Published:Updated:

‘‘இது என் தோல்விக் கதை...’’ துணிந்து எழுதிய பிரசாந்த் தேசாய்!

பிரசாந்த் தேசாய்
பிரீமியம் ஸ்டோரி
News
பிரசாந்த் தேசாய்

அனுபவம்

பிசினஸ் உலகில் வெற்றிக் கதைகளை நாம் கேட்ட அளவுக்கு தோல்வி அடைந்தவர்களின் கதைகளையோ, தோல்வியிலிருந்து மீண்டு வெற்றி பெற்றவர்களின் கதைகளையோ நாம் அதிகமாகக் கேட்டிருக்க மாட்டோம். அப்படிப்பட்ட ஒரு தோல்விக் கதையைப் பலருக்கும் பாடமாக இருக்க ‘தி பயோகிராபி ஆஃப் எ ஃபெல்ட் வென்ச்சர்’ (The Biography of a Failed Venture) எனும் தலைப்பில் ஒரு புத்தகமாக ‘எழுதி வெளியிட்டிருக்கிறார் பிரசாந்த் தேசாய். யார் இவர்..?

ஏழு வயதில் அப்பாவை இழந்தார்...

பிரசாந்த் ஏழு வயதாக இருக்கும்போது அப்பா இறந்துவிட, ஓர் ஏழ்மையான சூழ்நிலையில் வளர வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. ஆனாலும், கடின முயற்சியுடன் நன்கு படித்தார். நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை அவருக்குள் ஏற்பட, படித்து முடித்த கையுடன் பங்குச் சந்தை சார்ந்த பணியில் வாழ்க்கையை ஆரம்பித்தார். இதனால் அவருக்கு கிஷோர் பியானி, ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஆகியோருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி ஒருமுறை கிஷோர் பியானியைச் சந்தித்தபோது, ‘‘பங்குச் சந்தை என்கிற குறுகிய வட்டத்துக்குள் நிபுணராக இருக்காதே. பல துறைகளிலும் பணியாற்றுவது முக்கியம்’’ என்றார். அவர் சொன்னது பிரசாந்துக்கு சரி என்றே பட்டது. எனவே, அவருடைய நிறுவனத்திலேயே வேலைக்குச் சேர்ந்தார்.

கண்டுகொள்ளாமல் விட்ட எச்சரிக்கை...

2017-ம் ஆண்டு கிஷோர் பியானியின் ஃப்யூச்சர் குழுமத்தில் வேலை பார்த்துவிட்டு தொழில்முனைவோராக விரும்பிய பிரசாந்த் தேசாய், கிஷோர் பியானியை அணுகி, ‘‘நான் முற்றிலும் இந்தியத் தயாரிப்பாக ஒரு ‘ஸ்போர்ட்ஸ் பிராண்டை’ உருவாக்க விரும்பு கிறேன். இதற்கு உங்கள் ஆலோசனை என்ன’’ என்று கேட்டார். அதற்கு கிஷோர், ஏற்கெனவே உலகப் புகழ்பெற்ற நைக்கி, அடிடாஸ் போன்ற பிராண்டுகள் இருப்பது பற்றியும், இந்திய நுகர்வோர்களின் விருப்பங்கள் குறித்தும் எச்சரிக்கை செய்தார். ஆனால், தான் கண்டறிந்த தொழில் வாய்ப்பில் நம்பிக்கை கொண்ட பிரசாந்த், கிஷோரின் எச்சரிக்கையைப் பரிசீலிக்காமல், D:FY என்கிற பெயரில் விளையாட்டுக்குத் தேவையான காலணிகள், உடைகள் மற்றும் பல பொருள் களைத் தயாரித்து சந்தைப்படுத்துவதற்கான நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார். துரதிர்ஷ்ட வசமாக அதனால் `யுனிகார்ன்’ (அதாவது, ரூ.7,000 கோடிக்கும் மேலான மதிப்பீடு கொண்ட ஸ்டார்ட்அப்) நிலையை அடைய முடியவில்லை என்பதுடன், முதலீட்டாளர் களுக்கு சுமார் ரூ.30 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியது. இந்த முயற்சியில் பிரசாந்தின் தனிப்பட்ட சொத்தும் கரைந்தது.

பிரசாந்த் தேசாய்
பிரசாந்த் தேசாய்

தோல்விக்கான காரணங்கள்...

இந்தத் தோல்விக்கான காரணங்கள் என்ன என்பதை ஆராய்ந்து பார்த்தார் பிரசாந்த். அவர் சார்ந்திருந்த குழுமம் பல சவால்களை எதிர்கொண்டாலும் அவருடைய நிகர வருமானம் பெரிய அளவில் இருந்துவந்தது. ஆனால், ரூ.20 கோடியைப் பத்து வருடத்தில் ரூ.2,000 கோடியாக அதிகரிக்க வேண்டும் என்ற ஆசையில், பூமா இந்தியாவின் (Puma India) முன்னாள் நிர்வாக இயக்குநராக இருந்த ராஜீவ் மேத்தாவுடன் இணைந்து D:FY நிறுவனத் தை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் தடாலடியாக ஹர்திக் பாண்டியா, அனில் கும்ப்ளே, ஃபரான் அக்தர் ஆகியோர் `பிராண்ட் தூதர்களாக’ நியமிக்கப்பட்டனர். அத்துடன் ஏழு நகரங் களில் 17 கடைகளைத் திறந்து அதன் மூலமும் பொருள்களை விற்க ஆரம்பித்தார். இந்த முயற்சிகள் அனைத்திலும் ஏதோ ஒரு பெரிய தவறு நடந்திருக்கிறது என்பதை நாள்கள் செல்லச் செல்ல உணர ஆரம்பித்தார். மிக முக்கியமாக, `நிபுணத் துவத்தின் அடிப்படையில் இல்லாமல், தொடர்பின் அடிப்படையில் பணியாளர்களை நியமனம் செய்ததால்தான் பல தவறுகள் நிகழ்ந்தன.

இந்தத் தவறுகளைச் சரிசெய்ய ஓர் ஆலோசகரை நியமனம் செய்தார். அவருக்கு நன்கு நிறுவப்பட்டு இயங்கிவரும் பெரிய நிறுவனங்கள் சார்ந்த மேலாண்மையில் அனுபவம் இருந்ததே தவிர, ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் செயல்பாடு பற்றி தெரிய வில்லை. எனவே, அதுவும் தோல்வியில் முடிந்தது. ‘‘சரியான குழுவை (Right team) உருவாக்காததும் நுகர்வோர்களைச் சரியாகப் புரிந்துகொள்ளாததும் தோல்விக்கு முக்கிய காரணங்கள்” என பிரசாந்த் குறிப்பிடுகிறார்.

சித்தார்த்தன் சுந்தரம்
சித்தார்த்தன் சுந்தரம்

பிரசாந்த் தேசாய் தனது தோல்வியை இந்தப் புத்தகத்தில் வெளிப்படையாகச் சொன்னதைப் பலரும் வரவேற்றுள்ளனர். வெற்றி பெற்ற நிறுவனங்கள் அதனுடைய வெற்றிக்குப் பல காரணங்களைக் கூறுவதுபோல, தோல்வி அடைந்த நிறுவனங்களும் தோல்விக்கான காரணங்களை பிரசாந்த்போல பொது வெளியில் பகிர்ந்துகொள்வதன் மூலம் பிற தொழில் முனைவோர்கள் அந்தத் தவறுகளை செய்யாமல் இருக்கலாம் அல்லவா?