
தொழில் வாய்ப்புகள் - ஒரு பார்வை
முக்கியமான ஃப்ரான்சைஸ் தொழில்களில் சர்வீஸ் ஃப்ரான்சைஸும் ஒன்று. ஃப்ரான்சைஸ் வாங்க முடிவு செய்யும் எல்லோருமே சர்வீஸ் ஃப்ரான்சைஸைத் தேர்வு செய்வதா அல்லது ரீடெயில் ஃப்ரான்சைஸைத் தேர்வு செய்வதா என்று குழம்புவது வழக்கம்.
இவை இரண்டும் இரு துருவங்களில் இருப்பவை; இரண்டுக்கும் தேவைப்படும் வளங்கள் வேறுபட்டவை. இந்த இடத்தில் நீங்கள் எடுக்கும் முடிவு, ஒரு ஃப்ரான்சைஸ் ஆபரேட்டராக உங்களுக்கு எவ்வளவு வலிமை இருக்கும் என்பதைத் தீர்மானிக்கும்.

சர்வீஸ் ஃப்ரான்சைஸுக்கு இருக்கும் வாடிக்கையாளர்கள் இரண்டு வகை. ஒன்று, ஒரு வேலையைச் செய்யத் தெரிந்தாலும் அதைச் செய்வதற்கான நேரமோ, உத்வேகமோ இல்லாதவர்கள். இரண்டாவது, ஒரு வேலையைச் செய்வதற்கான அறிவோ, ஆற்றலோ, அனுபவமோ, ஒழுக்கமோ இல்லாதவர்கள். தங்கள் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்பதற்காக, வீட்டில் வேலை செய்ய ஆட்களைப் பணி அமர்த்துவதும்கூட சர்வீஸ் துறையின் அவசியத்தையே உணர்த்துகிறது.
`சர்வீஸ் துறைக்கு வீழ்ச்சியே இருக்காது’ என்ற ஒரு கருத்து பரவலாக இருக்கிறது. ஆனால் உண்மையில், சர்வீஸ் துறையிலும் நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக, ஒரு ஹேர் சலூனை எடுத்துக்கொள்வோம். நம் எல்லோருக்குமே முடி வெட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால், கையில் காசில்லாதபோது முடி வெட்டுவதைவிட, சாப்பாட்டுக்கும் ஆபீஸ் பயணத்துக்கும்தானே அதைச் செலவு செய்வோம்..! அதற்காக சர்வீஸ் துறை பணம் படைத்தவர்களுக்கு மட்டுமானது என்று குறுக்கிவிட முடியாது!
இன்றைக்கு இருக்கும் சர்வீஸ் ஃப்ரான்சைஸ் வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். எலெக்ட்ரீஷியன், பிளம்பர், டே கேர், டியூஷன், கல்வி, பிசினஸ் கோச்சிங், வீட்டைச் சுத்தம் செய்வது, கம்ப்யூட்டர் தொடர்பான சேவைகள், இன்டீரியர் டிசைனிங்... இவை எல்லாம்தான் அடிப்படையான உதாரணங்கள்.

ஆட்டோமொபைல்: ரிப்பேர், ஆயில் மாற்றுதல், கார் வாஷ், பெயின்ட் மற்றும் பாடி ட்ரான்ஸ்மிஷன்.
பிசினஸ்: வரிச் சேவைகள், அக்கவுன்ட்டிங்/ புக் கீப்பிங், பயிற்சியளித்தல், ஸ்டாஃபிங், தூய்மைப் பணி, அச்சடித்தல், செக்யூரிட்டி.
குழந்தைகளுக்கு: கலை, ஆரோக்கியம், விளையாட்டு, டியூஷன், டே கேர், ப்ரீ ஸ்கூல்.
வாடிக்கையாளர்களுக்கு: முடி திருத்தம், பயணம், புகைப்படம் எடுப்பது, ஸ்போர்ட்ஸ், பயிற்சி, மசாஜ்.

வீட்டில்: பெயின்ட் அடிப்பது, செக்யூரிட்டி, ரியல் எஸ்டேட்.
பெட்ஸ்: அழகுபடுத்துவது, பயிற்சியளிப்பது, பெட் ஸ்டோர்ஸ்.
மூத்த குடிமக்களுக்கு: ஹோம் கேர், மருத்துவச் சேவைகள், எஸ்டேட் திட்டமிடல், பிசியோதெரபிஸ்ட்.
டெக்னிக்கல்: கணினி மற்றும் பிற சாதனங்கள் சர்வீஸ் மற்றும் ரிப்பேர், வெப் டிசைனிங், தொலை தொடர்பு.
இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, ஒரு சர்வீஸ் ஃப்ரான்சைஸ் ஓர் எளிய தொடக்கத்தை உடைய, பெரிய பொருட் செலவில்லாமல் தொடங்கக்கூடிய ஒரு ஸ்டார்ட்அப்பாக மாறும் என்பது தெரியலாம். சர்வீஸ் ஃப்ரான்சைஸ்கள் பெரும்பாலும் பயணித்துக்கொண்டே இருக்கும் ஒரு வேலையாகவே இருக்கும். பிற ஃப்ரான்சைஸ் மாடல்போலவே இதற்கும் நன்மைகளும் சிக்கல்களும் உண்டு.
சர்வீஸ் ஃப்ரான்சைஸ் நன்மைகள்
ரீடெயில் ஃப்ரான்சைஸுடன் ஒப்பிடும் போது, சர்வீஸ் ஃப்ரான்சைஸ் தொடங்குவதற்குக் குறைந்த அளவே செலவாகும். சர்வீஸ் ஃப்ரான்சைஸுக்கு ஆகும் செலவைவிட, ஐந்து மடங்கு அதிக செலவு ஒரு ரீடெயில் ஃப்ரான்சைஸைத் தொடங்குவதற்கு ஆகலாம். ஆனாலும், சர்வீஸ் ஃப்ரான்சைஸிலிருந்து கிடைக்கும் வருமானம் லாபகரமானதாகவே இருக்கும். எனவே, நீங்கள் பெரிய அளவு ரிஸ்க் எடுக்க வேண்டியிருக்காது.

சர்வீஸ் ஃப்ரான்சைஸ் துறையில் ஏகப்பட்ட பிரிவுகளும், வாய்ப்புகளும் இருக்கின்றன. நாம் முன்பே பார்த்ததுபோல அனைத்து பிசினஸ்களுக்கும் ஓர் ஆரோக்கியமான தேவை இருந்துகொண்டேதான் இருக்கிறது.
சர்வீஸ் ஃப்ரான்சைஸ்கள் ‘திறமை சார்ந்தவையாக’ இருக்கின்றன. எனவே, சுறுசுறுப்பாக வேலையிடம் தன்னை ஒப்படைத்துக்கொண்டு இயங்க நினைப்பவர் களுக்கு சர்வீஸ் ஃப்ரான்சைஸ் பெரும் வாய்ப்பாக இருக்கிறது.
ஏனென்றால், நிறைய சர்வீஸ் ஃப்ரான்சைஸ் களுக்கு தனியே இயங்க, ஃப்ரான்சைஸி ஆபரேஷன்களுக்கு என ஒரு குறிப்பிட்ட இடம் தேவைப்படுவதில்லை. வீட்டிலிருந்து வேலை செய்யும்போது, பணப் புழக்கத்தை அதிகரிப்பது எளிய காரியமாகவே இருக்கிறது. மேலும், சில ஊழியர்கள் மட்டுமே தேவைப்படுவார்கள் என்பதால், நீங்கள் நிறைய நேரம் செலவழித்து சரியான ஊழியரைத் தேர்வு செய்ய வேண்டும் என்றில்லை. கூடவே, ஒரு குறிப்பிட்ட இடத்தை அலுவலகமாக வைத்திருக்காததால், உங்கள் விருப்பத்துக்கு நிறைய இடங்களில் கூடுதல் பிரிவுகளை இணைக்கலாம்.
வேலை நேரமும் வசதியானதாகவே இருக்கும். ஏனென்றால், நீங்கள் குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டும்தான் வேலை செய்வீர்கள், எனவே, தொடர்ந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருக்காது. இது பலருக்கு உபயோகமாக இருக்கலாம். ஆனால், நீங்கள் எவ்வளவு உழைக்கிறீர்களோ, அவ்வளவுதான் சம்பாதிப்பீர்கள்.

சர்வீஸ் ஃப்ரான்சைஸ் சிக்கல்கள்
சர்வீஸ் ஃப்ரான்சைஸின் இயல்பு காரணமாக, ரீடெயில் ஃப்ரான்சைஸில் கிடைப்பது போன்ற வாடிக்கையாளர்களோ, டிரான்ஸாக்ஷனோ உங்களுக்குக் கிடைக்காது. இந்த ஒரு காரணம்தான் உங்கள் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கலாம். குறிப்பாக, நீங்கள் ஒற்றை நபராக இயங்குகிறீர்களென்றால், உங்களால் ஒரே நாளில் எல்லா வேலைகளையும் பார்த்துவிட முடியாது. மேலும், உங்களுக்கு உடல்நலம் சரியில்லையென்றால், வேலைகள் அப்படியே தேங்கிவிடும்.
மேலும், சர்வீஸ் ஃப்ரான்சைஸ்கள் நீங்கள் எத்தனை ஊழியர்களை வைத்திருக்கலாம் என்பதைக் கட்டுப்படுத்த முடியும். இதுதான் உங்கள் பகுதி என்று ஒன்றைச் சுருக்கிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஃப்ரான்சைஸியாக இருக்கும் போது, பல நேரங்களில் நீங்களே ஓனராகவும், நீங்களே வாடிக்கையாளராகவும் இயங்க நேரலாம்.
பகல் பொழுதில் வாடிக்கையாளருக்கு எதாவது வேலை செய்து கொடுத்துவிட்டு, இரவில் உட்கார்ந்து உங்கள் மார்க்கெட்டிங்கை, பிசினஸை பார்த்துக்கொண்டிருக்க நேரலாம்.மேலும், சில வேலைகளுக்குத் தொழில் சார்ந்த அறிவு அவசியமாகிறது. தொடர்ந்து சுற்றிக்கொண்டேயிருப்பதும், சான்றிதழ் பெறுவதும் அவசியமாகின்றன. நீங்கள் இதையெல்லாம் செய்துகொண்டிருக்கும் நேரத்தில் பல வாடிக்கையாளர்களிடம் பேசியிருக்கலாமே என்றும் நினைப்பீர்கள்.
வாடிக்கையாளர்களிடம் எப்படிப் பேசுவது என்றும் கற்றுக்கொள்வது அவசியம். ஒரு ஃபேக்டரிக்குச் சென்று ஒழுகும் குழாயைச் சரி செய்வதற்கும், ஒரு குடும்பத் தலைவிக்காக குழாயைச் சரிசெய்வதற்கும் இருக்கும் வித்தியாசம் உரையாடல்கள்தான். மேலும், சட்டரீதியான விஷயங்களைக் கையாள்வது தொடக்கத்தில் கொஞ்சம் சிரமமாக இருக்கலாம். இன்ஷூரன்ஸ், புதுப்புது வரி ஃபார்ம்கள் என நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கலாம்.
(ஜெயிப்போம்)