Published:Updated:

சரிந்து வரும் மதிப்பு; ஆசியாவின் மிக மோசமான கரன்சியாக மாறுகிறதா இந்திய ரூபாய்?

Money (Representational Image)
News
Money (Representational Image)

நேற்று காலை வர்த்தகத்தில் ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 75.57 ரூபாய் அளவில் இருந்தது. இது ஏறக்குறைய 2020-ல் கொரோனா தொற்றுப் பாதிப்பு கடுமையாக இருந்த ஜூலை மாத நிலவரமாகும். நடப்பு காலாண்டில் மட்டும் இந்திய ரூபாய் மதிப்பு 2.2% குறைந்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் கொரோனா நோய் தொற்று உலகமெங்கிலும் பரவ ஆரம்பித்ததால், நாடெங்கிலும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இந்திய பொருளாதாரத்தை அதளபாதாளத்துக்கு அழைத்துச் சென்றது. அந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் கொரோனா தொற்று பரவல் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு, தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தொழில்துறைகள் இயங்க ஆரம்பித்தன.

பொருளாதார மீட்சி ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக இந்திய பங்குச் சந்தைகளும் கடந்த 10 மாதங்களாக கடும் ஏற்றத்தில் இருந்தன. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 60,000 புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்தது. நிஃப்டி 18,000 புள்ளிகளை கடந்தது.

சென்செக்ஸ்
சென்செக்ஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்நிலையில், தென் ஆப்ரிக்காவில் உருமாறிய ஒமிக்ரான் வேரியன்ட் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கமான சூழல் நிலவுகிறது. இதன் எதிரொலியாக கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இந்த வாரத்த்தின் முதல் நாள் (20.12.2021) வர்த்தகத்தில் இந்தியப் பங்குச் சந்தை கடும் இறக்கத்துடன் தொடங்கியது. சென்செக்ஸ் 1,300 புள்ளிகள் வரை விழுந்திருக்கிறது. நிஃப்டி 400 புள்ளிகள் வரை இறங்கியது. கடந்த வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமையிலும் சென்செக்ஸ், நிஃப்டி சந்தைகள் இறக்கத்தை சந்தித்தன.

ஒமிக்ரான் அச்சத்தால் உலக முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் உள்ள தங்கள் முதலீடுகளை வேகமாக விற்பனை செய்து வருவதன் எதிரொலியாக பங்குச்சந்தைகள் இறக்கத்தை சந்திப்பதாக இத்துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இந்நிலை புத்தாண்டின் தொடக்கம் வரை நீடிக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் கருதுகிறார்கள்.

பங்குச்சந்தை சரிவின் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து வருகிறது. இதனால் ஆசியாவின் மிக மோசமாகச் செயல்படும் நாணயமாக இந்திய ரூபாய் மாறி வருகிறது. நேற்று காலை வர்த்தகத்தில் ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 75.57 ரூபாய் அளவில் இருந்தது. இது ஏறக்குறைய 2020-ல் கொரோனா தொற்றுப் பாதிப்பு கடுமையாக இருந்த ஜூலை மாத நிலவரமாகும். நடப்பு காலாண்டில் மட்டும் இந்திய ரூபாய் மதிப்பு 2.2% குறைந்துள்ளது.

Money (Representational Image)
Money (Representational Image)

அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கி பின்பற்றும் கொள்கையும் ரூபாய் மதிப்பு சரிவடைய காரணமாக சொல்லப்படுகிறது. இதுமட்டுமின்றி உலகளாவிய பொருளாதார மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்திய ரூபாய் மதிப்பு குறித்து பல்வேறு தரவுகளை வெளியிட்டுள்ளன. அதில் மார்ச் இறுதிக்குள் ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 78 ஆக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நிகழ்ந்தால் 2020-ம் ஆண்டு ஏப்ரலில் ஏற்பட்ட 76.90 என்ற சரிவையும் விட கூடுதலாகி விடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா தொற்றுநோய் தாக்கத்தில் இருந்து இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் இந்திய ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு, ரூபாய் மதிப்பு சரிவு என்பது கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பணவீக்க அபாயமும் உள்ளது. இதன் எதிரொலியாக ரிசர்வ் வங்கிக்கு வட்டி விகிதங்களை நீண்ட காலத்திற்கு மிகக் குறைந்த அளவில் வைத்திருக்க முடியாத நிலை உருவாகியிருப்பதாக தெரிகிறது.

Bombay Stock Exchange (BSE)
Bombay Stock Exchange (BSE)
AP Photo

இதன் காரணமாகத்தான் எஸ்.பி.ஐ வங்கி அண்மையில் கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 0.10% அதிரித்ததோ என்று யோசிக்கத் தோன்றுகிறது. எஸ்.பி.ஐ வங்கி வட்டிவிகிதத்தை அதிகப்படுத்தி இருப்பதால், போட்டி காரணமாக மற்ற வங்கிகளும் வட்டி விகிதங்களை உயர்த்தும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதன் காரணமாக வீட்டுக் கடன், கார் கடன், தனிநபர் கடன் என அனைத்து கடன்களின் வட்டி விகிதமும் உயரலாம்.