Published:Updated:

`சம்பளம் எப்போ வரும்?' - பரிதவிக்கும் ஏர் இந்தியா ஊழியர்கள்!

ஒவ்வொரு மாதமும் மாதச்சம்பளம் வழங்கும் தேதி மாதத்தின் பாதி வரை நீண்டுகொண்டே செல்கிறது. முன்பாவது, மாதத்தொடக்கத்தில் சம்பளத் தேதி குறித்து ஒரு சுற்றறிக்கை அனுப்புவார்கள். ஆனால், தற்போது சம்பளத் தேதி குறித்து எவ்வித அறிவிப்பும் வருவதில்லை.

ஏர் இந்தியா
ஏர் இந்தியா

இந்தியாவின் முன்னணி விமானச்சேவை நிறுவனமான ஏர் இந்தியா, சுமார் 60,000 கோடி நஷ்டத்தில் இயங்கிவருகிறது. கடந்த 2018-19 நிதியாண்டில் மட்டும் இந்த நிறுவனத்தின் நஷ்டக்கணக்கில் ரூ.7,600 கோடி அதிகரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் 100% பங்குகளையும் தனியாருக்கு விற்கப்போவதாக மத்திய அரசு அறிவித்து பல காலமானபோதும், விலை கொடுத்து வாங்குவதற்கு எந்த நிறுவனங்களும் முன்வரவில்லை என்பதே எதார்த்தம்.

ஏர் இந்தியா
ஏர் இந்தியா

மத்திய அமைச்சர்கள் இதுகுறித்துப் பேசும்போதெல்லாம், இந்த நிறுவனத்தை வாங்குவதற்கு முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்றே கூறுகிறார்கள். ஆனால், உள்நாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமன்றி, வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இந்த நிறுவனத்தை வாங்குவதற்கு ஆர்வம்காட்டவில்லை. நஷ்டம் காரணமாக, இந்த நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 12,000 ஊழியர்களுக்கு, பல ஆண்டுகளாக சரியான தேதியில் சம்பளம் தரப்படுவதில்லை. சில மாதங்கள் சம்பளம் தராமலேயே நிறுத்திவைக்கப்பட்டதும் உண்டு. பலருக்கு சம்பளத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் பிடித்தமும் செய்திருக்கிறார்கள். ஊழியர்களுக்குச் சம்பள உயர்வும் பத்தாண்டுகளுக்கும் மேலாக அளிக்கப்படவில்லை.

`இப்போது விற்றால்தான் வாங்குவார்கள்; எதிர்காலத்தில் சிரமம்!' -ஏர் இந்தியா குறித்து ஹர்தீப் சிங்

ஒவ்வொரு மாதமும் மாதச்சம்பளம் வழங்கும் தேதி மாதத்தின் பாதி வரை நீண்டுகொண்டே செல்கிறது. முன்பாவது, மாதத்தொடக்கத்தில் சம்பளத்தேதி குறித்து ஒரு சுற்றறிக்கை அனுப்புவார்கள். ஆனால், தற்போது சம்பளத்தேதி குறித்து எவ்வித அறிவிப்பும் வருவதில்லை. பணியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளுக்கும்கூட இதுகுறித்து விவரங்கள் தெரியவில்லை என்பதால், பணியாளர்கள் தங்களது வங்கிக் கடன்களை உரிய முறையில் செலுத்த முடியாமல் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

ஏர் இந்தியா
ஏர் இந்தியா

ஏர் இந்தியா நிறுவனத்தை மொத்தமாகத் தனியாருக்குக் கொடுக்கப்போகிறார்களா, பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வு அளிப்பார்களா அல்லது பணியில் தொடர்வார்களா என்று எந்தக் கேள்விக்கும் பதில் தெரியாமல் அதன் ஊழியர்கள் தவிக்கிறார்கள். செய்தித்தாள்களைப் பார்த்துதான் அவர்களே தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஏர் இந்தியா நிர்வாகத்துக்கும் பணியாளர்களுக்குமான தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்ட சூழலில், வேறு விமான நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு அதிகமில்லாததால் அடுத்து என்ன நடக்குமோ என்ற மனக்குழப்பத்துடன் தொடர்கிறார்கள்.