கொரோனாவின்போது முதன்முறையாக ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது. முதலில் நோய்த் தொற்றுக்கு பயந்து பலரும் ஊரடங்கைப் பின்பற்றினர். போகப் போக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு குடும்பத்தை நடத்த மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இது நடுத்தர மக்களுக்கும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் மிக பெரிய அடியாக விழுந்தது. ஆனால், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆனார்கள். அது எப்படி, மக்களுக்கிடையே இவ்வளவு பெரிய ஏற்றத் தாழ்வுகள்? ஊரடங்கு எல்லோருக்கும் பொதுவான நிலையில் ஏழைகள் இன்னும் ஏழைகள் ஆனதும் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆனதும் எப்படி?


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
2022-ம் ஆண்டிற்கான ஆக்ஸ்பாம் டாவோஸ் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு இந்தியாவில் 40 பில்லியனர்கள் அதிகரித்துள்ளனர். கோவிட் நெருக்கடியின்போது இந்தியாவில் வாழும் பணக்காரர்கள் தங்கள் செல்வத்தை இரட்டிப்பாக்கி, கிட்டத்தட்ட $720 பில்லியன் சொத்து மதிப்புகளைக் கொண்டுள்ளனர். இந்த மதிப்பு மொத்த மக்கள் தொகையில் 40% ஏழை மக்களின் சொத்து மதிப்பைவிட அதிகமாகும்.
இதற்குக் காரணம் தொற்று நோய் காலத்தில் உலகளாவிய நிறுவனப் பங்குகளின் விலைகள், கிரிப்டோகரன்சி போன்றவற்றின் மதிப்பு உயர்ந்ததுதான். இதனால், உலகின் 500 பணக்காரர்கள் கடந்த ஆண்டில் $1 டிரில்லியனுக்கும் நிகரான சொத்து மதிப்பைச் சேர்த்தனர். தற்போது பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் ஸ்விட்சர்லாந்தைக் காட்டிலும் இந்தியாவில் அதிகமான பில்லியனர்களைக் கொண்டுள்ளது என்று ஆக்ஸ்பாம் தெரிவித்துள்ளது.
இந்திய அரசாங்கத்தின் வரி விதிப்புக் கொள்கை பணக்காரர்களுக்கு ஆதரவாக இருப்பது மற்றுமொரு காரணம். அரசின் கொள்கைகளான செல்வ வரி ஒழிப்பு, பெருநிறுவனவரிகள் குறைப்பு மற்றும் மறைமுக வரிவிதிப்பு போன்றவை பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக மாற்றியது.
அதே நேரத்தில், 2020-ம் ஆண்டிலிருந்து ஒருவரின் ஒரு நாள் தேசிய குறைந்தபட்ச ஊதியம் 178 ரூபாய் ($2.4) ஆக உள்ளது. 29,000 வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் அறக்கட்டளைகள் வரி ஏய்ப்பு செய்துள்ளதையும் மேற்கோள் காட்டியுள்ளது.

சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் தனியார்மயமாதல் பெருகி வருவதும், உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு மத்திய அரசிடமிருந்து பெறப்படும் நிதியுதவி குறைக்கப்பட்டதும் மக்களிடையே ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தியுள்ளது. நகர்ப்புற வேலையின்மை 15% ஆக உயர்ந்துள்ளது. உலகின் ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்களில் நான்கில் ஒரு பகுதியினர் இந்திய தேசத்தில் உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மக்கள் தொகையில் 10% பணக்காரர்களுக்கு சுகாதாரம் மற்றும் கல்வியில் முதலீடு செய்ய 1% கூடுதல் கட்டணம் விதிக்க வேண்டும் என்று ஆக்ஸ்பாம் பரிந்துரைத்துள்ளது. மேலும், இந்தியாவில் வாழும் பணக்கார பில்லியனர்களின் செல்வமே, குழந்தைகளின் பள்ளி மற்றும் உயர் கல்விக்கு 25 ஆண்டுகள் நிதியளிக்க போதுமானதாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.