Published:Updated:

`வெங்காயம் பற்றி நிதியமைச்சரின் கருத்து' - கொந்தளிக்கும் நெட்டிசன்களின் ரியாக்ஷன்ஸ்!

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

`உங்களுக்கு வெங்காயம் பிடிக்குமா, பிடிக்காதா என்பதல்ல விஷயம், மக்களைப் பாதிக்கும் வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதே கேள்வி. அதைச் சரிசெய்வதற்கான நடவடிக்கையில் இறங்குங்கள்.' - ட்வீட்

கண்ணுக்குத் தெரியாமல் மண்ணுக்குள் வளரும் வெங்காயத்தின் விலை உயர்வு மத்திய அரசை நோக்கி கேள்விக் கணைகளை வீச வைக்கிறது. கடந்த சில மாதங்களாகவே வெங்காயம், பூண்டு ஆகியவற்றின் விலை ஏற்றத்திலேயே இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள்.

இந்தியர்களின் அன்றாட உணவில் வெங்காயம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. வெங்காய விளைச்சலில், குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, ராஜஸ்தான், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் முக்கியப் பங்குவகிக்கின்றன. அதிக விளைச்சலைத் தரக்கூடிய மகாராஷ்டிராவில் கனமழை காரணமாக வெங்காய விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டது.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
vikatan

வெங்காய உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்திலுள்ள தெற்காசியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையில் மிகப்பெரிய அளவிலான வர்த்தகர்கள் சிலர், முறைகேடான முறையில் வெங்காயத்தை வாங்கி, பதுக்குவதன்மூலம் செயற்கையான விலையேற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. பதுக்கல்களைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தபோதும் வெங்காய விலை கட்டுக்குள் இல்லாமல் செல்கிறது.

நேற்று, பாராளுமன்றத்தில் வெங்காய விலை உயர்வுப் பிரச்னை எதிரொலித்தது. அதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.பி சுப்ரியா சுலே, வெங்காய விலை உயர்வைக் கண்டித்து, விரிவாகப் பேசினார். "வெங்காயத்தின் உற்பத்தி குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. சிறு விவசாயிகள்தாம் வெங்காயத்தை விளைவிக்கிறார்கள். எனவே, அவர்களின் நலன் பாதுகாக்கப்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெங்காய விலை உயர்ந்துள்ளதால் வெங்காயத்தை வாங்க முடியாமல் அனைவரும் அவதிப்படுகிறார்கள்" என்று அவர் கூறினார். அதற்கு நிர்மலா சீதாராமன் பதிலளிக்க எத்தனிக்கும்போது மற்றொரு எம்.பி, "நீங்களும் வெங்காயம் சாப்பிடுவீர்கள்தானே, உங்களுக்கும் அதன் பாதிப்பு தெரியுமல்லவா, உங்களையும்கூட அது பாதிக்குமல்லவா?" என்று கேட்டார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

அதற்குப் பதிலளித்த நிர்மலா சீதாராமன், "நான் வெங்காயம், பூண்டு அதிகம் சாப்பிடுவதில்லை. எனவே, கவலைப்பட வேண்டாம். வெங்காயத்தை அதிகம் சேர்த்துக்கொள்ளாத குடும்பத்திலிருந்துதான் வந்திருக்கிறேன்" என்றார். தொடர்ந்து பேசுகையில், "வெங்காய விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. விலையேற்றும் இடைத்தரகர்களைக் கண்டறிந்து, நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. வெங்காயத்தைப் பாதுகாத்து வைக்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது குறித்தும் அரசாங்கம் கவனத்தில்கொள்கிறது" என்றார்.

மேலும், "2014-ல், வெங்காய விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைக் கண்காணிக்கும் அமைச்சர் குழுவில் ஒருவராக இருந்தேன். அப்போது, அளவுக்கு அதிகமாக வெங்காயம் உற்பத்தியானபோது அவற்றை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறோம். ஒரே நாளில் 5-7% ஏற்றுமதி ஆர்டர்களைப் பெற்று உபரி வெங்காயங்களை ஏற்றுமதி செய்திருக்கிறோம். அதேபோல, தற்போது வெங்காயம் தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள விலை உயர்வைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்றார்.

வெங்காய விலை உயர்வுக்குக் காரணம் என்ன? எப்போது விலை குறையும்?

வெங்காய விலை உயர்வு குறித்த கேள்விக்கு, தனது குடும்பத்தில் வெங்காயத்தை அதிகம் சேர்த்துக்கொள்வதில்லை என்று நிதி அமைச்சர் அளித்த பதிலை, சமூக வலைதளங்களில் கோபத்துடனும் கிண்டலுடன் விமர்சித்துவருகிறார்கள். இதற்கெனவே #SayItLikeNirmalaTai என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி பலரும் தங்களது விமர்சனங்களைப் பதிந்துவருகிறார்கள்.

நிர்மலா சீதாராமன் மட்டுமல்லாது மோடி அமைச்சரவையிலுள்ள ராம்தாஸ் அத்வாலே, எனக்கு இலவச பெட்ரோல் கிடைப்பதால் பெட்ரோல் விலை குறித்து கவலைப்படவில்லை என்றும், நிஷிகாந்த் துபே, ஜி.டி.பி வளர்ச்சி விகிதத்தைப் பார்ப்பது பயனற்றது என்றும், ஐன்ஸ்டீனுக்கு கணிதம் எவ்வகையிலும் பயன்படவில்லை என்று பியூஷ் கோயல் சொன்னதையும் தற்போது நிர்மலா சீதாராமனின் கருத்தோடு இணைத்து ஒருவர் கிண்டலடித்துள்ளார்.

``நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் தெரியவில்லை!’’ - சுப்பிரமணியன் சுவாமி

'நான் சப்பாத்தி சாப்பிடுவதில்லை, அதனால் கோதுமை விலை குறித்து எனக்குக் கவலையில்லை என்று யாராவது சொல்வார்களா?' என்றும், 'உங்களுக்கு வெங்காயம் பிடிக்குமா, பிடிக்காதா என்பதல்ல விஷயம், மக்களைப் பாதிக்கும் வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதே கேள்வி. அதைச் சரிசெய்வதற்கான நடவடிக்கையில் இறங்குங்கள்!' என்றும், 'நிர்மலா சீதாராமன் அந்தக் கேள்விக்கு நல்லவிதமாகப் பதில் தந்திருக்க முடியும். ஆனால், ஏன் எப்போதும் எரிச்சலுடனும் ஆணவத்துடனும் மட்டுமே பதில் தருகிறார்?' என்றும் பல்வேறுவிதமான விமர்சனங்களை சமூகவலைதளங்களில் முன்வைத்து வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு