நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

செக்கு எண்ணெய் விற்பனையில் கலக்கும் பட்டுக்கோட்டை நிறுவனம்!

ராகவன், ரகு, ராமானுஜம்
பிரீமியம் ஸ்டோரி
News
ராகவன், ரகு, ராமானுஜம்

தொழில்

எந்தப் பொருளாக இருந்தாலும் அதைத் தரமாகத் தந்தால், மக்கள் திருப்தி அடைவார்கள். அப்படிச் செய்யப்படும் தொழில், தலைமுறைகளைத் தாண்டி நிற்கும் என்பதற்கு ஓர் உதாரணமாகத் திகழ்கிறது பட்டுக்கோட்டையில் இருக்கும் எஸ்.ஆர் அண்ட் கோ ஆயில் நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ராமானுஜம் 50 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த நிறுவனம் இது. அவருக்கு இப்போது 87 வயது. அவரின் மகன்கள் ரகுவும் ராகவனும் அவருடன் சேர்ந்து இந்தத் தொழிலைச் செய் கின்றனர். நாம் ராமானுஜத்திடம் பேசினோம்.

‘‘1930-ல் என் அப்பா சாட்சிநாத செட்டியார், மாட்டுச் செக்கு எண்ணெய் வியாபாரம் செய்யத் தொடங்கினார். தொழிலை அர்ப்பணிப்புடன் நேர்த்தியாகச் செய்துவந்த தால் படிப்படியாக உயரத் தொடங்கியது.

எனக்கு சின்ன வயசுலேயே இந்தத் தொழில் மேல பெரிய ஆர்வம் ஏற்பட்டது. பள்ளிக்குப் போன நேரம் தவிர, மற்ற நேரங்களில் ஆயில் மில்லிலேயே இருப்பேன். எட்டாவது வரை படிச்சேன்; அதன் பிறகு தொழிலைக் கவனிக்க ஆரம்பிச்சுட்டேன்.

இதுல ஓரளவு அனுபவம் கிடைச்ச பிறகு நானே தனியா எண்ணெய் செக்கு ஆயில் ஆரம்பிக்கிறேன்னு சொன்னேன். அவரும் சரின்னு சொல்ல, பட்டுக்கோட்டையில் ரூ.5,000 முதலீட்டில் சிறிய அளவில் தனியாக செக்கு எண்ணெய் தயாரிச்சு விற்க ஆரம்பிச்சேன்.

ராகவன், ரகு, ராமானுஜம்
ராகவன், ரகு, ராமானுஜம்

அப்ப ஒரு பவுன் தங்க நகை விலை ரூ.69. உறவுகாரவங்க, தெரிஞ்சவங்க எல்லாரும் எதிர்த்தாங்க. பவுனோ, இடமோ வாங்கிப் போடுறதை விட்டுவிட்டு, பிசினஸ் ஆரம்பிக்கிறியேன்னு எல்லாரும் கேட்டாங்க. என் அப்பாகிட்ட சொல்லி தடுக்கப் பார்த்தாங்க. ஆனா, எங்க அப்பா அதைக் கேக்கல. அப்பாவோட நம்பிக்கையைக் கெடுத்துரக் கூடாது; மக்கள்கிட்ட நல்ல பேரை வாங்கணும்ங்கிற வைராக்கியத்தோட தனியா தொழிலை ஆரம்பிச்சேன்.

பட்டுக்கோட்டை விவசாய பகுதிங்கிறதால, கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளிடம் நேரடியா, முதல் தரமாக இருக்கக்கூடிய கடலை, எள் போன்றவற்றை வாங்குவேன். அதிலிருக்கும் கல், மண், தூசி போன்றவற்றை நீக்கிவிட்டு, மாட்டு செக்கு மூலம் கடலை, நல்லெண்ணய் ஆட்டுவேன்.

செக்கு எண்ணெயை விற்க நான் எங்கேயும் அலையல. பொருளைத் தரமா தந்தா மக்கள் தேடிவந்து வாங்குவாங்க என்கிற நம்பிக்கையில மில்லில வச்சு விற்க ஆரம்பிச்சேன். என் நம்பிக்கை வீண் போகலை. அதிகாலை 5 மணிக்கு மில்லுக்குள்ள நுழைஞ்சா, இரவு 10 மணிக்குத்தான் வெளியே வருவேன். தொழிலை வளர்க்க அதிகம் கஷ்டப்பட்டேன். நாங்க தயாரிக்கிற எண்ணெய்க்கு சுற்று வட்டாரத்தில் தனி மவுசு உண்டாகப் பல ஊர்களிலிருந்து மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிங்க தேடிவந்தாங்க.

முன்னாடி எல்லாம் சேர் கணக்குலதான் எண்ணெய் விற்போம். 64 சேர் கொண்டது ஒரு குடம்; தோராயமாக, 15 கிலோ இருக்கும். ஒரு சேர் என்பது அரை லிட்டர் இருக்கும். கால் சேர், அரை சேர் என்கிற மாதிரி குவளை யில அளந்து, எண்ணெயை விற்போம்.

ஒரு ஜோடி செக்கு மாடு வேலை செஞ்சா, ஆறு மணி நேரத்துல கடலை, எள் என எதுவாக இருந்தாலும் ஒரு மூட்டைதான் அரைக்க முடியும். எண்ணெய்க்குத் தேவை அதிகமாக இருந்ததால ஒரு ஆள், ஒரு ஜோடி மாட்டை ஆறு மணி நேரத்துக்கு மட்டும் பயன்படுத்திட்டு, அடுத்த ஆறு மணி நேரத்துக்கு வேறு ஆள், வேறு ஜோடி மாடு எனச் சுழற்சி முறையில் வேலை செய்ய வைத்து உற்பத்தியை அதிகப்படுத்தினேன்.

கடலை, எள் வாங்குனுவங்ககிட்ட நான் சரியா பணம் தந்ததால, அவங்க அதை என் மில்லுக்கே கொண்டுவந்து கொடுக்க ஆரம்பிச்சாங்க. ஒரு மூட்டை கடலை அல்லது எள்ளுல ஒரு கைப்பிடி அளவுக்கு எடுத்துப் பார்த்து, அதோட தரத்தை சரியா சொல்லிடுவேன்.

இப்படி பத்து வருடம் வரை ஓடிச்சு. சேர் கணக்கில் விற்பனையான எண்ணெய், லிட்டர் கணக்குக்கு மாறிடுச்சு. மாட்டை வைத்து எண்ணெய் ஆட்டுறதுக்குப் பதிலா பாரம்பர்ய முறையில இரும்பு செக்கு வச்சு, எண்ணெய் உற்பத்தி செய்ய ஆரம்பிச்சோம். மில்லில் கிடைத்த லாபத்தை வச்சே தொழிலை விரிவுபடுத்தினேன். இரும்பில் ஓடக்கூடிய ரோட்டரி செக், கல், மண், தூசி நீக்க மெஷின்னு காலத்துக்கேத்த மாதிரி, அடுத்தகட்டத்தை நோக்கி போனோம். இதனால எண்ணெய் அதிகம் உற்பத்தியானதால, பெரிய கடைத்தெருவுல தனியா ஒரு கடையும் ஆரம்பிச்சேன்.விற்பனை ஜோரா நடந்தது. இன்னைக்கு நாங்க தயாரிக்கிற எண்ணெய் இப்ப எல்லா ஊர்லயும் கிடைக்குது’’ என தனது பிசினஸ் பயணத்தைச் சொல்லி முடித்தார் ராமானுஜம்.

அடுத்து ரகுவிடம் பேசினோம்... ‘‘அப்பா பார்த்த தொழிலை இப்ப நாங்க கவனிச்சுட்டு வர்றோம். நாங்க வந்த பிறகு, நாங்க தயாரிக்கிற கடலை எண்ணெய், நல்லெண் ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற நாட்டுச் செக்கு எண்ணெய் தயாரிப்புகளுக்கே முக்கியத்துவம் தர்றோம்.

செக்கு எண்ணெய் விற்பனையில் 
கலக்கும் பட்டுக்கோட்டை நிறுவனம்!

16 கிலோ கொண்ட ஒரு டின் கடலை எண்ணெய் ரூ.2,800, நல்லெண்ணெய் ரூ.3,300, ஒரு லிட்டர் கடலை எண்ணெய் ரூ.165, நல்லெண்ணெய் ரூ.210-க்கு விற்பனை செய்கிறோம். மேலும், நாட்டுச் செக்கில் அரைத்து மூன்று நாள்கள் வரை வச்சுடுவோம். இதன்மூலம் தூசி நீங்கி சுத்தமான எண்ணெய் கிடைக்கும். இந்த எண்ணெயை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்றோம்.

நாங்க தயாரிக்கிற எண்ணெயை ‘ஆனந்தம்’ என்கிற பிராண்ட் பெயர்ல வச்சு விற்கிறோம். எங்க அப்பா ஒரு ஆளா தொடங்கின இந்த நிறுவனத்துல இன்னைக்கு 50 பேருக்கு மேல வேலை பார்க்குறாங்க. எல்லாச் செலவும் போக மாசம் ரூ.3 லட்சம் வரை வருமானம் வருது’’ என்று பேசி முடித்தார்.

70 ஆண்டுகளைத் தாண்டி நடக்கும் இந்த நிறுவனம், நூறு ஆண்டுகளைத் தாண்டிச் செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை!