பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஆட்டுப்பால், மூலிகைகளில் சோப்பு... மதிப்புக்கூட்டலில் மகத்தான வருமானம்... கலக்கும் ஈரோடு தம்பதி!

மகாலிங்கம், பரமேஸ்வரி
பிரீமியம் ஸ்டோரி
News
மகாலிங்கம், பரமேஸ்வரி

தொழில்

‘நம் முயற்சிகள் தவறினாலும், முயற்சி செய்யத் தவறக் கூடாது’ என்பது சுய தொழிலுக்கான மூலதனப் பாடம். அதற்கேற்ப, தான் மேற்கொண்ட தொழில்கள் பலவும் சறுக்கலைக் கொடுத்தாலும், இறுதியாக சோப்பு தயாரிப்பில் வெற்றியைக் கண்டிருக் கிறார் மகாலிங்கம். ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகிலுள்ள நடுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இவர், ஆட்டுப்பால் மற்றும் மூலிகை சோப்புகளுடன், மூலிகை பற்பசைத் தயாரிப்பில் (டூத் பேஸ்ட்) கவனம் ஈர்ப்பதுடன், நேரடி மதிப்புக்கூட்டல் முறையில் விவசாயத் தொழில்முனைவோராக வும் நிலையான வருமானம் ஈட்டுகிறார்.

இவரின் தொழில் அனுபவங்களைத் தெரிந்துகொள்ள நேரில் சென்றிருந்தோம். மலர்ந்த சிரிப்புடன் நம்மை வரவேற்றனர் மகாலிங்கமும், அவரின் மனைவி பரமேஸ் வரியும். விடாமுயற்சியுடன் செயல்பட்டு சோப்பு தயாரிப்பில் ஜெயித்த கதையை அவர்கள் நம்மிடம் பகிர்ந்தனர்.

மகாலிங்கம், பரமேஸ்வரி
மகாலிங்கம், பரமேஸ்வரி

“பூர்வீக விவசாயக் குடும்பம். பி.ஏ முடிச்சதும் நண்பர்களுடன் சேர்ந்து பிசினஸ்ல இறங்கினேன். கூடவே, குடும்பத் தொழிலான விவசாயத்தையும் கவனிச்சுகிட்டேன். சில படிப்பினைகளுக்குப் பிறகு, இயற்கை விவசாயத்துக்குத் திரும்பி, மதிப்புக்கூட்டல் தொழில்நுட்பங்களையும் கடைப்பிடிக்க ஆரம்பிச்சேன். இதுக்கிடையே, பேக்கரி, பிரின்டிங் ஆப்செட் உட்பட அடுத்தடுத்து 5 தொழில்கள் செஞ்சேன். பார்ட்னர்ஷிப் முறையால அந்த எல்லாத் தொழில்கள்லயும் புதுப்புது சிக்கலை எதிர்கொண்டதுடன், எதுலயுமே நிலையான வெற்றியைப் பெற முடியலை. இனி வெளி நபர்களோடு சேர்ந்து பிசினஸ் பண்ணறது நமக்கு சரிவராதுனு முடிவெடுத்த நேரத்துலதான், மூலிகை சோப்புகளுக்கான வரவேற்பு பத்தி என் தங்கை சாந்தி ஐடியா கொடுத்தாங்க.

உலகம் முழுக்க குளியல் சோப்புக்கான சந்தை வாய்ப்பு அதிகரிச்சுகிட்டே இருக்கு. இதன் தயாரிப்புக்கு இயற்கை விளை பொருள்களின் பங்களிப்பு பெரிசா இருக்கிறதால, வெறும் விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்காம மதிப்புக்கூட்டல் முறையில நாமே சோப்பு தயாரிக்கலாம்னு முடிவெடுத்தோம். பிறகு, நானும் என் தங்கையும் முறையா பயிற்சி எடுத்துகிட்டு, ‘தேவாஸ் ஆர்கானிக் புராடக்ட்’ என்கிற கம்பெனியை 2017-ல் ஆரம்பிச்சோம்” என்று தொழிலுக்குள் நுழைந்த விதத்தை மகாலிங்கம் சொல்ல, ஆரம்பகால சவால்கள் குறித்துச் சொன்னார் பரமேஸ்வரி.

“ஆட்டுப்பால் சோப்பு, கூடுதல் முகப்பொலி வுடன் தோல் சுருக்கம் உள்ளிட்ட சில சரும பிரச்னைகளைச் சரிசெய்றதா மக்கள் நம்புறாங்க. ஆட்டுப்பால் சோப்புக்கு வரவேற்பு கிடைக்கும்னு நினைச்சு, அப்போ நாங்க வளர்த்து வந்த 10 ஆடுகள்ல கிடைச்ச பாலை மதிப்புக்கூட்டியும், பப்பாளி, வாழைப்பழம்னு சில பழங்கள்ல இருந்தும் ‘மியா ஆர்கானிக்’கிற பிராண்டுல சோப்பு தயாரிச்சோம். இது கிராமங்கிறதால மூலிகை சோப்பு பத்தின விழிப்புணர்வு மக்கள்கிட்ட ரொம்பவே குறைவா இருந்துச்சு. அதனால வாரத்துக்கு 50 – 100 சோப்புகள்தான் விற்பனையாச்சு. ஆயிரக்கணக்கான சோப்பு களைத் தெரிஞ்சவங்களுக்கு விலை இல்லாம சாம்பிள் கொடுத்து கருத்துக்களைக் கேட்டோம்.

பழங்கள்ல தயாரிச்ச சோப்புக்கு வரவேற்பு கிடைக்காததால, ஆட்டுப்பாலுடன், எங்க தோட்டத்துல வளர்த்த பன்னீர் ரோஜா, கற்றாழை, வெட்டிவேர், வேப்பிலை உள்ளிட்ட பல்வேறு மூலிகைத் தாவரங்கள்ல இருந்து சோப்பு தயாரிச்சோம்.

சுத்திமுத்தி இருக்கிறவங்க எங்களைப் பத்தி பேசுறதைக் கண்டுக்காம, ஜெயிச்சு ஆகணும்ங்கிற வெறியோட நாங்க உழைச்சோம். எனவே, சோப்பு விற்பனையில ஓரளவுக்கு வருமானம் வர்ற வரைக்கும் உள்ளூர்ல பெரிசா யார்கிட்டயும் சோப்பு தயாரிப்பு பத்தி நாங்க சொல்லிக்கல. ஆர்டர்கள் ஓரளவுக்கு வர ஆரம்பிச்சதும் ரீடெயில் ஷாப் ஒண்ணு ஆரம்பிச்சோம். உள்ளூர் மக்கள் எங்களோட சோப்புகளைப் பயன்படுத்த ஆரம்பிச்சாங்க” என்பவருக்கு, டிஜிட்டல் மார்க்கெட்டிங் பெரிதும் கைகொடுத்திருக்கிறது.

“ஆரம்பத்துல சோப்பு விற்பனை நிலையா இல்லாத தால, விவசாயத்துல கிடைச்ச வருமானத்தை பிசினஸுக்குப் பயன்படுத்திதான் நிலைமையை சமாளிச்சோம். ஓரளவுக்கு அனுபவம் கிடைச்சதும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்ல இறங்கினோம். அப்புறமாதான் வெளியூர் ஆர்டர்களுடன், படிப்படியா வருமானமும் அதிகரிக்க ஆரம்பிச்சது. தரமான பொருளைக் கட்டுப்படியான விலையில கொடுத்தா மக்கள் நம்மைத் தேடி வருவாங்கன்னு புரிஞ்சது. அதனால, வெவ்வேறு சோப்புகளைத் தயாரிக்க ஆரம்பிச்சு, இப்ப 10 வகையான மூலிகை சோப்புகளைத் தயாரிக்கிறோம்” என்று பெரு மிதத்துடன் சொன்ன மகா லிங்கம், ஆட்டுப்பால் சோப்பின் தயாரிப்பு நுணுக்கங்களைப் பகிர்ந்தார்.

ஆட்டுப்பால், மூலிகைகளில் சோப்பு... மதிப்புக்கூட்டலில் மகத்தான வருமானம்... கலக்கும் ஈரோடு தம்பதி!

“ஆட்டுப்பாலைப் பயன் படுத்தி மாதம்தோறும் சராசரியா 1,200 சோப்புகள் தயாரிக்கிறோம். அதுக்கு மொத்தமா 24 லிட்டர் பால் தேவைப்படுது. நாங்க வளர்க்கிற ரெண்டு ஆடுகள் மூலமா கிடைக்கிற பாலைத் தவிர, தேவைக்கேற்ப ஒரு லிட்டர் ஆட்டுப் பாலை 150 ரூபாய்க்கு உறவினர்கள் மற்றும் விவசாயிகள்கிட்ட வாங்குவோம். கறந்த பாலை வாங்கினதுமே, ஐஸ்க்ரீம் தயாரிப்புக்குப் பயன்படும் குளிர்சாதனப் பெட்டியில வெச்சு ‘ஐஸ்க்யூப்’ மாதிரி பாலை கட்டியா மாத்திடு வோம். தொடர்ந்து கட்டி யாவே வச்சிருந்து, தேவைக் கேற்ப அதனுடன் தேங்காய் எண்ணெய், பாதாம் விழுது, பூந்திக்கொட்டை சேர்த்து, கூழ் பதத்துக்கு சோப்புக் கரைசலை மாத்தி மோல்டு பாக்ஸ்ல ஊத்தி 24 மணி நேரத்துக்கு காத்தோட்டமா வச்சிருந்தா கட்டியா மாறிடும்.

பிறகு, 100 கிராம் எடை அளவுக்கு கட் பண்ணி, 35 நாள்களுக்கு மூடிய அறையில வச்சிருந்து பேக்கேஜிங் பண்ணி விற்பனைக்கு அனுப்புவோம். இதே முறையில ஆட்டுப்பாலுக்குப் பதிலா தண்ணீரைச் சேர்த்து இதர மூலிகை சோப்புகளைத் தயாரிப்போம். இந்தச் சோப்பு களை வருஷக்கணக்குல வச்சிருந்து பயன்படுத்தலாம். சோப்பு தயாரிப்புல தேங்காய் எண்ணெய் முக்கியமான மூலப்பொருள். இதுக்காக, எங்க தோட்டத்துல கிடைக் கிற தேங்காய்ல இருந்தே எண்ணெய் தயாரிச்சுக் கிறோம். ஆட்டுப்பால் சோப்பு 90 ரூபாய்க்கும், மற்ற சோப்பு களை 65 ரூபாய்க்கும் விற்பனை செய்றோம்” என்றார் உற்சாகத்துடன்.

தினமும் 1,200 சோப்பு களைத் தயாரிப்பவர்கள், மாதத்தில் 15 தினங்களுக்கு உற்பத்தி, மற்ற தினங்களில் பேக்கேஜிங் மற்றும் மார்க்கெட்டிங் பணிகளைக் கவனிக்கின்றனர். ஆறு பணியாளர்களுடன் மாதத்துக்கு 15,000-க்கும் அதிகமான சோப்புகளை விற்பனை செய்து, ஆண்டுக்கு ரூ.70 லட்சத்துக்கு மேல் வர்த்தகம் செய்கின்றனர்.

தங்களின் புது முயற்சியான பற்பசை தயாரிப்பு பற்றி சொன்ன பரமேஸ்வரி, “காலையில எழுந்ததும் பல் தேய்க்க பயன்படுத்துற பற்பசையில இருந்து நாள் முழுக்க நாம பயன்படுத்துற பெரும்பாலான பொருள்கள்லயும் ரசாயனம் முக்கியமான பங்கு வகிக்குது. அதனால, சோப்புக்கு அடுத்து இயற்கை யான முறையில பற்பசை தயாரிப்புலயும் இறங்கினோம். கருவேலம் பொடி, கடுக்கா, கிராம்பு, புதினா, திரிபலா, கருப்பட்டி, தேங்காய் எண்ணெய்னு 10 விதமான பொருள்களைப் பயன்படுத்தி, ‘மியோ டென்ட் ‘ங்கிற பிராண்டுல பற்பசை தயாரிக்கிறோம். ஷாம்பு, பாத்திரம் துலக்கிற திரவம்னு புதுப்புது யோசனைகளையும் செயல்படுத்தத் திட்டமிட்டிருக் கோம். மார்க்கெட்டிங் விஷயங்களை என் கணவரும், ஆன்லைன் விற்பனையை அவரின் தங்கையும் கவனிச்சுக்க, உற்பத்தி விஷயங்களை நான் பார்த்துக் கிறேன். குடும்பமா உழைக்கணும்; மக்களின் ஆரோக்கியத்துக்கான பொருள்களைக் கட்டுப் படியான விலையில தரணும்ங்கிற எண்ணத்து டன் தொடர்ந்து இயங் குறோம்” என்று எதிர்காலத் திட்டங்களை நம்பிக்கை யுடன் கூறினார்.

“நம்ம விருப்பத்துக்கு ஒரு பொருளைத் தயாரிச் சுட்டு அதை மக்கள்கிட்ட கொண்டுபோகணும்னு நினைக்கக் கூடாது. மக்களுக்குத் தேவையான பொருள்களை சரியா தயாரிச்சாதான் மக்கள் வாங்குவாங்க. அதுலயும் நம்ம தயாரிப்பு தனித்துவமா இருந்தாதான் போட்டியை சமாளிச்சு ஜெயிக்க முடியும். ஆரம்பத்துல பல தடைகள் வரலாம். பொறுமையா அதையெல்லாம் சரிசெஞ்சா, ஒருகட்டத்துல மக்களே நம்மைத் தேடி வருவாங்க. அதுவரைக்கும் நம்பிக்கையை இழக்காம பொறுமை யுடன் காத்திருக்கணும்” என்று சக்சஸ் டிப்ஸுடன் முடித்தார் மகாலிங்கம்.