Published:Updated:

பத்தமடை to பாரீஸ்... விக்டோரியா மகாராணி வியந்த பத்தமடை பாய்!

 பத்தமடை பாய்
பிரீமியம் ஸ்டோரி
பத்தமடை பாய்

ஜி.ஐ பிசினஸ்

பத்தமடை to பாரீஸ்... விக்டோரியா மகாராணி வியந்த பத்தமடை பாய்!

ஜி.ஐ பிசினஸ்

Published:Updated:
 பத்தமடை பாய்
பிரீமியம் ஸ்டோரி
பத்தமடை பாய்

'பாய் போட்டுப் படுத்தா நோய் விட்டுப் போகும்’ என்பது கிராமத்துப் பழமொழி. பொதுவாக, பாய் என்று சொன்னதும் அனைவரின் நினைவுக்கும் வருவது பத்தமடை பாய்தான். தமிழகம் முழுவதும் பல நகரங்களில் பாய் உற்பத்தி செய்யப்பட்டபோதிலும்கூட, பத்தமடை பாய்க்கு மட்டும் என்ன சிறப்பு?

திருநெல்வேலியில் இருந்து 24 கி.மீ தொலைவில் இருக்கும் சிறு நகரமான பத்த மடையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பாய் செய்யும் தொழில் இருந்து வந்திருக்கிறது. இங்கு குடும்பத்துடன் சேர்ந்து பாய் செய்யும் தொழிலைச் செய்கிறார்கள். முன்பெல்லாம், ஆண்களும் பாய் உற்பத்தி தொழிலில் தீவிரம் காட்டிய நிலையில், இப்போது பெண்கள் மட்டுமே அதிகம் இந்தத் தொழிலில் ஈடுபடுகிறார்கள்.

இங்குள்ள ‘பத்தமடை லெப்பை உயர்ரக பாய் நெசவாளர் தொழிற்கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம்’ 1954-ல் தொடங்கப் பட்டது. இதில் இப்போது 331 பேர் உறுப்பினர் களாக இருக்கிறார்கள். இது தவிர, மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் நூற்றுக்கும் அதிகமான குழுக்கள் இயங்குகின்றன.

பத்தமடை to பாரீஸ்... விக்டோரியா மகாராணி வியந்த பத்தமடை பாய்!

உடலுக்குக் குளிர்ச்சி தரும் பாய்கள்!

பத்தமடை லெப்பை உயர்ரக பாய் நெசவாளர் கூட்டுறவு சங்க நிர்வாகிகளிடம் பேசியபோது, “முன்பெல்லாம் பத்தமடை பாய்க்கு மார்க்கெட்டில் ஏகப்பட்ட கிராக்கி இருந்துச்சு. கல்யாணம் முடிஞ்சதும் புதுத் தம்பதிக்குப் பொருள்களோடு சேர்த்து பாயும் வாங்கிட்டுப் போவது சம்பிரதாயமா இருந்துச்சு. மெத்தை உபயோகம் அதிகமான பிறகு, பாய்க்கும் இந்த மரியாதை குறைஞ் சிட்டதால் தொழிலும் அந்த அளவுக்கு இல்லாமப் போயிருச்சு.

நாம் சாதாரணமா வீடுகளில் பயன்படுத்தும் பாய்களின் கோரை தடிமனா இருக்கும். அதைக் கரூர், திருச்சி உள்ளிட்ட வெளியிடங்களில் இருந்து வாங்கிவந்து செய்றோம். அந்த வகை பாய்கள் 100 ரூபாய்க்குக் கிடைக் கும். ஆனா, தாமிர பரணி நதிக்கரை யோரம் விளையும் கோரைகளைச் சேகரித்துத் தயாரிக்கப்படும் பாய்கள் மெல்லிசா இருக்கும். துணி போலக்கூட பாய்களைச் செய்ய முடியும். அந்த மாதிரியான பாய்களைச் செய்வதற்கு 15 நாள் வரைகூட ஆகும். அதனால் அதன் விலையும் அதிகம் இருக்கும். பொதுவா, பத்தமடையில், நான்கு வகையான பாய்கள் தயாராகின்றன. 100 ரக பாய்கள் முரட்டு நெசவு பாய்கள் வெளியூர் கோரைகளில் இருந்து செய்யப்படுபவை. ஒரு பாய் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நடுத்தர நெசவு பாய் என்னும் 120 ரக பாயானது தாமிர பரணி நதிக்கரையோரம் கிடைக்கும் கோரையில் இருந்து செய்யப்படுகிறது. இது சற்று மெல்லியதாக இருக்கும். திருமண வீடுகளில் பெண், மாப்பிள்ளை பெயரையும் தேதியையும் எழுதி வண்ணமயமாக உற்பத்தி செய்யபப்டும். இது 500 ரூபாயிலிருந்து 7,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

உயர்ரகம் கொண்டதாக 140 ரகம் எனப்படும் நுண் நெசவு பாய்கள் தயாரிக்கப்படுகின்றன. இது கோரையை நீண்ட நாள்கள் தண்ணீரில் ஊரவைத்து மிக மெல்லியதாக இழைத்து நூல் போல எடுத்து நெய்யப்படும். ஏறக்குறைய துணி போலவே இருக்கும். கையில் சுருட்டி எடுத்து பையில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு துணி போலவே இருக்கும். இதிலும் படங்கள், எழுத்துகள் வடிவமைக்கப்படுவதால் இதன் விலை ரூ.10,000 முதல் ரூ.1 லட்சம் ரூபாய் வரை தரத்துக்கும் வேலைப்பாட்டுக்கும் ஏற்ப இருக்கும்” என்கிறார்கள்.

பத்தமடை to பாரீஸ்... விக்டோரியா மகாராணி வியந்த பத்தமடை பாய்!

பத்தமடை பாய்க்கு புவிசார் குறியீடு!

ஐந்து தலைமுறைகளுக்கும் மேலாக இந்தத் தொழில் பத்தமடையில் நடக்கிறது. 2013-ம் ஆண்டு பத்தமடை பாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்தது. அதைத் தங்கள் கிராமத்துக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரமாகப் பாய் தயாரிக்கும் குடும்பத்தினர் அனைவரும் கருதுகிறார்கள்.

இந்தத் தொழில் என்பது நெசவுத் தொழிலைப் போன்ற தாகவே இருக்கிறது. தரையில் இருந்து அரை அடி உயரத்தில் தறி வைக்கப்படுகிறது. அதில் சீரான இடைவெளியில் நூல் களைக் கோத்து வைத்துக் கொள்கிறார்கள். பின்னர் நூல்களுக்குள் கோரைகளை ஒவ்வொன்றாக வைத்து நெசவு போல பாய் உற்பத்தியைச் செய்கிறார்கள். குத்துக்காலிட்டு உட்கார்ந்தபடியே பாய் தயாரிப்பில் மணிக்கணக்கில் ஈடுபடுவதால், கழுத்து வலி உள்ளிட்ட பிரச்னைகள் பெண்களுக்கு ஏற்படுகின்றன. 120 ரக நடுத்தர நெசவு பாய் செய்வதற்கு மூன்று நாள் வரை ஆகும். அதற்கான கூலியாக ரூ.500 முதல் 700 வரை கிடைக்கும். அதனால் பலர் பீடி சுற்றும் தொழிலுக்கு மாறிவிட்டனர்.

பத்தமடை to பாரீஸ்... விக்டோரியா மகாராணி வியந்த பத்தமடை பாய்!

வி.ஐ.பி-க்களை கவர்ந்த பாய்...

துணிபோல நெய்யப்பட்ட பாயைப் பார்த்து விக்டோரியா மகாராணி வியந்துள்ளார். இங்கிலாந்து அரண்மனையில் அந்தப் பத்தமடை பாய் இப்போதும் அலங்காரப் பொருளாகக் காட்சியளிக்கிறது. அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது பத்தமடை பாயின் சிறப்பைக் கண்டு பாராட்டி யுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடி மிர் புடின், தனக்குப் பரிசாக வழங்கப்பட்ட பாயை பத்திரமாக பாதுகாத்து வருகிறாராம்.

திருநெல்வேலி மாவட்டத் துக்கு எந்த வி.ஐ.பி வந்தாலும் அவர்களுக்கு நினைவுப் பரிசாக பத்தமடை பாய் தரப்படுவது வழக்கம். முன்பு உள்ளூரில் மட்டும் விற்பனை செய்யப்பட்ட பாய்கள் இப்போது நாடு முழுவதும் பல்வேறு நகரங் களிலும் விற்பனை செய்யப்படு கின்றன. அமெரிக்கா, ஃபிரான்ஸ், இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா போன்ற வெளி நாடுகளிலும் விற்பனையாகின்றன.

ஜீனத் பீவி
ஜீனத் பீவி
ரஹ்மத்
ரஹ்மத்

படம் வரையப்பட்ட பாய்கள்...

திருமணத்துக்காக மண மக்களின் பெயர் பொறித்த பாய் தயாரிப்பில் தன் மகள் ரஹ்மத்துடன் மும்முரமாக ஈடுபட்டிருந்த ஜீனத் பீவியிடம் பேசினோம். “எங்க குடும்பத்தில் நான்காவது தலைமுறையா இந்தத் தொழிலில் இருக்கேன். எனக்கு வேறு எந்தத் தொழிலும் தெரியாது. காலையில் எந்திரிச்சதும் பாய் நெய்றதுக்காகத் தறியில் உட்கார்ந் துருவேன். நானும் என்னோட இருக்கும் 20 பேரும் சேர்ந்து ஜீனத் மகளிர் சுயஉதவிக் குழு மூலமா பாய் செஞ்சு விற்குறோம். நாங்க நிறைய பரிசு வாங்கியிருக்கோம். முன்னாள் ஆளுநர் பாத்திமா பீபி எனக்கு பரிசு கொடுத்திருக்காங்க. அப்துல் கலாம் ஐயா கையாலயும் விருது வாங்கிருக்கேன். எங்கப்பா பாயில் திருவள்ளுவர் படம் வரைஞ்சு திருக்குறளை எழுதினார். அவரை அப்ப ஜனாதிபதியா இருந்த பிரணாப் முகர்ஜி பாராட்டி பரிசு கொடுத்தாங்க” என்றார்.

பட்டு நூல் மூலம் பாய்...

பாய்களில் பருத்தி நூல் சேர்ப்பதற்குப் பதிலாகப் பட்டு மூலமாகக் கோக்கப்படுகிறது. அத்துடன், பாய் வேலை முடிந்த தும் அதன் இரு ஓரங்களும் குத்தாமல் இருக்கும் வகையில் அதைச் சரியாக வெட்டியதும் துணியால் தைத்துக் கொடுப்பார்கள். அதற்குப் பதிலாகப் பட்டுத் துணியால் தைத்தும் சிலர் பயன்படுத்துகிறார்கள். ஆர்டருக்கு ஏற்ப செய்து தரப்படுகிறது.

தாமிரபரணி தண்ணீரில் இருக்கும் மருத்துவ குணம் காரணமாகப் பத்தமடை பாய்களுக்கு மார்க்கெட்டில் நல்ல மவுசு இருக்கிறது. இது தவிர, பாய் தயாரிக்க பருத்தி நூல் பயன்படுத்துவதுபோல, கற்றாழைக் குருத்தில் இருந்து எடுக்கப்படும் நாரில் இருந்தும் தயாரிக்கப்படுகின்றன. கற்றாழை மருத்துவக் குணம் கொண்டது என்பதால், இந்த பாய்களுக்கும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு இருக்கவே செய்கிறது. பத்தமடையில் பாய்கள் ஃபேமஸாக இருந்தபோதிலும், கோரைகள் மூலம் பல்வேறு அலங்காரப் பொருள்கள், அழகுசாதனங்களும் தயாரிக்கப் படுகின்றன. பெண்கள் பயன்படுத்தும் கைப்பை, ஜுவல் பாக்ஸ், அர்ச்சனைத் தட்டு, பேனா வைக்கும் ஸ்டாண்ட், விசிறிகள், மணிபர்ஸ் எனப் பல்வேறு பொருள்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பெண்களின் கைப்பை 500 முதல் 600 ரூபாய்க்கும் ஆபரணம் வைக்கும் பெட்டி 390 ரூபாய்க்கும் அர்ச்சனைத் தட்டு 190 ரூபாய்க்கும் விசிறி, பேனா வைக்கும் ஸ்டாண்ட் ஆகியவை 90 ரூபாய்க்கும் மணிபர்ஸ் 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. பத்தமடை பாய் மற்றும் அலங்காரப் பொருள்கள் விற்பனை செய்வதற்காக நெல்லையில் புதிய பேருந்து நிலையம் அருகே தனியாக விற்பனை மையம் தொடங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism