Published:Updated:

திறமை இருந்தால் கொல்லைப்புறத்திலும் தொழில் தொடங்கலாம்!

 ரஜ்னி பெக்டர்
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜ்னி பெக்டர்

பத்மஸ்ரீ ரஜ்னியின் கிரீமிகா பிசினஸ் வெற்றி ரகசியம்..!

B U S I N E S S

சுப.மீனாட்சி சுந்தரம்

கடந்த டிசம்பரில் ஐ.பி.ஓ வந்த மிஸஸ் பெக்டார்ஸ் ஃபுட் ஸ்பெஷாலிட்டி நிறுவனத்துக்கு பங்குச் சந்தை முதலீட்டாளர்களிடம் உற்சாக வரவேற்பு கிடைத்ததுடன், முதல் சில நாள்களிலேயே கணிசமான லாபத்தையும் அள்ளித் தந்தது. இந்த நிறுவனத்தின் புரொமோட்டர் மிஸஸ் பெக்டருக்கு தற்போது பத்மஶ்ரீ விருது தந்து கெளரவித்திருக்கிறது மத்திய அரசாங்கம். யார் இந்த மிஸஸ் பெக்டர், அவரது குடும்பப் பின்னணி என்ன என்கிற கேள்வி களுக்கான சுவாரஸ்யமான பதிலை இனி பார்ப்போம்.

சுப.மீனாட்சி சுந்தரம்  
சுப.மீனாட்சி சுந்தரம்  

பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் 1940-ல் பிறந்தவர் ரஜ்னி பெக்டர். இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு டெல்லிக்கு வந்தார். இளம் வயதிலேயே பஞ்சாபில் உள்ள லூதியானாவில் பெக்டருடன் திருமணம். மூன்று மகன்களை வளர்த்து அவர்களை உறைவிடப் பள்ளிக்கு அனுப்பிய பின்னர் பஞ்சாபில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் படித்தார்.

 ரஜ்னி பெக்டர்
ரஜ்னி பெக்டர்

ஆரம்பத்திலிருந்தே சமையல் மீது அதீத ஆர்வம் கொண்டிருந்த பெக்டர், உணவு அல்லது சமையல் சம்பந்தமாக லூதியானாவில் நடத்தப் படும் வகுப்புகளுக்கு தவறாமல் ஆஜராகிவிடுவார். குடும்பத்தில் நடத்தப்படும் விருந்துகளுக்கு விதம் விதமான உணவு வகைகளை, ஐஸ் க்ரீம்களைத் தயாரித்து நண்பர் களுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்து ருசி பார்க்கச் செய்வார்.

1960-70-களில் கேட்டரிங் செய்வதற்கு உணவு வழங்குநர்கள் என்று தனியாக யாரும் இல்லை. ஆரம்பத்தில் நண்பர்கள், உறவினர்கள் வீட்டு விருந்துக்கு மட்டும் உணவு ஏற்பாட்டை செய்யும் பணியை மேற்கொண்ட ரஜ்னி, வணிக ரீதியாக எந்த செயல்பாடுகளையும் தொடங்க வில்லை. ஆனால், தன்னுடைய தனித்தன்மையை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் லூதியானாவில் பிரபல ஐஸ்க்ரீம் ஸ்டாலுக்கு அருகில் தன்னுடைய சொந்த ஐஸ்க்ரீம் ஸ்டாலை நிறுவினார். ஆச்சர்யப்படும் விதத்தில் பிரபல பிராண்ட் ஐஸ் க்ரீமைவிட ரஜ்னியின் ஐஸ்க்ரீமை மக்கள் அதிகம் விரும்பினார்கள். இது அவருக்கு மிகப்பெரிய நம்பிக்கை தந்தது.

ஐஸ்க்ரீம், பேக்கரி என்று ஆரம்பித்து, 1980-களின் முற்பகுதியில் கணவரின் உதவியுடன் ‘க்ரீமிகா’ என்ற பெயரில் பிராண்ட் பதிவு செய்யப்பட்டது. விளம்பரங்கள் ஏதும் இல்லாமல் வாய்வழி வார்த்தை கள் மூலமாக மட்டுமே வளர்ந்தது க்ரீமிகா.

வளர்ந்த மகன்கள் ஒவ்வொருவரும் தாயாரின் தொழிலில் காலடி எடுத்து வைத்தனர். தாராளமயமாக்கலுக்குப் பின் பன்னாட்டு நிறுவனங்கள் ஒவ்வொன்றும் இந்தியாவில் நுழைந்த போது வந்த மெக்டொனால்ட் நிறுவனத்துக்கு பன் தயாரித்து வழங்கும் ஒப்பந்தம் கிடைத்தது. ஓராண்டு முழுவதும் நீடித்த பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு ஒப்பந்தம் கைகூடியது. ஆனால், ஆரம்ப காலத்தில் ஏற்பட்ட அதிகப் படியான நஷ்டம் ரஜ்னியை சோர்வடையச் செய்தது. முதல் பிளான்ட் லூதியானாவில் அமைக்கப் பட்டது. இப்போது டெல்லி, மும்பை, பெங்களூரு எனப் பல்வேறு இடங் களிலும் பன் தயாரிக்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக மெக்டொ னால்ட் நிறுவனத்துக்கு தொடர்ந்து பன்களை வழங்கி வருகிறது.

அதே காலகட்டத்தில், சிகாகோவைத் தளமாகக் கொண்ட குவாக்கர் ஓட்ஸுக்கு சாஸ்கள், மயன்னீஸ், மில்க் ஷேக் சிரப் மற்றும் பல சுவையூட்டிகளையும் ‘குவாக்கர் க்ரீமிகா’ என்ற பெயரில் வழங்கத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் குவாக்கரில் உரிமையாளர் மாற்றம் ஏற்பட்டபோது, புதிய உரிமை யாளர்கள் இந்த விற்பனையைத் தொடர விரும்பாததால், சாஸ் விற்பனையை கிரீமிகாவிடமே தந்து விட்டது. க்ரீமிகா, மிஸஸ் பெக்டர் ஃபுட் ஸ்பெஷாலிட்டி பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் சாஸ் சந்தையில் வலம் வரத் தொடங்கியது.

 ரஜ்னி பெக்டர்
ரஜ்னி பெக்டர்

பெக்டரின் 3 மகன்களுக்கு இடையே வணிகம் பிரிக்கப்பட்டது. அக்‌ஷய் பெக்டர் இப்போது மிஸஸ் பெக்டரின் பிசினஸை (சாஸ்கள், ரொட்டி , சிரப்ஸ்) கையாள்கிறார். மற்ற இரண்டு மகன் களான அனூப் மற்றும் அஜய் க்ரீமிகா பிராண்டின்கீழ் பிஸ்கட் வணிகத்தைக் கையாள்கின்றனர். 2006-ம் ஆண்டில் 100 கோடி விற்பனையை எட்டிய க்ரீமிகா 2011-12-ல் 650 கோடி ஆனது.

லூதியானாவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், இன்று பிரட் (ரொட்டி) பிஸ்ஸா பேஸ் (தளம்) போன்றவற்றை பர்கர் கிங், பிட்ஷா ஹட், இந்தியன் ரயில்வே போன்ற நிறுவனங் களுக்கு வழங்குவதுடன், அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இவை தவிர, காட்பரீஸ், ஐ.டி.சி போன்ற நிறுவனங்களுக்கும் பிஸ்கட்டு களைத் தயாரித்துத் தருகிறது. பில்லாவூர், ராஜ்புரா, தஹலிவால், கிரேட்டர் நொய்டா, கபோலி, பெங்களூரு ஊர்களில் உள்ள ஆலைகளில் 4,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட இந்த நிறுவனத்தின் தற்போதைய விற்பனை ரூ.1,000 கோடி.

“வெற்றிக்கு குறுக்கு வழி என்று எதுவும் கிடையாது. உணவு வணிகம் என்பது மிகவும் தந்திர மானது. பாதுகாப்பு நடவடிக் கைகள் மிகவும் கவனமாகப் பின்பற்றப்பட வேண்டும். எங்கள் தயாரிப்புகளுக்கான சமையல் குறிப்புகளை நான்தான் தயாரிக் கிறேன். சுவை பார்த்து, தேர்வு செய்கிறேன்” என்கிறார் ரஜ்னி.

‘‘ஒரு வணிகம் பெரிதாகும்போது ஊழியர்களை நிர்வாகம் செய்வது சவாலாக இருக்கும். ஆனால், ஊழியர்களிடம் அன்பாக இருங்கள். அதே நேரத்தில், எங்கே கண்டிப்பு காட்ட வேண்டுமோ அங்கே கண்டிப்பு காட்டுங்கள்” என்று சொல்லும் ரஜ்னி பெக்டாரின் வெற்றி, சொந்த தொழிலைத் தொடங்க வேண்டும் என்று கனவு காணும் எண்ணற்ற பெண்களுக்கு ஓர் உத்வேகம். சரியான திறன்களும் ஆர்வமும் இருந்தால் கொல்லைப்புறம் கூட ஒரு தொழிலைத் தொடங்க சிறந்த இடமாக இருக்கலாம். ஆமாம், 1970-களில் தனது வீட்டின் பின்புறத்தில்தான் ரஜ்னி பெக்டர் தனது வணிகத்தைத் தொடங்கினார்.

இப்போது ரஜ்னியின் பேரன் வரை வணிகத்துக்கு வந்து விட்டார்கள். அனைத்துக்கும் வித்தாக இருக்கும் இந்தப் பெண் தொழில்முனைவரின் தொழில் முயற்சி பாராட்டத்தக்கது.