ஆண்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஒப்பந்தம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, ``இந்த ஒப்பந்தம் மோசடியானது. இந்த மோசடியைச் செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் விட மாட்டேம்’’ என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4.30 மணிக்கு பத்திரிகையாளர்களை திடீரென்று சந்தித்துப் பேசினார். அவர் எதைப் பற்றி பேசப் போகிறாரோ என பலரும் பரபரப்பாக எதிர்பார்த்திருந்த வேளையில், ஆண்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஒப்பந்தம் பற்றி விளக்கமாக பத்திரிகையாளர்களிடம் எடுத்துச் சொன்னார்.
இது தொடர்பாக பேசிய அவர், ``நாட்டின் சொத்தான தொலைத்தொடர்பு அலைவரிசையைத் தனியார் நிறுவனத்துக்கு சொற்ப தொகைக்குத் தர காங்கிரஸ் கட்சி முடிவெடுத்தது நாட்டு மக்களுக்கு செய்த மாபெரும் துரோகம்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அரசுக்குச் சொந்தமான சாட்டிலைட்களைப் பயன்படுத்த தனியாருக்கு காங்கிரஸ் கட்சி அனுமதித்தது மக்களை அவமதிக்கும் செயலாகும். ஆண்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஒப்பந்தத்தில் பல விதமான குளறுபடிகள் நடந்துள்ளன. இந்த ஒப்பந்தம் எந்த வகையிலும் சரியாக நடத்தப்படவில்லை.
இந்தத் திட்டத்துக்காக வெளிநாடுகளிலிருந்து ரூ.579 கோடி கொண்டுவரப்பட்டது. இந்தத் தொகையில் 85% இந்தத் திட்டத்தின் பல்வேறு செலவுகளுக்காக செலவு செய்யப்பட்டிருக்கிறது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇந்த ஒப்பந்தம் ரத்தானபோது, இதை எதிர்க்க அரசுத் தரப்பில் எந்த ஆர்பிட்ரேட்டரையும் காங்கிரஸ் கட்சி நியமிக்கவில்லை. இதன்மூலம் அரசுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டது காங்கிரஸ் கட்சி.
இந்த ஒப்பந்தம் குறித்து உச்ச நீதிமன்றம் மிகச் சரியாக தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது. இந்த சிறப்பான தீர்ப்பின் அடிப்படையில் இந்த மோசடி ஒப்பந்தத்தில் நடந்த குளறுபடிகளைப் பற்றி இனி தீர்க்கமாக விசாரிப்போம். இந்த மோசடியை நாங்கள் சும்மா விடமாட்டோம். இதை மக்களின் கவனத்துக்குக் கொண்டுவருவோம். இந்தத் தவறுக்கு காங்கிரஸ் கட்சி கட்டாயம் பதில் சொல்லி ஆகவேண்டும்’’ என்று பேசினார்.

காங்கிரஸின் பதில் என்ன?
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்தக் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் கட்சி என்ன பதில் சொல்லப் போகிறது என்பதுதான் மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் விஷயமாக இப்போது இருக்கிறது. உத்தரப் பிரதேசம் உள்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் களைகட்டி இருக்கும் இந்த வேளையில், காங்கிரஸ் கட்சி மீது நிதி அமைச்சர் சுமத்தி இருக்கும் இந்தக் குற்றச்சாட்டு அரசியல் களத்தை மேலும் பரபரப்பாக்கி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த சில நாள்களாகவே ஆளும் பா.ஜ.க அரசிலிருந்து சில எம்.எல்.ஏ.க்கள் விலகி, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்துகொண்டிருக்கின்றனர். இதனால் அந்த மாநிலத்தில் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்தப் பிரச்னையில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப நிதி அமைச்சரின் இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு என்றும் சிலர் சொல்கிறார்கள்.
தவிர, பஞ்சாபில் பிரதமர் மோடி உள்ளே நுழைய முடியாத அளவுக்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியது. இது அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கு ஒரு வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறது.

ஆண்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஒப்பந்தத்தை பற்றி மக்களின் கவனத்துக்குக் கொண்டு வருவதன்மூலம் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சிக்கு சில தர்மசங்கடத்தை உருவாக்கவும் நிதி அமைச்சர் இப்படி பேசியிருக்கலாம் என்கிறார்கள் சிலர்.
நிதி அமைச்சரின் இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் எந்தளவுக்கு சீரியஸாக எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்பதுதான் இப்போதைக்கு முக்கியமான விஷயமாக இருக்கிறது!