Published:Updated:

நீலகிரி தோடர் பழங்குடியினப் பெண்களின் கலைத்திறனைச் சொல்லும் பூத்துக்குளி!

பூத்துக்குளி
பிரீமியம் ஸ்டோரி
News
பூத்துக்குளி

ஜி.ஐ பிசினஸ்

தோடர், கோத்தர், இருளர், குறும்பர் பணியர், காட்டு நாயக்கர் ஆகிய ஆறு வகை பண்டைய பழங்குடியின மக்கள் நீலகிரி மலையில் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு பழங்குடியின மக்களும் தங்களுக்கே உரித்தான தனித்துவமிக்க உணவு, உடை, மொழி, வழிபாடு, நடனம், பாடல் போன்ற வற்றைப் பன்னெடுங்காலமாகப் பின்பற்றி வருகின்றனர்.

நீலகிரியில் வாழ்ந்துவரும் இந்தப் பழங்குடியின மக்களின் கைவண்ணத்தில் உருவாகும் கைவினைப் பொருள்களுக்கு உலக அரங்கில் நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. ஒவ்வொரு பழங்குடியும் குறிப்பிட்ட பொருள்களை உற்பத்தி செய்வதில் நிபுணத்துவமும் தனித்துவமும் பெற்றுள்னர்.

குறிப்பாக, தோடர் பழங்குடியினப் பெண்களின் கைவண்ணத்தில் உருவாகும் பூத்துக்குளி எனப்படும் தோடர் எம்பிராய் டரிக்கு 2013-ல் புவிசார் குறியீடு‌ அந்தஸ்து வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் புவிசார் குறியீடு பெற்ற ஒரே உற்பத்திப் பொருளாகத் தோடர் பழங்குடியினப் பெண்கள் தயாரிக்கும் பூத்துக்குளி மட்டுமே தற்போது வரை இருந்துவருகிறது.

நீலகிரி தோடர் பழங்குடியினப் பெண்களின் கலைத்திறனைச் சொல்லும் பூத்துக்குளி!

உலகின் தனித்துவமான எருமையினமான தோடர் எருமைகளை வளர்த்துவரும் இந்த மக்களை ஆதிகாலம் தொட்டே ஆயர் சமூகமாக அறியப்படுகிறார்கள். தோடர் வளர்ப்பு எருமைகளின் மூலம் கிடைக்கும் பால், மோர், தயிர், வெண்ணெய் போன்ற வையும் இவர்கள் வாழ்வாதாரத்தின் முதுகெலும்பாக இருந்து வருகிறது.

பொதுவாகவே, குளிர் நிறைந்த மலை உச்சிகளில் வாழ்விடங்களைக் கொண்டிருக்கும் தோடர் பழங்குடியின ஆண்களும் பெண்களும் நீண்ட போர்வை போன்ற மேலாடை ஒன்றை எப்போதும் போர்த்திக் கொள்ளும் பழக்கத்தை உடையவர்கள். பருத்தியால் நெய்யப்பட்ட நீண்ட போர்வையை வெறுமனே போர்த்தாமல் அதில் சிவப்பு மற்றும் கறுப்பு நூல்களைக் கொண்டு பூ வேலைப்பாடுகளைச் செய்து போர்த்தி வந்தனர். அதைப் பூத்துக்குளி என்று அழைக்கின்றனர்.

மலை, அருவி, மலர், சூரியன், சந்திரன், மரம் என இயற்கையை சித்திரப்பூ வேலைப் பாடுகளாகத் துணிகளில் கொண்டுவந்தனர். பிறப்பு முதல் இறப்பு வரை தோடர் பழங்குடியின மக்கள் வாழ்வின் ஒவ்வொரு சடங்கிலும் இந்தப் பூத்துக்குளி அணியாமல் ஆண்களும் பெண்களும் பங்கேற்கக் கூடாது எனும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. தோடர் பழங்குடி களின் பாரம்பர்ய அடையாளமாக விளங்கி வரும் இந்தப் பூத்துக்குளி, மற்ற தரப்பினரையும் வெகுவாகக் கவரத் தொடங்கின. அதுவரை தங்களின் தேவைக்காக மட்டுமே தயாரித்து வந்த பூத்துக்குளிகளை மெதுவாக விற்பனை செய்ய ஆரம்பித்தனர். இன்றைக்கு இந்த மக்களின் வாழ்வாதாரத்தைத் தாங்கிப் பிடிக்கும் தூணாகவே இந்தக் கலை மாறியிருக்கிறது.

விற்பனை தொடங்கப்பட்ட ஆரம்பக் காலங்களில் பெரிய அளவிலான போர்வை களுக்கு மட்டுமே பூ வேலைப்பாடுகள் செய்து வந்தனர். தற்போது செல்போன் கவர் முதல் ஃபேஸ் மாஸ்க் வரை 35-க்கும் அதிக வகையிலான பொருள்களை உற்பத்தி செய்து அசத்தி சந்தைப்படுத்தி வருகின்றனர்.

வரலாற்று பாரம்பர்யம் மிக்க பூத்துக்குளி விற்பனையின் இன்றைய நிலையை அறிய தோடர் மந்து எனும் கிராமங்களுக்கு பயணித்தோம். 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பூத்துக்குளியில் அசத்திவரும் ஊட்டி கார்டன் மந்தைச் சேர்ந்த தோடர் பழங்குடியினப் பெண் சாய் லக்ஷ்மியைச் சந்தித்துப் பேசினோம்.

நீலகிரி தோடர் பழங்குடியினப் பெண்களின் கலைத்திறனைச் சொல்லும் பூத்துக்குளி!

‘‘இந்த எம்பிராய்டரி கலையை இயற்கை எங்களுக்கு கொடுத்த பெரிய கொடையாகவே நினைக்கிறோம். தோடராய் பிறந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் கட்டாயம் எங்களின் எம்ப்ராய்டரி தெரிந்திருக்கும். யாரும் சொல்லித் தர தேவையில்லை. வீட்டில் இருப்பவர்களைப் பார்த்து தானாகவே கற்றுக்கொள்வார்கள். யார் தயவையும் எதிர்பார்த்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

சாதாரணமாக ஏதாவது ஒரு தோடர் மந்துக்குச் சென்றால் எம்ப்ராய்டரி போட்டுக்கொண்டிருக்கும் பல பெண்களைப் பார்க்க முடியும். பெரும்பாலான பெண்கள் இதையே முழு நேரத் தொழிலாகச் செய் கிறார்கள். மற்ற வேலைகளில் ஈடுபட்டிருக்கும் பெண்களும் ஓய்வு நேரத்தில் எம்பிராய்டரியும் கையுமாக இருப்பார்கள்.

பூத்துக்குளிக்குத் தேவையான காட்டன் மெட்டீரியலை கரூர் அல்லது ஈரோடு மாவட்டத்தில் இருந்து மொத்த விலைக்கு வாங்கி எங்களுக்குள் பிரித்துக் கொள்வோம். காட்டனில் எம்பிராய்டரி பின்னுவதற்கான தரமான உல்லன் நூல்கள் ஊட்டி மார்க்கெட்டில் கிடைக்கின்றன. கறுப்பு மற்றும் சிவப்பு இந்த இரண்டு வண்ணத்தை மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்து கிறோம். இந்த இரண்டு நிறங்கள் தான் ரொம்ப எடுப்பாக எடுத்துக் காட்டும் என்பதில்தான் இந்த நிறத்தைத் தேர்வு செய்கிறோம்.

எம்பிராய்டரிக்கு எவ்வளவு நேரம் ஒதுக்குகிறோமோ, அவ்வளவு வருமானம் கிடைக்கும். நல்ல விற்பனையாகும் காலங் களில் ஒருவரால் ஒரு மாதத்தில் 20,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடியும். பூத்துக்குளியில் மூழ்கியிருக்கும் போது கவலைகளை மறப்பது மட்டுமல்லாமல், சொந்தக் காலில் நிற்கும் உணர்வையும் இது கொடுக்கிறது” என்றார்.

சாய் லக்ஷ்மி, ஸ்பூப் நிலா, நோர்த்தே குட்டன்
சாய் லக்ஷ்மி, ஸ்பூப் நிலா, நோர்த்தே குட்டன்

தோடர் பெண்கள் அமைப்பு சார்பில் ஊட்டி அரசு தாவர வியல் பூங்காவில் எம்பாரய்டரி களை விற்பனை செய்து வரும் பூஃப் நிலாவிடம் பேசினோம். ‘‘எங்களின் தயாரிப்புகளில் மிகவும் விலை உயர்ந்ததாக இருப்பது பூத்துக்குளிதான். பாரம்பர்யமாக அணியும் போர்வையின் விலை 15,000 ரூபாய். இதில் எம்பிராய்டரி செய்து முடிக்க சரியாக மூன்று மாத காலம் தேவைப்படும். அதனால்தான் அந்த விலையில் விற்க வேண்டியிருக்கிறது.

