Published:Updated:

ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம்... கொள்ளையா, நிர்வாகச் சிக்கலா..?

ஆம்னி பஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆம்னி பஸ்

ஆம்னி பஸ்

சென்னை மாதிரியான மெட்ரோ நகரங் களில் கல்வி மற்றும் பணி நிமித்தமாகத் தங்கியுள்ள லட்சக்கணக்கான மக்கள், பண்டிகைக் காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை நாள்களில், சொந்த ஊருக்குச் செல்ல ரயில்களில் டிக்கெட் கிடைக்காததால் ஆம்னி பேருந்துகளை நாடுகிறார்கள். இதைப் பயன்படுத்திக் கொண்டு, ஆம்னி பேருந்துகள், வழக்கமாக வாங்கும் கட்டணத்தைவிட இரு மடங்கு கூடுதல் கட்டணத்தை வசூலிப்பது வாடிக்கையாகிவிட்டது.

புகார் செய்தால் நடவடிக்கை எடுப்போம்...

இது குறித்து போகுவரத்துத்துறை அதிகாரிகள் சிலருடன் பேசினோம். ‘‘ஆம்னி பேருந்துகளுக்கென தமிழகத்தில், குறிப்பிட்ட வழித்தடத்துக்கான அனுமதி எதையும், அரசு வழங்கவில்லை. அவை, வாடகை அடிப் படையில் குழுவாகத் திரண்ட மக்களை ஓர் இடத்தில் இருந்து, மற்றோர் இடத்துக்கு ஏற்றி இறக்கும் அனுமதியை மட்டுமே அரசு வழங்கி உள்ளது. அதனால், பஸ்களின் வாடகை விஷயத்தில் எந்த சட்டதிட்டமும் நம்மிடம் இல்லை.

என்றாலும், வழக்கமான நாள்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட, எவ்வளவு கூடுதலாக வசூலிக்கின்றனர் என்பது குறித்து பயணியர் அளிக்கும் புகாரின் அடிப்படையில் தான், நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், பெரும்பாலான பயணியர்கள் இந்த அதிகப்படியான கட்டணம் பற்றி புகார் செய்வதில்லை.

ஆம்னி பஸ் சேவை தரும் எல்லா பேருந்து நிறுவனங்களும் ஒரே மாதிரியான கட்டணத்தை வசூலிப்பதில்லை. அவற்றில் உள்ள இருக்கை, படுக்கை வசதிகளின் அடிப்படையிலும், புறப்படும் நேரம், சேரும் நேரத்தின் அடிப் படையிலும் கட்டணத்தை நிர்ணயித்துள்ளன.

கூடுதல் கட்டணங்களை வசூலிக்கும் ஆம்னி பேருந்து நிறுவனங்களைக் கண்டறிந்து, அந்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருக் கிறது. பயண டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே, கூடுதல் கட்டணம் என மக்கள் நினைத்தால், அதைப் போக்குவரத்து துறைக்கு தெரியப்படுத்தினால், உடனே நடவடிக்கை எடுக்க முடியும்” என்றார்கள்.

ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம்... கொள்ளையா, நிர்வாகச் சிக்கலா..?

கொள்ளையர்கள் போல் பாவிப்பது நியாயமில்லை...

பண்டிகைக் காலத்தில் மட்டும் ஆம்னி பேருந்துக் கட்டணங்களை அதிகப்படுத்த என்ன காரணம் என்பதைத் தெரிந்துகொள்ள அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.அன்பழ கனுடன் பேசினோம்.

“பண்டிகைக் காலம் வந்துவிட்டால் ஆம்னி பேருந்துகளின் கொள்ளையை, அரசு கண்டு கொள்வதில்லை என்கிற செய்திகள் பரபரப் பாகப் பேசப்படும். ஆனால், மற்ற நாள்களில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் என்ன செய்கிறார்கள் என யாரும் பார்ப்பதில்லை.

பண்டிக்கைக் காலங்களில் செய்யப்படும் கட்டண உயர்வைப் பார்த்து மக்கள் கோபப் படுவது நியாயம்தான். ஆனால், அனைத்துத் தனியார் பேருந்து நிறுவனங்களும் கட்டணங்களை அதிகப்படுத்துவதில்லை. இந்தத் தொழிலை நேசித்தும், மக்களின் வசதிக் காகவும் சமூக சிந்தனையுடன் செய்துவருப வர்கள் எண்ணற்றவர்கள். எல்லா தொழில்களிலும் இருப்பது போல, எங்கள் தொழிலிலும் ஒரு சில கயவர்கள் இருக்கலாம். அதற்காக ஒரு நாளைக்கு 25,000 பயணி கள் சிறப்பாக ஊர் போய்ச் சேர இரவு பகலாகப் பாடுபடும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களைக் கொள்ளையர்கள் போல் பாவிப்பது நியாயமில்லை.

அ.அன்பழகன்
அ.அன்பழகன்

பேருந்தை இயக்க ஆகும் செலவுகள்...

ஒரு சொகுசு பேருந்து வாங்க ரூ.50 லட்சம் முதல் ரூ.1.50 கோடி வரை ஆகிறது. குறைந்தபட்சம் ரூ.50 லட்சம் மதிப்புள்ள சொகுசு பேருந்தை 500 கி.மீ தூரம் இயக்கினால், நாள் ஒன்றுக்கு டீசல் ரூ.12,750, தமிழ்நாடு உரிமம், பேருந்துக்கு சாலை வரி ரூ.2,500, வாகனக் காப்பீடு ரூ.250, பராமரிப்பு ரூ.1,500, ஓட்டுநர் மற்றும் உதவியாளர் சம்பளம் ரூ.2,000, தேய்மானம் ரூ.2,100, வட்டி ரூ.1,750, சுங்க கட்டணம் ரூ.1,800, படுக்கை உறை விரிப்பு பராமரிப்பு ரூ.300, வாகன நிறுத்த கட்டணம் ரூ.200, பேருந்து நிலைய நுழைவுக் கட்டணம் ரூ.200, ஒரு பேருந்துக்கு ஆபீஸ் செலவு ரூ.1,000 என மொத்தம் ஒரு ஆம்னி பேருந்துக்கு குறைந்தபட்ச செலவு ரூ.26,350 ஆகிறது. இது இன்றைய டீசல் விலையில் ஏற்படும் செலவு. டீசல் விலை அதிகரித்தால், இந்த செலவும் உயரும்.

இதில் ஒரு வருடத்துக்கு சராசரி 70% மட்டுமே பயணிகள் பயணம் செய்வார்கள். ஒரு பேருந்துக்கு 71% எனில், 21 பயணிகளின் இருக்கைகள். அதன்படி கணக்கிட்டால், ரூ.1,254 (ரூ.26,350 / 21 பயணிகள்), ஏஜென்ட் கமிஷன் ரூ.150 சேர்த்து பேருந்து நிறுவனத்துக்கு ஆகும் அடக்கச் செலவு ஒரு பயணிக்கு ஒரு நாளைக்கு ரூ.1,404.

வருடம் முழுவதும் இந்த தொகையை ஒரு இருக்கைக்கான கட்டணமாக வசூலித்தால்தான் அடக்கத் தொகையை அடைய முடியும். எதிர்பாராத விபத்துகள், அபரிமிதமாக விதிக்கப்படும் அபராதங்கள், பதிவுச் சான்று புதுப்பிப்பு, அனுமதிச் சீட்டு புதுப்பிப்பு என்று கட்டுக் கடங்காத செலவுகள் எனப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.

பேருந்து பராமரிப்பு, வாகனப் பராமரிப்பு, எஃப்.சி வேலை பார்ப்பது என வருடத்தில் பல நாள்கள் பேருந்துகளும் இயக்க முடியாமல் போய்விடும். இந்தக் கொடிய நோய்க் காலத்திலும் எங்களுடைய பேருந்துகள் இயக்கப்படாமல் 500 நாள்களுக்கு மேல் நின்றுகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பேருந்துக்கும் இந்த காலங்களில் வட்டி மட்டுமே சுமாராக ரூ.10 லட்சத்துக்கு மேல் நஷ்டமாகிறது. 18 மாத காலங்களாக நிற்கும் பேருந்துகளை எடுத்து இயக்க குறைந்தபட்சம் ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது.

ஆம்னி பஸ் கட்டணங்களை நிர்ணயிப்பது யார்?

இந்தத் தொழிலைக் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் தொலை நோக்குடன் உதவிட வேண்டும். மாநில அரசுகள் ஆம்னி பேருந்து கள் இயக்குவதில் ஒரு வரைய றையை உண்டாக்கி, அரசுப் பேருந்துகளுக்கு நியாயமான கட்டணங்களை ஏற்படுத்தி யிருப்பது போல, ஆம்னி பேருந்து களுக்கும் அதன் உரிமையாளர் களுக்குக் கட்டுபடியாகும் வகை யிலும், மக்களுக்குத் தொந்தரவு இல்லாத வகையிலும் கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போதுதான், எங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் அவச்சொல் நீங்கும்.

மக்கள் அதிகம் பயன்படுத்தும் நான் ஏசி ஸ்லீப்பர் (Non Ac sleeper) படுக்கைகளுக்கான கட்டணம் ரூ.850, நான் ஏசி சீட்டர் (Non Ac seater) இருக்கைகளுக்கான கட்டணம் ரூ.650, ஏசி ஸ்லீப்பர் படுக்கைகளுக்கான கட்டணம் ரூ.950 மற்றும் ஏசி. சீட்டர் இருக்கைகளுக்கான கட்டணம் ரூ.750 என ஆம்னி பேருந்துகளுக்கு அரசு கட்டணம் நியமிக்க வேண்டும். இப்படி அரசு நிர்ணயித்தால், வார நாள்களில் ஒரு கட்டணம், வார இறுதி நாள்களில் ஒரு கட்டணம், பண்டிகைக் காலங்களில் ஒரு கட்டணம் என்றில்லாமல் எல்லா நாள்களிலும் ஒரே மாதிரி கட்டணம் வசூலிக்க முடியும். இதனால் எங்களுக்கும் நஷ்டம் வராது; மக்களுக்கும் கஷ்டம் வராது.

டிஜிடலைஸ்டு ஆக்குங்கள்!

மேலும், தமிழகத்தில் ஒரு பேருந்துக்கு பர்மிட் வாங்க 20 நாள் ஆகிறது. மற்ற மாநிலங்களில் இரண்டே நாள்களில் பர்மிட் வாங்கிவிடலாம். காரணம், அங்கு அனைத்தும் டிஜிட்டல்மயமாக்கப்பட்டு உள்ளன. இருந்த இடத்தில் இருந்தபடியே பர்மிட் வாங்கிவிடலாம். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை அனைத்தும் ‘மேனுவல்’ஆக வைத்திருப்பது, காலதாமத்துக்கு வழிவகுக்கிறது. இதையும் தமிழக போகுவரத்துத் துறை மாற்ற வேண்டும்’’ என்றார் தெளிவாக.

இன்னும் சில நாள்களில் பொங்கல் பண்டிகை வருகிறது. இப்போதாவது அதிக கட்டணம் என்கிற பிரச்னையை வராமல் தடுக்க மாநில அரசு என்ன செய்யப்போகிறது?

ஜெபின், விஜய்பிரபு
ஜெபின், விஜய்பிரபு

புகார் தெரிவித்தாலும் பயனில்லை!

ஜெபின், சென்னை.

‘‘பண்டிகை நாள்களில் எவ்வளவு கட்டணம் உயர்த்தினாலும், டிக்கெட் புக் செய்தவர்கள் வேறு வழியில்லாமல், கூடுதல் கட்டணத்தைச் செலுத்தி பயணம் செய்துதான் ஆக வேண்டும் என்பதை நன்கு அறிந்து கொண்ட தனியார் பேருந்து நிறுவனங்கள், அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அதிக கட்டணம் வசூல் செய்கிறார்கள். அவர்கள் அதிக கட்டணம் வசூல் செய்வதைப் புகார் தெரிவிக்க அரசு சார்பில் கொடுக்கப்பட்டிருக்கும் ‘1800 425 6151’ எண்ணில் புகார் தெரிவித்தாலும் எந்த நடவடிக்கையும் எடுப்பது கிடையாது. ஒவ்வொரு வருடமும் கட்டண உயர்வு பிரச்னையை மக்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது. செயற்கையாக உயர்த்தப்படும் கட்டண உயர்வை யாரிடம்தான் முறையிடுவதோ தெரியவில்லை.”

அதிக கட்டணம் சிரமமே..!

விஜய்பிரபு, சத்தியமங்கலம்.

“பண்டிகை மற்றும் வார இறுதி நாள்களில், ஆம்னி பேருந்துகளில் பயணிப்பதுதான் எனக்கு செளகர்யமாக இருக்கும். ஆனால், அந்த நேரத்தில் டிமாண்டு அதிகம் இருப்பதால், வழக்கமான கட்டணங்களை விட கூடுதல் கட்டணங்களை ஆம்னி பேருந்துகள் வசூலிக்கின்றன. வார நாள்களில் சென்னையிலிருந்து எனது ஊருக்கு செல்ல ரூ.450 கட்டணம் எனில், வார இறுதி நாள்களில் அது ரூ.700 - 800 ஆக இருக்கும். பண்டிகைக் காலங்களில் ரூ.1,000 - 1,200 ஆக இருக்கும். வீடு, சொந்தங்களை விட்டு வெளியூர்களில் பணிபுரிவோருக்கு, பண்டிகை நாள்களில்தான், சொந்த ஊருக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அந்த நேரம் காசு, பணத்தைப் பார்க்க முடியாது. அதைப் பயன்படுத்தி, கட்டணக் கொள்ளை அடிப்பதையும் ஏற்க முடியாது.”