Published:Updated:

அப்ரூவர் ஆன சகோதரி, பறிமுதலாகும் ₹579 கோடி சொத்துகள்... நிரவ் மோடி வழக்கில் என்ன நடக்கிறது?

நிரவ் மோடி
நிரவ் மோடி

இந்தியாவில் நடைபெறும் நிரவ் மோடி வழக்கில் முக்கிய திருப்பமாக அவரின் உடன் பிறந்த சகோதரி பூர்வி மோடி அரசு தரப்பு அப்ரூவராக மாறியுள்ளார்.

இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில், வங்கி செயல்பாட்டில் உள்ள ஓட்டைகளை வைத்து (Operational Risk Fraud) 13,570 கோடி ரூபாயை வைர வியாபாரி நிரவ் மோடி மோசடி செய்தார். இப்போது இங்கிலாந்திலுள்ள வாண்ட்ஸவொர்த் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கு இந்திய அரசின் அமலாக்கத்துறை பல கட்ட முயற்சிகள் எடுத்துவருகிறது.

நிரவ் மோடி
நிரவ் மோடி

நிரவ் மோடியின் வழக்கு வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அவருடைய சொத்துகளை விற்று ஏமாற்றிய பணத்தை மீட்பதற்கு அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அவருக்கு எதிராக அமலாக்க துறை மற்றும் சிபிஐ சார்பாக இரண்டு வெவ்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அமலாக்க துறை தாக்கல் செய்துள்ள வழக்கு பண மோசடி குறித்து போடப்பட்டுள்ளது.

சிபிஐ தாக்கல் செய்த வழக்கு நிரவ் மோடி இந்த வழக்கில் சாட்சிகளைக் கலைக்க முயன்றதற்கும், மேலும் அவர்களை கொலை செய்யும் அளவுக்கு நிரவ் மோடி முயற்சி செய்தது குறித்தும் போடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு காரணமாக நிரவ் மோடி மார்ச் 2019 முதல் இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையிலிருந்து வெளியில் வருவதற்கு பலமுறை நிரவ் மோடி ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். தன்னை விடுதலை செய்வதற்கு என்ன விதமான கட்டுப்பாடுகளை விதித்தாலும் தான் ஏற்றுக் கொள்வதாகவும், எவ்வளவு பிணைத் தொகை வேண்டுமானாலும் தனது ஜாமீனுக்கு செலுத்துவதாகும் தெரிவித்திருந்தார். ஆனால், இந்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதன் காரணமாகப் பல முறை முயன்றும் நிரவ் மோடியின் ஜாமீன் மனு பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டது.

Court (Representational Image)
Court (Representational Image)

அவருடைய வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

அந்த வழக்கின் விசாரணை 2021 ஜனவரி 7 மற்றும் 8 அன்று வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. கொரோனா நோய்த் தொற்று காரணமாக நேரில் ஆஜராகாமல் வீடியோ கான்ஃபரன்சிங் வசதி மூலம் நிரவ் மோடி இந்த வழக்கில் ஆஜரானார்.

இந்த வழக்கில் இறுதிக்கட்ட வாதம் அனல் பறக்கக் கூடியதாக அமைந்தது. நிரவ் மோடி சார்பாக வாதிட்ட அவரது வழக்கறிஞர் Claire Montemery, ``இந்த வழக்கில் நிரவ் மோடி குற்றம் இழைத்துள்ளார் என்பதை நிரூபிப்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை. மேலும், இந்திய நீதிமன்றத்தில் சரியான நியாயம் அவருக்கு கிடைக்காது. மேலும் தனது கட்சிக்காரர் நிரவ் மோடி கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மனநல மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. இது அவருக்கு இந்தியாவில் சிறப்பாகக் கிடைக்க வாய்ப்பில்லை. மேலும், இந்த மன அழுத்தம் காரணமாக நிரவ் மோடி தற்கொலை செய்து கொள்வதற்குக் கூட வாய்ப்பிருக்கிறது. அதனால் இங்கிலாந்து நீதிமன்றம் அவரை நாடு கடத்துவதற்கு ஆணையிடக் கூடாது" என்று வாதிட்டார்.

பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி

இதற்கு இந்திய அரசு சார்பாக வழக்கை நடத்தும் Crown Prosecution Service நிறுவனத்தின் சார்பாக ஆஜரான ஹெலன் மால்கம் வன்மையாக எதிர்ப்பு தெரிவித்தார். ``ஏற்கெனவே நிரவ் மோடி செய்த குற்றங்களுக்கு போதிய ஆதாரங்களை இந்த வழக்கில் தாக்கல் செய்திருக்கிறோம். வங்கி ஸ்டேட்மென்ட், சொத்து ஆதாரங்கள் மற்றும் பலவிதமான ஆதாரங்களை ஏற்கெனவே அளித்துள்ளோம். இது நிரவ் மோடி குற்றமிழைத்ததை உறுதி செய்கிறது. இந்தக் குற்றங்கள் இங்கிலாந்து நாட்டு சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றங்களாகும். மேலும், இந்தியாவில் அவருக்குத் தேவையான மன நல பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்திய அரசு நிச்சயம் மேற்கொள்ளும். மேலும், நிரவ்மோடி இந்த வழக்கில் அடிப்படை ஆதாரங்களை அழிப்பதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இந்த வழக்குக்கான ஆவணங்கள் அடங்கிய சர்வர் மற்றும் கைபேசிகளை அளிக்க முயற்சி செய்துள்ளார். இந்த வழக்கின் சாட்சிகளைக் கொலை செய்வதற்குக்கூட முயற்சி செய்துள்ளார். இவை அனைத்தும் நிரவ் மோடிதான் குற்றம் இழைத்துள்ளார் என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் ஆகும். அதனால் இங்கிலாந்து அரசு குற்றம் இழைத்த நிரவ் மோடி நாடு கடத்தப்படுவதற்கு ஆணையிட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியாவில் அடைக்கப்பட இருக்கிற சிறைச்சாலை மற்றும் புகைப்பட விவரங்களை இந்த வழக்கில் இந்திய அரசு ஏற்கெனவே இங்கிலாந்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சாமுவேல் கூஸி (Samuel Goozee) இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு பிப்ரவரி 25 அன்று வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்தத் தீர்ப்பில் நிரவ் மோடிக்கு எதிராகத் தீர்ப்பு வந்தால் நிரவ் மோடி நாடு கடத்தப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்திய அரசின் உறுதியான நடவடிக்கை காரணமாக இந்த வழக்கு இந்த அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

மேலும் இந்தியாவில் நடைபெறும் நிரவ் மோடி வழக்கில் முக்கிய திருப்பமாக அவரின் உடன் பிறந்த சகோதரி பூர்வி மோடி அரசு தரப்பு அப்ரூவராக மாறியுள்ளார்.

பூர்வி பெல்ஜிய நாட்டு குடியுரிமை பெற்றவர் ஆவார். அவருடைய கணவர் மயங்க் மேத்தா. அவர்கள் இருவரும் மும்பையில் உள்ள அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி அப்ரூவராகத் தாங்கள் இருவரும் ஆவதாகத் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் நேரடியாகத் தங்களுக்கு தொடர்பில்லை என்றும் இந்த வழக்கிலிருந்து CRPC செக்ஷன் 306 மற்றும் 307 கீழ் தங்களுக்கு பொது மன்னிப்பு வழங்கிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஷியாம் ராம்பாபு
ஷியாம் ராம்பாபு

நிரவ் மோடி விட்டுச் சென்ற தமது வசமிருக்கும் 579 கோடி மதிப்புள்ள சொத்துகளைப் பறிமுதல் செய்து கொள்வதற்கு அமலாக்க துறைக்கு தம்மால் இயன்ற உதவிகளைச் செய்வதாகவும் தெரிவித்துள்ளனர். அவர்கள் பறிமுதல் செய்ய உதவி செய்வதாகக் கூறிய சொத்துகளின் விவரம் பின்வருமாறு:

1. மும்பையில் உள்ள சொகுசு பங்களா - இதன் மதிப்பு 19.5 கோடி.

2. நியூயார்க் நகரில் பிரசித்திபெற்ற சென்ட்ரல் பார்க் அருகில் அமைந்துள்ள ஃபிளாட் - இதன் மதிப்பு 36.5 கோடி.

3. நியூயார்க் நகரில் உள்ள மற்றொரு சொத்து - இதன் சந்தை மதிப்பு 183 கோடி.

4. லண்டனில் ஒரு ஃபிளாட் - இதன் மதிப்பு 62 கோடி.

5. ஸ்விஸ் வங்கியில் உள்ள இரண்டு கணக்குகளில் முறையே 168 கோடி மற்றும் 108 கோடி.

6. மும்பையில் உள்ள வங்கிக் கணக்கில் இரண்டு கோடி.

இவ்வாறாக மொத்தம் 579 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் மற்றும் பணத்தைப் பறிமுதல் செய்வதற்கு தாங்கள் உதவுவதாகத் தெரிவித்துள்ளனர். இது இந்த வழக்கின் முக்கிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.

இதுவரை அமலாக்கத்துறை 1,400 கோடி மதிப்புள்ள நிரவ் மோடி சொத்துகளைப் பறிமுதல் செய்துள்ளது. இப்போது அவரது சகோதரியின் 579 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட இருக்கின்றன. இதன் மூலம் 2,000 கோடி ரூபாய் அளவுக்கு நிரவ் மோடியின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நிரவ் மோடியின் வழக்கு இந்திய வங்கிகளின் செயல்பாடுகளில் உள்ள ஓட்டைகளை வைத்து நடைபெற்றதால் ஒட்டுமொத்த இந்திய வங்கித் துறைக்கு களங்கம் ஏற்படுத்துவதாக அமைந்தது.

நிரவ் மோடி மோசடிக்கு எதிராக போராட்டம்
நிரவ் மோடி மோசடிக்கு எதிராக போராட்டம்
Vikatan

இந்த ஊழலின் காரணமாக இந்தியப் பொதுத்துறை வங்கிகள் பங்குச் சந்தையில் பெரும் சரிவை சந்தித்தன. அனைத்து முன்னணி பொதுத்துறை வங்கிகளும் பங்குச் சந்தையில் தற்போதைய நிலவரப்படி 80% வரை விலை வீழ்ச்சி கண்டுள்ளன.

இந்த ஊழலுக்கு முன்பு 200 ரூபாய் என்று வர்த்தகம் ஆன பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஒரு பங்கின் விலை, இப்போது 35 ரூபாய் என்ற அளவுக்கு சரிந்துள்ளது.

இந்திய அரசுக்கும் இது ஒரு கௌரவப் பிரச்னையாக உள்ளது. நிரவ் மோடியை இங்கிலாந்திலிருந்து நாடு கடத்தி இந்தியாவுக்குக் கொண்டு வந்து தண்டனை வாங்கிக் கொடுப்பதே இதுபோன்று மக்களை ஏமாற்ற நினைக்கும் நபர்களுக்கு பாடமாக அமையும். அந்தப் பணத்தைத் திரும்ப மீட்டெடுப்பது வங்கித்துறை வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு உதவும். இதை உணர்ந்து இந்திய அரசு இந்த வழக்கில் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு