Published:Updated:

மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி தொடங்கியதால் உள்நாட்டு உற்பத்திக்கு பாதிப்பா?

பாமாயில் இறக்குமதி
பாமாயில் இறக்குமதி

நல்லெண்ணெய், கடலெண்ணெய் விலை மிகவும் அதிகமாக இருப்பதால் வருமானம் குறைவாக உள்ள குடும்பங்களுக்கு பாமாயில்தான் சாய்ஸ். எனவே, இறக்குமதியைக் கைவிட முடியாத சூழல்.

இந்தியாவுக்கு மலேசியா, இந்தோனேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில், மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டு பாமாயில் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறப்பட்டது. மேலும், கடந்த ஜனவரியில் குடியுரிமைச்சட்டம், காஷ்மீர் பிரச்னை தொடர்பாக மலேசிய அரசு தெரிவித்த கருத்து, மத்திய அரசுக்கு எதிராக இருந்ததால் இரு நாட்டு உறவில் பாதிப்பு ஏற்பட்டது. அதிரடியாக சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டது.

பாமாயில் இறக்குமதி
பாமாயில் இறக்குமதி
vikatan

இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி, போக்குவரத்து ஆகியவை வெகுவாகப் பாதிக்கப்பட்டன. பொதுவாக சமையல் எண்ணெய் பயன்பாட்டைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு 70% அளவுக்கு இறக்குமதி சமையல் எண்ணெய்தான் கைகொடுத்துவருகிறது. உள்நாட்டு உற்பத்தி 30% அளவுக்குத்தான் இருந்துவருகிறது. எனவே, மலேசியாவிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி செய்ய பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. அதையடுத்து இதுகுறித்து மத்திய அரசு பரிசீலித்து, இறக்குமதியைச் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதித்தது.

தற்போது மலேசியாவில் புதிய அரசு பொறுப்பேற்றபின் இந்தியா மலேசியாவுக்கு இடைப்பட்ட உறவு மேம்பட்டுள்ளது. எனவே, இந்தியாவிலிருந்து 1 லட்சம் டன் அரிசி இறக்குமதி செய்ய மலேசியா ஒப்புக்கொண்டது. அதேபோல மலேசியாவிலிருந்து 2 லட்சம் டன் சுத்திகரிக்கப்படாத பாமாயில் இறக்குமதி செய்ய இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இந்த பாமாயில், ஜூன், ஜூலை மாதத்தில் இந்தியாவுக்கு வந்துசேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வி.கிருஷ்ணமூர்த்தி
வி.கிருஷ்ணமூர்த்தி
vikatan

இந்தியாவுக்கு பாமாயில் இறக்குமதிக்கான தேவை குறித்து, மதுரை, எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துகள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் வி.கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ``தரமான 1 லிட்டர் நல்லெண்ணெய் ரூ.280 மொத்த விலைக்குக் கிடைக்கிறது. 1 லிட்டர் கடலை எண்ணெய் ரூ.165 - 170 மொத்த விலைக்குக் கிடைக்கிறது. 1 லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் ரூ.110 மொத்த விலைக்குக் கிடைக்கிறது. சுத்திகரிக்கப்பட்ட தவிட்டு எண்ணெய், 1 லிட்டர் ரூ.110 மொத்த விலைக்குக் கிடைக்கிறது. ஆனால், பாமாயில் ஒரு லிட்டர் ரூ.75 மொத்த விலைக்குக் கிடைக்கும். எனவே, ஏழைகளின் சமையல் எண்ணெய் என்று பாமாயிலைக் கூறலாம்.

பாமாயில் இறக்குமதியால் உள்நாட்டு உற்பத்தியில் பாதிப்பு இருக்கத்தான் செய்யும். ஆனால், முழுமையாக உள்நாட்டு உற்பத்தியையே நம்பும் அளவுக்கு தன்னிறைவு அடையவில்லை. ஓர் ஆண்டுக்கு சுமார் 1.60 லட்சம் டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. அதன்மூலம்தான் பெருகிவரும் நுகர்வோரின் தேவையைப் பூர்த்திசெய்ய முடிகிறது. குறிப்பாக, நல்லெண்ணெய், கடலை எண்ணெய் விலை மிகவும் அதிகமாக இருப்பதால் வருமானம் குறைவாக உள்ள குடும்பங்களுக்கு பாமாயில்தான் சாய்ஸ். எனவே, இறக்குமதியைக் கைவிட முடியாத சூழல்" என்றார்.

பாமாயில்
பாமாயில்
vikatan

உலகமயமாக்கலுக்குப் பின், சிகாகோவிலிருந்து சோயா எண்ணெய் இறக்குமதியாகிறது. அர்ஜென்டினாவிலிருந்து சோயா மற்றும் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியாகிறது. மலேசியா, இந்தோனேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதியாகிறது. எனவே, எண்ணெய் விலை நிர்ணயமும், தங்க விலை நிர்ணயம்போல சர்வதேச நாடுகளைச் சார்ந்துதான் முடிவெடுக்க வேண்டியுள்ளது. நம் நாட்டில் விவசாய நிலமும் உற்பத்தியும் குறைந்துகொண்டே வருவதால், எண்ணெய் விலை நிர்ணயத்தில் சர்வதேச நாடுகளைச் சார்ந்திருப்பது காலத்தின் கட்டாயம்.

அடுத்த கட்டுரைக்கு