Published:Updated:

`அதிகரித்த தனிநபர் கடன்... வங்கிகள் வழங்கிய மொத்தக் கடன் மதிப்பில் 28%!’ - ஆர்.பி.ஐ புள்ளிவிவரம்

ஆர்.பி.ஐ
ஆர்.பி.ஐ ( pixabay )

கடந்த வருடத்தில் வங்கிகள் அளிக்கும் தனிநபர் கடன் தொகையின் அளவானது சற்றே உயர்ந்துள்ளது என ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் வங்கிகள் அளிக்கும் தனிநபர் கடன் தொகையின் அளவானது சற்றே உயர்ந்துள்ளது. இதுபற்றி ஆர்.பி.ஐ வெளியிட்டுள்ள தகவல் அறிக்கையில், கடந்த பிப்ரவரி மாத இறுதியில் வங்கிக்கடனின் அளவானது 89.8 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது எனத் தெரிவித்துள்ளது. இது, கடந்த வருடத்தை விட 7.3 சதவிகிதம் மட்டுமே அதிகமாகும்.

மேலும், இதில் உற்பத்தித் துறை சார்ந்த கடன் பங்கின் அளவானது 31 சதவிகிதமாக (27.9 கோடி ரூபாயாக) உள்ளது. இது, கிட்டத்தட்ட எந்தப் பெரிய மாற்றமுமின்றி பிப்ரவரி 2019ல் இருந்தது போலவே இருக்கிறது. இதனால் மொத்தக் கடன் பங்கில் தொழிற்துறையின் பங்கானது மூன்றில் ஒரு பங்காக (33%) உள்ளது.

ஆர்.பி.ஐ வழங்கிய கடன் சலுகைகள்..! - பயன்படுத்திக்கொள்ளும் வழிகள்!

இன்னொரு பக்கம் தனிப்பட்ட கடன் தொகையின் அளவானது பிப்ரவரி 2020 வரை 17 சதவிகிதமாக உயர்ந்து 25.3 கோடி ரூபாயாக உள்ளது. இது, மொத்தக் கடன் அளவில் 28 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல வீட்டுக் கடனின் அளவானது 17 சதவிகிதமாக (13.3 லட்சம் கோடி ரூபாயாக )உயர்ந்ததே ஆகும். இதன் காரணமாக மொத்த வங்கியின் கடன் அளவில் வீட்டுக் கடனின் அளவானது 14.8 சதவிகிதமாக ஆகியுள்ளது. இதர தனிப்பட்ட கடன்களான பாதுகாப்பற்ற கடன் போன்றவை 20 சதவிகிதமாக உயர்ந்து 7 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டுள்ளது. இவை, வங்கிகள் வழங்கும் மொத்தக் கடனில் 8 சதவிகிதப் பங்கு வகிக்கிறது.

கொரோனா வைரஸ் காரணமாகப் பல்வேறு தொழிற் துறைகளில் பொருளாதாரப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கட்டுமானம் மற்றும் ஆட்டோ மொபைல் துறையில் ஏற்பட்டுள்ள சுணக்கம் காரணமாக இரும்புத் துறை பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. இதனால், இந்தத் துறைக்கான வங்கியின் கடன் அளவுகூட 2.8 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 2.5 கோடியாகக் குறைந்துள்ளது.

இதற்கு முக்கியக் காரணம் பல நிறுவனங்கள் கொரோனா வைரஸால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக தங்களது நிறுவனங்களை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளதே ஆகும். மேலும், கொரோனா அச்சம் காரணமாகத் தனிப்பட்ட கடன் பெறுவோரிடமும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே பொருளாதாரச் சரிவின் போது வீட்டுக் கடன்களைத் தவிர, இதர தனிநபர் கடன்பெற்றோர் பணம் செலுத்தாத சூழ்நிலையில்தான் இருந்தனர். இந்நிலையில் கொரோனாவிற்குப் பிறகு, கடன் வாங்கியவர்களிடம் நிச்சயம் கடன் தொகையைத் திரும்பச் செலுத்துவதில் சற்றே தொய்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .

நிதியாண்டை மாற்றிய ஆர்.பி.ஐ..! - ஏன் இந்த மாற்றம்..?

இவற்றுடன் வங்கிகள் அல்லாத நிதித் துறை நிறுவனங்கள் கடன் சேவை வழங்குவதும் உயர்ந்துள்ளது. இதனால், இந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையானது 22 சதவிகிதம் உயர்ந்து 7 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டுள்ளது. இது, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 5.75 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதனால் ஒட்டு மொத்தமாக சேவைத் துறை மொத்த வங்கிக் கடன்களில் 27 சதவிகிதப் (24.3 கோடி ரூபாய்) பங்கு வகிக்கிறது.

கடன்
கடன்
Representational Image

இப்போது, கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பை 2008-ல் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவோடு ஒப்பிடுவது அபத்தமானது. அப்போதுதான் சிபில் போன்ற கடன் தகவல் நிறுவனங்கள் வளர்ச்சியடைந்துவந்த காரணத்தால், வங்கிகளால் ஆய்வுகளை மேற்கொள்ள முடியவில்லை. இதனால், வங்கிகள் பொறுப்பற்ற முறையில் கடன்களை வழங்கின. ஆனால், இப்போது சிபிலிடம் 400 மில்லியனுக்கும் மேற்பட்ட தரவுகள் உள்ளன. அதனால், அந்த நிலை திரும்பவும் ஏற்படாது எனத் துறை சார்ந்த வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு