`கார்ப்பரேட் வரி குறைப்பால், முதலீடுகள் பெருகும்!' - மக்களவையில் நிர்மலா சீதாராமன்
மற்ற நாடுகளிடமிருந்து முதலீடுகளை ஈர்க்க, வரி குறைப்பு அவசியம்.

``முதலீடுகளை ஈர்த்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவே, நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டது" என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம், அவசரச் சட்டம் மூலம், நிறுவனங்களுக்கான வரிவிகிதம், 30 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. அத்துடன் தயாரிப்பு துறையில் புதிய நிறுவனங்களுக்கு, வரி 15 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டது.
சாமானிய மக்களுக்கான பொருள்களின் வரியை அதிகரித்துவிட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியைக் குறைத்தது அந்த நேரத்தில் மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. பொருளாதார நிபுணர்களுக்கிடையே நிறைய மாற்றுக் கருத்துகளை அது உண்டாக்கியது.
இதுதொடர்பான வரிச் சட்டங்கள் திருத்த மசோதா அண்மையில் மக்களவையில் நிறைவேறியது. இந்த மசோதா தொடர்பான விவாதத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், `` வளரும் நாடுகள் மற்றும் அண்டை நாடுகள் பலவும் அன்னிய முதலீடுகளை ஈர்க்க, வரிவிகிதத்தைக் குறைத்துள்ளன. அதைப் பின்பற்றி, முதலீடுகளை ஈர்க்கவும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் நிறுவனங்களுக்கு வரி குறைக்கப்பட்டது.
அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் காரணமாக, அந்நிய நிறுவனங்கள், முதலீடுகளை வேறு நாடுகளுக்கு மாற்ற விரும்புகின்றன. அத்தகைய நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க, வரிக் குறைப்பு அவசியம் எனக் கருதி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது" என்றார்.