Published:Updated:

கடுகு முதல் காய்கறி வரை… சிதம்பரத்தைக் கலக்கும் ஆன்லைன் ஆப்!

ஆன்லைன் டெலிவரி
பிரீமியம் ஸ்டோரி
ஆன்லைன் டெலிவரி

ஆன்லைன் டெலிவரி

கடுகு முதல் காய்கறி வரை… சிதம்பரத்தைக் கலக்கும் ஆன்லைன் ஆப்!

ஆன்லைன் டெலிவரி

Published:Updated:
ஆன்லைன் டெலிவரி
பிரீமியம் ஸ்டோரி
ஆன்லைன் டெலிவரி

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்த நண்பர்களான ராம் பிரசாத் – ஜெயசிம்மன் இருவரும் சிங்கப்பூரில் வெவ்வேறு சாஃப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றியவர்கள். சொந்தமாகத் தொழில் தொடங்க முடிவெடுத்து தாயகத்துக்குத் திரும்பியவர்கள், உள்ளூரில் உணவு டெலிவரி செய்வதற்காக ‘சாரோஸ்’ என்ற டெலிவரி அப்ளிகேஷனை (Zaaroz App) வடிவமைத்தார்கள். உணவுகளை டெலிவரி செய்வற்காக மட்டும் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தை, மக்களின் தேவைகளைப் படிப்படியாக அறிந்து, இப்போது குண்டூசி தொடங்கி எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் மளிகைப் பொருள் கள், மருந்துகள், காய்கறிகள், பழங்கள், சிக்கன், மட்டன், மீன் டெலிவரி என ‘ஆல் இன் ஒன் ஆப்’பாக மாற்றியிருக்கிறார்கள்.

சிதம்பரத்தை மட்டும் மையப்படுத்தித் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், குறித்த நேரத்தில் டெலிவரி, சாதாரண கட்டணம், கனிவான அணுகுமுறை போன்றவற்றால் இப்போது தமிழகத்தின் 45 நகரங்களில் சுமார் 2,50,000 வாடிக்கையாளர்களுடன் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களான ராம் பிரசாத் மற்றும் ஜெயசிம்மனை சிதம்பரத்திலுள்ள தலைமை அலுவலகத்தில் சந்தித்தோம்.

ஊழியருடன் ஜெயசிம்மன்,  ராம் பிரசாத்
ஊழியருடன் ஜெயசிம்மன், ராம் பிரசாத்

‘‘நாங்கள் இருவருமே சிறுவயது நண்பர்கள். பள்ளி, கல்லூரி எல்லாமே சிதம்பரத்தில்தான். அதன் பிறகு, சிங்கப்பூரில் சாஃப்ட்வேர் செய்து தரும் நிறுவனத்தில் 10 வருடம் வேலை செய்தோம். ஒருகட்டத்தில் வெளிநாட்டு வாழ்க்கை போதும், சொந்த ஊருக்குப் போய் செட்டில் ஆகணும்னு முடிவு செய்தோம்.

2018-ம் வருஷம் சிதம்பரத்தில் ‘மரிடைம்’ (Maritime Database Services Pvt. limited) என்ற பெயரில் கம்பெனியைத் தொடங்கி சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாஃப்ட் வேர்களைச் செய்து தந்தோம். அதேபோல, உள்ளூரில் ஹோட்டல்கள், காய்கறிக் கடைகள் போன்ற வணிக நிறுவனங்கள் வைத்திருந்த எங்கள் நண்பர்களுக்கு சாஃப்ட்வேர்களை உருவாக்கித் தந்தோம். அப்போது அவர்கள்தாம், ‘‘சிதம்பரம் மக்கள் பொருள்களை வீடுகளில் டெலிவரி செய்யும் படி கேட்கிறார்கள்; அதற்கு முறையான சிஸ்டம் இல்லாததால், சரியாக டெலிவரி தர முடியவில்லை. அதற்கு ஒரு சாஃப்ட்வேர் இருந்தால் உதவியாக இருக்கும்’’ என்று கேட்டார்கள்.

அப்போதுதான் அதை ஏன் நாம் செய்யக் கூடாது என்று நினைத்தோம். அப்படி எங்கள் சொந்த ஊரின் தேவையை நிறைவேற்றத்தான் இந்த நிறுவனத்தை ஆரம்பித்தோம். ‘இதெல்லாம் சிதம்பரம் மாதிரி சின்ன ஊர்ல சாத்தியப் படுமா’ன்னு நிறைய பேர் எங்களிடம் கேட்டார்கள். ஆனால், ஆரம்பித்த சில வாரங்களிலேயே மக்களிடம் பெரிய வரவேற்பு இருந்ததைப் பார்த்தோம். இப்போது எங்கள் டெலிவரி ஊழியர்கள் வாடிக்கையாளர்களின் தத்துப் பிள்ளைகளாகவே மாறிவிட்டார்கள்.

ஆனால், இந்த வெற்றி அவ்வளவு சுலபமாக எங்களுக்குக் கிடைத்துவிடவில்லை. வணிகர்களை ஆப் நடைமுறைக்குள் கொண்டுவருவது எங்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது. இந்த ஆப் அவர்களுக்கு எப்படி உதவியாக இருக்கும் என்பதைப் படிப்படியாகப் புரிய வைத்தோம். பொருள்களின் அன்றாட விலையை எப்படி அப்டேட் செய்வது என்பதை எங்கள் ஊழியர்கள் மூலம் அவர்களுக்குப் பயிற்சி கொடுத்தோம். அதன்பிறகுதான், கடைகளில் நேரடியாக 10 பேரிடம் வியாபாரம் செய்தால், ஆப் மூலம் 20 பேரிடம் செய்ய முடியும் என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். அதன்பிறகு, சிதம்பரத்தில் இருக்கும் ஹோட்டல், மளிகைக் கடை, மருந்துக்கடை, கறிக்கடை, காய்கறிக்கடைன்னு அனைத்துக் கடைகளின் விலைப் பட்டியலையும் போட்டோக்களுடன் வாங்கி, அவர்களின் கடை பெயரிலேயே எங்கள் ‘ஆப்’பில் பதிவேற்றினோம்.

வாடிக்கையாளர்களிடம் இருப்பதைப் போலவே, எங்களுடன் இணைந்திருக்கும் வணிகர்களுக்கும் ஒரு ‘ஆப்’ இருக்கும். வாடிக்கையாளர் அவருக்குத் தேவையான பொருளைத் தேர்வு செய்தவுடன் பணம் செலுத்தும் முறை வரும். அந்தப் பணத்தை ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம் அல்லது பொருளை டெலிவரி செய்யும்போதும் செலுத்தலாம். எல்லா டெலிவரி ஆப்களிலும் இருக்கும் நடைமுறையைத்தான் எங்கள் ஆப்பிலும் நாங்கள் வைத்திருந்தோம் என்றாலும், நாங்கள் அனைவரும் புரிந்துகொள்ளும்படி எளிமையாக வடிவமைத்தது மக்கள் அதை எளிதாகப் பயன்படுத்தக் காரணமாக அமைந்துவிட்டது.

ஆரம்பித்து முதல் இரண்டு மாதங்கள் உணவுகளை மட்டும் டெலிவரி செய்தோம். அப்புறம் காய்கறிகள், சிக்கன், மட்டன், மளிகைப் பொருள்கள்னு வீட்டுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் பட்டியலில் சேர்த்தோம். முக்கியமாக, எங்களோட யூசர் மெனுவை ரொம்ப சாதாரணமா வடிவமைத்தோம். அதனால சிறியவர்கள், பெரியவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் எங்கள் ‘ஆப்’பை எளிமையா பயன்படுத்துனாங்க. வேலை சூழல் காரணமாகப் பெற்றோர் களைப் பிரிந்து வெளிநாடுகளில் வசிப்பவர்கள் எங்கள் மூலம் காய்கறிகள், மளிகை, மருந்துகள் மற்றும் துணிமணிகளை ஆர்டர் செய்து அவர்களுக்குத் தந்தார் கள். ஒருகட்டத்தில் வெளிநாடு களில் இருந்து ஆர்டர் செய்வது குறைந்துவிட்டது. காரணம், அந்தப் பெற்றோர்களே அவங் களுக்குத் தேவையானதை ஆர்டர் பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.

சிதம்பரத்தில் கிடைத்த வரவேற்பு எங்களுக்கு ஒரு விஷயத்தைப் புரிய வைத்தது. டெலிவரி ‘ஆப்’கள் இல்லாத பகுதிகள்தான் எங்களுக்கான டார்கெட் என்பதை உணர்ந் தோம். அதனால் சிறு நகரங்களை நோக்கிச் சென்றோம். அதன்படி விருத்தாசலம், பண்ருட்டியில் சேவையை ஆரம்பித்தோம். அங்கேயும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அந்த நேரத்தில்தான் கொரோனா முதல் அலை லாக்டௌன் அமலுக்கு வந்தது. அனைத்து இடத்திலும் எங்கள் தொழில் அப்படியே முடங்கி விட்டது. இனி அடுத்து என்ன செய்வது என்று நாங்கள் நினைத் துக்கொண்டிருந்த நேரத்தில் எங்களை அழைத்த சிதம்பரம் சப் கலெக்டர் விஷ்ணு மஹாஜன், ‘‘மக்கள் கடுமையா பாதிக்கப் படுறாங்க. உடனே உங்கள் சர்வீஸை ஆரம்பிங்க’ன்னு சொன்னார். அது கொரோனா காலம் என்பதால், மருந்துகளையும் எங்கள் பட்டியலில் இணைத்தோம்.

சிதம்பரத்தைத் தொடர்ந்து பண்ருட்டி, விருத்தாசலத்திலும் சேவையைத் தொடங்கினோம். அதையடுத்து சப் கலெக்டரின் உதவியுடன் கள்ளக்குறிச்சி, கடலூர், சீர்காழின்னு லாக் டௌன் காலத்திலேயே புதிதாக 10 இடங்களில் தொடங்கினோம். இப்போது 45 இடங்களில் வெற்றிகரமா நடத்திக்கிட்டு வருகிறோம்.

'சாரோஸ்' ஊழியர்களுடன்...
'சாரோஸ்' ஊழியர்களுடன்...

சிங்கப்பூரில் நாங்கள் இருந்த போது நிறைய டெலிவரி ஆப்களைப் பயன்படுத்தியிருக் கோம். அப்படியான தரத்துடன் சாரோஸ் இருக்கணும்னு முடிவு பண்ணோம். டெலிவரிக்காக சூடு, குளிர் இரண்டையும் 45 நிமிடங்கள் வரை தக்கவைக்கும் லேமினேட் செய்யப்பட்ட இன்சுலார் பேக்கைப் பயன்படுத்தினோம். அதற்குள் ஸ்டீல் தகடுகளைக் கொண்டு மூன்றுப் பகுதிகளாகப் பிரித்து வைத்திருக்கிறோம். அதன்மூலம் ஒரு பகுதியில் வைக்கப்படும் பொருள் மற்ற பொருள்களுடன் கலக்காது. அதே போல, டெலிவரிக்காக எலெக்ட்ரிக் பைக் பயன்படுத்தும் இடங்களில் ஆரம்பக் கட்டணம் 10 ரூபாயும், மற்ற இடங்களில் 20 ரூபாயும் நிர்ணயித்திருக்கிறோம். ஒரு நகரத்திலிருந்து 15 கிலோ மீட்டர் வரை டெலிவரி செய்கிறோம். 15 கிலோ மீட்டர் சென்று டெலிவரி செய்ய 50 ரூபாய்தான் கட்டணமாகப் பெறுகிறோம். இந்தத் தொகை வாடிக்கையாளர் வந்து செல்வதற்கு ஆகும் தொகையைவிடக் குறைவுதான்.

லாபத்தைவிட வாடிக்கையாளர்களும், அவர்களின் திருப்தியும்தான் எங்களுக்கு முக்கியம். இந்த வெற்றிக்கு இன்னொரு முக்கியக் காரணம், அர்ப்பணிப்புடன்கூடிய எங்களின் ஊழியர்கள். 5 ஊழியர்களுடன் ஆரம்பித்த எங்கள் நிறுவனத்தில் இப்போது முழு நேரம், பகுதி நேரம் இரண்டும் சேர்த்து சுமார் 400 பேர் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்காக டி.வி.எஸ் நிறுவனத்திடம் 200 எலெக்ட்ரிக் பைக்குகள் வாங்க ஒப்பந்தம் போட்டிருக்கிறோம். அதில் முதல்கட்டமாக 50 பைக்குகள் இப்போது வந்துள்ளன. டெலிவரி நேரம் போக அந்த பைக்குகளை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக எங்களிடம் பணியாற்றினால் அந்த பைக் அவர்களுக்கே சொந்தம் என்றும் கூறியிருக்கிறோம்.

பொதுவாக, எங்கள் வாடிக்கையாளர்கள் தரும் கமென்டுகளின் அடிப்படையில்தான் புதிய சேவைகளை சேர்ப்போம். அதன்படி நிறைய பேர் ஆட்டோ, டாக்சி, ரயில், பஸ் புக்கிங் வேண்டுமென கேட்கிறார்கள். அதற்கான வேலை முடிந்துவிட்டது. விரைவில் அந்த சேவையையும் இணைத்துவிடுவோம்.

வருமானம் என்பதைத் தாண்டி டெலிவரி ஆப்கள் இல்லாத தமிழ்நாட்டின் அனைத்து ரிமோட் ஏரியாக் களுக்கும் சாரோசைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்களின் அடுத்ததிட்டம்” என்கின்றனர் புன்னைகையுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism