பில் கேட்ஸ் என்றாலே பெரும் பணக்காரர்; மிகப் பெரும் கொடையாளி என்கிற எண்ணம்தான் எல்லோரும் நினைவுக்கு வரும். ஆனால், கடந்த சில வாரங்களாக வரும் செய்திகள், பில் கேட்ஸின் இன்னொரு பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதுடன், அவரது இமேஜை சுக்குநூறாக உடைக்கிற மாதிரி உள்ளன.
கடந்த மே 3-ம் தேதி பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியானது. திருமணம் நடந்து 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விவாகரத்து அறிவிக்கப்பட்டது. அதே சமயம், இந்த விவாகாரத்தால் அறக்கட்டளை செயல்பாடுகள் எதுவும் பாதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

27 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தவர்கள் திடீரென பிரிய என்ன காரணம் என்பதற்கு பலரும் பல காரணங்களைச் சொன்னார்கள். வெல்த் டாக்ஸைக் குறைப்பதற்காக இருவரும் விவாகரத்து செய்திருக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளியாயின. சுமார் 125 பில்லியன் டாலர் அளவுக்கு சொத்துகள், பங்குகள், ரியல் எஸ்டேட்கள் பில்கேட்ஸுக்கு இருக்கின்றன. இந்தச் சொத்துகளைக் குறைந்த வரியில் பிரித்துக்கொள்வதற்காக விவாகாரத்து செய்யப்படுகிறது என்றும் அமெரிக்காவில் உள்ள பெரும் பணக்காரர்கள் விரைவில் இதுபோன்ற விவாகாரத்துகளில் ஈடுபடக்கூடும் என்றும் சொல்லப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS2019-லேயே விவாகரத்து?
ஆனால், இப்போது வேறு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. 2019-ம் ஆண்டே மெலிண்டா கேட்ஸ் விவாகரத்துக்காகத் திட்டமிட்டதே அந்தக் காரணம். அவர் ஏன் அப்படித் திட்டமிட்டார்?
2000-ம் ஆண்டு மைக்ரோசாஃப்ட்டில் பணிபுரிந்த ஒரு பெண்ணுடன் பில்கேட்ஸ் நெருக்கமாக இருந்ததாகவும், 2019-ம் ஆண்டு இந்த நெருக்கத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல பில்கேட்ஸ் திட்டமிட்டதாகவும், இதைத் தொடர்ந்து மெலிண்டா விவாகரத்துக்குத் தயாரானதாகவும் மைக்ரோசாப்ட் இயக்குநர் குழுவுக்கு கடிதம் கிடைத்திருக்கிறது.
இந்தப் புகார் தொடர்பாக மைக்ரோசாஃப்ட் இயக்குநர் குழு பிரத்யேக சட்ட நிறுவனத்தை அழைத்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த விசாரணைக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கியிருக்கிறது. ஆனால், இந்த விசாரணையின் முழுமையான முடிவு கிடைப்பதற்கு முன்பே மைக்ரோசாஃப்ட் இயக்குநர் குழுவில் இருந்து பில்கேட்ஸ் வெளியேறிவிட்டார்.

இயக்குநர் குழுவிலிருந்து வெளியேக் காரணம்?
பில்கேட்ஸ் மீது இப்படியொரு குற்றச்சாட்டு வந்த பிறகு, அவர் இயக்குநர் குழுவில் தொடர்ந்து இருப்பது சரியாக இருக்காது என சில இயக்குநர்கள் சொன்னதால்தான் பில் கேட்ஸ் இயக்குநர் குழுவைவிட்டு வெளியேறியதாகச் சொல்லப்படுகிறது.
ஆனால், பில்கேட்ஸின் தகவல் தொடர்பு அதிகாரி இதை மறுத்திருக்கிறார். ``இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தொடர்பு அது. தவிர, அவர்கள் சுமுகமாகப் பிரிந்துவிட்டனர். பில்கேட்ஸ் இயக்குநர் குழுவில் இருந்து வெளியேறுவதற்கும், இந்தப் பிரச்னைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சமூக சேவைகள் கூடுதல் கவனம் செலுத்துவதற்காகவே தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகினார். அதில் அதிக கவனம் செலுத்துவதற்காகத்தான் இயக்குநர் குழுவில் இருந்தும் விலகினார். அதே நாளில்தான் வாரன் பஃபெட்டின் நிறுவனமான பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருந்தும் ராஜினாமா செய்தார்’’ என்று சொல்லியிருக்கிறார்.
இதில் மறைமுகமாக ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம், பில்கேட்ஸுக்கும் சம்பந்தப்பட்ட அந்தப் பெண்ணுக்கும் இடையேயான உறவுதான்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பாலியியல் குற்றவாளியுடன் தொடர்பு
பில்கேட்ஸ் மனைவி கூறியிருக்கும் மற்றொரு குற்றச்சாட்டு பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரே எப்ஸ்டீன் (jeffrey Epstein) உடனான நட்பு. இவர், 2019-ம் ஆண்டு சிறையில் இருக்கும்போதே தற்கொலை செய்துகொண்டவர். இவருடன் பில்கேட்ஸ் நட்பாக இருந்ததுடன், அடிக்கடி சந்திக்கவும் செய்திருக்கிறார்கள் என மெலிண்டா கருதினார். தங்கள் திருமண உறவில் இருந்து வெளியே வருமாறு ஆலோசனை கூறியவரே ஜெஃப்ரே எப்ஸ்டீன்தான் என்கிற கருத்தையும் பலர் சொல்கிறார்கள்.
ஆனால், இந்தக் கருத்தையும் பில்கேட்ஸின் தகவல் தொடர்பு அதிகாரி மறுத்திருக்கிறார். ``சமூக சேவைக்காக மட்டுமே ஜெஃப்ரே எப்ஸ்ச்டனைச் சந்தித்தார். பின்னாள்களில் அவரைச் சந்தித்தற்காக பில் கேட்ஸ் வருத்தப்பட்டார். இதில் உண்மை இல்லை. இதுபோல தவறான தகவல் பரப்படுவது துரதிர்ஷ்டவசமானது’’ என்று சொல்லியிருக்கிறார்.

இந்தியாவுக்கு எதிரான கருத்து!
கோவிட்-19 தொற்று நோய்க்கான தடுப்பூசியைத் தயாரிக்கும் காப்புரிமையை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது என்று சொன்னார் பில் கேட்ஸ். அவரது இந்தக் கருத்தும் மிகப் பெரிய அளவில் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. அறக்கட்டளை மூலம் அவர் லாபம் சம்பாதிப்பதையும், தடுப்பூசி மருந்தை இந்தியா போன்ற நாடுகளுக்குத் தராமல் அமெரிக்கா தான் மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்யப்போகிறது எனப் பலரும் பில் கேட்ஸ் மீது கரித்துக் கொட்டியிருக்கிறார்கள்.
ஆக, விவாகரத்து, பாலியல் குற்றவாளியுடன் தொடர்பு, இந்தியாவுக்கு எதிரான கருத்து என அடுத்தடுத்து பல சிக்கல்கள் பில்கேட்ஸை சூழ்ந்த வண்ணம் உள்ளன. என்றாலும், இந்த நடவடிக்கைகளால் மைக்ரோசாஃப்ட் பங்குகளில் எந்த விதமான தாக்கமும் இல்லை. ஆனால், ஆனால், பில்கேட்ஸ் என்னும் நாயக பிம்பத்தை இந்த செய்திகள் கடுமையாகப் பாதித்திருக்கின்றன.