தொடக்க விலை பொருளாகத் தற்போது மாஸ்க் இருக்கிறது. ஒரு மாஸ்க் ரூ.150-க்கு விற்பனை செய்கிறோம். மற்றபடி ஷால், துப்பட்டா, மேஜை விரிப்புகள், தோள் பை, கைப்பை, செல்போன் கவர் எனக் காலத்துக்கு ஏற்ப எங்களின் உற்பத்திப் பொருளையும் மேம்படுத்தி வருகிறோம்.

பெரும்பாலான மக்கள் விரும்பி இதை வாங்குவதால், நியாயா மான விலையிலேயே விற்பனை செய்கிறோம். ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் தோடர் கூட்டுறவு சங்கம் ஒன்று உள்ளது. அங்கு அனைத்து வகையான தோடர் எம்பாரய்டரி பொருள்களும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிலும் ஒரு குடிலில் இவற்றை விற்பனை செய்து வருகிறோம். மேலும், பல இடங்களில் ஷோரூம் அமைக்க அரசு உதவினால் பல தோடர் குடும்பங்கள் பயன் பெறும்” என்றார்.

தோடர் எம்பிராய்டரியை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வதற்கான வழிமுறைகளைப் பற்றி நம்மிடம் எடுத்துச் சொன்னார் நீலகிரி பண்டைய பழங்குடியினர் கூட்டமைப் பின் தலைவர் நோர்த்தே குட்டன்.

‘‘முன்பைக் காட்டிலும் கடந்த சில ஆண்டுகளாகத் தோடர் எம்பிராய்டரிகளை வாங்குவதில் மற்ற மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதே போல, அரசின் விழாக்களிலும் எங்களின் எம்பிராய்டரியைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், இது மட்டும் போதுமானதாக இல்லை. அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு விருந்தினர் இல்லங்களின் மேஜை விரிப்புகள், ஜன்னல் திரைகள், சுவர் அலங்காரங்கள் போன்றவற்றைப் பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, நாட்டின் பல இடங்களில் பல உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்வதற்கான அங்காடிகளை மத்திய மாநில அரசுகள் அதிகப்படுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய அரசு ஏற்பாடு செய்துகொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்” என்றார்.

மறக்க முடியாத ஊட்டியைப் போல, இந்தப் பூத்துக்குளி கலைப்படைப்புகளும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றன!

நீலகிரி தோடர் பழங்குடியினப் பெண்களின் கலைத்திறனைச் சொல்லும் பூத்துக்குளி!

போலிகளால் எங்களுக்கு பாதிப்பு..!

எம்ப்ராய்டரி விற்பனை செய்யும் தோடர் பழங்குடியினப் பெண் ஒரு முக்கியமான கோரிக்கையை நம்மிடம் வைத்தார்.

‘‘நேர்த்தியான இந்தக் கலையைப் போற்றும் வகையில் புவிசார் குறியீடு அந்தஸ்து வழங்கப்பட்டதில் எங்களுக்கு பெருமைதான். ஆனால், தோடர் அல்லாத சிலருக்கும் இந்தக் கலையை கற்றுக் கொடுத்து தோடர் பழங்குடிகளின் உற்பத்தி பொருள் என போலியாக விற்பனை செய்துவருகிறார்கள். அதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில், எங்களின் வாழ்வாதாரம் வருங்காலத்தில் மிகப் பெரிய அளவில் பாதிப்படையும்” என்றார். ‘‘எங்கள் தயாரிப்புகளில் மிகவும் விலை உயர்ந்ததாக இருப்பது பூத்துக்குளிதான். பாரம்பர்யமாக அணியும் போர்வையின் விலை ரூ.15,000. இதில் எம்பிராய்டரி செய்து முடிக்க சரியாக மூன்று மாத காலம் தேவைப்படும். அதனால்தான் அவ்வளவு விலை..!’’