Published:Updated:

காலத்துக்கு ஏற்ற சூப்பர் பிசினஸ்... பெட் பாட்டிலுக்கான ‘ப்ரீஃபார்ம்’ தயாரிப்பு!

ப்ரீஃபார்ம்
பிரீமியம் ஸ்டோரி
News
ப்ரீஃபார்ம்

தொழில் பழகுவோம் வாங்க! - 8

'பிளாஸ்டிக் இன்றி அமையாது உலகு’ என்கிற அளவுக்கு மக்களின் பெரும் பாலான பயன்பாடுகளிலும் பிளாஸ்டிக் பொருள்கள் தவிர்க்க இயலாத முக்கியத் துவத்தைப் பெற்றுள்ளன. இதனால், மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தாத, மறுசுழற்சி செய்ய ஏதுவான பிளாஸ்டிக் பொருள்களுக்கான தேவை உயர்ந்துகொண்டே செல்கின்றன. அந்த வரிசையில் முக்கியமான இடம்பிடித்திருக்கும் பெட் பாட்டில்கள், குடிநீர் முதல் மருந்துப் பொருள்கள் வரை எல்லா தேவைகளுக்கும் பயன் படுத்தப்படுகின்றன. பெட் பாட்டில்கள் உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான ப்ரீஃபார்ம் (Preform) தயாரிப்புத் தொழிலுக்கான வரவேற்பு குறித்து இந்த வாரம் வழிகாட்டுகிறார், திருச்சியைச் சேர்ந்த தொழில் ஆலோசகரான ராமசாமி தேசாய்.

காலத்துக்கு ஏற்ற சூப்பர் பிசினஸ்... பெட் பாட்டிலுக்கான ‘ப்ரீஃபார்ம்’ தயாரிப்பு!

தவிர்க்க இயலாத பொருள்...

பெட் பாட்டில்களுக்கான வரவேற்பு முதலில் ஜப்பானில் அதிகரித்து, படிப்படியாக எல்லா நாடுகளுக்கும் விரிவடைந்தது. கடந்த 15 ஆண்டுகளில் பெட் பாட்டில்கள் உலகம் முழுக்க எல்லா பகுதிகளிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

உணவுப் பொருள்கள் மற்றும் மருந்துப் பொருள்களை அடைக்கும் டப்பாக்கள், குளிர்பானம் மற்றும் தண்ணீர் பாட்டில்கள், பல்வேறு பயன்பாட்டுப் பொருள்கள் என நம் வாழ்க்கையில் ‘பெட்’ வகை பாட்டில்களும் டப்பாக்களும் தவிர்க்க இயலாத அத்தியா வசியப் பொருள்களாகவே மாறிவிட்டன. மறுசுழற்சிக்கு உகந்ததாகவும், உடலுக்குக் கெடுதல் ஏற்படுத்தும் ரசாயனங்கள் பெரிதாக இல்லாததாலும் இந்த பெட் பாட்டில்களை விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் அரசாங்கம் அனுமதிக்கிறது.

ராமசாமி தேசாய்
ராமசாமி தேசாய்

‘ப்ரீஃபார்ம்’ என்றால் என்ன?

பாட்டில் அல்லது டப்பாவுக்கு முந்தைய வடிவம்தான் ‘ப்ரீஃபார்ம்’ எனப்படுகிறது. பாலிஎத்திலீன் டெராப்தலேட் (Polyethylene Terephthalate) பிசினைத் திரவ நிலைக்கு உருக்கி, இன்ஜக்‌ஷன் மோல்டிங் இயந்திரத்தின் உதவியுடன், அதனுள் இருக்கும் மோல்டுக்குள் அந்தத் திரவத்தை நிரப்பி, குளிர்விப்பு செயல் பாட்டின் மூலம் வேண்டிய வடிவத்துக்கு ‘ப்ரீஃபார்ம்’ தயாரிக்கப்படுகிறது. மாம்பழக்கூழ் தயாரிப்பு நிறுவனங் களிடமிருந்து, மாம்பழக்கூழைப் பெற்று ஜூஸ் தயாரிப்புத் தொழில் தனியாகச் செய்யப் படுவதுபோலவே ‘ப்ரீஃபார்ம்’ தயாரிக்கும் நிறுவனங்கள் தனியாகவும், அந்த நிறுவனங் களிடமிருந்து பெறப்படும் ‘ப்ரீம்ஃபார்ம்’ கொண்டு பெட் பாட்டில்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தனியாகவும் இயங்குகின்றன. ‘ப்ரீஃபார்ம்’ காற்று இல்லாத சிறிய டப்பாவைப் போல இருக்கும். இன்ஜக்‌ஷன் மோல்டிங் இயந்திரத்தில் ஒரே நேரத்தில் கணிசமான எண்ணிக்கையில் ப்ரீஃபார்மைத் தயாரிக்கலாம்.

காலத்துக்கு ஏற்ற சூப்பர் பிசினஸ்... பெட் பாட்டிலுக்கான ‘ப்ரீஃபார்ம்’ தயாரிப்பு!

குறைவான போட்டியும் அதிக வரவேற்பும்...

பாலி எத்திலீன் டெராப்தலேட் வகை பிளாஸ்டிக் உறுதித்தன்மை கொண்டதால், இதில் தயாரிக்கப் படும் பொருள்கள் எளிதில் உடையாது. பயன்படுத்த மிகவும் செளகர்யமானது. இதனால், புதுப்புது பயன்பாட்டுப் பொருள்களிலும் இந்த வகை பிளாஸ்டிக்கிலான பாட்டில்களும் டப்பாக்களும் வடிவமைக்கப்படுகின்றன.

தமிழகத்தில் ப்ரீஃபார்ம் ஆலைகள் குறைவான எண்ணிக்கையில்தான் இருக்கின்றன. முறையான அனுபவத்துடன் இந்தத் தொழிலில் இறங்குபவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

மாதம்தோறும் 30 டன் உற்பத்தி செய்யும் வகையில் 1.25 கோடி ரூபாயில் இந்த ஆலையை அமைக்கலாம். ‘ப்ரீஃபார்ம்’ தடையின்றி கிடைப்பதை உறுதி செய்து, போக்குவரத்து வசதியுள்ள பகுதியில் தொழிற்சாலையை அமைப்பது முக்கியம்.

காலத்துக்கு ஏற்ற சூப்பர் பிசினஸ்... பெட் பாட்டிலுக்கான ‘ப்ரீஃபார்ம்’ தயாரிப்பு!

விற்பனை வாய்ப்பு...

பெட் பாட்டில், டப்பா தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருளாக ‘ப்ரீஃபார்ம்’ தேவைப்படுவதால், அதுபோன்ற ஆலைகளில் நிலையான வர்த்தக வாய்ப்பை உறுதிசெய்து கொள்ளலாம். ஒரே இயந்திரத்தில் அச்சை (Dye) மட்டும் மாற்றி, வெவ்வேறு வடிவ பெட் பாட்டில்கள் / டப்பாக்களுக்கான ‘ப்ரீஃபார்ம்’ தயாரிக்கலாம். அதே போல, பெட் பாட்டிலுக்கான ‘ப்ரீஃபார்ம்’ தயாரிப்புப் பணிகள் நடக்காதபோது, அதே இயந்திரத்தில் அச்சை மட்டும் மாற்றி, பெட் பாட்டில் தவிர வேறு பிளாஸ்டிக் பொருள்களைத் தயாரிக்கலாம்.

வங்கிக் கடனுதவி...

‘நீட்ஸ்’ திட்டத்தில் 113.50 லட்சம் ரூபாய் வங்கிக் கடன் பெறலாம். அதில், 25% மானியமாகக் கிடைக்கும். தவிர, நடைமுறை மூலதனமாக (Working capital) ஆரம்பத்தில் 18 லட்சம் ரூபாய் வரை வங்கிக் கடனுதவி பெறலாம்.

மாதத்துக்கு 34 லட்சம் வருமானம்...

ஓர் இயந்திரத்தில் ஒரு ஷிஃப்டில் (ஏழு மணி நேரம்) 54,000 ‘ப்ரீஃபார்ம்’ (உத்தேசமாக 9.5 கிராம் மற்றும் 13 கிராம் எடையில்) தயாரிக்கலாம். தினமும் இரண்டு ஷிஃப்ட்டுகள் வீதம் ஒரு மாதத்தில் 25 தினங்களுக்கு 30.40 டன் ‘ப்ரீஃபார்ம்’ மூலப்பொருள்களை உற்பத்தி செய்ய முடியும். அந்த வகையில் உற்பத்திக்கான வருமானமாக ஒரு மாதத்துக்கு 34 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

(தொழில் பழகுவோம்)

விஜயகுமார்
விஜயகுமார்

தடையில்லாத உற்பத்தி... சிறப்பான வருமானம்!

பெட் பாட்டில்களுக்கான ப்ரீஃபார்ம் தயாரிப்புத் தொழிலில் நீண்டகால அனுபவம் கொண்டவரான, புதுச்சேரி ‘ஸ்வஸ்திக் ப்ரீஃபார்ம் பிரைவேட் லிமிடெட்’ நிறுவன உரிமையாளரான விஜயகுமாரிடம் பேசினோம். “குடிநீர் சுத்திகரிப்பு ஆலையைப் பல ஆண்டுகளாக நடத்தி வந்தேன். 15 - 20 ஆண்டுகளுக்கு முன்பு, கண்ணாடி பாட்டில்களுக்கு மாற்றாக பெட் பாட்டில்கள் பயன்பாடு அதிகரித்தது. இவற்றுக்கான பயன்பாடு வருங்காலத்தில் பெரிய அளவில் உயரும் எனக் கணித்து, என் தொழில் பார்ட்னர் மகேந்திர குமாருடன் இணைந்து இந்தத் துறையில் இறங்கினேன்.

நாங்கள் தயாரித்துவந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை நிரப்பத் தேவையான பாட்டில்களுக்கான ‘ப்ரீம்ஃபார்ம்’ தயாரித்து, நாங்களே பெட் பாட்டில்களையும் உற்பத்தி செய்தோம். பிறகு, மருந்துப் பொருள்கள், எஃப்.எம்.சி.ஜி பொருள்கள், ஆயில் உட்பட பல்வேறு துறைகளுக்குமான ‘ப்ரீஃபார்ம்’ தயாரித்து, அதிலிருந்து பெட் பாட்டில்கள் மற்றும் டப்பாக்கள் மட்டுமன்றி, அவற்றுக்கான மூடிகளையும் தயாரிக்கிறோம். சிறிய அளவில் தொடங்கப்பட்ட எங்கள் நிறுவனம், மாதம்தோறும் 1,000 டன் உற்பத்தியுடன் தற்போது பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இதைவிடப் பலமடங்கு அதிகமான உற்பத்தி இலக்குடன் வெற்றி நடைபோடுகிறோம். ஒரே பயன்பாட்டுக்கான ‘ப்ரீஃபார்ம்’ தயாரிப்புடன் இல்லாமல், பல துறைகளுக்கும் தேவையான பாட்டில்கள் / டப்பாக்களுக்கான ‘ப்ரீஃபார்ம்’ தயாரித்து, தடையில்லாத உற்பத்தியுடன் சிறப்பான வருமானம் ஈட்டலாம்” என்று நம்பிக்கையுடன் முடித்தார்.