Published:Updated:

கொரோனா... நுகர்வோர்கள் எப்படி மாறுவார்கள்?

நுகர்வோர்கள் எப்படி மாறுவார்கள்?
பிரீமியம் ஸ்டோரி
News
நுகர்வோர்கள் எப்படி மாறுவார்கள்?

பிலிப் கோட்லரின் சிந்தனை..!

உலகெங்கிலும் இடைவிடாமல் பரவி மரணத்தையும் அழிவையும் ஏற்படுத்தி வருகிறது கொரோனா வைரஸ் (கோவிட்-19). உலகம் முழுக்கப் பல கோடி பணியாளர்கள் வேலை இழந்துவருவதால், உலகம் முழுவதும் பெரும் மந்தநிலை ஏற்பட்டுள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆரோக்கியத்தின் அடிப்படையிலும், பொருளாதாரரீதியிலும் ஏழைகளிடம்தான் இது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். தண்ணீர் பிரச்னையால் அவர்களால் கைகளைக்கூட அடிக்கடிக் கழுவ முடியாது. சமூக இடைவெளியை நடைமுறைப்படுத்த முடியாத கோடிக்கணக்கான ஏழைகள் இருக்கிறார்கள். சேரிகளில் வாழும் சாதாரண மக்கள், சிறையில் இருப்பவர்கள், அகதி முகாம்களின் கூடாரங்களில் வாழ்பவர்களின் கதி இன்னும் மோசம்தான்.

கொரோனா... நுகர்வோர்கள் எப்படி மாறுவார்கள்?

அமெரிக்கா இரண்டு ட்ரில்லியன் டாலருக்கு உதவித்தொகை அளிப்பதாக அறிவித்திருப்பதைப் பார்த்தால், `பிணையெடுப்பு’ (Bailout) என்ற பெயரில் வால் ஸ்ட்ரீட்டை மீட்டெடுக்கும் நடவடிக்கையாகத்தான் தெரிகிறது. வேலை பார்க்கும் ஏழைத் தொழிலாளர்களுக்குக் கொஞ்சம் ஊதியமும், அதேபோல இன்னும் சிலருக்குத் தரப்போவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் வருமான ஏற்றதாழ்வு இன்னும் அதிகரிக்கும்.

இழப்பும் பதற்றமும் நிறைந்திருக்கும் இந்தக் காலகட்டம் நுகர்வோரிடையே புதிய மனோபாவங்களுக்கும், நடத்தைகளுக்கும் வழிவகுக்கிறது. தொழில் நிறுவனங்கள் நுகர்வையும், பிராண்ட் விருப்பத்தையும் தூண்டுவதற்கு மூன்று விஷயங்களைச் சார்ந்திருக்கின்றன.

முதலாவதாக, புதுமையாக்கம். வாடிக்கையாளரின் விருப்பத்தையும் கொள்முதலையும் தூண்டும்விதமாக கவர்ச்சிகரமான புதிய பொருள்களையும் பிராண்டுகளையும் உற்பத்தி செய்வது.

இரண்டாவதாக, சந்தைப்படுத்தல். கொள்முதல் செய்வதற்காகவும், நுகர்வோர்களைச் சென்றடையவும், வாங்கத் தூண்டுவதற்கும் வழிவகுக்கக்கூடிய பல கருவிகளைக்கொண்டு செயல்படுவது.

கொரோனா... நுகர்வோர்கள் எப்படி மாறுவார்கள்?

மூன்றாவதாக, கடன். குறைந்த வருமானத்தில் உள்ளவர்களை வழக்கமாக வாங்குவதைவிட அதிகமாக வாங்கவைப்பது.

நுகர்வை நமது வாழ்வியல்முறையாக ஆக்குவதுதான் தொழிலின் குறிக்கோள். உற்பத்திச் சாதனங்களும், தொழிற்சாலைகளும் தொடர்ந்து செயல்படுவதற்காக நுகர்வோர் நடத்தையை ஒரு சடங்காக ஆக்கிவிடுவார்கள்.

ஹாலோவின், கிறிஸ்துமஸ், ஈஸ்டர், அன்னையர் தினம், தந்தையர் தினம் போன்ற விடுமுறை தினங்கள் கொள்முதலைத் தூண்டுவதற்காக புரொமோட் செய்யப்படுபவை. அதிகமாக வாங்கத் தூண்டுவது மட்டுமல்லாமல், அதிகமாக நுகர வேண்டுமென்பதும் தொழிலின் விருப்பம்.

மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் வழங்குவதால், கண்டிப்பாக இந்தப் பொருள்களை வைத்திருக்க வேண்டும் என்று விளம்பரத்தைப் பயன்படுத்தி ஓர் அதீத யதார்த்த உலகத்தை தொழில்கள் உருவாக்குகின்றன. பண்டங்கள், பிராண்டுகள் என்று மறுஉருவாக்கம் செய்யப்பட்டு நுகர்வோரின் வாழ்வில் நுழைக்கப்படுகின்றன.

இதுவரைக்கும் பெரும்பாலான நாடுகள் அவற்றின் பொருளாதாரத்தை மதிப்பீடு செய்ய ஒரேயொரு அளவீட்டையே பயன்படுத்தி வருகின்றன. அது உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP). இது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் நாட்டின் பொருளாதாரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகள், சேவைகளின் மொத்த மதிப்பை அளவிடக் கூடியது. இந்த ஜி.டி.பி வளர்ச்சி மக்களின் நலன் அல்லது மகிழ்ச்சி அளவையும் சேர்த்து அளவிடுவதில்லை.

பொருளாதார வளர்ச்சியை அளவிட மொத்தப் பொருள் உற்பத்தி (GDP) என்பதை மட்டும் கருத்தில் கொள்ளாமல், நாம் புதிய அளவீடுகளைச் சேர்க்க வேண்டியுள்ளது. சில நாடுகள் மொத்த உள்நாட்டு மகிழ்ச்சி (Gross Domestic Happiness–GDH), மொத்த உள்நாட்டு நலன் (Gross Domestic Well-Being–GDW) ஆகியவற்றை ஆண்டளவில் கணக்கிட தங்களைத் தயார் செய்துவருகின்றன.

அமெரிக்கக் குடிமக்களைவிட ஸ்காண்டிநேவியன் நாடுகளைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் மகிழ்ச்சியுடனும் நலத்துடனும் இருந்துவருவதுடன், அவர்களது பொருளாதாரமும் நல்ல நிலையில் இருந்து வருகிறது. இதற்கு என்ன காரணம்?

பொருளாதார வளர்ச்சியிலிருக்கும் பிரச்னையில் ஒரு பகுதி உற்பத்தித்திறனால் ஏற்பட்ட ஆதாயம் சமமாகப் பகிரப்படவில்லை என்பது, வளர்ந்துவரும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையையும், அதிக அளவில் ஏழைத் தொழிலாளிகள் இருப்பதையும் பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம்.

பல தலைமைச் செயல் அதிகாரிகளின் (CEO) சம்பளம், சராசரித் தொழிலாளி ஒருவரின் சம்பளத்தைவிட 300 மடங்கு அதிகம். அவர்களில் சிலர் வீட்டுக்குக் கொண்டு செல்லும் வருமானம் 1,100 மடங்கு அதிகம்.

கொரோனா... நுகர்வோர்கள் எப்படி மாறுவார்கள்?

இந்த மாதிரியான ஏற்றதாழ்வு இருப்பதை சில கோடீஸ்வரர்கள்கூட விரும்பவில்லை. பில்கேட்ஸும், வாரன் பஃபெட்டும் `வருமான வரியை உயர்த்த வேண்டும்’ என்று வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்கள்.

நிக் ஹானர் (Nick Hanauer) என்பவர் பெரும் பணக்காரர். உற்பத்தித்திறன் அதிகரிப்பால் கிடைக்கும் ஆதாயத்தை அதிகமாகப் பகிர்வதுடன், அதிக ஊதியம் தரும்படியும், அதிக வரி செலுத்தும்படியும் பணம் படைத்தவர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.

இன்றைக்குத் தொழிலாளர்கள் நன்கு சாப்பிடவும், வாடகை கொடுக்கவும், போதிய சேமிப்போடு ஓய்வு பெறவும் போதிய அளவு சம்பாதிக்க வேண்டும்.

இன்றைக்குப் பெரும்பாலான தொழிலாளர்கள் இன்றியமையாத செலவைச் சமாளிக்கத் தேவையான 400 டாலரைக்கூட சம்பாதிக்க முடியாமல் இருக்கின்றனர். இதனால் நுகர்வோர்கள், நுகர்வு எதிர்ப்பாளர்களாக மாறி குறைவாகச் செலவு செய்யத் தீர்மானிக்கலாம்.

இவர்களது செலவினம்தான் நம்முடைய பொருளாதாரத்தில் 70% அளவுக்கு ஆதரவு தருகிறது. அது குறைய ஆரம்பித்தால், நம்முடைய பொருளாதாரம் பெருமளவில் குறையக்கூடும்.

பொருளாதார வளர்ச்சி குறைய ஆரம்பித்தால் அதிக வேலையின்மைக்கு வழிவகுக்கும். இத்துடன் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்ஸ் அறிமுகத்தால் ஏற்படும் வேலையிழப்பும் சேர்ந்துகொள்ளும். இந்த நிலையில், வேலையில்லாக் காப்பீடு, சமூகப் பாதுகாப்பு, உணவு கூப்பன்கள், பொது சமையலறைகள், சமூக உதவி ஆகியவற்றுக்கு முதலாளித்துவம் அதிகம் செலவு செய்ய வேண்டிவரும்.

கொரோனா... நுகர்வோர்கள் எப்படி மாறுவார்கள்?

இந்த நிலையில், கோவிட்-19 நெருக்கடி முடியும்போது, முதலாளித்துவம் நிறையவே மாறியிருக்கும். அப்போது என்னென்ன மாற்றங்கள் சமூகத்திலும், நுகர்வோர்களிடமும் ஏற்பட்டிருக்கும் எனப் பார்க்கலாம்.

1. பலவீனமான சில நிறுவனங்களும், பிராண்டுகளும் மறைந்து போகலாம். அதற்கு மாற்றாக நம்பகமான, திருப்தி அளிக்கக்கூடிய பிராண்டுகளை நுகர்வோர்கள் கண்டறிந்திருப்பார்கள்.

2. நமது உடல் ஆரோக்கியம் எந்த அளவுக்குப் பலவீனமாக இருக்கிறது என்பதை கொரோனா வைரஸ் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது.

கூட்டத்தில் சென்றால் ஜலதோஷம் தொற்றிக்கொள்ளும்; ஒருவருக்கொருவர் கை குலுக்குவதை நிறுத்த வேண்டும்; ஆரோக்கியமான உணவுகளை அதிகம் சாப்பிட்டு நுண்மிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள அதிக எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை மேலோங்கி இருக்கும்.

3. நமது மருத்துவ அமைப்பின் போதாமையை அதிக விலை கொடுத்து தெரிந்து கொண்டிருப்பது அதிர்ச்சியான விஷயம். மருத்துவமனைக்கு வெளியே நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

என்ற எண்ணம் மக்களிடம் அதிகமான அளவுக்கு உருவாகியிருக்கும்.

4. தொழிலாளர்களுக்குத் திரும்ப வேலை கிடைத்தாலும், திடீரென்று ஏற்பட்டிருக்கும் வேலை இழப்பு மனவேதனை அளிக்கக்கூடியதாகும். அவர்கள் செலவு செய்வதிலும், சேமிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கத் தொடங்கி யிருப்பார்கள் .

5. வீட்டுக்குள்ளேயே இருப்பதால், பெரும்பாலான நுகர்வோர்கள் அவர்களுக்குத் தேவையான உணவுகளைத் தயார் செய்துகொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். அதிகமான வீட்டுச் சமையல், காய்கறிகளை வீட்டிலேயே வளர்ப்பது என்பதுடன் வெளியே சென்று சாப்பிடுவதும் குறைவாக இருக்கும்.

6. நம்முடைய குடும்பம், நண்பர்கள், சமூகத்தின் தேவைகள்மீது நாம் அதிக மதிப்பு வைப்போம். சமூக ஊடகம் மூலம் நம் குடும்பத்தினரையும் நண்பர்களையும் நல்ல, ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடவும், தேவைப்படும் ஆடைகளையும், பொருள்களையும் மட்டுமே வாங்கும்படியும் கூறுவோம்.

7. பிராண்டுகள், அவற்றின் நோக்கங்கள், அவை ஒவ்வொன்றும் பொதுமக்களின் நன்மைக்கு எவ்வாறு சேவை செய்கின்றன என்பதையும் தெரிந்துகொள்ள நாம் அனைவருமே விரும்புவோம்.

8. நாம் வாழும் பூமியின் பலவீனம், காற்று, நீர் மாசுபாடு, நீர்ப் பற்றாக்குறை, இன்னும் சில பிரச்னைகள் குறித்து மக்கள் அதிக விழிப்புடன் இருப்பார்கள்.

தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கட்டுரையாளர் பிலிப் கோட்லர்!

கொரோனா... நுகர்வோர்கள் எப்படி மாறுவார்கள்?

`நவீன சந்தைப்படுத்தலின் தந்தை’ என்றும், ‘உத்திசார் சந்தைப்படுத்தலின் முன்னோடி’ என்றும் உலக அளவில் புகழ் பெற்றவர் பிலிப் கோட்லர். இவர் 04/06/2020 அன்று 21-ம் நூற்றாண்டின் `Think Tank’-ஆன `சரசோட்டா இன்ஸ்டிட்யூட்’ (The Sarasota Institute) இணையதளத்தில் எழுதி, உலக அளவில் வைரலாகப் பகிரப்பட்ட ஆங்கிலக் கட்டுரையின் சுருக்கம் இது. இவர் இந்த அமைப்பின் துணை நிறுவனரும் ஆவார்.