Published:Updated:

கேஸ் சிலிண்டர் மற்றும் ரயில் டிக்கெட் கட்டணங்கள்... அமலுக்கு வந்த அதிரடி விலை உயர்வு!

கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் மானியமில்லாத கேஸ் சிலிண்டர் விலை 144 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கேஸ் சிலிண்டர்
கேஸ் சிலிண்டர்

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணை விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதம்தோறும் சமையல் கேஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. அதனடிப்படையில் நடப்பு ஜனவரி மாதத்தின் முதல் தேதியிலிருந்து, மானியமில்லாத சிலிண்டரின் விலையில் 20 ரூபாயை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியிருக்கின்றன.

சென்னையில், 14.2 கிலோ எடைகொண்ட மானியம் இல்லாத கேஸ் சிலிண்டர் விலை, இதுவரை 714 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அது 20 ரூபாய் விலை உயர்ந்து இனி 734 ரூபாய்க்கு விற்பனையாகும்.
கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் மானியமில்லாத கேஸ் சிலிண்டர் விலை 144 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

19 கிலோ எடை கொண்ட மானியமில்லாத கேஸ் சிலிண்டர் விலை தற்போது 1,362 ரூபாயாக உயர்ந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரையும், கடைகளுக்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களையும் விநியோகித்து வருகின்றன.

அதேபோல, வெளியூர் ரயில் கட்டணங்களையும் மத்திய அரசாங்கம் அதிகரித்துள்ளது. சாதாரண ஏசி அல்லாத ரயில்களில் 2-ம் வகுப்பு இருக்கை, 2-ம் வகுப்பு பர்த் மற்றும் சாதாரண முதல் வகுப்பு ஆகிய பிரிவுக்கு கிலோமீட்டருக்கு ஒரு காசு உயர்த்தப்பட்டுள்ளது. ஏசி அல்லாத மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் 2-ம் வகுப்பு உட்காரும் மற்றும் தூங்கும் வசதி ரயில்களுக்கு கிலோமீட்டருக்கு 2 காசு உயர்த்தப்பட்டுள்ளது.

கேஸ் சிலிண்டர் சமையல்; ரயிலில் பற்றி எரிந்த தீ! - பாகிஸ்தானை உலுக்கிய 65 பேரின் மரணம்

ஏசி சேர் கார், ஏசி 3-ம் வகுப்பு, ஏசி 2-ம் வகுப்பு, ஏசி முதல் வகுப்பு கட்டணங்கள் கிலோமீட்டருக்கு 4 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த உயர்வு புத்தாண்டின் முதல் நாளிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. இந்திய ரயில்வேயைப் பயன்படுத்தும் பயணிகளில் 66% பேர், புறநகர் ரயில் பயணிகளாவர். அதனால், புறநகர் ரயில் டிக்கெட் கட்டணங்களை மத்திய ரயில்வே அதிகரிக்கவில்லை.

ரயில் கட்டணம்
ரயில் கட்டணம்

``இந்தக் கட்டண உயர்விலிருந்து கிடைக்கும் வருவாய், ரயில் நிலையங்களை நவீனப்படுத்தும் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் என்றும், ரயில் பெட்டிகளை நவீனப்படுத்துவதன் மூலமாகவும் ரயில் நிலையங்களின் வசதிகளை மேம்படுத்துவதன் மூலமாகவும் பயணிகளுக்கு சிறப்பான சேவைகளை வழங்க முடியும்" என்றும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.