Published:Updated:

கூகுளை எதிர்க்கும் இந்திய நிறுவனங்கள்... Paytm vs Google விவகாரத்தில் என்ன நடக்கிறது?

Google
Google ( AP Photo/Patrick Semansky, File )

கூகுள் ஆதிக்கம் காரணமாக இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளன.

பேடிஎம் மற்றும் கூகுள் இடையேயான யுத்தம்தான் டெக்னாலஜி உலகின் பரபரப்புச் செய்தி. கடந்த சில வாரங்களாகவே இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையே மறைமுக யுத்தம் நடந்துவந்தது. ஆனால், அக்டோபர் 5-ம் தேதி அதை பொதுவெளியில் போட்டு உடைத்தார் பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா. ``கூகுள் அரசாங்கம் போல செயல்படுகிறது; ஆப் டெவலப்மென்ட் நிறுவனங்களுக்கு வரி விதிக்கிறது; பணத்தை வசூல் செய்யும் இடமாக கூகுள், இந்தியாவைப் பார்க்கிறது. தவிர, இந்திய சட்டங்களை கூகுள் மதிப்பதில்லை’’ எனக் கடுமையான குற்றச்சாட்டுகளை கூகுள் நிறுவனம் மீது விஜய் சேகர் சர்மா தெரிவித்திருக்கிறார்.

பேடிஎம் நீக்கம் முதல்...

கடந்த மாதம் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பேடிஎம் செயலி நீக்கப்பட்டது. ``கூகுள் நிறுவனம் புதிதாகக் கொண்டுவந்த விதிகளின்படி பேடிஎம் செயல்படவில்லை; சூதாட்ட தடுப்பு விதிமுறைகளை பேடிஎம் கடைப்பிடிக்கவில்லை" எனச் சொல்லி கூகுள் அதை நீக்கியது.

ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் பேடிஎம் செயலி கொண்டுவரப்பட்டது. அப்போது, ``நாங்கள் இந்திய ஸ்டார்ட் அப்கள்; இந்திய விதிமுறைகளின்படியே செயல்படுகிறோம். ஆனால், கூகுள் நிறுவனம் இந்திய விதிமுறைகளுக்கு மேலே தனக்கென ஒரு விதிமுறையை உருவாக்குகிறது’’ என பேடிஎம் நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.

30% கமிஷன்

இந்த நிலையில், கூகுள் நிறுவனத்திடமிருந்து இந்திய ஸ்டார்ட் அப்களுக்கு ஒரு நோட்டிஃபிகேஷன் வந்தது. அதில், ஆண்ட்ராய்டு சேவைகளில் கூகுள் பில்லிங் முறையைப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. டிஜிட்டல் சேவைகள், டிஜிட்டல் கன்டென்ட் உள்ளிட்டவற்றுக்குப் பணம் செலுத்தும்போது கூகுள் பில்லிங் முறையைப் பயன்படுத்த வேண்டும் எனவும், அதில் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 30% கமிஷன் தரவேண்டும் எனவும் கூகுள் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இது குறித்து டிக்கெட் கூஸ் நிறுவனர் கார்த்தி ஈஸ்வரமூர்த்தியிடம் பேசினோம். ``கூகுள் ப்ளே ஸ்டோர் மூலமாக நாம் செயலிகளை டவுன்லோடு செய்கிறோம். பெரும்பாலான செயலிகள் இலவசமாகவே உள்ளன. ஆனால், சில செயலிகளை டவுன்லோடு செய்யவே சில டாலர்கள் செலுத்த வேண்டியுள்ளது. அதுபோன்ற சூழலில் ப்ளே ஸ்டோருக்கு சம்பந்தப்பட்ட ஆப் நிறுவனம் பங்கு கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால், தற்போது கொண்டுவந்திருக்கும் முறை கொஞ்சம் வித்தியாமானது. சிசி அவென்யூ, பில்டெஸ்க் போன்ற பேமென்ட் நிறுவனங்களைப் போல, ப்ளே பில்லிங் என்பது கூகுளின் பேமென்ட் வழித்தடம். இதன் மூலமாகப் பரிவர்த்தனை செய்யச் சொல்கிறது கூகுள்.

Paytm
Paytm

பரிவர்த்தனைக்கு கட்டணம் என்றால், நாம் செய்யும் அனைத்துப் பரிவர்த்தனைக்கும் கிடையாது. உதாரணத்துக்கு, அமேசான், ஃபிளிப்கார்ட்டில் ஒரு பொருள் வாங்குகிறோம் என்றால், அதற்குக் கட்டணம் கிடையாது. ஆனால், டிஜிட்டல் மூலமாகவே பணம் செலுத்தி, டிஜிட்டல் மூலமாகவே நுகர்வு செய்யும் விஷயங்களுக்கு இந்த கமிஷன் கேட்கிறது கூகுள். உதாரணமாக, கேமிங் நிறுவனங்களை எடுத்துக்கொள்ளலாம். மொபைல் மூலமாகவே கேம் விளையாடுகிறோம்; அங்கேயே பணம் செலுத்துகிறோம்; இதுபோன்ற பரிவர்த்தனைகளுக்கு கூகுள் பணம் கேட்கிறது’’ என்று அவர் கூறினார்.

கூகுள் ஆதிக்கம்

கூகுள் ஆதிக்கம் காரணமாக இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளன. ``இந்திய டிஜிட்டலுக்கு கூகுள் வழித்தடமாக இருப்பதால், இந்திய சட்டத்துக்கு மேலாகத் தன்னிச்சையான முடிவுகளை கூகுள் எடுக்கக் கூடாது" எனச் சி.சி. அவென்யூ நிறுவனத்தின் தலைவர் விஸ்வாஸ் படேல் தெரிவித்திருக்கிறார்.

தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள செயலிகளில் மூன்று சதவிகிதத்துக்கும் குறைவான செயலிகள் மட்டுமே இந்த வகை பணம் செலுத்தும்படியான சேவைகள் மற்றும் கன்டென்ட்டுகளை வழங்கி வருகின்றன. இவற்றில் 97% செயலிகள் ப்ளே பில்லிங் முறையைப் பயன்படுத்துகின்றன. மீதமுள்ள செயலிகளுக்கு 2021 செப்டம்பர் 30 வரை கால அவகாசம் உள்ளது எனக் கூகுள் முன்னதாகத் தெரிவித்திருந்தது. இந்தச் சர்ச்சைகள் எழுந்தவுடன் இந்தக் கால அவகாசத்தை மேலும் ஆறு மாதத்துக்கு நீட்டித்திருக்கிறது. அதன்படி 2022 மார்ச் 31 வரை இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

Google's headquarters in Mountain View, Calif.
Google's headquarters in Mountain View, Calif.
AP Photo/Marcio Jose Sanchez, File

பேடிஎம் மினி ஆப் ஸ்டோர்

இந்த நிலையில், கூகுள் ப்ளே ஸ்டோருக்குப் போட்டியாக பேடிஎம் நிறுவனம் மினி ஆப் ஸ்டோரை சில நாள்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது. (பேடிஎம் செயலிக்குள்ளாகவே இந்த மினி ஸ்டோர் இருக்கும்). முதல் கட்டமாக, முந்நூறுக்கும் மேற்பட்ட ஆப்கள் (ஓலா, நெட்மெட்ஸ், டோமினோ, ரேபிடோ உள்ளிட்டவை) இதில் இணைந்திருக்கின்றன.

உதாரணத்துக்கு, ஓலா பயன்படுத்த வேண்டும் என்றால், பேடிஎம் மினி ஸ்டோரில் ஓலா செயலியை டவுன்லோடு செய்ய வேண்டிய அவசியமில்லை. எனினும், செயலியைப் பயன்படுத்துவது போன்ற அனுபவத்தை இந்த மினி ஸ்டோர் கொடுக்கும் என விஜய் சேகர் சர்மா தெரிவித்திருக்கிறார்.

ஒரே இடத்தில் நிறைய சேவைகள் கிடைக்கும். ஆனால், எவற்றையும் டவுன்லோடு செய்யத் தேவையில்லை. ஆனால், தேவைப்படும் நேரத்தில் இவற்றைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்; வாடிக்கையாளர்களுக்கு டேட்டாவும் மெமரியும் மீதமாகும் என பேடிஎம் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில், கூகுளின் ஆதிக்கம் தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டிருந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அடுத்த கட்டமாக எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தை அணுகியிருக்கின்றன. மேலும், ப்ளே ஸ்டோர் மற்றும் கூகுள் நிறுவனத்தை சட்டரீதியாக எப்படி அணுகுவது என்பது குறித்தும் விவாதித்து வருகின்றன.

Murugavel Janakiraman
Murugavel Janakiraman

எப்படி லாபம் ஈட்ட முடியும்?

இது குறித்து பாரத் மேட்ரிமோனி நிறுவனத்தின் நிறுவனர் முருகவேல் ஜானகிராமனிடம் பேசினோம். ``பாரத் மேட்ரிமோனி நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் 90% நபர்கள் செயலியைப் பயன்படுத்துவார்கள். அதன் மூலமாகவே பணம் செலுத்துகிறார்கள். தற்போது பணம் செலுத்துவதற்கு பலவிதமான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஆனால், கூகுள் தன்னுடைய பில்லிங் முறையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனக் கூறுகிறது. இதர முறைகளில் அதிகபட்சம் 2% மட்டுமே சர்வீஸ் சார்ஜ் இருக்கும். ஆனால், கூகுள் 30% கேட்கிறது. 30% கமிஷன் தந்தால் நிறுவனங்கள் எப்படி லாபம் ஈட்ட முடியும்? இத்தனை சதவிகிதம் கமிஷன் தருகிற அளவுக்கு லாபம் ஈட்ட சந்தையில் வாய்ப்பு இருக்கிறதா? இதனால் வேறு வழி இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு நிர்ணயம் செய்யும் கட்டணத்தை உயர்த்தவேண்டியிருக்கும். கூகுளின் முடிவால் நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களும் அதிக தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும்.

ஒருவேளை, மொபைல் ஆப் மூலமாக இல்லாமல், இணையதளம் மூலமாக பணம் கட்டினால் கூகுளுக்கு நாங்கள் கமிஷன் கொடுக்கத் தேவையில்லை. ஆனால், இப்படிச் செய்தால் வாடிக்கையாளர்களுக்கு சரியான சேவை கொடுக்க முடியாது.

இப்போது இந்த சேவைகளுக்கு பணம் கேட்கும் கூகுள், நாளை அமேசான் அல்லது ஃபிளிப்கார்ட்டில் வாங்கும் பொருள்களுக்கும் பணம் செலுத்த வேண்டும் என விதிமுறையை மாற்றலாம். 90 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் ஆண்ட்ராய்டு மொபைலைப் பயன்படுத்துவதால், ஒரே ஒரு விதிமுறையைக் கொண்டுவந்து, `இந்த விதிமுறையைப் பின்பற்றினால் ப்ளே ஸ்டோரில் இருக்கலாம்; இல்லையெனில், விதிமுறை மீறல் என்கிற காரணத்தைக் காட்டி ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கிவிடலாம்’ என கூகுள் நினைக்கிறது.

இந்திய நிறுவனங்கள் ஏற்கெனவே விளம்பரங்கள் மூலமாகப் பல கோடி ரூபாய்களை கூகுள் மூலமாக செலவழித்து வருகின்றன. இப்போது சுங்கச்சாவடியில் உட்கார்ந்திருப்பவர் மாதிரி, `நான் கேட்கும் பணத்தைக் கொடுத்தால்தான் கடந்துசெல்ல முடியும்’ என்கிறது’’ என்றார்.

Google
Google

இதன் காரணமாகவே கூகுளுக்கு எதிராகக் கடும் கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார் பேடிஎம் விஜய் சேகர் சர்மா. இந்த விஷயத்தில் அரசாங்கம் தலையிட்டு நீண்ட கால அடிப்படையில் இந்திய நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

எந்த அமைப்புக்கும் அதிக அதிகாரம் இருந்தால், அது பல தவறுகளை செய்யவே வழிவகுக்கும். கூகுள் விஷயத்தில் அப்படி நடந்துவிடக் கூடாது. அப்படி நடந்தால், பல இந்திய நிறுவனங்கள் பாதிப்படையும் என்பது நிச்சயம்!

அடுத்த கட்டுரைக்கு