பர்யம் கொண்ட டி.வி.எஸ் குழுமத்தில் சமீபத்தில் சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுவாகவே, தொழில் குடும்பங்களுக்குள் காலப்போக்கில் சர்ச்சைகள், சண்டைகள் நடப்பதையும், அதனால் தொழில் நிறுவனங் களுக்குள் பல்வேறு சர்ச்சைகள் உண்டாகி பெரும் தொழில் சரிவையும் சந்திப்பதையும் தொடர்ச்சியாகப் பார்க்க முடிகிறது.

இதற்குக் காரணம், அடுத்தடுத்த தலைமுறை யினரிடையே போதிய புரிந்துகொள்ளல் இல்லாமல் போய்விடுகிறது. ஆனால், இது போன்ற எந்தவித சர்ச்சைகளுக்கும் சண்டை களுக்கும் இடம்கொடுக்க வேண்டாம் என்பதற்காக முன்கூட்டியே திட்டமிட்டு தேவையான நடவடிக்கைகளை டி.வி.எஸ் குழுமம் மேற்கொள்ளத் தயாராகியிருக்கிறது.

டி.வி.எஸ் குழும நிறுவனங்களின் பங்குகளை நிர்வகிக்கும் ஹோல்டிங் நிறுவனம் பெரிய அளவில் வைத்திருப்பதற்குப் பதிலாக, அந்தந்த நிறுவன நிர்வாகத்தில் ஈடுபட்டு உள்ளவர் களுக்கே அந்தந்த வணிகங்களின் உரிமையை முழுமையாக வழங்குவது என முடிவு செய்யப் பட்டுள்ளது. அதாவது, ஒரு நிறுவனத்துக்கும் இன்னொரு நிறுவனத்துக்கும் இடையில் எந்தவித பங்கு பரிமாறுதல்களும் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள டி.வி.எஸ் குழுமத்தின் குடும்பத்தினர் ஒன்றிணைந்து அனைவரின் சம்மதத்துடன் சுமுகமாக இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

புதிய மாற்றத்துக்குத் தயாரான
டி.வி.எஸ் நிறுவனத்தின் வாரிசுகள்!

கடந்த டிசம்பர் 2020-ல் டி.வி.எஸ் குழுமத்தின் மூத்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் டி.வி.எஸ் குழும நிர்வாகிகள் இணைந்து குழும நிறுவனங்களின் பங்கு உரிமையை அந்தந்த நிறுவனத்தின் நிர்வாகத்துடன் மட்டுமே முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர்.

இது தொடர்பாக, டி.வி.எஸ் குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர் இப்படிச் சொன்னார். ‘‘இதுவரை டி.வி.எஸ் குடும்பத்துக்குள் சுந்தரம் ஃபாசனர்ஸ் நிறுவனத்தின் தலைவர், ஹோல்டிங் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்தார். சண்டைகளும் மோதல்களும் இல்லை. ஆனால், இந்த மறுசீரமைப்பு முடிவானது அனைவரின் முழு சம்மதத்துடன் செயல்படுத்தப்பட்டுள்ளது. காரணம், நிறுவனங்களின் நிர்வாகம் மற்றும் உரிமை தொடர்பாக அடுத்த தலைமுறை குடும்ப உறுப்பினர்களிடையே எந்தவிதமான சர்ச்சைகளும் வராமல் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கியமான நோக்கம். இதன்மூலம் பாரம்பர்யமான டி.வி.எஸ் குடும்பத்தின் வணிகம் எந்தவித பாதிப்புக்கும் உள்ளாகாமல், தொடர்ந்து சிறப்பாகத் தலை முறை தலைமுறையாகத் தொடரும்’’ என்றார்.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் டி.வி.எஸ் குழுமத்தின்கீழ் உள்ள நிறுவனங்களின் உரிமை சார்ந்து மட்டுமே மாற்றங்கள் செய்யப் படுகிறதே தவிர, தொழில் நடவடிக்கைகள் எப்போதும் போலவே இருக்கும். நிறுவனத்தின் மீதான உரிமை கொண்டாடுதல் சார்ந்து மட்டுமே நெறிமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது.

நிறுவனங்களின் உரிமைகளில் செய்யப்படும் புதிய மாற்றங்கள் நிறுவனங்களின் நிர்வாகம் மற்றும் செயல்பாட்டை எந்த வகையிலும் பாதிக்காது. குறிப்பாக, எந்த பங்குதாரரையும் பாதிக்காது. இந்தப் புதிய கட்டமைப்பின்கீழ், நிறுவனங்கள் பிராண்டின் பயன்பாட்டுக்காக எந்தவித ராயல்டியும் டி.வி.எஸ் குடும்ப உறுப்பினர்களுக்கோ, ஹோல்டிங் நிறுவனங்களுக்கோ செலுத்த வேண்டியதில்லை’’ என்று அவர் சுட்டிக்காட்டினார்.

டி.வி.எஸ் நிறுவனங்களின் உரிமையைப் பிரிப்பதற்கு முக்கியமான காரணம், நிறுவனங்கள் தங்கள் நிர்வாகத்தில் அதிக கவனத்தைச் செலுத்தவும், பங்குதாரர்களின் மதிப்பை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும்தான். இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை அந்தந்த நிறுவனங்களைச் சுதந்திரமாகச் செயல்பட வழிவகுக்கும்.

டி.வி.எஸ் குழுமத்தின்கீழ் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் மொத்தமாக 50,000 பணியாளர்கள் உள்ளனர். கடந்த பல தசாப்தங்களாக டி.வி.எஸ் குழுமம் வாகனம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள், விநியோகச் சங்கிலி, நிதிச் சேவைகள், எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய பல்வேறு தொழில்களில் மிக ஆர்வமாகச் செயல்பட்டு நாட்டின் முன்னணி நிறுவனக் குழுமமாக வளர்ந்துவந்துள்ளது.

தற்போது டி.வி.எஸ் ஹோல்டிங் நிறுவனங்களின் பங்கு தாரர்களாக இருப்பவர்கள், இக்குழுமத்தை 1911-ல் தொடங்கிய டி.வி.சுந்தரம் ஐயங்காரின் மூன்றாவது மற்றும் நான்காவது தலைமுறைகள் ஆவர்.

சந்தைகள் வரையறுக்கப்பட்ட விதத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கையினால் நிறுவனங்களுக்குள் எந்தவொரு போட்டிக் கவலையையும் ஏற்படுத்தாது என்று குடும்பத்தைச் சேர்ந்த மூத்த குடும்ப உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையில் டி.வி.எஸ் மோட்டார், சுந்தரம் கிளேட்டன், சுந்தரம் ஃபாசனர்ஸ், டி.வி.எஸ் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் டி.வி.எஸ் சக்ரா உள்ளிட்ட ஒன்பது பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் உட்பட அனைத்துக் குழும நிறுவனங்களையும் அவை நிர்வகிக்கும் வணிகங்களின் முழு உரிமையையும் அந்தந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும். இதன்மூலம் ஹோல்டிங் நிறுவனம் அகற்றப்படும்.

இந்த முடிவுக்கு அனைவரும் ஒப்புதல் அளித்த நிலையில், இதற்கான செயல்முறை ஏற்கெனவே தொடங்கப்பட்டு உள்ளது. சமீபத்தில், வாகனங்களுக்கான உதிரிபாகங்களைத் தயாரிக்கும் சுந்தரம் ஃபாசனர்ஸ் இயக்குநர்கள் குழு, போட்டியற்ற ஒப்பந்தத்தைக் கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளது. இந்த நிறுவனத்தில் டி.வி.எஸ் ஹோல்டிங் நிறுவனங்கள் 49.53% பங்குகளை வைத்துள்ளன.

கார்கள் மற்றும் வணிக வாக னங்களுக்கான சக்கரங்களை டி.வி.எஸ் குழும நிறுவனமான வீல்ஸ் இந்தியா, அதன் பங்கு களில் டி.வி.எஸ்.எஸ் நிறுவனத் திடம் இருந்த பங்குகள் மறு சீரமைப்பு ஒப்பந்தத்தின்படி திருச்சூர் சுந்தரம் சந்தானம் & ஃபேமிலிக்கு மாற்றப்பட்டுள்ள தாக பங்குச் சந்தையிடம் தகவல் அளித்துள்ளது.

டி.வி.எஸ் சுந்தரம் மோட் டார்ஸ் சென்னையில் 214,000 சதுர அடி 89 கிரவுண்ட் சொத்தை விற்க முடிவு செய்துள்ளது. ரூ.600 கோடிக்கு இதை விற்பனை செய்ய பிரிகேட் குழுமத்துடன் இறுதிக்கட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு உள்ளது.

தொலைநோக்குப் பார்வை யுடன் மாற்றங்களை முன்னெடுக் கும் டி.வி.எஸ் குழுமம் தொடர்ந்து இந்திய தொழில் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். இதன் மூலம் இந்தக் குழும நிறுவனங்கள் மிகப் பெரிய வளர்ச்சியைக் காணும். இந்த மாற்றம் குடும்பத் தொழில் நிறுவனங்கள் இடையே ஒரு மிகச் சிறந்த முன்மாதிரியாக இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism