Published:Updated:

வடசென்னை டு அமெரிக்கா... இ-காமர்ஸ் பிசினஸில் அசத்தும் சென்னை இளைஞர்!

காலின் ராஜா
பிரீமியம் ஸ்டோரி
News
காலின் ராஜா

S U C C E S S S T O R Y

நல்ல ஐடியா, அதைச் செயல் படுத்துவதற்கான யுக்தி தெரிந்தால் போதும்; முதலீடே இல்லாமலும் அல்லது குறைந்த முதலீட்டிலும் பிசினஸில் ஜெயிக்கலாம். அதற்கு உதாரணமான காலின் ராஜா, இளமைக் காலத்தில் வறுமை, புறக்கணிப்புகளை மட்டுமே பார்த்து வந்தவர், இன்று கோடிகளில் வருமானம் ஈட்டுகிறார். இ-காமர்ஸ் பிசினஸில் உடற்பயிற்சிக்கான உபகரணங்களை வெளிநாட்டவர் களுக்கு விற்பனை செய்துவருகிறார். பிஸியாக இருந்த காலின் ராஜாவை பொங்கல் முடிந்த பின் சந்தித்தோம்.

காலின் ராஜா
காலின் ராஜா

போஸ்டர் ஒட்டும் வேலை...

“பூர்வீகம் வடசென்னை. ஏழ்மையான குடும்பம். கவர்ன் மென்ட் ஸ்கூல் படிப்புதான். ஆனா, அதுவே சவாலா இருந்ததோடு, நல்ல உணவு மற்றும் உடைக்குக்கூட ரொம்பவே ஏங்கினேன். அப்பாவுடன் இணைந்து சுவர்ல போஸ்டர் ஒட்டுற வேலையும் செஞ்சேன். குடும்பப் பிரச்னையால பெற்றோர் விவாகரத்து வாங்கினதால, அப்பாதான் என்னை யும் தம்பியையும் வளர்த்தார். பொருளாதாரப் பிரச்னைகளாலும், புறக்கணிப்புகளாலும் படிப்பில் பெரிசா நாட்டமில்ல. வானத்துல விமானம் போறப்போ, ‘இதுல நாம போக முடியுமா?’ன்னு தவிப்போடு பார்ப்பேன். ‘நம்மால் முடியுமா?’, ‘எதிர்காலம் என்னவாகுமோ?’ன்னு நிறைய பயம் இருந்துச்சு. அதை யெல்லாம் போக்கின அப்பா, என்னை வெளியுலகத்துக்கு அதிகம் கூட்டிட்டுப்போனார். திறமை இருந்தால் யார் வேணாலும் சாதிக் கலாம்னு நம்பிக்கை பிறந்துச்சு.

அப்பா பாக்ஸரா இருந்தவர். அவர் மூலமா ஆர்வம் ஏற்பட்டு, நானும் பாக்ஸிங் கத்துகிட்டேன். ஸ்கூல், டிப்ளோமா கோர்ஸ் படிக்கும்போது மாநில, தேசிய அளவிலான போட்டிகள்ல பதக் கங்கள் வாங்கினேன். ‘நீ எதுக்கும் சரிபட்டு வரமாட்டே’ன்னு சொன்னவங்க பேச்சையெல்லாம் பொய்யாக்கினேன். என்னாலும் பெரிசா சாதிக்க முடியும்ங்கிற நம்பிக்கை எனக்கு அதிகரிச்சது. அடுத்து கோயம்புத்தூர்ல இன்ஜினீயரிங் படிப்பு. இங்கிலீஷ் தெரியாம அவமானப் பட்டு கலங்கினேன். பல மொழிப் படங்களையும் சப் டைட்டிலுடன் பார்த்து இங்கிலீஷ் கத்துகிட்டேன். ஒருகட்டத்துல ஸ்போர்ட்ஸில் கவனம் செலுத்துறதைக் குறைச்சுகிட்டேன். கேம்பஸ்ல செலக்ட் ஆகி, சென்னை யிலுள்ள முன்னணி ஐ.டி கம்பெனியில சில வருஷம் வேலை செஞ்சேன்” என்பவருக்கு, அடுத்த சில ஆண்டுகளில் அதே நிறுவனத்தின் அமெரிக்க கிளையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

காலின் ராஜா
காலின் ராஜா

பறிபோன வேலை...

“அமெரிக்காவுல அடுத்தடுத்து சில கம்பெனிகளில் மாறுதலாகி வேலை செஞ்சேன். நிறைவான சம்பளம், காதல், சின்ன வயசுல ஏங்கின விஷயங்கள்னு பலவும் சாத்தியமாச்சு. அந்த சந்தோஷம் நீண்டகாலம் நீடிக்கல. 2015-ல் திடீர்னு ஒருநாள் வேலை போயிடுச்சு. பொருளாதார ரீதியா பெரிய அழுத்தம் ஏற்பட்டுச்சு. அப்பதான் பிசினஸ் ஆர்வம் ஏற்பட்டு தொழில்முனைவோர்கள் பலரையும் சந்திச்சு ஆலோசனை கேட்டேன். ஓரளவுக்கு அனுபவம் கிடைச்சதும், என் காதலியுடன் இணைஞ்சு ‘ரிம்ஸ்போர்ட்ஸ்’ என்ற நிறுவனத்தை ஆரம்பிச்சேன். 100 டாலருக்கு வாட்டர் பாட்டில்களை வாங்கி, புது பிராண்டு பெயருடன் இபே மற்றும் அமேசான் தளங்கள்ல விற்பனை செஞ்சோம். நல்ல வரவேற்பு கிடைச்சுது. புது நம்பிக்கை கிடைக்கவே, இ-காமர்ஸ் துறையில் பல்வேறு பொருள்களை விற்பனை செய்தோம்.

எனக்கு இன்னொரு கம்பெனியில வேலை கிடைச்சது. ஆனா, உத்தரவாதம் இல்லாத தனியார் வேலை என்பதால, பிசினஸ்தான் எனக்கான அடையாளம்னு முடிவெடுத்தேன். திருமணமான நிலையில், நானும் என் மனைவியும் வெவ்வேறு கம்பெனிகள்ல வேலை செஞ்சோம். வீட்டுக்கு வந்ததும் இ-காமர்ஸ் பத்தின அனுபவங்களைத் தெரிஞ்சுக்க, தினமும் பல மணி நேரம் வாசிப்போம். பொழுதுபோக்கு விஷயங்களைத் தவிர்த்தோம். இ-காமர்ஸ் பிசினஸ்ல ஒன்றரை வருஷத்துலயே ஒரு மில்லியன் டாலர் வருமானம் ஈட்டினோம். எங்களுடைய உடற்பயிற்சித் தேவைக்கான உபகரணங்களைத் தேடித் தேடி வாங்கியபோதுதான், இதையே பிசினஸா செய்ற யோசனை அதிகரிச்சுது. இ-காமர்ஸ் முறையில, ஃபிட்னஸ் உபகரணங்கள் பலவற்றையும் விற்பனை செஞ்சோம். உடற்பயிற்சி, சில விளையாட்டு உபகரணங்களுடன், அந்தப் பயிற்சியின்போது அடிபட்ட வங்களுக்கு உதவும் வகையிலான பயன்பாட்டு உபகரணங்களையும் விற்பனை செஞ்சோம்.

முதலில் என் மனைவி வேலை யிலிருந்து விலகினாங்க. சம்பளம் இல்லாத ‘ஃபேமிலி லீவ்’ முறைக்கு ஆபீஸ்ல அனுமதி வாங்கினேன். அமெரிக்காவுலயும் சென்னை யிலும் மாறி மாறி வசிச்சபடியே நானும் தொழில்ல கவனம் செலுத்தினேன். 2018-ல் ஆபீஸ் வேலையை விட்டுட்டு, முழுநேர தொழில்முனைவோர் ஆனேன்.

எங்க சொந்த டிசைன்களை, சில உற்பத்தி நிறுவனங்கள்கிட்ட கொடுத்து தயாரிக்கிறோம். அதை, எங்க பிராண்டு பெயர்ல ஆன்லைன் விற்பனைத்தளங்கள்ல மட்டுமே விற்கிறோம். இந்த இ-காமர்ஸ் வணிகத்துக்காகச் சென்னையிலும் அமெரிக்கா விலும் எங்க பணியாளர்கள் வேலை செய்றாங்க” என்றவர், சென்னையில் இருந்தபடியே பிசினஸைக் கவனிக்கிறார்.

இந்தியா, சீனா, வங்கதேச நாடுகளில் தயாராகும் உடற் பயிற்சிக்கான உபகரணங்கள், உடற்பயிற்சி மற்றும் விளை யாட்டுத்துறை சார்ந்த முதலுதவிப் பொருள்களை வாங்கி, அமெரிக்கா மற்றும் கனடா விலுள்ள மக்களுக்கு விற்பனை செய்கிறார். 22 பேருக்கு வேலை வாய்ப்பு தருபவர், ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் வர்த்தகம் செய்கிறார். அடுத்த ஓராண்டில் 100 கோடி ரூபாய் இலக்கில் பயணிக்கிறார்.

“முதன்முதல்ல இபே-ல என்னோட பொருள்களை விற்பனைக்காகப் பதிவிட்டப்ப, எதிர்பார்த்த ஆர்டர்ஸ் வரல. சிக்கலுக்கான காரணத்தைக் கண்டுபிடிச்சோம். மக்களுக்குத் தேவையான பொருள், அதை வரிசைப்படுத்தும் விதம், கீ வேர்டு, ஈர்ப்பான புகைப்படம் உள்ளிட்ட பல விஷயங்களையும் வாடிக்கையாளர்கள் பார்வை யில இருந்து கவனிச்சு முறையா பதிவிட்டோம். ஆர்டர்ஸ் அதிகரிச்சது. இப்ப இபே, அமேசான், வால்மார்ட் போன்ற தளங்கள் தவிர, எங்க நிறுவன இணையதளத்திலும் நாலு பிராண்டு பெயர்ல பல்வேறு பொருள்களையும் விற்பனை செய்றோம். மேக் இன் இந்தியா பிராசஸ்ல அதிக கவனம் செலுத்துறோம். வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான பொருள்களை இந்தியாவிலுள்ள நிறுவனங்கள் மூலம் தயாரிக்கவும் உதவுறோம்.

ரீடெயில் விற்பனையில ஈடுபடுறதுக்குக் கூடுதலான முதலீடு, வேலையாட்கள் தேவை. அதைவிட, இ-காமர்ஸ் வணிகம் எனக்கு ரொம்பவே நம்பிக்கை யளிக்குது. இந்த டிஜிட்டல் உலகத்துல இணையதளம் சார்ந்த வணிகத்துக்கு இ-காமர்ஸ்தான் மிகப்பெரிய வரவேற்பறை. போதிய அனுபவத்துடன் இ-காமர்ஸ் வணிகத்துல ஈடுபட்டா, சாமான்யர்கள்கூட பிசினஸ்ல பெரிசா சாதிக்கலாம்.

தோல்விகள், தொய்வுகள் இல்லாம எங்களுக்கும் வெற்றி கிடைச் சுடல. எந்தச் சூழல்லயும் நெகட்டிவா யோசிக்கல. வாழ்க்கையில இலக்கும், பிசினஸில் டார்கெட்டும் இல்லாம வெற்றி பெறுவது கடினம்.

நம் வெற்றிக்கான பாதையை நாமதான் தீர்மானிக்கணும். இந்த இளமைக் காலத்துல கொஞ்சம் சிரமப்பட்டு உழைச்சுட்டா, எதிர்காலம் நல்லா இருக்கும். அதைவிட, நான் இழந்த விஷயங்கள் என் பிள்ளை எதிர்கொள்ளக் கூடாது. அதனாலதான் ரிஸ்க் எடுத்து உழைக்கிறோம். வாழ்க்கையில ஒரு கோடி ரூபாய் சம்பாதிச்சா போதும்னு நினைச்சேன். இப்ப என் இலக்கு இன்னும் பல மடங்கு கூடியிருக்கு’’ நம்பிக்கையுடன் சொன்னார் ராஜா.

ராஜாவின் மனைவி ஆன்ஜி, மேற்கிந்தியத் தீவைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் வளர்ந்தவர். இந்தியப் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்குற நோக்கத்துல இ-காமர்ஸ் துறையில தனி நிறுவனத்தை நடத்துகிறார்.

பிட்ஸ்

ர்நாடக மாநிலத்தில் செயல்படும் தொழில் நிறுவனங் களில் 25% பேர் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என அந்த மாநிலம் புதிய தொழில் கொள்கையை வகுத்திருக் கிறது!